Monday, October 31, 2011

தென்னிந்திய சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சி

ஐரோப்பாவில் என்றாவது ஒருமுறை தென்னிந்திய சினிமா கலஞர்களின் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அப்படியே ஏற்பாடு செய்து நடந்தாலும் பெறும்பாலும் லண்டன், சுவிஸர்லாந்தில் பெர்ன் நகரிலோ அல்லது ப்ரான்ஸில் பாரிஸிலோ நடைபெறுவது உண்டு. ஒரு மாற்றமாக ஸ்டுட்கார்ட் நகரில் நேற்று ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. சனிக்கிழமை எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்த தகவலை வைத்து தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் நிகழ்ச்சி நடைபெறுவது உண்மைதான் என்று உறுதியானதும் எனக்கும் ஒரு டிக்கெட் பதிவு செய்து கொண்டேன்.

லக்‌ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் பிரபல தமிழ் சினிமா பாடகர்கள் ஷைந்தவி, மாலதி, க்ரிஷ், ஹரிசரன் ஆகியோருடன் வந்திருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.






தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது மாலை 4 மணிக்கு நிகழ்வு என்று தெரிந்து சரியாக நான்கு மணிக்குச் சென்று விட்டேன். நான் எதிர்பார்த்ததற்கும் மாறாக ஒரு துருக்கியர்கள் திருமண மண்டபம் போன்ற ஒன்றில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. ஏறக்குறை 4:30 மணிக்குத்தான் கதவை திறந்து உள்ளே அனுமதித்தனர். உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் மேடையில் கலைஞர்களின் இசைக் கருவிகள் ஒழுங்கு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மாலை 6:20க்குத் தான் நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதில் பல தொழில் நுட்பச் சிக்கல்கள். ஏற்பாட்டில் நிகழ்ந்த சிற்சில பிரச்சனைகள் சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது.

நிகழ்ச்சியை ஆரம்பிக்க சிங்கையிலிருந்து வந்திருந்த ஒரு நடனக்குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. நடனம் ஏமாற்றமாகவே அமைந்து விட்டது. பாடகர்களில் முதல்பாடலை ஆரம்பித்து வைத்தார் ஷைந்தவி. மிக அருமையான குரலில் இனிமையாக குறையொன்றுமில்லை என்ற கீர்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாடகி மாலதி ஒரு பாடல் பாட பாடகர் ஹரிசரன் வந்து ஒரு சினிமா பாடலை பாடினார். அதற்குப் பிறகு பாடகர் க்ரிஷ் டி.ஆர்.ராஜேந்திரனின் சலங்கையிட்டாள் ஒரு மாது எனும் பாடலை பாடி மகிழ்வித்தார். இவருக்கு மிக நல்ல தமிழ் உச்சரிப்பு. ஏனைய சினிமா பிரபலங்கள் போல் இல்லாமல் தயங்காமல் மிகச் சரளமாகத் தமிழ் பேசுகின்றார். அத்துடன் மேடையை விட்டுடிறங்கி வந்து பொது மக்களில் சிலரையும் பாட வைத்து கலாட்டா செய்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சி படுத்தினார்.




திரு.லக்‌ஷ்மணன் நல்ல மிமிக்ரி கலைஞர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக நல்ல திறமையுடயவர். எல்லோரும் ரசித்து சிரிக்கும்படி மிமிக்ரி செய்து காட்டினார்.

அத்தனை பிரச்சனைகளையும் மேடையில் இருந்து சமாளித்துக் கொண்டே நிகழ்ச்சியை முடிந்தவரை நல்ல முறையில் கொண்டு செல்ல ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தார். இடையிடையே மைக் செட் ஏற்பாடு செய்யும் ஊழியர் குறுக்கிட்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் பொறுமையுடன் அதனையும் சுவாரஸியமாக மாற்றி நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார். அதறகு எனது பாராட்டுக்கள்.


இந்த பாடகர்களோடு சிறுமி அமுதா, குமாரி.பிரியா ஆகியோரும் மிக அருமயான பாடல்களை வழங்கினர்.

நேரம் அதிகமாகிவிட்டதால் நான் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விட்டேன். நிச்சயம் மேலும் 2 மணி நேரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கும் என்றே நினைக்கிறேன்.

அடுத்த முறை இம்மாதிரி நிகழ்வுகளை செய்ய வருபவவர்கள் ஒரு நாள் முன்னரே வந்து தயாரிப்பு ஏற்பாடுகளையும் சரியாக இருக்கின்றதா எனக் கவனித்துக் கொள்வது கலைஞர்கள் எந்த தடங்கலும் பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்த உதவும். இதனை மனதில் கொண்டு செயல்பட்டால் தரமான இந்த இசைக் கலைஞர்கள் தங்கள் படைப்புக்களை திருப்தியாகச் செய்து முடித்து மன மகிழ்ச்சியுடன் திரும்பலாம்.

படங்கள்...



சிங்கை நடனக் குழுவினர்



சிங்கை நடனக் குழுவினர்



இசைக்குழுவினர்



செல்வி.அமுதா



பாடகர் க்ரிஷ் மற்றும் திரு.லக்‌ஷ்மன்



பாடகர் ஹரிசரன்



பாடகி ப்ரியா







அன்புடன்
சுபா

Monday, October 10, 2011

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 2 மவுல்டாஷன்


உங்கள் ஊக்கம் தரும் நம்பிக்கையில் முதல் உணவு வகையைப் பற்றி சில தகவல்கள் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் வாழ்வது ஷ்வாபன் நகரத்திலே.. அதாவது பாடன் உர்ட்டெம்பெர்க் மானிலத்தின் மக்களை "ஷ்வாப",  "ஷ்வேபிஷ்" என அழைப்பது வழக்கம். இந்த மானிலத்து மக்களின் உணவு எனக்கு மிகப் பரிச்சயமாகி இருப்பதால் இதன் உதாரணங்களிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

பொதுவாகவே ஷ்வாப என்றாலே அதற்கு மறைமுகமாக ஒரு கருத்தும் உண்டு.. அதாவது இந்த மக்கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள்.. பணத்தை வீணாக்க மாட்டார்கள்.. பணத்தைச் சேகரித்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் என்பது இவர்களைப் பற்றி மற்ற பகுதி ஜெர்மானியர்கள் கேலி செய்து பேசுவது வழக்கம்.

இங்கு நண்பர்கள் எனக்கு ஷ்வாபன் மக்களைப் பற்றி விளக்கிய போது ஒரு பாடலின் இரண்டு வரிகளை அறிமுகப்படுத்தினர்
Schaffe, schaffe, Häusle baue,
Und net nach de Mädle schaue.

ஒரு ஆட்டிடம் பேசுவது போல.. ஆடே.. ஆடே வீடு கட்டு.. அதோடு சும்மா அந்த இளம் பெண்ணை பார்த்துக் கொண்டிருக்காதே.. என்று கேலி செய்வது போல அமைந்த நீளமான ஒரு பாட்டு.

இந்தப் பாடலை முழுதுமாக பாருங்களேன்.. 60களில் பதிவு செய்யப்பட்ட பதிவாக இருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் இன்னமும் ஒரு சில முதியோர்களிடையே பிரபலம் தான்..!

http://www.youtube.com/watch?v=wayYus43QPw&feature=related

இதில் குறிப்பாக உணர்த்தப்படுவது ஒரு ஷ்வாப மனிதனுக்கு முக்கியமாக அமைவது ஒரு வீடு. .அவன் அருந்த பியரும் வைனும்.. மற்றவர்கள் சொகுசாக இருந்தாலும் எனக்கு எப்போதும் பணம் குறைவாகவே உள்ளது என்பதாகும்..
இவர்கள் எப்போதும் எவ்வளவு பணம் இருந்தாலும் குறைவாக இருக்கின்றது என்றே சொல்லிக் கொள்பவர்கள்..

சரி.. இன்று நாள் உங்களுக்கு எப்படி இருக்கின்றது என்று கேட்டால்.. ஹ்ம்ம்ம்.. இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.. என்று தான் பதில் வரும்.

எப்படி இருக்கின்றீர்கள்..?  இன்று என்று கேட்டால்..    இருக்...கேன்.. (Ja .. es geht..) என்று தான் பதிலிருக்கும். ஆனால் மிக நன்றாக இருக்கின்றார்கள் என்று அதற்கு பொருள். :-)


சரி.. இன்றைய சமையலுக்கு வருவோமே..!

முதலில் இப்பகுதியை அலங்கரிப்பது "கெரொஸ்டெடெ மவுல்டாஷன்" (Gerostete Maultaschen) அதாவது வறுத்த மவுல்டாஷன் என்று மொழி பெயர்க்கலாம்.

மவுல்டாஷன் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டு வாக்கிலேயே புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

மவுல்டாஷ்ன் என்றாலே பொதுவாக ரொட்டி தயாரிப்பது போன்று தயாரிக்கப்பட்ட ஒரு கலவைக்குள் அறைத்துக் கலந்த பொருட்களை திணித்து ஒரு சிறு பெட்டி போன்ற அமைப்பில் சுற்றி வைத்திருப்பதாகும்.

மவுல் என்றால் விலங்கின் வாய், டாஷன் என்றால் பெட்டி என்று மொழிபெயர்க்கலாம்.

எனக்குப் பிடித்த, மிக எளிய, விரைவில் அதாவது 20 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய உணவு இது. மவுல்டாஷனின் இரண்டு வகை உண்டு.
1. பன்றி இறைச்சியுடன் மசித்து சேர்த்த காய்கறிகளைக் கொண்டது. இது தான் பாரம்பரியமானது.
2.கீரையுடன், உருளைக் கிழங்கு காரட் பீன்ஸ் மசித்து கலந்து அடைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கின்றது.

நாம் இன்று காணப்போவது சைவ மவுல்டாஷ்ன் (காய்கறிகள், மாவு மட்டுமே சேர்க்கப்பட்டது)

தேவையான பொருட்கள்:

  • வெஜிடேரியன் மவுல்டாஷன் - ஒரு பாக்கெட். இதில் ஆறு துண்டுகள் இருக்கும்
  • வெங்காயம் - 1 பெரியது
  • காரட் - 1  பெரியது விரும்பும் வகையில் வெட்டிக் கொள்ளவும்
  • சிவப்பு குடை மிளகாய் - விரும்பும் வகையில் நறுக்கிக் கொள்ளவும்.
  • ப்ரோக்கோலி - விரும்பும் அளவு சேர்க்கவும் - முழுதும் அல்லது பாதி
  • தக்காளி - 2 பெரியது. ஒவ்வொன்றையும் 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  • கோட்டேஜ் சீஸ் - 6 கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • ஒரிகானோ - பொடி
  • மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
  • உப்பு - சுவைக்கேற்ப


முதலில் மவுல்டாஷனை அதன் பாக்கெட்டிலிருந்து பிரித்து ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.



ஒரு ஃப்ரயிங் பேனில் 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் விட்டு சூடாவதற்கு முன்னரே மவுல்டாஷனைச் சேர்த்து சூடு மெதுவாக வர வர திருப்பிப் போட்டு பார்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் இப்படி வைத்திருக்கலாம். மவுல்டாஷனின் தோல் பகுதி மொறு மொறுப்பாக பொன்னிறமாக மாறும்.

அதே வேளை வெங்காயம், குடை மிளகாய் காரட் ப்ரோகோலி ஆகியவற்றை விரும்பும் அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு  ஃப்ரயிங் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாக வந்ததும் காரட் ப்ரோக்கோலி சேர்த்து மூடி மிதமான தணலில் வேகவைக்கவும். 3 நிமிடங்கள் வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.



இப்போது இதன் கலவையை மவுல் டாஷன் தயாராகிக் கொண்டிருக்கும் பேனில் சேர்க்கவும்.

மெதுவாக மவுல்டாஷன் உடையாதவாறு கிளறி, தக்காளி சேர்த்து, உப்பும் மிளகும் ஒரிகானோ பொடியையும் தூவி மெதுவாகக் கிண்டி விடவும்.

ஐந்து நிமிடங்கள் இப்படி கலந்து தயாரானதும் கோட்டேஜ் சீஸை நீங்கள் விரும்பும் அளவிற்குச் சேர்த்து மெதுவாக இரண்டு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.



கெரொஸ்டெடெ மவுல்டாஷன் இப்போது தயார். விரும்பும் வகையில் அலங்கரித்து சாப்பிட்டு மகிழவும்.

மவுல்டாஷனை முதலில் கண்டு பிடித்தவர்கள் மாவுல்ப்ரோன் (Maulbronn)  மடத்தின் சாதுக்கள் என்றும் தாங்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் சைவமாக இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டிய அந்த ஒரு மாத கால கட்டத்தில் குறிப்பாக பன்றி இறைச்சியை இப்படி சுற்றி வைத்து சாப்பிடுவது இறைவனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்டு ப்டித்ததாக விக்கிபீட்டியாவில் குறிப்பு உள்ளது. இது உண்ண்மையான காரணாமா என்பது தெரியவில்லை.

ஆனால் இங்கு மடங்களின் சாதுக்கள் தாம் பெரும்பாலும் வெவ்வேறு விதமான பியர்களை உருவாக்கியவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல் உங்களுக்காக!


அன்புடன்
சுபா

Saturday, October 8, 2011

ஷோன்புஹ் காட்டுக்குள் ..Schönbuch Wald

காடுகளில் நடந்து காட்டு மரங்களையும் செடிகளையும் வன விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பது என்பது நான் சில ஆண்டுகளாக வளர்த்துக் கொண்ட ஒரு பொழுது போக்கு. ஓய்வு நாள் அமைந்து விட்டால் இவ்வகையில் ஏற்பாடு செய்து நண்பர்களுடன் செல்வது வழக்கமாகி விட்டது. கடந்த 3ம் தேதி இங்கே நாடு முழுவதும் விடுமுறை நாள். எந்த வருடமும் இல்லாத வித்தியாசமாக இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே 26 டிகிரி வெயில். ஆக அருமையான நடைப்பயணத்திற்கு தகுந்த நாள் இது என்று முடிவு செய்து நான் என் நண்பர்கள் நிக்கோலா, பீட்டர், வெர்னரும்  ஒரு நாள் நடைப்பயணத்தை ஏற்பாடு செய்து சென்று வந்தோம். வெர்னரும் நிக்கோலாவும் தம்பதியர்.  வெர்னர் போலீஸ் அதிகாரி. நிக்கோலா பள்ளி ஆசிரியையாக உள்ளார். இந்த முறை நாங்கள் செல்ல தேர்ந்தெடுத்த இடம் ஷோன்புஹ் காட்டுப் பகுதி (Schönbuch Wald). இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தால் பாடுகாக்கப்படும் ஒரு பகுதி.







வாகனங்கள் செல்ல இங்கே அனுமதி இல்லை. சைக்கிள் அனுமதிக்கப்படுகின்றது. இங்கே ஆங்காங்கே சிறு குடிசைகள் அமைத்திருப்பதால் சிலர் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வந்து பிக்னிக் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எங்கள் பயணம் ஷோன்புஹ் காட்டுப் பகுதியின் தெற்கில் Schloß Roseck ( ரோஸேக் கோட்டை) யில் ஆரம்பித்து வடக்குப் பகுதி எல்லை வரைசென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது என்று ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் இடையில் நல்ல பசி ஏற்பட்டதாலும் பாதையில் எந்த உணவுக்கடைகளும் இல்லாத நிலை என்பதாலும் பாதியிலேயே முடித்துக் கொண்டு கீழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து மாலை உணவு சாப்பிட்டு திரும்பினோம்.

Schloß Roseck அரச குடும்பத்தினரின் கோட்டையாக தற்சமயம அரசாங்கத்தால் பராமரிக்கபப்டும் ஒரு முதியோர் இல்லமாக இருக்கின்றது. இந்த கோட்டைப் பகுதியைக் கடந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் பாதுகாக்கப்பட்டுள்ள வனப்பகுதியை வந்தடையலாம். மிகப் பெரிய நிலப்பரப்பு. இதனை முழுதும் சுற்றிப் பார்க்க 3 நாட்கள் தேவைப்படலாம். இந்த பகுதிக்குச் செல்ல மைத்துள்ல பாடை களில் ஆப்பிள் மரங்கள். இப்போது பழங்கள் தயாராகியிருக்கும் சமையம் என்பதால் வழில் ஆப்பிள் மரங்களையும் கனிகளையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.






காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரையில் ஏறக்குறை 25 - 28 கிலோமீட்டர் தூரம் அமைந்த நடைப்பயணம். இதமான வெயில், நல்ல காற்று, கண்களையும் உள்ளத்தையும் கொள்ளைக் கொள்ளும் இயற்கை அழகு, ஆங்காங்கே தென்படும் சிறு குடில்கள், வனத்தில் கிரீச் க்ரீச் என ஒலிக்கும் பறவைகளின் ஒலி, ஆங்காங்கே தலையை எட்டிப் பார்க்கும் சின்ன சின்ன பூக்கள், காளான்கள், காற்றில் அசைந்து ஆடும் புற்கள்.. இவை மனதை லேசாக்கும் மருந்தாக அமைந்தன.




அதிலும் நண்பர்களுடன் இணைந்து செல்வது என்பதும் சுவாரசியம் தானே. பல கதைகளைப் பேசிக் கொண்டே செல்வது தூரத்தை அறியாத வண்ணம் பயணத்தை இலகுவாக்கி விடுகின்றது.

இந்த ஷோன்புஹ் காட்டுப் பகுதியைப் பற்றிய தகவல்களை http://www.naturpark-schoenbuch.de/naturpark/index.shtml வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். அனைத்தும் டோய்ச் மொழியில் இருந்தாலும் இங்குள்ள இரண்டு விழியங்கள் மிக நன்றாக இந்தப் பாதுகாக்கப்படும் வனப்பகுதியை விளக்குவனவாக அமைந்துள்ளன. அதிலும் ஒன்று இங்குள்ள விலங்குகள், பறவைகள் பற்றிய நல்ல விளக்கமாக அமைந்துள்ளன.

அக்டோபர் 7ம் தேதிவரை இங்கு இலை உதிர்காலம் வரவில்லை. இந்த ஆண்டு நீண்ட கோடைக்காலத்தை அளித்த இயற்கைக்கு நன்றி.

மேலும் சில படங்கள்:















































அன்புடன்
சுபா