Saturday, July 13, 2013

வைஹிங்கன் அன் டெர் என்ஸில்..

வார நாட்கள் சில நேரங்களில் நமது திட்டமிடுதலுக்கு ஒத்துழைக்க மறுத்து விடும் நிலமைகள் பல வேளைகளில் அலுவலகங்களில் பணி புரிகின்ற பலருக்கு நிகழ்ந்து விடுகின்றது. தினம் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி வைத்திருந்தாலும் அலுவலகப் பணிகள் மிக அதிக அளவில் நமது நேரத்தை திருடிக் கொள்ளும் போது ஏனைய விஷயங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கின்ற நேரத்தைப்பலிகொடுக்க வேண்டிய கட்டாயம் வாய்த்து விடுவது பலருக்கும் அனுபவமாக இருக்கும்.

அலுவலக சிந்தனைகளைத் தொலைத்து விட்டு  நம்முடைய இயல்பான நிலைக்கு வருவதற்கு பலர் சிரமப்படுவதுண்டு. வீட்டுக்கு வந்த பின்னரும் அலுவலகச் சிந்தனைகளே மனதை ஆக்ரமித்திருக்கும் நிலை. பனியே தானாகி  தன் இயல்பை மறந்து  பல வேளைகளில் நாம் நாமாக இல்லாத நிலைகளை உணர்கின்றோம். வார நாட்கள் தருகின்ற மன அழுத்ததை மாற்ற வார இறுதி நாட்களில் இயற்கையில் ஒன்றிப்போவது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரும் ஒரு மருந்து அல்லவா?

இங்கு கோடை காலங்களில் நாங்கள் வார இறுதியில் நீண்ட நடைப்பயணங்களை மேற்கொள்வதுண்டு. என் நண்பர்கள் ரோபர், நிக்கோலா, வெர்னர், பீட்டர்   இணைந்து கொண்டதால் ஐவராக ஒரு நடைப்பயணம் செய்ய திட்டமிட்டோம். நடைப்பயணம் என்றாலே ஏற்பாடுகள், இடம் தேர்ந்தெடுத்தால் எல்லாம் எனது பணியாகிவிடும். என் தேர்வுகளும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்ததாக அமைந்து விடும்.


இம்முறை 18 கிமீதூரம் உள்ள ஒரு நடைபயணத்தை அதிலும் ஸ்டுட்கார்ட் நகருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். வயல் பகுதியில் ஆரம்பித்து என்ஸ் நதிக்கரையோரமாக நடந்து சென்று பின்னர் திராட்சை தோட்டம் உள்ள மலைப்பகுதியில் ஏறிச் சென்று பின்னர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து சில கி.மீ தூரம் காட்டுப் பகுதியில் நடந்து பின்னர் மீண்டும் வயல் பகுதிக்கு வந்து பயணம் முடிவடையும். காலை 10 மணிக்குத் தொடங்கி 3 மணி அளவில் முடிக்கலாம் என்பதாகத் திட்டம். ஆனால்  இடையில் மதிய உணவுக்காகவும் ஓய்வெடுத்ததால் 5 மணிக்குத்தான் முடிக்க முடிந்தது.

எங்கும் பசுமை. வளர்ந்து அருவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை, கடுகுப் பயிர், வரிசை வரிசையாக நிற்கும் திராட்ச்சை மரங்கள், மரம் முழுக்க பழங்களைத் தாங்கி நிற்கும் செர்ரி மரங்கள், ஆப்பிள் பேர் பழ மரங்கள், கிராமத்தில் விவசாயிகளில் தோட்டத்தில் காய்த்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வீட்டு வளர்ப்புப் பிராணிகள், மலைப்பாறைகளின் அழகு அனைத்துமே உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

ஸ்டுட்கார்ட் அருகிலேயே இருக்கும் இப்பகுதிக்கு ஸ்டுட்கார்ட் வாசிகளான எங்கள் ஐவரில் இதுவரை  யாருமே சென்றிருக்கவில்லை. இப்படி ஒரு அழகான பகுதி இங்கே இருக்கின்றதா என மலைத்துப் போய் திரும்பினோம்.









































குறிப்பு: இது இரண்டு வாரங்களுக்கு முன் சென்ற நடைப்பயணம்.

சுபா




Friday, July 12, 2013

MyKuhTube

ஜெர்மனி மட்டுமல்ல ஐரோப்பாவில் வாழும் பல குழந்தைகளுக்கும் இளையோருக்கும் கடைகளில் வாங்குவதற்காக விற்கப்படுகின்ற இறைச்சிகளும், சாசோஜ், போன்றவையும் எதிலிருந்து செய்யப்படுகின்றன என்ற போதுமான விஷயம் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இங்கு வீடுகளில் ஆடுகளையும், மாடுகளையும் கோழிகளையும் உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து வெட்டி அதனை சமைப்பது என்பதை இன்றைக்கு 50, 60 வருடமாக வாழ்க்கையில் அனுபவித்திராத நிலையில் உள்ளவர்களாக இவர்கள் இருப்பதால் இந்த நிலை. பேக்கட்டில் கிடைக்கும் ஒரு துண்டு சாசோஜ் தாம் விவசாயிகளின் தோட்டத்தில் பார்க்கும் அழகான கொழு கொழுவென்றிருக்கும் பன்றி ஒன்றின் இறைச்சியால் செய்யப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆக மாடுகளுக்கு பல் இருக்குமா..? எப்போது அவை பால் கொடுக்கும்?  எப்படி அவற்றை ஒரு விவசாயி வளர்க்கின்றார் என்பது போன்ற தகவல்கள் இளையோரை மிகக் குறைவாகவே சென்று சேர்கின்றன.

இதனை மனதில் கொண்டு ஜெர்மனியின் சாக்ஸனி மாகாணத்தைச் சார்ந்த 16 விவசாயிகள் ஒன்றினைந்து யூடியூபை பயன்படுத்தி விவசாயிகளின் உலகத்தை இளையோருக்குக் கொண்டு செல்ல ஒரு முயற்சியைத் தொடங்கியிருக்கின்றனர். இதன் பெயர்  MyKuhTube (Kuh என்பது மாடு என்பதன் டோய்ச் மொழிச் சொல்)



இப்பக்கம் http://www.youtube.com/user/mykuhtube என்ற யூடியுப் பகுதில் அமைந்திருக்கின்றது.

இந்தத் திட்டத்திற்காக ஏதும் பிரத்தியேகமாக அவர்கள் தயார் செய்வதில்லை. தங்களின் அன்றாட பணிகளை அப்படியே கேமராவில் பதிவது. ஒவ்வொரு பதிவும் 3 -5 நிமிடங்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக சில..

http://www.youtube.com/user/mykuhtube

http://www.youtube.com/watch?v=fqfO6xRf8Zc
1. புதிதாக ஒரு புதிய மேய்ச்சல் நிலத்திற்கு வரும் போது மாடுகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைக் காட்டும் பதிவு


2.http://www.youtube.com/watch?v=hN-7oCihlsQ
மாடுகளுக்கான உணவுகள்

3.http://www.youtube.com/watch?v=uHCyQ-6mobk
காலை 9:30க்கு ஒரு மாடு வளர்க்கும் விவசாயி என்ன செய்வார் என்பதைக் காட்டும் ஒரு பதிவு. 80 மாடுகள் வைத்திருக்கும் ஒரு விவசாயி இவர்.

http://www.youtube.com/watch?v=dhDNp1hshiQ
குளிர் காலத்தில் உள்ளேயிருந்து விட்டு முதன் முதலாக வசந்த காலத்தில் வெளியே புல் சாப்பிட வரும்போது மாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் காட்டும் பதிவு.

http://www.youtube.com/watch?v=zIMHjUNPvb8
75 மாடுகள் வைத்திருக்கும் ஒரு விவசாயி. தன் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு எவ்வாறு அமர்ந்து கொள்ள இடம் தயார் செய்யப்படுகின்றது  என இப்பதிவில் காடுகின்றார்.

MyKuhTube - இது நிச்சயமாக இளையோரைச் சென்றடையும் நல்லதிரு முயற்சி.

மேலும் பல வீடியோக்கள் இருக்கின்றன. ஆர்வமுள்லோர் பார்த்து ரசிக்கலாம்.

சுபா