Saturday, January 10, 2004

Electrical Guitar Exhibition in Mannheim, Germany



நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதியின் வாசகர்களாகிய உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வசந்த காலம் முடிந்து கோடை காலத்தை வரவேற்றுக் காத்துக் கொண்டிருக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. நமது ஆசிய நாடுகளில் சமய திருவிழாக்கள் எப்படி பிரபலமாக இருக்கின்றனவோ அதே போல ஜெர்மனியிலும் பல சாலையோர திருவிழாக்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன. வெயில் கொளுத்தும் இந்தக் கோடை காலத்தை ஐரோப்பிய மக்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியப்பட வைக்கின்றது. சாலையோர விழாக்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு மிகப் பிரபலம். இதனைப் பற்றி மேலும் பல செய்திகளை பிறகு தருகின்றேன்.


ஸ்டுட்கார்ட் நகருக்கு வடமேற்கில் ஏறக்குறைய 130 KM தூரத்தில் இருக்கும் ஒரு நகரம் மான்ஹைம். இங்குள்ள "Landesmuseum fuer Technik und Arbeit" (தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம்) கண்காட்சி மையத்தில் மின்சாரத்தில் இயங்கும் கித்தார்-களின் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு கித்தார்களின் மீது மோகம் இல்லையென்றாலும் நண்பர்களின் அழைப்பின் பேரில் நாமும் கலந்து கொள்ளலாமே என்று முடிவு செய்து இந்த கண்காட்சி நிலையத்துக்குப் புறப்பட்டோ ம். ஏறக்குறைய கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சி வருகின்ற ஜூன் மாதம் 6ம் திகதியோடு முடிவடைந்து விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி சம்பந்தப்பட்ட பல வரலாற்று சின்னங்களும் இயந்திரங்களும் இருக்கும் இந்த கண்காட்சி மையத்தின் நுழைவாசலில் மிகப்பெரிய பறக்கும் அசுரனின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. நமது இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வருகின்ற அனுமார் ஞாபகம் தான் முதலில் எனக்கு இந்த சிலையைப் பார்த்ததும் தோன்றியது.

கண்காட்சி அரங்கத்தில் பல வர்ணங்களிலான கித்தார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுவரை நான் பார்த்திராத அளவுகளில், வடிவங்களில், வகைகளில் ஏராளமான கித்தார்கள். பொதுவாக எல்லா கண்காட்சி மையங்களில் இருப்பது போலவே இங்கும், மின்சாரத்தில் இயங்கும் கித்தாரின் பின்னனி, பல தரப்பட பழம் கித்தார்கள், அதனை உலகுக்குப் பிரபலப்படுத்திய நபர்களைப் பற்றிய விபரங்கள் என பலதரப்பட்ட வரலாற்று சம்பந்தப்பட்ட விஷயங்கள் விபரமாக விளக்கப்பட்டிருந்தன. ஜெர்ம்னியில் கித்தாரின் மோகம் ஏறக்குறைய 1955 முதல் 1959 களில்தான் தொடங்க ஆரம்பித்திருக்கின்றது. பழமை சித்தாந்தத்தைப் போக்கி புதுமை சிந்தனையை உருவாக்க ஏற்பட்ட பல முயற்சிகளில் இசை மற்றும் வாத்தியக் கருவிகளின் பங்கும் உண்டு என்று சொன்னால் நிச்சயமாக மறுக்கமுடியாது. இந்த காலகட்டத்தில் ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் பற்பல மேடை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இவ்வகை மேடை நிகழ்ச்சிகளின் போது அதில் மூழ்கிப்போகும் இளைஞர்கள் பலர், வன்முறைகளில் ஈடுபட்டு இறந்த நிகழ்ச்சிகளைப் படமாக்கி ஒரு பகுதியில் திரையிட்டுக் கொண்டிருந்தனர். இது சற்று வித்தியசமாகத்தான் தோன்றியது. 60களிலும் 70களில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்ற ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிகளிலும் 200க்கும் குறையாத பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கையை பட்டியலிட்டு இந்த குறும்படம் காட்டுகின்றது.




இந்த கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கித்தார்களை உருவாக்கும் முறையையும் காட்டுகின்றனர். சாதாரண மரப்பலகையாக இருக்கும் ஒன்று ஒரு சிற்பியின் கையில் இழைக்கப்பட்டு அது இனிமையான இசையினை உருவாகும் கித்தாராக உருவெடுக்கும் நிகழ்வை பார்த்து மகிழ முடிகின்றது. கித்தார் பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாகத்தான் இருக்கும். கித்தார்களின் மேல் மோகம் கொண்ட இசைப் பிரியர்கள் இந்த விடுமுறை காலத்தில் ஜெர்மனி வர திட்டமிட்டிருந்தால் மான்ஹைம் நகரில் இருக்கும் இந்த கண்காட்சி மையத்திற்கும் வரத்தவராதீர்கள். இந்த நிகழ்வைப் பற்றி மேலும் பல விபரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழ்காணும் வலைத்தளத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

http://www.stromgitarren.de/English/indexe.htm

Tuesday, January 6, 2004

Turkey & EU



ஜெர்மனியில் ஜெர்மானியர்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் துருக்கியர்கள்தான். இந்த நாட்டில் எந்த மூலையிலும் Doner Kebab கடைகள் இருக்கும். துருக்கியை அடுத்து ஜெர்மனிதான் அவர்களுக்கு அடுத்த தாய்நாடு என்று சொல்லுமளவுக்கு இங்கு துருக்கியர்கள் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் உழைப்பு வேலைகளுக்காக இங்கு அழைத்து வரப்பட்ட துருக்கியர்கள் படிப்படியாக இங்கேயே தங்கி குடியுரிமையும் பெற்றுக்கொண்டு வாழ்கின்றனர். பெரும்பாலும் உணவுக்கடைகள், அங்காடிக் கடைகள், துணிக்கடைகள், உடல் உழைப்புத் துறைகள் என்று இருந்தவர்கள் இப்போது பலவாறாக அனைத்து தொழில்துறையிலும்
இறங்கிவிட்டனர். ஆனாலும் கணினித்துறையைப் பொருத்தவரை எனது அனுபவத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையில் தான் துருக்கியர்கள் நுழைத்திருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இன்னமும் சேரவில்லை. துருக்கி இணைவதைப் பற்றி பலவாறான கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துருக்கியும் ஒரு காரணமாக இருப்பது ஒரு தவறான மதிப்பையே இதுவரை துருக்கிக்கு வழங்கி வந்தது. இருப்பினும் இந்த நிலையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இப்போது படிப்படியாக தெரிய ஆரம்பிக்கின்றன. ஜெர்மனிக்குத் தற்சமயம் வருகை புரிந்திருக்கும் துருக்கிய அதிபர் Recep Tayyip Erdogan அதற்கான வழிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்.

துருக்கிய நாட்டினருக்குப் பல தரப்பட்ட வகைகளில் ஜெர்மனியிலிருந்து உதவிகள், தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடந்த சாக்கர் விளையாட்டில் துருக்கிய நாட்டைப் பிரதிநிதித்து விளையாடிய விளையாட்டாளர்களில் சிலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள் தாம். இஸ்தான்புல், அன்கரா, அண்டாலியா போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய சுற்றுப்பயணிகளை நம்பியே பல சுற்றுலா நிறுவனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. துருக்கியின் மிக உயர்ந்த செல்வமாகக் கருதப்படும் கம்பளங்களும் மிக அதிகமாக ஜெர்மனியில் விற்கப்படுகின்றன. இப்படிப் பல தரப்பட்ட வகையில் இருதரப்பட்ட நாடுகளுக்கான தொடர்புகள் இருந்து வருகின்றன.

70 மில்லியன் மக்கள் வாழும் துருக்கியிலும் இப்போது பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் வழி வெளி நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ஜெர்மனிக்கு வேலைத்தேடிச் செல்லக் கூடிய வாய்ப்பு மேலும் சிறப்பாக அமையும் என இவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார வல்லரசாக இருந்த ஜெர்மனியிலேயே 3 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கும் இந்த நிலையில் இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

Saturday, January 3, 2004

Cannibal ..??

உணவு சாத்விகமாக இருக்க வேண்டும்; அப்போதுதான் மனமும் பக்குவப்படமுடியும் என்ற பாரம்பரியத்தில் வருகின்ற நமக்கு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஜெர்மனியில் மனிதர்களைச் சாப்பிடும் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். அவரது பெயர் 'Armin Meiwes'. காவலர்களிடம் மாட்டிக்கொண்ட பின்னர் தனது தவறுகளை ஒத்துக் கொண்டிருக்கின்றார் இந்த மனிதர்.

ஏறக்குறைய 30 விழுக்காட்டு ஜெர்மன் மக்கள் சைவ உணவு விரும்பிகளாக இருக்கின்ற இந்த காலத்தில் 'இடி அமினின்' வழியைக் கடைப்பிடிக்கும் இந்த வகை மனிதர்களைப் பற்றி என்ன நினைக்க முடியும்?

இந்த மனிதர் தனது உணவாக்கிக் கொண்ட மனிதர்களை இண்டெர்நெட் மூலமாகத்தான் வலை விசிப் பிடித்திருக்கின்றார். காசல் நகரில் வாழும் இவர் பெர்லின் நகர மனிதர் ஒருவரைச் சாப்பிட்டதற்காகப் பிடிபட்டிருக்கின்றார்.

சக மனிதர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் வந்துகொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளங்களா இவை?
இந்த செய்தியைப் பற்றி மேலும் அறிய http://www.dw-world.de/english/0,3367,1432_A_1078601_1_A,00.html !

Thursday, January 1, 2004

Silvester in Berlin



புது வருட கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் பேசப்டுகின்ற நேரம் இது. ஜெர்ம்னியின் எல்லா மூலைகளிலும் 31 டிசம்பர் முடிந்து 1 ஜனவரி தொடங்கும் நேரத்திற்காக பெரியவர்கள்ம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லோரும் கைகளில் பட்டாசுக் குவியல்களை வைத்துக் கொண்டு
காத்திருப்பர்.சரியாக 12:00 மணிக்கு தொடங்கும் இந்த பட்டாசு வான வேடிக்கை நிகழ்ச்சி 1 மணி நேரம் கூட நீடிப்பதுண்டு. கடந்த ஆண்டு பணி கொட்டி சாலையெல்லாம் நிரம்பியிருந்த போதும் விடாமல் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தது எனக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

ஜெர்ம்னியின் எல்லா இடங்களிலும் இம்மாதிரியான கோலகல கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் தலைநகரான பெர்லினில் நடை பெறும் மிகப்பெரிய கேளிக்கை விருந்து நிகழ்ச்சி உலகப் பிரசித்தி பெற்ற ஒன்றாக இப்போது மாறிக் கொண்டிருக்கின்றது. இது ஒரு புதிய மாற்றம். 1995 முதல் தான் பெர்லினில் மிகப் பெரிய அளவில் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2000 ஆண்டு தொடக்கம் மிகப் பெரிய அளவில் பெரிய வாணவேடிக்கை நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்டபோது பெர்லினும் இவ்வகை நிகழ்ச்சிகளுக்கு புகழ் பெற்ற ஒரு இடமாக உலக அரங்கில் பேசப்பட்டது. இது தொடர்ந்து இந்த ஆண்டும் நிகழ்ந்துள்ளது.



ஏறக்குறைய 1 மில்லியன் மக்கள் கூடியிருக்க இந்த ஆண்டு கொண்டாட்டம் நிகழ்ந்துள்ளது. வான வேடிக்கை நிகழ்ச்சியோடு சாலையோரக் கடைகளில் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கலைநிகழ்ச்சிகள் என மிகப் பிரபலமாக நடந்திருக்கின்றது இவ்வாண்டு கொண்டாட்டம்.

Brandenburg Gate வாசலில் 12 நிமிடங்களுக்கு இடைவிடாது நிகழ்ந்திருக்கின்றது புத்தாண்டு வரவேற்பு. இந்த வான வேடிக்கை நிகழ்ச்சியை நேரில் பார்ப்பவர்கள் ஒரு வகையில் கொடுத்துவைத்தவர்கள் தான். இதன் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இருண்ட வானத்தில் விதம் விதமான வர்ண ஜாலங்களை விதம் விதமான வடிவங்களை காட்டும் வகையில் இடைவிடாது அமைத்திருப்பர். இப்போது ஐரோப்பாவில் 4 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரபலமானவையாக கருதப்படுகின்றன. பாரிஸ், பெர்லின், லண்டன் அதோடு ரோம். இந்த பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகவே சுற்றுலா வரும் வெளிநாட்டவரும் இப்போது அதிகரித்து வருகின்றனர்.