Sunday, November 11, 2012

புனைப் பெயர் லூனா - Deckname Luna (திரைப்படம்)


கடந்த புதன் வியாழன் இரு நாட்கள் இரண்டு பகுதிகளாக பிரித்து உள்ளூர் தொலைகாட்சியில்காட்டபப்ட்ட ஒரு படம். 

படத்தின் நாயகி நாயகியர் உள்ளூர் திரைப்பட தொலைக்கட்சிப் பட நடிக நடிகைகளே. Anna Maria Mühe கதாநாயகி. Götz George விஞ்ஞானி - தாத்தா , Ludwig Trepte, Maxim Mehmet, Heino Ferch  கதாநாயகன் - கிழக்கு ஜெர்மனி உளவுத்துறை அதிகாரி, André Hennicke, Kirsten Block, Uwe Preuss, Christian Näthe, Stefanie Stappenbeck என பல நடிகர்கள்.

கதை 1960ம் ஆண்டு பின்னனியில் உருவாக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியில் அரசியலில் உள்ள ஒரு பெண்மனிக்கு ஒரு மகனும் மகளும். மகன் குர்ட் ஒரு ரொட்டிக் கடையில் பணி புரிபவர். உடல் நலக் குறைவு என நம்புவதால் அவரை மிக எளிதான பணிக்குச் சேர்த்து விடுகின்றனர் பெற்றோர். மகள் லோட்டெ எல்லாவற்றையும் தெரிந்து  கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர். கிழக்கு ஜெர்மனி படையில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிப் பள்ளியில் படித்து உயர வேண்டும் என கனவு காண்பவர். தாயாரின் இயந்திரக் கம்பெனியிலே யே பணி புரிகின்றார். 

Inline image 1

லோட்டெவும் அவள் தம்பி குர்ட்டும் - ஒரு உடைந்த விமானத்தில்  உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி

கிழக்கு ஜெர்மனியில் ரகசிய கண்காணிப்பு அதிகாரிகள் குழு லோட்டவை சீக்ரெட் ஏஜெண்டாக பயன்படுத்த நினைக்கின்றது. அதனால் அவரை பின் தொடர்ந்து அவரது செயல்களை கவனித்து வருகின்றது. அது சமயம் அவரது தாத்தா விண்வெளி ஆராய்ச்சி அதிகாரியாக கிழக்கு ஜெர்ம்னையில் பணிபுரிபவர். கிழக்கு ஜெர்மனியில் தனக்கு மேலும் ஆய்வு செய்ய வழில்லை என்று தெரிந்து மனம் வருந்தி அவர் மேற்கு ஜெர்மனி உளவுப்படையின் உதவியோடு இரவோடு இரவாக தப்பித்து வந்துஆக்ஸ்பர்க் விண்வெளி கூடத்தில் ஆய்வுத்துறையில் இணைந்து கொள்கின்றார். இது மேலும் லோட்டெ குடும்பத்தின்  மேல் கிழக்கு ஜெர்மனி உளத்துறை கவனம் வைக்க காரணமாகின்றது. லோட்டெவுக்கு ஒரு காதலன். ஆனால் அவனுக்கு லோட்டெவின் கனவுகள்  அதன் முக்கியத்துவம் எதுவும் புரியவில்லை. 

Inline image 2
கதாநாயகன் - ஸ்டாசி மேஜர் மோல். லோட்டவை கண்காணித்துக் கொண்டே வருபவர்

மீண்டும் மீண்டும் விண்வெளி ஆய்வில் ஈடுபட விண்ணப்பிக்கும் லோட்டெவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.  மனம் உடைந்திருக்கும் லோட்டெ தனது மன்க்குறையை தனது வேலையிடத்தில் உள்ள தோழியிடம் சொல்ல அவள் லோட்டவை ஒரிடத்திற்கு இரவில் அழைக்கின்றாள். அங்கே செல்லும் லோட்டெ அங்கே கிழக்கு ஜெர்மனி செயல்படுகளை எதிர்க்கவும் சுதந்திரம் கேட்டு தவிக்கும் எண்ணத்துடன் இளைஞர்கள் குழு ஒன்று ஈடுபட்டு வருவதையும் கண்கின்றாள். அங்கு லோட்டெவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கின்றது. 

அந்தப் பாசறையில் அவளது தம்பியும் தீவிரமாக அவர்களுடன் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் தம்பியின் மேல் மிகுந்த அன்பும் கொள்கின்றாள். ஒன்றும் தெரியாதவனைப் போல வெளியே காட்டிக் கொள்ளும் தம்பி இப்படி ஒரு இடத்தில் தன்னை விட மிக தீவிரத்துட்ன் இருப்பதைக் கண்டு அவளுக்கு மனதில் ஆனந்தம். அன்று இரவே ஊரார் தூங்கும் சமயம் பல இடங்களில் கிழக்கு ஜெர்மனி அரசிற்கு மக்கள் சுதந்திரம் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரித்து எல்லா இடங்களிலும் ஒட்டும் பணி நடக்கின்றது. 

Inline image 1

லோட்டெ இரவில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது அதனை பார்த்து விடும் அவள் காதலன் அவளைத் தடுக்கின்றான். முடியாது என்று தெரிந்தவுடன் போய்விடுகின்றான். போனவன் சும்மா இல்லாமல் கிழக்கு ஜெர்மனி காவல் துறையிடம் சொல்லிவிட அன்று இரவே அவளை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்கின்றனர். சிறையில் உட்காரக் கூடாது, தூங்கக்க் ஊடாது என அவர்கள் படுத்தும் பாட்டிலும் தனது தம்பி சார்ந்திருக்கும் ரகசிய கும்பலைப் பற்றிய தகவலை சொல்ல மறுக்கின்றார் லோட்டெ.  ஸ்டாசி உளவுத் துறை மேஜர் மோல் லோட்டவை எப்படியாகினும் தனது உளவுத்துறைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் இருப்பதால் அவளை வெளியே விட அனுமதிக்கின்றார். ஆனால் பின் தொடர்கின்றார். 

அவள் தன் காதலன் தான் தன்னை காட்டிக் கொடுத்தவன் என்று தெரிந்து நேராகச் சென்று அவனிடம் சண்டையிடும் போது படிகளில் அவன் கால் தடுக்கி விழுந்து இறந்து விடுகின்றான். கொலை குற்றமும் சேர்ந்து விட்ட நிலையில் அங்கிருந்து ஓடி தப்பிக்க முயலும் லோட்டெ தனது தம்பியின் இரவு ரொட்டிக்கடைக்குப் போகின்றாள். லோட்டெவின் நிலையறிந்து துறைமுகத்தில் ரொட்டி கொடுக்கச் செல்லும் வேனில் அவளை ஏற்றிக் கொண்டு செல்கின்றான் குர்ட். அங்கிருந்து செல்லும் ஏதாவது ஒரு படகில் ஒளிந்து அவள் மேற்கு ஜெர்மனி சென்று விடுவதே நல்லது என இருவரும் நினைக்கின்றனர், லோட்டெ ஒரு மீன்பிடிக்கும் கப்பலில் ஏறிக்கொள்ள அங்கும் சில  சிரமங்களை எதிர்நோக்கி ஒரு வழியாக மேற்கு ஜெர்மனி கடற்கரை  நகரம் ஒன்று வந்து சேர்ந்து விடுகின்றாள்.

ஆனால் போலீஸார்  தம்பியை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர்.

Inline image 2

அந்தக் காலகட்டத்தில் கிழக்கிலிருந்து வரும் மக்களுக்கு மேற்கு ஜெர்மனி மக்கள் மிகவும் உதவுவார்களாம். அதேபோல ஒரு குடும்பம் இவளுக்கு உதவ இவள் தனது தாத்தாவைத் தேடி அக்ஸ்பெர்க் வருகின்றாள். அங்கே தனது சித்தியையும் தனது தாத்தவையும் பார்த்து அவர்களுடனேயே தங்கி விடுகின்றாள்.

அங்கே தாத்தாவுடன் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் டாக்டர் ஹெர்மானுக்கும் இவளுக்கும் காதல் வருகின்றது. இதற்கிடையில் தம்பியை துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஸ்டாஸி உளவுத்துறை ஆக்ஸ்பெர்க்கில் லோட்டெ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து அவள் கிழக்கு ஜெர்ம்னி உளவுத்துறைக்கு பணி புரிய வேஎண்டும் என மிரட்டுகின்றது. இல்லையேல் தம்பியை சித்திரவதை செய்து கொண்டே இருப்போம் என பயம் ஏற்படுத்துகின்றார் மேஜர் மோல்.

பல முயற்சிகளுக்குப் பின் சம்மதிக்கும் லோட்டே இதற்காக விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பணிபுரிய விண்ணப்பித்து விண்வெளி கூடத்தில் இணைந்து இரவு பகலாக ஸ்டாஸி உளவுத்துறை ரகசிய அமைப்புக்களின் பாடங்களைப் படித்து வருகின்றார். சில மாதங்களில் தேர்ந்த  ஒரு ரகசிய உளவு பார்க்கும் பெண்ணாக மாறி விடுகின்றார். இவரது நோக்கம் தனது தாத்தாவும் காதலனும் பணிபுரியும் ராக்கெட் திட்டத்தை கிழக்கு ஜெர்மனிக்கு உளவு பார்த்து சொல்வது. அமெரிக்க மேற்கு ஜெர்மனி ஆய்வுத் திட்டத்தையும் திருடிச் செல்வதும் அவள் பணிகளில் ஒன்றாகின்றது. அப்போது அவளுக்கு வழங்கப்படும் புனைப்பெயரே லூனா என்பது.

இதனை சரிவர செய்து வரும் வேளையில் லோட்டெவுக்கும் டாக்டர் ஹெர்மானுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. 

Inline image 5

ரகசியங்கள் வெளிப்பட்டதல் இரண்டு திட்டங்களில் தோல்வியைக் காணும் விண்வெளி ஆய்வுக் கூடம் திகைத்து நிற்கின்றது. அக்காலக் கட்டத்தில் அமெரிக்க அதிபர் கென்னடி கொல்லபப்டும் செய்தியும் திகைக்க வைக்கின்றது. அப்போது நடைபெறும் ஒரு அனைத்துலக விண்வெளி ஆய்வு மானாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் தாத்தா கணவனுடன் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக பணிபுரியச் செல்கின்றார் லோட்டெ. அங்கே அவள் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிக்கும் கணவன் அவள் கிழக்கு ஜெர்மனி உளவுத்துறைக்காக பணிபுரிவதைக் கண்டு பிடித்து விடுகின்றான். பின்னர் அவனது ஆலோசனையின் பேரில் மேற்கு ஜெர்ம்னி உளவுப் படையில் சரணடைந்து அவர்களுக்காக கிழக்கு ஜெர்மனை உளவுப் படையை காட்டிக் கொடுக்க சம்மதிக்கின்றாள். தம்பியை அவர்கள் விடுவிக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன்!

இப்படி சென்று கொண்டிருக்கும் போது விண்வெளி கூடத்தில் ரஷ்யாவிற்காக உளவு பார்க்கும் ஏஜெண்ட் கோஸ்மோஸ் என்ற பெயரில் ஒருவர் விண்வெளி கூடத்தில் இருப்பதை மேற்கு ஜெர்மனி உளவுத்துறை கண்டு பிடிக்கின்றது. ஆனால் அது யார் என்பது தெரியாத புதிராக இருக்கின்றது. ஒரு வேளையில் தனது தாத்தாதான் அந்த கோஸ்மோஸ் எனப்பெயர்கொண்ட ரஷ்ய உளவுத்துறைக்குப் பணிபுரிபவர் என் கண்டறிகின்றாள் லோட்டெ. 
Inline image 4

அந்த வேளையிலேயே தனது பிறப்பை பற்றியும் ஒரு புதிய செய்தி அவளுக்கு கிடைக்கின்றது. அதாவது தான் அவரது பேத்தி அல்ல என்பதும் அவரது ரஷ்ய காதலிக்குப் பிறந்த மகள் என்பதும் அறிகின்றாள். 

Inline image 3

கிழக்கு ஜெர்மனியும் கோஸ்மோசை தேடுவதால்தாத்தா (அப்பா( வின் சம்மதத்துடன் ) தனக்கு கோஸ்மோஸ் இருக்கும் இடம் தெரியும் என்று சொல்லி கோஸ்மோஸை அனுப்பி தம்பியை பெற்றுக் கொள்ள செய்தி அனுப்புகின்றாள். ஸ்டாஸி உளவுத்துறை சம்மதிக்க செக் போய்ண்ட் சார்லியில் இருவரையும் மாற்றிக் கொள்ள் திட்டமிட்டு அங்கு செல்கின்றனர். 

Inline image 6

அங்கு நடைபெறும் சிறு பிரச்சனையில் கோஸ்மோஸ் என அறியப்படும் விஞ்ஞானி ஸ்டாஸி உளவுத்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் தம்பியை மீட்டுக் கொண்டு மேற்கு ஜெர்ம்னி உளவுத்த்துறை ஆதரவுடன் தனது கணவனுடன் திரும்புகின்றாள் லோட்டெ.

இது உண்மை கதையை தழுவிய படம். அந்த காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் யாரையுமே நம்பாமல் வாழ்ந்த நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது இந்தப் படம். எந்த நேரமும் எதுவும் நடைபெறலாம். எல்லோரும் எப்போதும் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர் என்கின்ற உணர்வுகள் நிறைந்த  சூழ்நிலை.

சிறந்த  கலைஞர்களின் அருமையான நடிப்பு. என் மனதில் பதிந்த படங்களில் இது நிச்சயமாக இருக்கும்.


சுபா

Saturday, June 16, 2012

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்


பொதுவாக சனிக்கிழமைகளில் நேரம் கிடைக்கும் போது ஸ்டுட்கார் நகர மத்தியில் அமைந்துள்ள கூனிக் ஸ்ட்ராஸா செல்வதுண்டு. இது சென்னையில் உள்ள ரங்கநாதன் ஸ்ட்ரீட் போல வர்த்தகம்..துணி..மணிகள் கடைகள் என நிறைந்திருக்கும் சாலை..

இப்போதைய ட்ரெண்ட் என்ன என்பதை சாலையில் நிறைந்து வழியும் மக்களையும் இளம் யுவதிகளையும் ஆண்களையும் பார்த்தே புரிந்து கொள்ளலாம். கடைகளில் விதம் விதமான ஆடைகள் நிறைந்து வழிகின்றன..கோடை காலம் வந்து விட்டதே.. இனி பெரிய ஜாக்கெட்டுக்களும் தோல் காலணிகளும் தேவையில்லை.. கண்களைக் கவரும் அழகிய ஆடையணிந்துவலம் வர மக்கள் தயாராகி விட்டனர்..

நான் நேற்று அலுவலக காரியமாகச் கூனிக் ஸ்ட்ராஸா சென்று வேலை முடிந்ததும் அங்கே கொஞ்சம் நேரம் செல்விட வாய்ப்பமைந்தது..

தற்போதைய பேஷன் என்பது பல வர்ணங்களில் அமைந்த பேண்ட்.. ஆண் பெண் என இரு பாலருமே கவர்ச்சியான வர்ணங்களில் அமைந்த பேண்ட்களை அணிவதையும், உடலை ஒட்டிய டிஷர்ட் .. கழுத்தில் பூக்கள் அல்லது வடிவத்துடன் கூடிய மென்மையான ஸ்கார்வ்.. இதுவே இப்போதைய பேஷனாக இங்கே இருக்கின்றது.




ஜெர்மானிய ஆண்களும் சரி பெண்களும் சரி.. இங்கே பொதுவாகவே கவர்ச்சிகரமான வர்ணங்களில் உடையணிவதில்லை.

அதிலும் குறிப்பாக அலுவலகம் என்றால் கருப்பு வெள்ளை நீலம். சாம்பல், பேஜ்.. இதைத் தவிர வேறு வர்ணங்களைப் பார்ப்பதே கஷ்டம்.. இந்தச் சூழலில் இப்போது அதிரடி மாற்றத்தை இந்தக் கோடை கால பேஷன் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.. வரும் நாட்களில் சாலைகளில் மக்கள் கலர் கலராகச் செல்வதை பார்க்கலாம்.. சந்தேகமில்லை..

சுபா

Monday, April 16, 2012

ஈஸ்டர் பண்டிகை ஏற்பாடுகள்


நண்பர்களே,

வருகின்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவ சமயத்தைப் பேணும் நண்பர்கள் புனித வெள்ளி கொண்டாட உள்ளனர். இங்கு ஜெர்மனியில் இதனை ஒட்டி எப்போதும் வெள்ளிக்கிழமையும் அதனை அடுத்து அவரும் திங்கள் கிழமையும் நாடு முழுவதும் பொது விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றது.

புனித வெள்ளிக்குத் தேவாலயத்திற்குச் சென்று மக்கள் வழிபடுவது ஒரு புறமிருக்க அந்த நான்கு நாட்கள் குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு விழாவாக கொண்டாடப்படுவதையே இங்கு நான் பார்க்கின்றேன். பொதுவாகவே கிற்ஸ்மஸ் போல இங்கே ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னரே சிறிய அங்காடிக் கடைகள் போடப்பட்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரிப்பது இக்கால கட்டத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம்.

குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த நான்கு நாட்களுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். பல வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை கடைகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருப்பதைக் காணலாம். உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு புறப்படும் போது தட்டில் ஒரு வர்ணம் பூசிய அவித்த முட்டையை வைத்துத் தருவார்கள். இதுவும் ஒரு வழக்கம். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மற்றும் கிரேக்க பழமையான உணவகங்களில் இந்த நடைமுறை வழக்கில் இருப்பதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கின்றேன்.

ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாட்டம் மிகுந்த நாள். அன்று வர்ணம் பூசிய முட்டைகளைச் செடிகளுக்கும் புதர்களுக்குள்ளும் மறைத்து வைத்து விடுவார்கள் பெற்றோர்கள். இந்த முட்டைகளை ஈஸ்டர் முயல்கள் ஒளித்து வைத்துள்ளன என்று சொல்லி அவற்றை கண்டுபிடிக்கச் சொல்வர் பெற்றோர். குழந்தைகள் இந்த முட்டைகளை தேடி கண்டு பிடித்துக் கொண்டு வர வேண்டும். முட்டை வேட்டை என்பது இந்த பண்டிகையின் போது மிக முக்கியமாக அதிலும் குழந்தைகள் இருக்கின்ற குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.

புனித வெள்ளி அன்று பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அதிலும் பழமையான கலாச்சாரத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மதிய உணவில் மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விதம் விதமான மீன் சமையல் உணவு அன்று உணவங்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்.

Frohe Ostern (ஃப்ரோ ஓஸ்டர்ன்) Happy Ester என்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நாளில் மக்கள் வாழ்த்துப் பரிமாறிக் கொள்வர். வெள்ளியிலிருந்து திங்கள் மாலை வரை இந்த வாழ்த்துப் பரிமாற்றம் இருக்கும். தேவாலயங்களில் சனிக்கிழமை மாலை பெரிய அளவில் அதிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பூஜைகள் (mass prayer) ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெறும். Ostersonntag - ஈஸ்டர் ஞாயிறு அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மதிய உணவு சேர்ந்து உண்பது சிறப்பான ஒரு வழக்கம்.

Osterhase  (ஈஸ்டர் முயல்) இந்த பண்டிகையில் சிறப்பு அங்கமாக இருக்கின்றது. அதே போல ஈஸ்டர் மரமும் ஒரு சிறப்பு அங்கமே. ஈஸ்டர் மரம் என்பது ஏதாவது ஒரு மரத்திலோ அல்லது செடியிலோ வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்ட  முட்டைகளைக் கட்டி தொங்கவிட்டு வைப்பது. ஆக இந்த இரண்டு அங்கங்களும் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக செய்யப்படுபவையாகக் கருதப்பட்டாலும் ஏறக்குரைய எல்லா இல்லங்களிலும் இந்த நாளின் போது செயற்கை (ப்ளாஸ்டிக்) முட்டைகள் கட்டி அலங்கரிக்கப்பட மரங்களைக் காண்பது சகஜம்.

இன்று மதியம் எங்கள் தெருவில் உள்ள அங்காடிக்கடைக்குச் சென்றபோது அங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு செய்யபப்ட்டிருந்த அலங்காரக் காட்சிகள் சிலவற்றை புகைபப்டம் எடுத்தேன்.  அவை இங்கே..



ஈஸ்டர் முயல்கள் பலகாரங்கள் தயாரிக்கின்றன..





ஈஸ்டர் முயல் (முழுதும் சாப்பிடக்கூடியது)



முட்டைகளை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்



ஈஸ்டர் முட்டைக்கு வர்ணம் பூசும் இரு ஈஸ்டர் முயல்கள்



ஈஸ்டர் மரங்களை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்கள்




ஈஸ்டர் வாழ்த்து சொல்லும் முட்டையை தயாரித்து விட்டன இந்த ஈஸ்டர் முயல்கள்



குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை விளையாட்டு

கதை சொல்லும் பொம்மை...!


அன்புடன்
சுபா

Monday, April 2, 2012

2012ம் ஆண்டு.. மீண்டும் தக்காளி சோதனை




சீதோஷ்ணம் தற்சமயம் ஏறக்குரை 15 டிகிரியிலிருந்து -1 வரை சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் சில நாட்கள் அவ்வப்போது 18 டிகிரி வரை எட்டிப் பார்த்துச் செல்கின்றது. செடிகள் விற்கும் நர்செரிகளில் இப்போதே காய்கறிச் செடிகளும் வந்து விட்டன. தக்காளி, நீளமான வெள்ளரிக்காய் செடி குள்ளமான வெள்ளரிக்காய் செடி, மூலிகைச் செடிகள் போன்றவை சென்ற வாரமே சந்தைக்கு வந்து விட்டன.

நான் பொதுவாக மே மாத நடுவில் தான் காய்கறிச் செடிகள் வாங்குவது வழக்கம். பூச்செடிகள் வாங்கச் சென்ற நான் 4 தக்காளிகளும் இன்னும் சில காய்கறிச் செடிகளும் வாங்கி வந்து நட்டுவைத்திருக்கின்றேன்.

தக்காளியில் இம்முறை 2 செடிகள் சாதாரண தக்காளி வகையைச் சார்ந்தவை தேர்ந்தெடுத்தேன். அடுத்து Pflaumen Cherrytomate (Plum cherry Tomato)  San Marzano Tomate   என இரண்டு புதிய வகை தக்காளிச் செடிகளையும் வாங்கி நட்டு வைத்திருக்கின்றேன். இவை பிழைத்து காய் காய்க்கும் போது தான் எப்படி காட்சி அளிக்கப்போகின்றன என்று தெரியும்.




மலேசியாவில் வருஷம் முழுதும்தக்காளிச் செடிகளை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். வருடம் முழுதும் கிடைக்கும் நல்ல வெயில் இருப்பதால் எல்லா மாதங்களும் தக்களிச் செடி நட்டு வைக்க முடிகின்றது. இங்கே குளிர் காலத்தை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டிய நிலை உள்ளது.

மேலும் 2 வகை செடிகளை வாங்கி வந்து நட்டுள்ளேன். அவற்றைப் பற்றி அடுத்த பதிவில்...!

சுபா... என் தோட்டத்திலிருந்து!.


Sunday, April 1, 2012

மாண்டல் (பாதாம்) பூக்கள் திருவிழா

திருவிழாக்களில் தான் எத்தனை வகை?

சென்ற வாரம்  சிற்றூரானா கிம்மல்டிங்கன் நகரில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவிற்குச் செல்வோம் என புறப்பட்டோம். பொதுவாக ஒரு ஸ்ட்ரீட் பார்ட்டி என்றால் அந்த ஊரின் பெயரோடு இணைந்து திருவிழாவின் பெயர் அழைக்கப்படும் இந்த சாலைத் திருவிழாவைச் சற்று வித்தியாசமாக டோய்ச் மொழியில் Gimmeldingen Mandelblütenfest என்று அழைக்கின்றனர். மாண்டல் என்று டோய்ச் மொழியில் குறிப்பிடப்படுவது பாதாம் பருப்பு.


மாண்டல் மலர்கள்

பாதாம் மரங்கள் ரைன் நதிக் கரையை ஒட்டிய அழகிய நகரமான நோய்ஸ்டாட் வைன் ஸ்ட்ராஸ பகுதியின் அருகில் இருக்கும் ஒரு சிற்றூர் தான் கிம்மல்டிங்கன். சற்று மலைப்பாங்கான நகரம். ஜெர்மனியின் மிக முக்கிய வைன் தயாரிப்பு நகரங்களில் ஒன்று நோய்ஸ்டாட். ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இந்தத் திராட்சை தோட்டங்களைப் பார்த்து மனதைப் பறிகொடுப்பர் என்பது உண்மை. கொள்ளை அழகைத் தாங்கி நிற்கும் இந்தச் சற்று மலைப்பாங்கான பகுதியின் அருகில் தான் கிம்மல்டிங்கன் நகரம் உள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா இது. பாதாம் மரங்கள் இளம் சிவப்பு மலர்களைத் தாங்கி நிற்கும் அழகே அழகு. இவற்றைப் பார்த்துக் கொண்டே மலைகளில் ஏறிச் சென்று திருவிழாவில் விற்கப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதும் மனதைக் கவரும் அம்சங்கள். இவ்வகை சாலை திருவிழாக்களை ரசிக்கக் காத்திருக்கும் ஜெர்மானியர்களுக்கு ஜெர்மன் பியர்களை ருசிப்பதற்கும் கரி உர்ஸ்ட், சாப்பிடுவதற்கும் நண்பர்களோடு பேசி மகிழ்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.



விக்கிபீடியாவில் உள்ள செய்தியின்படி இந்த கிம்மல்டிங்கன் பாதாம் திருவிழா 1934ல் தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டதாம். இடையில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சில ஆண்டுகள் இத்திருவிழா தடைபட்டாலும் மீண்டும் இவ்விழா தொடர்ந்து நடைபெற ஆரம்பித்து இப்போது ஆண்டுத் திருவிழாவாக அமைந்துள்ளது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழா சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இங்குள்ள ப்ரோட்டஸ்டெண்ட் தேவாலாயத்தில் தொடங்கப்படும். சனிக்கிழமை முடிந்து பின்னர் ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கடைகள் போடப்பட்டு விற்பனைகள நடைபெறுவதோடு இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.


வலது புறத்தில் தேவாலயம்

மரங்களையும் பூக்களையும் ரசித்ததோடு நான் spinatknoedel என்ற ஒரு வகை உணவை வாங்கி ருசிபார்த்தேன். இது கீரையை உடைந்த ரொட்டியுடன் சேர்த்து உருண்டையாக்கி தயாரிக்கபப்ட ஒரு வகை உணவு. அத்துடன் காரட் இஞ்சி கலந்த ஒரு சூப்பும் சாப்பிட்டேன். வித்தியாசமான சுவையில் அமைந்த உணவு வகை. அதற்குப் பின்னர் டம்ப்நூடல் எனப்படும் ஒரு வகை இனிப்புப் பலகாரத்தையும் வாங்கி அனைவரும் சுவைத்தோம். இது பார்ப்பதற்கு இட்லி போல இருக்கும். இதனை வனிலா சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது வைன் சாஸுடன் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.


டம்ப்நூடல்



நாட்டியமாடும் தோரணையில் ஒரு மாண்டல் மரம்


அழகான மதியம், அருமையான உணவு, உள்ளதைக் கொள்ளைக் கொழில் இயற்கைச் சூழல் - இவற்றை ரசித்து மாலையில் வீடு திரும்பினேன்.


சுபா



மாண்டல் பூக்களைப் போன்ற இனிப்புக்கள்






சுபா

Saturday, February 25, 2012

ஜெர்மனியின் புதிய அதிபர்

புதிய அதிபர் தேர்வாகிவிட்டார் சென்ற ஞாயிற்றுக் கிழமையே. செய்தி பகிர்ந்து கொள்ள எனக்குத் தான் அவகாசம் இல்லாமல் போய்விட்டது. 2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் தேர்தலில் எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஏகபோக ஆதரவுடன் இருந்த யோஆகிம் காவுக் இப்போது எல்லா கட்சிகளின் பேராதரவையும் பெற்று எந்தப் போட்டியுமின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டாக்ஸியில் இவர் ஒரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தாராம். சான்ஸலர் அங்கேலா மேர்க்கல் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்ததாம். ஆளும் சிடியுவும், எப்டிபியும் உங்களை முன் மொழிகின்றோம். அதோடு எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஆதரவும் உள்ளது. ஒரு மனதான ஒரு முடிவு. என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்டாராம். திகைத்துப் போனவர் உடனே சரி என்று சொல்லி விட்டாராம்.

தொலைபேசியில் பேசி முடித்ததும் டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னாரம் தொலைபேசி யாரிடமிருந்து வந்தது என்ன விஷயம் என்று. அதோடு நேராக போக வேண்டிய இடத்தை மாற்றி நாடாளுமன்றக் கட்டடம் போகச் சொன்னாராம்.

டாக்ஸி காரருக்கு ஒரே சந்தோஷம். சாதாரணக் குடிமகனை ஏற்றிக் கொண்டு போன நாம் நாட்டின் அதிபரை இறக்கி விடப் போகின்றோம் நாடாளுமன்ற வாசலில் என்று. தொலைகாட்சி செய்தியில் பேசிய டாக்ஸி ஓட்டுனர் மலைத்துப் போன அதே தோரணையில் பேசினார்.

ஜெர்மனியின் புதிய அதிபரைப் பற்றி தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Joachim_Gauck

@திரு. நரசய்யா - உங்களுக்காக ஒரு செய்தி.. .Joachim Gauck was born into a family of sailors in Rostock, the son of Joachim Gauck, Sr. (born 1907), and Olga Gauck (née Warremann, born 1910). His father was an experienced ship's captain and distinguished naval officer (Captain at Sea), who after World War II worked as an inspector at the Neptun Werft shipbuilding company

இவரைப் பற்றி பிறகு ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

சுபா

Saturday, February 18, 2012

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்

இந்த வாரம் இங்கே மக்கள் பேசிக் கொள்ள சில முக்கிய விஷயங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. நமக்கும் பேச விஷயம் தேவைப்படுகிறது.. .அவ்வப்போது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சில விஷயங்கள் நடந்தால் தேனே பொழுதும் சுவாரஸ்யமாகக் கழிகின்றது.. இல்லையா..


ஜெர்மன் அதிபரின் பதவி விலகல்

நேற்று காலை திடீரென்று ஜெர்மனியின் அதிபர் தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். கிறிஸ்டியான் உல்வ்.. ஆளும் ஆங்கேலா மேர்க்கலின் சிடியு கட்சியின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சாமர்த்தியமான, இளமையான, நல்ல பேச்சுத் திறமை உள்ள, அரசியல் அனுபவமும் உள்ளவர், ஒன்றரை வருட காலம் அதிபராகப் பதவி வகித்தவர். ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்பதும் இவருக்குள்ள தனிச்சிறப்பு. சட்டம் படித்த பட்டதாரி. 1975 முதல் அரசியலில் இருந்து வருபவர்.

இவ்வளவு அனுபவம் உள்ள ஒரு அதிபர் எதனால் பதவி விலக வேண்டும்.. அவரது தனிப்பட்ட சில நடவடிக்கைகள் தான் காரணமாக இருக்கின்றன.. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஒரு வீட்டிற்கு ஏதோ ஒரு வகையில் வந்த பணம் தான் முதல் பிரச்சனைக்குக் காரணமாக ஆனது. தொடர்ந்து இவரது விடுமுறை பயணங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் விலையுயர்ந்த உல்லாசச் செலவுகள்.. இப்படி கடந்த 2 மாதமாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தியாளர்கள் இவரது புனிதத்தை கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு இவரை தூங்க விடாமல் செய்து நேற்று காலை அவரே பதவி விலகுவதாகச் சொல்லி விலகிவிட்டார். இப்போது சேன்ஸலர் மேலும் ஒரு தகுதி வாய்ந்த அதிபரை முன் மொழிய வேண்டிய நிலை உள்ளது. இப்போது இது இங்கே ஒடு ஹாட் நியூஸ்.



யூரோ விஷன் பாடல் போட்டி

யூரோ விஷன் ஐரோப்பா முழுமைக்கும் இசைக் கலைனர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி. 1956லிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப்போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் ஒவ்வொரு வருடமும் போட்டியில் கலந்து கொள்ளும். 2010ல் ஜெர்மனியின் லேனா செட்டலைட் என்னும் மனம் மயங்க வைக்கும் பாடலை வழங்கி ஜெர்மனிக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்ததால் சென்ற ஆண்டு போட்டி இங்கே நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்ற அஸீர்பைஜான் இந்த ஆண்டு போட்டியை நடத்தும் நாடு. அதற்கு ஹெர்மனியிலிருந்து செல்லவிருக்கும் பாடகரையும் பாடலையும் தேர்ந்தெடுக்கும் போட்டி நிகழ்வுகள் கடந்த ஐந்தாறு வாரங்களாக நடந்து கடந்த வியாழனன்று போட்டியாளர் ரோமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். Standing Still என்ற தலைப்பிலான் பாடல்.. மிக நனறாக வந்திருக்கின்றது. போட்டியில் வெற்றி பெறத் தகுதியான பாடலா என்பது தெரியவில்லை. ஆனாலும் ரோமானின் பாடும் அழகும் குரலும் பாடல் வரிகளும் பார்ப்பவர்கள் மனதை இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது.இந்த 21 வயது இளைஞர்.. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவர்.. இங்கே பல இளம் பெண்களின் ஆண்களின் கனவு ராஜாவாக நிச்சயம் அடுத்த சில மாதங்களுக்கு ரோமான் உலா வருவார் என்பது நிச்சயம். http://www.thelocal.de/society/20120217-40805.html

2010ம் ஆண்டு லேனாவின் வெற்றி பெற்ற பாடல் யூடியூபில் இங்கே http://www.youtube.com/watch?v=UmOeISUYXuI

கார்னிவல்



கொல்ன்.. கலாச்சார மையம் என அழைக்கப்படும் இந்த நகரில் இந்த ஆண்டும் கோலாகலமாக கார்னிவல் ஆரம்பித்து விட்டது. வியாழக்கிழமை மாலையே பலர் அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு சென்று விட்டார்கள். பலர் செவ்வாய் கிழமை வரை கார்னிவல் மகிழ்ச்சியிலேயே திளைத்திருப்பர்.

நாளை மாலை அருகில் இருக்கும் ஒரு நகரத்தில் நீண்ட அணிவகுப்பு நடைபெற இருக்கின்றது. நானும் சென்று வர எண்ணியிருக்கின்றேன். மிகப் பிரமாதமான ஒரு அணிவகுப்பு அது . நிச்சயமாகப் படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

கார்னிவல் இங்கே எப்படி கொண்டாடப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்கே http://www.journeymart.com/holidays-ideas/festivals/cologne-carnival-germany.aspx சில செய்திகள் உள்ளன.

சுபா