Saturday, January 10, 2004

Electrical Guitar Exhibition in Mannheim, Germanyநீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதியின் வாசகர்களாகிய உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வசந்த காலம் முடிந்து கோடை காலத்தை வரவேற்றுக் காத்துக் கொண்டிருக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. நமது ஆசிய நாடுகளில் சமய திருவிழாக்கள் எப்படி பிரபலமாக இருக்கின்றனவோ அதே போல ஜெர்மனியிலும் பல சாலையோர திருவிழாக்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன. வெயில் கொளுத்தும் இந்தக் கோடை காலத்தை ஐரோப்பிய மக்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியப்பட வைக்கின்றது. சாலையோர விழாக்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு மிகப் பிரபலம். இதனைப் பற்றி மேலும் பல செய்திகளை பிறகு தருகின்றேன்.


ஸ்டுட்கார்ட் நகருக்கு வடமேற்கில் ஏறக்குறைய 130 KM தூரத்தில் இருக்கும் ஒரு நகரம் மான்ஹைம். இங்குள்ள "Landesmuseum fuer Technik und Arbeit" (தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம்) கண்காட்சி மையத்தில் மின்சாரத்தில் இயங்கும் கித்தார்-களின் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு கித்தார்களின் மீது மோகம் இல்லையென்றாலும் நண்பர்களின் அழைப்பின் பேரில் நாமும் கலந்து கொள்ளலாமே என்று முடிவு செய்து இந்த கண்காட்சி நிலையத்துக்குப் புறப்பட்டோ ம். ஏறக்குறைய கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சி வருகின்ற ஜூன் மாதம் 6ம் திகதியோடு முடிவடைந்து விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி சம்பந்தப்பட்ட பல வரலாற்று சின்னங்களும் இயந்திரங்களும் இருக்கும் இந்த கண்காட்சி மையத்தின் நுழைவாசலில் மிகப்பெரிய பறக்கும் அசுரனின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. நமது இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வருகின்ற அனுமார் ஞாபகம் தான் முதலில் எனக்கு இந்த சிலையைப் பார்த்ததும் தோன்றியது.

கண்காட்சி அரங்கத்தில் பல வர்ணங்களிலான கித்தார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுவரை நான் பார்த்திராத அளவுகளில், வடிவங்களில், வகைகளில் ஏராளமான கித்தார்கள். பொதுவாக எல்லா கண்காட்சி மையங்களில் இருப்பது போலவே இங்கும், மின்சாரத்தில் இயங்கும் கித்தாரின் பின்னனி, பல தரப்பட பழம் கித்தார்கள், அதனை உலகுக்குப் பிரபலப்படுத்திய நபர்களைப் பற்றிய விபரங்கள் என பலதரப்பட்ட வரலாற்று சம்பந்தப்பட்ட விஷயங்கள் விபரமாக விளக்கப்பட்டிருந்தன. ஜெர்ம்னியில் கித்தாரின் மோகம் ஏறக்குறைய 1955 முதல் 1959 களில்தான் தொடங்க ஆரம்பித்திருக்கின்றது. பழமை சித்தாந்தத்தைப் போக்கி புதுமை சிந்தனையை உருவாக்க ஏற்பட்ட பல முயற்சிகளில் இசை மற்றும் வாத்தியக் கருவிகளின் பங்கும் உண்டு என்று சொன்னால் நிச்சயமாக மறுக்கமுடியாது. இந்த காலகட்டத்தில் ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் பற்பல மேடை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இவ்வகை மேடை நிகழ்ச்சிகளின் போது அதில் மூழ்கிப்போகும் இளைஞர்கள் பலர், வன்முறைகளில் ஈடுபட்டு இறந்த நிகழ்ச்சிகளைப் படமாக்கி ஒரு பகுதியில் திரையிட்டுக் கொண்டிருந்தனர். இது சற்று வித்தியசமாகத்தான் தோன்றியது. 60களிலும் 70களில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்ற ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிகளிலும் 200க்கும் குறையாத பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கையை பட்டியலிட்டு இந்த குறும்படம் காட்டுகின்றது.
இந்த கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கித்தார்களை உருவாக்கும் முறையையும் காட்டுகின்றனர். சாதாரண மரப்பலகையாக இருக்கும் ஒன்று ஒரு சிற்பியின் கையில் இழைக்கப்பட்டு அது இனிமையான இசையினை உருவாகும் கித்தாராக உருவெடுக்கும் நிகழ்வை பார்த்து மகிழ முடிகின்றது. கித்தார் பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாகத்தான் இருக்கும். கித்தார்களின் மேல் மோகம் கொண்ட இசைப் பிரியர்கள் இந்த விடுமுறை காலத்தில் ஜெர்மனி வர திட்டமிட்டிருந்தால் மான்ஹைம் நகரில் இருக்கும் இந்த கண்காட்சி மையத்திற்கும் வரத்தவராதீர்கள். இந்த நிகழ்வைப் பற்றி மேலும் பல விபரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழ்காணும் வலைத்தளத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

http://www.stromgitarren.de/English/indexe.htm

No comments:

Post a Comment