Thursday, October 30, 2003

Child Prostituition

ஜெர்மனி செக் ஆகிய நாடுகளின் எல்லையில் விரிவாக வளர்ந்து வரும் விபச்சாரம் பற்றிய செய்திகள் சென்ற செவ்வாய் அன்று செய்திகளில் வெளியாகியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது இந்தச் செய்தி. பொதுவாகவே பலர் ப்ராக் (செக் நாட்டின் தலைநகரம்) செல்ல விரும்புவர். ப்ராக் மற்றும் செக் எல்லையில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இதற்காக பல ஜெர்மானியர்கள் இங்கு செல்வதுண்டு. ஆனால் விபச்சாரத்திற்காகவும் ஜெர்மானியர்கள் இங்கு செல்கின்றனர் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியைத் தான் உருவாக்கியிருக்கின்றது.

மிகச் சிறிய, 8 வயதிற்கும் கீழான செக் குழந்தைகள் இந்த அவல நிலைக்குத் தங்கள் குடும்பத்தினராலேயே தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் இந்தக் குழந்தைகளைப், பெற்றோர் அல்லது உறவினர் எல்லைப்புர சாலைகளில் வருகின்ற ஜெர்மானியர்களின் கார்களில் ஏற்றி விட்டுவிடுகின்றனராம். இந்தக் குழந்தைகளுக்கு 5 - 25 EUR வரை கொடுத்து விட்டு தங்கள் காரியம் முடிந்தவுடன் தப்பித்து விடிகின்றனர். இங்கேயும் இப்படிப்பட்ட அவல நிலையா என நினைக்கும் போது வேதனையாகத் தான் இருக்கின்றது.

ஜெர்மானிய செய்தி நிறுவனம் ஒன்று, கார்களில் வருபவர்களில் பெரும்பாலோர், பவேரியா மற்றும் சாக்ஸெனி பகுதிகளிலிருந்து வருகின்றனர் என்று ஜெர்மானிய வாகன எண்குறிப்பின் அடிப்படையில் சமூக நல ஊழியர்கள் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவிக்கின்றது. மேலும், இந்தக் குழந்தைகள் பரவலாகக் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகலிலிருந்து இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிகின்றது.

UNICEF நிறுவனத்திற்காக சமூக சேவகி கேத்ரீன் இந்த அவலத்தைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதி சமர்ப்பித்திருக்கின்றார். இந்த அறிக்கையின் அடைப்படையில் இப்போழுது செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தியை செக் நாடு மறுத்திருக்கின்றது.

எட்டு வயதே நிரம்பிய குழந்தைகள் சுயமாக தாங்களே பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களாம். வருமை மனித நேயத்தை எப்படியெல்லாம் கொல்கின்றது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

Tuesday, October 28, 2003

New Blog - Malaysia in Focus
நண்பர்களே,

மலேசிய நாட்டில் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியின் நிலை மற்றும் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற பல தகவல்களைத் தொகுக்கும் வகையில் சிறப்பு வலைப்பூ ஒன்றினை அமைத்திருக்கின்றேன். இந்த வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

URL: http://subaillam.blogdrive.com

அன்புடன் - சுபா

Monday, October 27, 2003

%Insurance%


சேன்சலர் ஷ்ரூடரின் Agenda 2010 திட்டமானது அமுலுக்கு வர வாய்ப்பே இல்லை என கங்கணம் கட்டிக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அனைவரையும் அமைதியடையச் செய்ய வைக்கும் வகையில் இந்த திட்டத்தின் ஒரு அங்கமான சுகாதார திட்டத்தின் மறு சீரமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த வெள்ளியன்று முழுமையாக இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட இந்த நிகழ்வு ஜெர்மனியின் சாதாரண மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


இந்த திட்டம் அமுலாக்கம் செய்யப்படும் போது, தற்பொழுது 14.3 சதவிகிதமாக இருக்கும் பொது இன்சூரன்ஸ் கட்டணம் 13.6 சதவிகிதமாகக் அடுத்த ஆண்டில் குறைக்கப்பட்டு பின்னர் 2006ம் வாக்கில் 12.15 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இதன் வழி ஏறக்குறைய 20 பில்லியன் EUR சேமிக்கப்படும் என அரசாங்கம் நம்புகின்றது. ஆனாலும் இந்த திட்டத்தின் வழி சில சிரமங்களும் பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. முன்பு மருத்துவமனை செலவு முழுவதுமே இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலையில் விழுந்து விடும். ஆனால் இந்த திட்டம் வரும் போது, ஒரு சிறு பங்கினை நோயாளிகளும் ஏற்றுக் கொள்ளப்பட் வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெர்மனியில் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக சுகாதார இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸின் அடிப்படையில் தான் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில் யாரும் மருத்துவ சேவையைப் பெறமுடியாது. பற்பல சங்கடங்களை அனுபவித்த பின்னர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தான் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். இந்த நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களிடம் பணத்தைக் கறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு கனிசமான தொகையை இன்சூரன்ஸுக்காக அழ வேண்டியது நிர்பந்தமாகி விட்டது. என்ன செய்வது??

Sunday, October 26, 2003

New entries in EU!

ஐரோப்பிய நாடுகளில் அவ்வளவாகப் பிரசித்தி பெறாத நாடுகளில் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு முன் வரை பெல்ஜியம் இருந்து வந்தது. European Union செயலகமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரமாண்டமான பார்லிமண்ட் கட்டப்பட்டு, அதன் பின்னர் பற்பல அனைத்துலக அரசியல் திருப்புமுனை மாநாடுகள் நடத்தப்பட்டு வருவதால் இப்போது ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற நகரமாக Brussels உருவாகிவிட்டது.

சென்ற ஆண்டின் இறுதியில் டென்மார்க்கில் நடந்த ஒரு மாநாட்டில் இதுவரை இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் இருக்கும் மேலும் 10 நாடுகளையும் உள்ளினைக்கும் வகையில் அவைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இவற்றுள் பழைய கிழக்கு ஐரோப்பிய சோவியத் ஆட்சி நாடுகளும் அடங்கும். பொதுவாகவே ஏழை நாடுகளாக முத்திரை குத்தப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளின் 'பந்தா' நிறைந்த குழுவில் சேர்வதற்கான ஒரு அழைப்பு என்று சில பத்திரிக்கையாளர்களும் இதை வர்ணித்தனர். இந்த திட்டத்தின் வழி ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்பானது அதன் எல்லையை வடக்கில் ரஷ்யா, மற்றும் கிழக்கில் உக்ரேன், தெற்கில் அரபு நாடுகள் வரை விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பத்து நாடுகள் எஸ்தோனியா, லாத்வியா, லிதுவானியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, போலந்து, செக், ஸைப்ரஸ், ஹங்கேரி, மற்றும் மால்டா ஆகியவையே.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் வழி இந்த 10 நாடுகளும் பல்வகையான பொருளாதார முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பது உறுதி என்றாலும், அதில் இணைவதற்கான முன்னேற்பாடுகள் இவர்களுக்குப் பற்பல தலைவலியைத் தோற்றுவித்திருக்கின்றது என்றே சொல்லவேண்டும். பொதுவாக இந்தக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கல்வித் தரம், சமுதாய மேம்பாடு, மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றில் இந்த நாடுகள் கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த பத்து நாடுகளுமே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தினர் ஆவதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு என்பதை மறுக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக போலந்து அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் பல வகையில் தமது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றதை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

ஸைப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குத் தயாராகத் தான் இருக்கின்றது. ஆனால் உள்நாட்டு பூசலின் காரணமாக சிறு தொய்வு ஏற்பட்டிருக்கின்றது இப்போது. இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிரச்சனைகளோடு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெகு விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் என்பதில் கொஞ்சமும் மாற்றமில்லை.

Saturday, October 25, 2003

தீபாவளி 2003

தீபாவளியை மலேசியாவில் கொண்டாடும் விதமே வேறு; இங்கு ஜெர்மனியில் கொண்டாடும் விதமும் வேறு. மலேசியாவில் தீபாவளி என்பது இந்தியர்களின் மிக முக்கிய பண்டிகை என்பதால் அதற்கு அரசாங்க விடுமுறை உண்டு. 1 மாதத்திற்கு முன்னரே ஆயத்த வேலைகளில் எல்லாரும் ஈடுபட்டு விடுவோம். புதிய உடை வாங்குவது, விதம் விதமான பலகாரங்கள் செய்வது, வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய வேலைகள். தீபாவளியன்று சீனர்கள் மலாய்க்காரர்கள் என, இன மத வேறு பாடின்றி அனைவரும் சந்தோஷமாக உண்டு களிக்கும் நாள் அது. ஆனால் இங்கு வேறுவிதம்.

அலுவல் நிமித்தமாக Basel(Swiss) செல்ல வேண்டிய கட்டாயம். தீபாவளி நாளான வெள்ளிக் கிழமை மதியம் தான் வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நான் இருக்கும் போப்லிங்கன் நகரில் கடுமையான பணி பெய்திருக்கின்றது. என் வீட்டின் கூறைகள் மற்றும் கார் மேலெல்லாம் பணி கொடிக் கிடந்தது. இந்த 5 வருடங்களில் இதுதான் எனக்கு முதல் "பணி தீபாவளி".

மாலையில் Stuttgart விநாயகர் ஆலயத்தில் கலாச்சார நிகழ்ச்சிக்கான ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். ஆக எனது அலுவலகத்தில் புதிதாக ஓராண்டு பயிற்சிக்காக சேர்ந்திருக்கும் ஜமால் என்ற நண்பரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் புறப்பட்டேன். (குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. அவர்களுக்குப் பொங்கல் தான் மிகச் சிறப்பான பண்டிகை) கலை நிகழ்ச்சியில் ஒரு கர்நாடக சங்கீத கச்சேரியும் பரத நாட்டிய நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கணினி துறையைச் சேர்ந்த பல தமிழ் நாட்டு இளைஞர்கள் இப்போது 1 அல்லது 2 வருட சிறப்பு அழைப்பின் பேரில் Bosch, Daimler போன்ற நிறுவனங்களுக்கு வருகின்றனர். இவர்களில் கர்நாடக இசையைப் பயின்றவர்களும் இருக்கின்றனர் என்பதால் இவர்களில் ஒருவரான திரு ரவி என்பவரை இந்த நிகழ்வைச் செய்து
தருமாறு கேட்டிருந்தோம். ரவி, 18 வருட சங்கீத அனுபவம் கொண்ட ஒரு இளைஞர். மிக அழகாக தமிழ் கீர்த்தனைகளைப் பாடினார். விநாயகனே வினை தீர்ப்பவனே என ஆரம்பித்து வைத்தார். இடையில் கல்யாண வசந்தாவில் ஒரு கன்னட விருத்தத்தையும் சேர்த்துக் கொண்டார். On demand, மேலும் குறையொன்றுமில்லை, சாந்தி நிலவ வேண்டும், சம்போ ஷிவ சம்போ போன்ற தமிழ் கீர்த்தனைகளையும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.ஜெர்மனியில் கர்நாடக சங்கீத நிகழ்வுகள் நடப்பது மிக மிக அரிது. வருடத்திற்கு 3 அல்லது நான்கு கச்சேரிகள் இந்த நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். ஆக இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம் தானே.
அதற்குப் பிறகு நடராஜ பதத்திற்கு சிறுவன் பிரசவன் அபிநயம் பிடித்து ஆடினான். சிறப்பாக இருந்தது அவனது நாட்டியம்.

மற்றொரு விஷேஷம் என்னவென்றால் இந்த தீபாவளி பூஜைக்கு ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமன்றி ஜெர்மானியர்களும், சிங்களத்தவர்களும், முஸ்லிம் தமிழ் நண்பர்களும் வந்திருந்ததுதான். பல்லின ஒற்றுமையைக் காட்டும் பண்டிகையாகவே இது மாறி இருந்தது. பல நாட்கள் சந்திக்காத நண்பர்களையெல்லாம் சந்தித்ததில் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க இல்லம் திரும்பும் போது மணி 12:30 ஆகிவிட்டிருந்தது.!

Tuesday, October 21, 2003

பனி தொடக்கம்..

சில நாட்களாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே நிற்கும் எனது காரைப் பார்ப்பதுதான் எனது வேலையாகிப் போய்விட்டது. கார் காணாமல் போய்விடுமே என்ற பயம் ஒன்றுமில்லை. மாறாக கண்ணாடி முழுதும் பணியால் இருகிப் போயிருக்கின்றதா என்று பார்ப்பதற்க்காகத்தான். இன்றும் அப்படித்தான்; எழுந்ததும் ஓடிவந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரே ஆச்சரியம். பனிமழை பெய்து கொண்டிருந்தது. இந்த winter -ன் முதல் பனிமழை இன்று ஆரம்பித்து விட்டது. மலைப்பாங்கான இடங்களில் ஏற்கனவே பனிமழை ஆரம்பித்து விட்டாலும் போப்லிங்கனில் இன்று தான் முதல் முறையாக கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியைப் பார்க்கின்றேன்.

தமிழ் சினிமா படங்களில் பனிமழையில் கதாநாயகனும் நாயகியும் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்து பனியென்றால் சுகமாக இருக்கும் என்று தப்புக் கனக்குப் போட்டிருந்தவர்களில் நானும் அடங்குவேன். இந்த மாயையெல்லாம் ஜெர்மனிக்கு வந்த சில மாதங்களிலேயே மறைந்து போய்விட்டன. பனியில் snow man
செய்து விளையாடுவதும் snow ball செய்து விளையாடுவதும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் பனிக்காலத்தில் பனியினால் ஏற்படும் சிரமங்களை எண்ணிப்பார்க்கும் போது ஒரு வகையில் பயமாகத்தான் இருக்கின்றது.

நான் ஜெர்மனிக்கு வந்து 2 வாரங்கள் தான் இருக்கும். பல்கலைக்கழகத்தில் வகுப்புக்கள் ஆரம்பித்து விட்டன. அப்போது ஜனவரி மாதம். கடும் பனி பெய்யும் நேரம். அந்த நேரத்தில் நான் கீல் நகரில் இருந்தேன். அங்கு பொதுவாகவே நல்ல பனி பெய்யும். முதல் நாள் வெள்ளிக்கிழமை வகுப்பிற்குச் சென்றிருந்த போது பனி இல்லை. அதனால் பல்கலைக் கழகத்தின் மற்றொரு Campus இருக்குமிடத்திற்கு map வைத்துக் கொண்டு சுலபமாகச் சென்று சேர்ந்து விட்டேன். அடுத்த சில நாட்களில் பனி பெய்ய ஆரம்பித்து தரையெல்லாம் பனியால் மூடிக்கிடந்தது. வகுப்புக்குக் கிளம்பிய நான், முதல் நான் வெற்றிகரமாக வகுப்பிற்குச் சென்று விட்ட தைரியத்தில் எனது campus நோக்கி நடக்க ஆரம்பித்தேன். முதல் நான் சென்றபொழுது அடையாளத்திற்காக சில இடங்களை (landmark) ஞாபகம் வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தேடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
டக்கின்றேன்.... நடக்கின்றேன்.... நடந்து கொண்டே இருக்கின்றேனே தவிர பல்கலைக்கழக campus வரவேயில்லை. பனி மூடிவிட்டதால் பல சாலைகள் அடையாளமே தெரியவில்லை. எல்லா இடங்களும் மாறிப்போய் காட்சி அளிக்கின்றன. வெகுதூரம் நடந்திருப்பேன். கண்டிப்பாக வழியை விட்டிருப்பேன் என்று தெரிந்ததும் சாலையில் நடந்து கொண்டிருந்தவர்களை அனுகி ஆங்கிலத்தில் கேட்டால் அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலமே தெரியவில்லை. மனதைத் தளரவிடாமல் நடந்து கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் வர ஆரம்பித்து விட்டது. கண்களில் கண்ணீர் வர துடைத்துக் கொண்டே மேலும் நடந்து கொண்டேயிருந்தேன். மேலும் சிலரை அனுகிக் கேட்கலாம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு இளைஞனிடம் கேட்டேன். என்னிடம் அந்த campus வரைபடமும் இருந்ததால் அதையும் காட்டி அவனிடம் ஆங்கிலத்தில் கேட்க ஓரளவு அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பஸ் எடுத்துச் செல்லுமாறு கூறினான். அதுமட்டுமலாமல் என்னோடு சிறிது நேரம் இருந்து, சரியான பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு , ஓட்டுநரிடம் என்னை குறிப்பிட்ட campus இருக்கும் இடத்தில் இறக்கி விடுமாறும் கேட்டுக் கொண்டான். உதவும் உள்ளம் படைத்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..இல்லையா!

இந்தப் பனியால் இந்த மாதிரி சிரமங்கள் மட்டுமல்ல.. மேலும் பல இருக்கின்றன..!

Sunday, October 19, 2003

Germany's Economy and Structural reform!

ஜெர்மனியின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போகின்றனவே அன்றி குறைந்தபாடில்லை. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே செல்கின்றது; குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் மிகக் குறைந்து வருகின்றது; இவையெல்லாம் நாட்டின் சேன்சலர் கெர்ஹாட் ஷ்ரூடருக்குத் தொடர்ந்து இருந்து வரும் தலைவலிகள். இவற்றோடு குறைந்த வருவாய் தரும் வேலைகள் மற்ரும் சம்பள உயர்வின்மை போன்ற பல காரணங்கள் அரசாங்கம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் சேர்த்து Euro zone-னின் மிகக் குறைந்த வளர்ச்சியைக் காட்டும் நாடாக தற்போது ஜெர்மனியை ஆக்கியுள்ளன.


இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயமாக ஸ்ரூடர் 'Agenda 2010' என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில குறிப்புக்களை நான் எனது ஜூலை மாத வலைக்குறிப்புக்களில் அலசியிருந்தேன். இந்த புதிய திட்டத்தின் வழி தற்போது இயங்கி வரும் சமூக இலவச சேவைகள், மற்றும் அளவுக்கு மீறிய சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனதீவை, இந்த இலையுதிர்காலத்தில் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.


பொதுமக்கள், இந்த திட்டத்தின் வழி ஜெர்மனியின் தற்போதைய அரசாங்கம்
அமுல்படுத்தவிருக்கும் மாற்றங்களுக்காக காத்திருக்கின்றனர். புதுவருடத்தில் இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதன் வழி ஜெர்மனியின் பொருளாதரம் மிகத் துரித வளர்ச்சியைக் காண முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அரசாங்கம் எடுத்திருக்கும் புதிய திட்டங்களைப் பற்றிய விபரங்களை நாளைத் தருகிறேன்..

Friday, October 3, 2003

Germany reunification day!

இன்று ஜெர்மனியில் விடுமுறை. கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் 1991ம் ஆண்டு அக்டோ பர் 3ம் தேதி ஒன்றாக இணைந்ததை நினைவு கூறி மகிழும் நாள் இது. ஜெர்மனி முழுதுமாக இந்த விடுமுறை நாள் அளிக்கப்படுகின்றது.

ஜெர்மானியர்களில் அதிலும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையில் இது விடுதலை கிடைத்த ஒரு நாள் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மானியர்களைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் இந்த நாளில் இடிக்கப்பட்டது. இரண்டு ஜெர்மனியும் ஒன்றிணைந்ததனால் கிழக்கு ஜெர்மனியில் இருந்த மக்கள் பலரால் மேற்கு ஜெர்மனிக்கு சுலபமாக வர முடிந்தது. இங்குள்ள வேலை வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றோடு சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க முடிந்தது.

இன்றளவும் இந்த இரண்டு ஜெர்மனிக்கும் உள்ள வேறு பாட்டினை ஓரளவு காணமுடியும். மக்களின் சிந்தனை ஓட்டம் வாழ்க்கை முறை ஆகியவற்றில் இந்த இரண்டு ஜெர்மனியிலும் இருந்து வருகின்ற மக்களிடம் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் காணமுடியும். கல்வி தொழில் எனப் பல பொருளாதார அடிப்படையிலான காரணங்களை முன் வைத்து இவர்கள் இப்போது கலந்து விட்டாலும், சிந்தனையில் இருக்கின்ற வேறு பாட்டினை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் பெரும்பாலும் தங்களை தனித்துக் கொள்ள அதாவது கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள், அல்லது மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு பெருமைப் படத்தான் செய்கின்றனர்.