Thursday, April 26, 2018

சிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு

கடந்த ஈராண்டுகளில் ஜெர்மனிக்கு சிரியாவிலிருந்து அகதிகளாக வந்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிரவாதப் போக்குடன் திகழும் இவர்களில் சிலரால் உள்ளூரில் பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரம் தலைநகர் பெர்லினில் தலையில் கிப்பா (யூதர்கள் அணியும் துணியால் ஆன தொப்பி) அணிந்து சென்ற ஒரு இளைஞனை சிரியர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். யஹூடி என சொல்லிக் கொண்டே அடித்திருக்கின்றனர். யஹூடி என்பது அரேபிய மொழியில் யூதர் எனப் பொருள் படும்.

இதனைக் கண்டித்து பெர்லின் மட்டுமல்லாது ஏனைய இடங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது.

பெர்லின் மேயர், ஒரு ஜெர்மானியர். அவரோடு யூதர்கள் இல்லாத பல ஜெர்மானியர்கள் இணைந்து இதனைக் கண்டித்து பேரணி நடத்தியிருக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் சிரிய நாட்டை அழித்து வருகின்றது. ஜெர்மனிக்கு அகதியாக வந்த நிலையிலும் இங்கும் தங்கள் தீவிரவாதப் போக்கினைத் தொடர்வது உள்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவதாகவே உள்ளது. இது ஆளும் அரசின் மீது, குறிப்பாக சான்சலர் ஆஞ்செலா மெர்க்கல் மீது கடும் கோபத்தை பலருக்கும் ஏற்படுத்தி வருவதை செய்திகளின் வழி அறிய முடிகின்றது.

2ம் உலகப் போரின் விளைவுகளை உணர்ந்த ஜெர்மானியர்கள், யூதர் என மட்டுமல்லாது எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். மிக அதிகமான அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் நாடுகளில் முக்கிய நாடாக ஜெர்மனி இன்று திகழ்கின்றது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் ஜெர்மனி இன்று எதிர்நோக்குகின்றது.

http://www.latimes.com/world/europe/la-fg-germany-berlin-yarmulke-20180425-story.html
-சுபா