Friday, August 30, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் - 3*

யுனேஸ்கோவின் அறிக்கை, நாகரிக வளர்ச்சி பெற்ற மனித குலம் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து செல்கையில் இன்றைய ஐரோப்பிய பகுதிகளுக்கு ஏறக்குறைய 43,000 ஆண்டு வாக்கில் நகர்ந்து குடியேறியதாகக் குறிப்பிடுகின்றது. இப்படி வந்தவர்கள் குடியேறிய இடங்களுள் ஒரு பகுதியாக இந்த சுவேபியன் யூரா (Swabian Jura) பகுதி குறிப்பிடப்படுகிறது.

ஹோலெ ஃபெல்ஸ் (HohleFels) குகையின் நுழைவாயிலைக் கடந்து அருங்காட்சியகப் பகுதியையும் பார்த்த பின்னர் இரும்புப் பாலம் போல அமைக்கப்பட்ட பாலத்தில் நடந்து குகைப்பகுதிக்குள் செல்லலாம். உள்ளே நடக்கும் போது குகைச்சுவர்களிலிருந்து சொட்டு சொட்டாக நீர் துளிகள் நம்மீது விழுவதும் மழைத்தூரல் போல நல்லதோர் அனுபவம் தான்.

ஹோலெ ஃபெல்ஸ் குகையில் அகழ்வாய்வுகளின் போது கண்டெடுக்கபப்ட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கரிம சோதனை செய்யப்பட்டன. அதில் ஹோலெ ஃபெல்ஸ்10 (HohleFels10), ஹோலெ ஃபெல்ஸ்49 (HohleFels49), ஹோலெ ஃபெல்ஸ்79 (HohleFels79) என மூன்று படிமங்கள் சேகரிக்கப்பட்டு அவை சோதனைக்குட்படுத்தபப்ட்டபோது முதல் இரண்டும் ஒரே மனிதரின் உடல் என்பதும் அதன் வயது 16,000லிருந்து 14,500 வரையில் எனவும் அறியப்பட்டது. ஹோலெ ஃபெல்ஸ்79 மற்றொரு தொல் மனிதரது எலும்புகள் என்ற தகவலும் அது 15,070லிருந்து 14,270 ஆண்டுகள் பழமையானவை என்பதும் டிஎன்ஏ சோதனையின் வெளிப்பாடாக அமைந்தன.

ஹோலெ ஃபெல்ஸ் வீனஸ் போல இக்குகையில் செய்யப்பட்ட அகழாய்வில் மேலும் ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு கிடைத்தது. மூன்று துளைகளைக் கொண்ட மிகப் பெரிய காட்டுயானையின் (Mammoth) தந்தத்தால் செய்யப்பட்ட புல்லாங்குழல் இது. கரிம ஆய்வு, ஏறக்குறைய 42,500 ஆண்டுகள் பழமையானது இந்தப் புல்லாங்குழல் எனக்கூறுகிறது. ஆச்சரியமல்லவா?

பண்டைய தொல் மனிதர்கள் குகைகளில் வாழத்தொடங்கிய பின்னர் அவர்கள் குழுக்களாக வாழப் பழகிக்கொண்டனர். காட்டு விலங்குகளைத் தாக்கிக் கொன்று தமது உணவாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். உண்ணமுடியாத பாகங்களை பல்வேறு கருவிகளாக உருவாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டனர். மாம்முத் வகை காட்டு யானையின் தந்தத்தைச் சிறிதாக்கி அதில் துளைகளையிட்டு இசைக்கருவியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படித்தான் மனித குலம் தனது வாழ்க்கை நிலையில் படிப்படியான வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டது.

மனித குலத்தின் படிப்படியான பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் தான் இன்று நாம் பயன்படுத்தும் அத்தனை கருவிகளும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. அது இன்றும் தொடர்கின்றது!











தொடரும்...

-சுபா

Thursday, August 29, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் - 2

ஜெர்மனியின் சுவேபியன் யூரா குகைகளும் பழங்கற்கால தொல் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளும் ஏராளமான தொல்லியல் அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏறக்குறைய 33,000லிருந்து 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால வாக்கில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அகழ்வாய்வில் கிடைத்தன. முதல் மூன்று குகைகளும் இருக்கும் பகுதி ஆஹ் பள்ளத்தாக்கு என்றும், அடுத்த மூன்று குகைகளும் இருக்கும் பகுதி லோன பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. அதனை முந்தைய பதிவில் இணைக்கப்பட்டிருந்த வரைப்படத்தில் காணலாம். இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் அரும்பொருட்களில் விலங்குகளின் கொம்பினால் மற்றும் மாம்முத் எனப்படும் விலங்கின் தந்தத்தினால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க கலைவடிவங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம், பல்வேறு விலங்குகளின் வடிவம், புலி மனிதனின் உருவம், புல்லாங்குழல் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

முதலில் ஹோலென் ஃபெல்ஸ் குகையைப் பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்வோம். ஆஹ் பள்ளத்தாக்கில் இருக்கும் குகைகளில் முக்கியத்துவம் பெறும் குகை இதுவாகும். 30 மீட்டர் உயரம் உள்ள குகை இது. மிக விரிவான, ஏறக்குறைய 300 பேருக்கு மேல் உள்ளே வசிக்கக்கூடிய அளவில் அமைந்திருக்கும் குகை இது.

குகையின் முன்பகுதியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல கட்டணம் 3 யூரோ வசூலிக்கப்படுகிறது. வெள்ளை நிற சுண்ணாம்பு மலை. உட்பகுதியின் இரண்டு பக்கங்களிலும் இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கண்ணாடி அலமாரிக்குள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இங்கு முதல் அகழாய்வுப் பணி 1870ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் 1958ம் ஆண்டு தொடங்கி இங்குத் தொடர்ச்சியாகப் பல அகழாய்வுப் பணிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவை டூபிங்கன் பல்கலைக்கழகத்தினால் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணிகளாகும்.

2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணி அரியதொரு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம் இங்கு அப்போது கண்டெடுக்கப்பட்டது. கார்பன் டேட்டிங் சோதனைகள் இது ஏறக்குறைய 35,000லிருந்து 40,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை வெளிப்படுத்தியது. இவ்வகை பெண் உருவ வடிவம் என்பது தொல் மனிதர்கள் குழந்தை பிறப்பை பார்த்து அதிசயித்து பெண் உடலின் குழந்தை பிறப்பிற்கு காரணமாக இருக்கும் உடல் உருப்புக்களைப் பெரிதாக்கி அவற்றை வழிபடும் ஒரு சிந்தனையைக் கொண்டிருந்தமையை வெளிப்படுத்துகின்றன. குழந்தை பிறப்பதும் மனித குலப்பெருக்கம் என்பதும் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே வியப்பு, அச்சம், பக்தி, என்ற உணர்வுகளுடன் கலந்த வகையில் காணப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் ஜெர்மனியின் இம்மலைப்பகுதி மட்டுமல்ல ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் பகுதியிலும் இதே போன்ற வில்லண்டோர்ஃப் வீனஸ் என்ற ஒரு பெண் தெய்வ வடிவம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதே.

மனித இனம் நாடுகளாக, இனங்களாக, சமயங்கங்களாகப் பிரிந்து கிடந்தாலும், அடிப்படையில் ஒரே வகையான குண இயல்புகளைத் தான் கொண்டிருக்கின்றது என்பதை உலகம் முழுவதும் நடைபெறும் அகழாய்வுப் பணிகளும் அங்கு கண்டெடுக்கப்படும் அரும்பொருட்களும் நமக்கு காட்டிக் கொண்டேயிருக்கின்றன.













தொடரும்...
சுபா

Tuesday, August 27, 2019

சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் -1


ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலம் மலைகள் நிறைந்த ஒரு பகுதி. சுவேபியன் யூரா எனப்படும் மலைத்தொடர்ச்சி அமைந்திருப்பதால் அடர்ந்த காடுகள் நிறைந்த வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இதற்கு இடைவெளி விட்டு எதிர்புறத்தில் ப்ளேக்ஃபோரெஸ்ட் என அழைக்கப்படும் கருங்காடு பகுதி அமைந்திருக்கின்றது. ஜெர்மனிக்கு வெளியே உள்ள பலரும் இந்தக் கருங்காடு பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் சுவேபியன் யூரா மலைத்தொடர்ச்சி பற்றி அறிந்திருப்பது குறைவே. இந்தப் பதிவின் தொடரில் ஓரளவு இந்த மலைப்பகுதி , இங்குள்ள குகைகள், ஆறுகள், வரலாற்று தொல்லியல் சிறப்புக்கள் ஆகியவற்றை விவரிக்க முயற்சிக்கின்றேன். இது நான் வாழும் மாநிலம் என்பதால் இதனை ஆராய்ந்து இதன் இயற்கை சிறப்புகளை அறிவதில் இயற்கையாகவே எனக்கு ஆர்வம் எழுகின்றது.

சுவேபியன் யூரா என அழைக்கப்படும் இந்தப் பகுதி சுவேபியன் ஆல்ப்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மலைத்தொடர்ச்சி 220கிமீ தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கியும் ஏறக்குறைய 70 கிமீ அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. கருங்காட்டில் ஊற்றாகி ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து கருங்கடலில் கடக்கும் டனுப் நதி, மற்றும் ஜெர்மனியின் பெரிய நதிகளில் ஒன்றான நெக்கார் ஆகிய நதிகள் பாயும் நிலப்பகுதியும் இந்த மலைப்பகுதியில் அடங்கும். ஏராளமான ஊற்றுகளும், ஆறுகளும் பாய்கின்றன.
அடர்ந்த காடுகள். மலையின் பெரும்பகுதி சுண்ணாம்பு மலைகள். இவை ஜூராசிக் காலகட்டத்தில் உருவானவை. இந்த மலைத்தொடர் பொதுவாகவே அதிக உயரமில்லாத குன்றுப்பகுதியாகவே உள்ளது. இங்குள்ள ஏராளமான குகைகளில் தொல் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வுப் பணிகளை நிகழ்த்திய பெருமை டூபிங்கன் பல்கலைக்கழகத்து தொல்லியல் துறை மற்றும் உல்ம் பல்கலைக்கழத்தின் தொல்லியல் துறை ஆகியவற்றைச் சாரும். பெரும்பாலான அரும்பொருட்கள் இப்பல்கலைக்கழகங்களின் அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெறுகின்றன என்ற போதிலும் இப்பகுதியின் மிக முக்கிய கண்டுபிடிப்புக்கள் அங்கேயே குகைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது சிறப்பாகும்.
சுவேபியன் யூரா மலைத்தொடரின் 6 குகைப்பகுதிகள் - அதாவது மூன்று குகைகள் ஒரு பகுதியிலும் அடுத்து மூன்று குகைகள் அடுத்த ஒரு பகுதியிலும் என அமைந்துள்ளன. இந்த 6 குகைகளும் அடங்கிய முழு பகுதியும் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்று தொல்சிறப்பு பெற்ற இடமாக பாதுகாக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதில் மூன்று குகைகளுக்குச் சென்றிருந்தேன். நான் வசிக்கும் லியோன்பெர்க் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 98 கிமீ தூரத்தில் இந்த முதல் மூன்று குகைகளும் உள்ளன. ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலையில் வாகனங்கள் ஓரளவு குறைவாகவே இருந்தது. வெயில் ஏறக்குறைய 29 டிகிரி செல்சியஸ் . இடைக்கால இளையாராஜா, தேவா பாடல்களை ரசித்தபடி நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வது சுகமான அனுபவம். 
முதலில் வந்தடைந்த தொல்லியல் பகுதி ஹோலன் ஃபெல்ஸ். இது இங்கிருக்கும் மூன்று குகைகளிலும் அதிக சிறப்பும் முக்கியத்துவமும் பெறும் குகைப்பகுதியாகும்.














தொடரும்...
சுபா

Thursday, August 8, 2019

லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை










அரண்மனைகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றாலே நாமும் அரசிதான் என்ற எண்ணம் வந்து விடுகின்றது 
நான் வசிக்கும் ஜெர்மனியின் பாடர்ன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் ஆங்காங்கே பல அரண்மனைகளும் கோட்டைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. பழமையான இந்தக் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் எனக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிகழ்ந்த பெரும் போர்களும் அவை ஏற்படுத்திய உயிர் இழப்புக்களும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.
அத்தகைய ஒரு அரண்மனைதான் லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை. கிபி.12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த அரண்மனை. இதனை உருவாக்கிய சிற்பி Carl Alexander Heideloff . அவ்வப்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டாலும் இதன் பழைய வடிவம் இன்றும் அழகுடன் காணப்படுவது சிறப்பு. இந்த அரண்மனையில் இன்னமும் மன்னர் பரம்பரையினரின் வாரிசுகள் ஒரு பகுதியில் வாழ்கின்றார்கள்.
சுவேபிய பள்ளத்தாக்கைச் சார்ந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகையும் இதனைச்சுற்றியுள்ள கட்டிடங்களும் கண்களைக் கவரும் கட்டுமான அமைப்புடன் அமைந்துள்ளன.
கடந்த வார இறுதியில் நண்பர்கள் ஸ்ரீகந்தா மற்றும் டாக்டர்.அருணி குடும்பத்தினருடன் இங்கு சென்று வந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் இவை. ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியின் தொடக்கும் இங்கிருந்து உருவாகின்றது என்பது தனிச்சிறப்பு.
-சுபா