Sunday, November 27, 2011

அட்வெண்ட் முதல் ஞாயிறு

கிறிஸ்மஸ் பண்டிகை இங்கு களை கட்டத் தொடங்கி விட்டது. கடந்த வியாழன் ஜெர்மனியின் நாடெங்கிலும் பல நகர்களிலும் சிறு கிராமங்களிலும் Weinachtsmarkt எனச் சொல்லப்படும் கிறிஸ்மஸ் சந்தை தொடங்கி விட்டது. சிறு கூடாரங்கள் அமைத்து அதில் கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பல வடிவங்களில் செய்து விற்பனைக்குப் பொருட்களை வைத்து விற்பது வழக்கம்.

குறிப்பாக இவ்வித சந்தைகளில் விதம் விதமான மெழுகு வர்த்திகள், தேனீர் கலவைகள், வாசனை சோப்பு, வீட்டு அலங்காரப் பொருட்கள், கிறிஸ்மஸ் சிறப்பு இனிப்புப் பண்டங்கள் ஆகியவை கிடைக்கும். சூடான க்ளூ வைன் அருந்துவது இந்த கிறிஸ்மஸ் சந்தைக்கு வந்து செல்வோர் அனைவரின் விருப்பமும் கூட.

இங்கு கிடைக்கும் மெழுகுவர்த்திகள் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக தேனில் கலந்து செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் , பழங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், பூக்கள் கலந்து தயாரிக்கப்பட்டவை, மூலிகை இலைகள் கலந்து தயாரிக்கப்பட்டவை என விதம் விதமாக் கண்களைக் கவரும் வகையில் இவை கிடைக்கும்.

தேனீர் கலவைகளில் பலவகைகளைக் வைத்திருப்பார்கள். ஆரஞ்சுடன் கலந்த தேனீர், பல்வேறு மூலிகைகள் கலந்தவை, உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்டவை, என இவற்றிலும் வித்தியாசங்களைக் காணலாம். நான் இம்முறை கிற்ஸ்மஸ் தேனீர் எனப்படும் மூலிகைகள் கலந்த தேனீர் கலவை வாங்கியிருக்கிறேன்..

அதோடு பிரத்தியேகமாக இந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் வகை வகையான தேன்களையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள், காட்டு மரங்களின் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன், லவென்டர் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் என இவற்றிலும் பலவற்றை சாப்பிட்டுப் பார்த்து நமக்குப் பிடிக்கும் தேனை வாங்கிக் கொள்ளலாம். இம்முறை கிற்ஸ்மஸ் மரத்தின் ஒருவித பூவிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒன்றினை வாங்கியிருக்கின்றேன். மென்மையான, அதே சமயம் வித்தியாசமான இனிப்புச் சுவை கொண்ட தேன் இது.

அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கூடாரங்களையும் பார்ப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். மிக அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இவற்றின் கூறை பகுதி தான் கண்கவர் காட்சியாக அமைந்து விடும்.

இந்தக் கூடாரங்கள் கிறிஸ்மஸ் நாளிற்கு இரண்டு நாள் வரை வைத்திருப்பார்கள். ஏறக்குறைய 27 அல்லது 28 நாட்கள் இக்கூடரங்களின் சொந்தக்காரர்கள் அதே இடத்தில் தங்கள் விற்பனையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

கிற்ஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் முதல் அட்வெண்ட் ஞாயிறு வாழ்த்துக்கள்.




















































அன்புடன்
சுபா

Saturday, November 19, 2011

ஆமைகள் வீட்டில் வளர்ப்புப் பிராணியாக...!

பூனைகள், நாய்கள், முயல்கள், பறவைகள், மீன்கள் .. இவை பலருக்கு வளர்ப்புப் பிராணிகளாக அமைந்து விடுகின்றன. ஜெர்மனியில் குதிரைகள், கழுதைகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் சேவல், வாத்துக்கள், போன்றவை பெருமளவில் தொழில் நிமித்தம் வளர்க்கப்பட்டாலும் இவைகளையும் செல்லப்பிராணிகளாகக் கருதி அன்பு காட்டும் பலர் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்களின் செல்லப்பிராணியான ஆமைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டிலேயே இரண்டு பெரிய ஆமைகள் இருக்கின்றன. அந்த ஆமைகள் ஏப்ரல் மாத வாக்கில் இட்ட முட்டைகளில் பல பொரிக்காமல் போனதில் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம். தப்பிப் பிழைத்து 5 ஆமைக் குஞ்சுகள் உயிரோடு இருக்கின்றன. இவற்றில் மூன்றை வேறொரு நண்பருக்குக் கொடுத்து விட்டு 2 குட்டி ஆமைகளையும் பெரிய ஆமைகளையும் மட்டும் வைத்திருக்கின்றார்கள்.


நான் சென்ற சமயம் குளிர் காலத்தின் ஆரம்பம் என்பதால் ஆமைகளை ஒரு பெட்டியில் தங்க/தூங்க வைத்திருக்கின்றார்கள். அப்பெட்டியில் முதலில் நல்ல கடற்கரை மணலை போட்டு அதன் மேல் காய்ந்த சருகுகளைப் பரப்பி விடுகின்றார்கள். அதன் மேல் பெரிய ஆமையை வைத்து அதற்கு மேலே காய்ந்த சருகுகளைப் போட்டு மூடி விடுகின்றார்கள். ஒரு பெரிய ஆமைக்கு ஒரு பெரிய பெட்டி தேவைப்படுகின்றது. பெரிய ஆமையின் ஓட்டின் அளவு ஏறக்குறைய 30 செ.மீ. நீளமாக 25 செ.மீ. அகலமாக இருக்கலாம் .

ஆமைக்குஞ்சுகள் இரண்டுக்கும் ஒரு பெட்டி அமைத்திருக்கின்றார்கள்.

பெட்டிக்குள் இருக்கும் பெரிய ஆமை நீண்ட உறக்கத்தில் இருப்பதால் அதனை நான் புகைப்படம் எடுக்கவில்லை. குட்டி ஆமைகள் பெட்டிக்குள்ளே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அவற்றை வெளியே தூக்கி வந்து சற்று வெயிலில் வைத்து நகர வைத்து பார்த்தோம்.

மிக அழகான விலங்குகள் தாம் ஆமைகள்.

இங்கே ஆமைகளை வீட்டில் வளர்ப்பதற்கு உள்ளூர் நகராட்சி மையத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆமைக்கும் அதனை வளர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. புதிதாகப் பிறந்த இந்த இரண்டுக்கும் சான்றிதழ்கள் தயாரித்து விட்டனர். பதியும் போது கட்டணமும் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.


கோடைக் காலத்தில் இந்த ஆமைகளைச் சாதாரணமாகச் செடிகள் இருக்கும் இடத்தில் வைத்து வேலி போட்டு விடுகின்றனர். இதனால் ஆமைகள் வெளியே போகாமல் இருக்க உதவுகின்றது. கேரட் தக்காளி போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டுக் கொண்டு இந்தப் பகுதியிலேயே இவை சுற்றிக் கொண்டிருக்குமாம். குளிர்காலம் முழுவதும் பெட்டிக்குள்ளேயே உறங்குவதுதான் இவற்றின் வேலை. 6 மாதம் வெளி உலகம் ஆறுமாதம் நீண்ட உறக்கம் என இந்த ஆமைகள் இங்கே வாழ்கின்றன.



அன்புடன்
சுபா

Sunday, November 6, 2011

இலையுதிர் காலத்து கோலங்கள்

நான் வசிக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதி நகரமான லியோன்பெர்க்கில் இலையுதிர்காலம் தொடங்கி விட்டது. இது சிறிய நகரமென்றாலும் காட்டுப் பகுதியை ஒட்டிய ஒரு நகரம் என்றே சொல்லலாம். கோடைகாலத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் காடுகள் இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மஞ்சளாக, இளம் சிவப்பாக கருஞ்சிவப்பாக உருமாறி பின் பழுப்பு நிறமாகி தன்னை மரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு உதிரிந்து விடுகின்றன.

லியோன்பெர்க்கின் இலையுதிர் காலத்து அழகை என் கேமராவில் இன்று பிடித்து வைத்தேன். பாருங்களேன்.




உதிர்ந்து கிடக்கும் இலைகள்















நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்கள்





கிறிஸ்மஸ் விழாவுக்கு தயாராகும் கிறிஸ்மஸ் மரங்கள்





உதிர்ந்த சருகுகள் குருவிக்கு வீ(கூ)டு





உடைந்த கிளைக்ளில் பச்சை பாசி





ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 3 - knödel

அன்று சொன்ன அந்த ரெசிப்பியைச் சமைத்த போது படம் பிடித்து வைத்திருந்தாலும் பகிர்ந்து கொள்ள நேரம் அமையவில்லை. இன்று படங்களுடன் செய்முறையையும் விவரிக்கிறேன்.

Kartoffelknödeln /Kartoffelkloße  உருளைக் கிழங்கு உருண்டைகளும் காளான் சாஸும்

வேகைவைத்த உருளைக்கிழங்கை மிகச் சிறிதாக நறுக்கி அவற்றை கொஞ்சம் மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வட்டமாக உருட்டி வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உருண்டைகள் Kartoffelknödeln   கார்ட்டோஃபெல் க்னோடல் என அழைக்கப்படுகின்றன. இதனை சுயமாகத் தயாரிக்கலாம். அல்லது கடையில் இது தயாரிக்கப்ப்ட்டு ரெடி மேடாக கிடைக்கும். அதனையும் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தி இந்த உணவைத் தயாரிக்கலாம்.


skno1.jpg

நான் கடையில் கிடைக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கு உருணடைகளை இந்தச் சமையலுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு உருண்டைகள் - ஒரு பாக்கேட்டில் 6 உருண்டைகள் இருக்கும். இது இருவருக்கு போதுமான அளவு.
  • தயாராக இருக்கும் ஏதாவது ஒரு சாஸ் கலவை - இது காளான் சாஸ் அல்லது ப்ரொக்காலி சாஸ். பெரும்பாலும் காளான் சாஸ் மிகப் பொறுத்தமாக இருக்கும்.
  • சிறிய செர்ரி தக்காளிகள்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகுத் தூள் - தேவையான அளவு

இந்த சமையல் செய்வதற்கு 20 நிமிடங்கள் போதுமானது.

skno2.jpg

ஒரு பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் மெல்லிய துணியால் சுற்றப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைகளைப் போடவும். பத்து நிமிடங்கள் நன்றாக இந்தக் கிழங்கு உருணடைகள் வெந்ததும் மேலே வந்து விடும். அவற்றை மெதுவாக எடுத்து குளிர்ந்த தண்ணீரில் ஒரு முறை நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது உருளைக்கிழங்கு உருணடைகளை மூடியிருக்கும் மெல்லிய துணியை நீக்கி விடவும்.

skno3.jpg


உருளைக் கிழங்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே சாஸ் தயாரிக்க ஆரம்பிக்கலாம். சாஸ் கலைவையை 500 மி.லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை நன்றாக கலக்கி மிதமான சூட்டில் வைத்து கிளறவும். 5 நிமிடங்கள் இவ்வாறு கிளறியவுடன் சாஸ் கலவை தயாராகி விடும்.

இப்போது ஒரு தட்டில் உருளைக்கிழங்கு உருண்டைகளை வைத்து அதன் மேல் சாஸ் தேவையான அளவு சேர்க்கவும். சுவையைக் கூட்ட செர்ரி தக்காளிகளைச் சேர்த்து கொஞ்சம் மிளகுத் தூளைத் தூவி அலங்கரித்து சாப்பிடவும்.

skno4.jpg


இது தெற்கு ஜெர்மனியில் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று.