Sunday, October 26, 2003

New entries in EU!

ஐரோப்பிய நாடுகளில் அவ்வளவாகப் பிரசித்தி பெறாத நாடுகளில் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு முன் வரை பெல்ஜியம் இருந்து வந்தது. European Union செயலகமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரமாண்டமான பார்லிமண்ட் கட்டப்பட்டு, அதன் பின்னர் பற்பல அனைத்துலக அரசியல் திருப்புமுனை மாநாடுகள் நடத்தப்பட்டு வருவதால் இப்போது ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற நகரமாக Brussels உருவாகிவிட்டது.

சென்ற ஆண்டின் இறுதியில் டென்மார்க்கில் நடந்த ஒரு மாநாட்டில் இதுவரை இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் இருக்கும் மேலும் 10 நாடுகளையும் உள்ளினைக்கும் வகையில் அவைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இவற்றுள் பழைய கிழக்கு ஐரோப்பிய சோவியத் ஆட்சி நாடுகளும் அடங்கும். பொதுவாகவே ஏழை நாடுகளாக முத்திரை குத்தப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளின் 'பந்தா' நிறைந்த குழுவில் சேர்வதற்கான ஒரு அழைப்பு என்று சில பத்திரிக்கையாளர்களும் இதை வர்ணித்தனர். இந்த திட்டத்தின் வழி ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்பானது அதன் எல்லையை வடக்கில் ரஷ்யா, மற்றும் கிழக்கில் உக்ரேன், தெற்கில் அரபு நாடுகள் வரை விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பத்து நாடுகள் எஸ்தோனியா, லாத்வியா, லிதுவானியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, போலந்து, செக், ஸைப்ரஸ், ஹங்கேரி, மற்றும் மால்டா ஆகியவையே.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் வழி இந்த 10 நாடுகளும் பல்வகையான பொருளாதார முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பது உறுதி என்றாலும், அதில் இணைவதற்கான முன்னேற்பாடுகள் இவர்களுக்குப் பற்பல தலைவலியைத் தோற்றுவித்திருக்கின்றது என்றே சொல்லவேண்டும். பொதுவாக இந்தக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கல்வித் தரம், சமுதாய மேம்பாடு, மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றில் இந்த நாடுகள் கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த பத்து நாடுகளுமே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தினர் ஆவதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு என்பதை மறுக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக போலந்து அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் பல வகையில் தமது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றதை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

ஸைப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குத் தயாராகத் தான் இருக்கின்றது. ஆனால் உள்நாட்டு பூசலின் காரணமாக சிறு தொய்வு ஏற்பட்டிருக்கின்றது இப்போது. இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிரச்சனைகளோடு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெகு விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் என்பதில் கொஞ்சமும் மாற்றமில்லை.

No comments:

Post a Comment