Friday, August 9, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

பயணத்தில் புதிய மனிதர்களை நாம் சந்திப்பது வழக்கம் தானே.

வழக்கமான எனது வியாழக்கிழமை பயணத்தின் போது அருகில் அமர்ந்திருப்பவர் யாருடனும் நான் பேசுவதும் இல்லை; மற்றவர்களும் பேசுவதில்லை. முக்கிய காரணமே வியாழக்கிழமை மாலை அல்லது இரவு  விமானங்கள் பணி முடித்து தலை நிறைய பல சிந்தனைகளையும் கேள்விகளையும் சுமந்து கொண்டு தன்னுடனேயே வாதிட்டும், ஆமோதித்தும்,  ஒத்தும் போயும் இல்லையென்று மாற்றியும் அலுவலக விஷயங்களை அலசிக் கொண்டு வரும் நேரம் அது. அதில் கேசுவல் டாக்கிற்கு இடம் மிக மிகக் குறைவே.

என்றாவது எப்போதாவது தேவைப்பட்டால் மட்டும் அருகிலிருப்பவருடன்  பேசுவது நிகழும். அதுபோல் நேற்றும். மட்ரிட்லிருந்து ப்ராங்பர்ட் வந்து பின்னர் ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் வரும் விமானத்தில் நேற்று என் அருகில் ஒரு இளம் ஜெர்மானியப் பெண் அமர்ந்திருந்தார். ஏதேச்சையாக அவர் ஒன்று கேட்க நான் ஒன்று சொல்ல என எங்கள் பேச்சு 45 நிமிடங்கள் பயணம் முழுக்க நீடித்தது.

24 வயது பெண். OM - Operation Mobilization எனும் ப்ரோட்டஸ்டன் சமய நிறுவனத்தில் 1 வருடம் அமெரிக்காவில் ஒஹையோவில் பணி புரிந்து விட்டு சிறு விடுமுறைக்காக வீடு திரும்புவதாகக் குறிப்பிட்டார். டயக்கோனி, காரிட்டாஸ் ஆகிய இரண்டு பெரிய  இவ்வகை கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். எனது இரண்டு ஜெர்மானியத் தோழிகள் காரிட்டாஸிலும் டயக்கோனியிலும் பணி புரிகின்றார்கள். இருவருமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கோங்கோ நாட்டில் வருடத்தின் பல நாட்களைக் கழிப்பவர்கள். ஆனால்  இதுவரை Operation Mobilization எனும் இந்த நிறுவனம் பற்றி  நான் கேள்விப்பட்டதில்லையாகையால் இந்தப் பெண்ணிடம் மேலும் கேட்டு விபரமறிந்து கொண்டேன்.

அமெரிக்காவில் ஒஹையோ மானிலத்தின்  2100 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இவருக்குப் பணி. குழந்தைகளுக்குப் பைபிளை வாசித்துக் காட்டுவதும் விளக்குதும் இப்பணியில் அடங்கும். சம்பளம் மிகக் குறைவு. ஆனால் பயணச் செலவு, உணவு தங்கும் இடம், மற்றும் ஏனைய செலவுகளுக்கான சிறு செலவுத் தொகையை இந்தத் தொண்டூழிய நிறுவனம் வழங்கிவிடுமாம். இந்தப் பெண்ணுக்கு இது கல்லூரி முடித்து இவ்வகைப் பணிகளில் அனுபவம் பெறுவதற்காகச் செல்லும் இரண்டாவது அனுபவமாம். முதலில் ஸ்பெயினின் ஒரு சிறு நகரில் 4 மாதங்கள் இத்தகைய பணி செய்து 1 மாத விடுமுறைக்குப் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு 1 வருடம் கிராமத்தில் பணி புரிந்து விட்டுத் திரும்புகின்றார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனமோ ப்ராட்டெஸ்டண்ட் மதம் சார்ந்த நிறுவனம். இரண்டுக்குமே அடிப்படை கிறிஸ்துவம் தான் என்றாலும்  கொள்கை அளவில் அடிப்படையில் வேறுபடும் 2 மதங்கள்.  எல்லாமே வேலைதானே. இவ்வகை விஷயங்களில் அனுபவம் வேண்டும் என்பதால் இது எனக்குப் பிரச்சனையில்லை என்று சொல்லிச் சிரித்தாள் அந்தப் பெண்.

எனது உறவுக்காரப் பெண்.  மலேசியாவிலிருந்து தனது 20ம் வயதில் இங்கு வந்து ஜெர்மனி ஆகன் நகரில் 2ம் ஆண்டு கணினி இயந்திரத்துறையில் படிப்பவள். அவளும் இப்படித்தான். இளம் வயதாகினும் மிகுந்த துணிச்சலுடன் பயணிப்பதும் தனது வாழ்க்கைத் தேவைகளை தானே பார்த்துக் கொள்வதும் என இருக்கின்றாள்.

இத்தகைய இளம் பெண்களைப் பார்க்கும் போது என் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக இளம் வயதிலேயே தனியாக பல நாடுகளுக்குச் செல்லத் தயங்காத, தனக்குப் பிடித்த துறையில் தானே முடிவெடுத்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்குவம் இத்தகைய பெண்களுக்கு இருக்கின்றது.

பெண்களுக்குப் பல்வேறு வகையில் வாய்ப்புக்கள் குவிந்திருக்கும் காலம் இது என்பதில் ஐயமில்லை. சிந்திக்க, தனக்குச் சரியெனப்படும் தொழில் துறையைத்தேர்ந்தெடுக்க, முடிவெடுக்க, எடுத்த  முடிவைச் செயல்படுத்த வாய்ப்புக்கள் நிறைந்திருக்கின்றன. அச்சமும், தயக்கமும் இல்லாமல்,  இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும் பெண்கள் வாழ்க்கையில் சந்தேகமின்றி மிக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடிய காலம் இது.

தடைகள் புறத்தில் என்பதை விட மனத்தில் இருந்தால் தான் முன்னேற்றம் பாதிக்கும். மனத்தின் தடைகளை வீசிவிட்டு பெண்கள் தெளிவுடன் கல்வி, தொழில் துறை ஆகியவற்றில் சிறப்பு பெற வாய்ப்பளிக்கும் காலம் இது .  கிடைக்கின்ற நல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தெளிந்த சிந்தனையும், தூர நோக்குச் சிந்தனையும், சாதுர்யமும் சாமர்த்தியமும் ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் தான் இருக்கின்றது!!!!!

சுபா

Friday, August 2, 2013

ஸ்டுட்கார்ட்டில் இந்திய திரைப்பட விழா

ஸ்டுட்கார்ட் நகரில் எனது இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தும் கூட இவ்வாண்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தார் சிறப்பு நிகழ்வுகளால் வார இறுதி நாட்களில் ஸ்டுட்கார்ட்டில் இல்லாத நிலையில்  இவ்வருடம் கலந்து கொள்ள முடியாமல் ஆகி விட்டது. வருடா வருடம் நிகழும் இந்த நிழ்வில் சென்ற வருடம் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்களுடன் தமிழ் சினிமா புகழ் சுகாசினி வந்திருந்தார். இந்த வருடம் ரேவதி வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன்.

3 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் ஸ்டுட்கார்ட்டில் உள்ள திரையரங்குகளில் ஆங்காங்கே இந்திய திரைப்படங்களும் குறும்படங்களும் செய்திப்படங்களும் நடைபெறுவதோடு நடனங்களும் கடைகளும் அமைந்திருக்கும். இந்திய உணவுகளும் கிடைக்கும்.

இவ்வருட படங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு தமிழ் குறும்படமாக அமைவது திரு.ஜெயகாந்தனின் தாம்பத்யம் எனும் அதே தலைப்பிலான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 10 நிமிட குறும்படம்.காட்சியிடப்பட்ட முழு திரைப்படங்களின்  பட்டியலையும் இங்கே காணலாம்.
http://www.indisches-filmfestival.de/en/2013/programme/all-films/

ஏனைய தகவல்கள் அறிந்து கொள்ள http://www.indisches-filmfestival.de/en/2013/

சுபா