சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் -1
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலம் மலைகள் நிறைந்த ஒரு பகுதி. சுவேபியன் யூரா எனப்படும் மலைத்தொடர்ச்சி அமைந்திருப்பதால் அடர்ந்த காடுகள் நிறைந்த வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இதற்கு இடைவெளி விட்டு எதிர்புறத்தில் ப்ளேக்ஃபோரெஸ்ட் என அழைக்கப்படும் கருங்காடு பகுதி அமைந்திருக்கின்றது. ஜெர்மனிக்கு வெளியே உள்ள பலரும் இந்தக் கருங்காடு பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் சுவேபியன் யூரா மலைத்தொடர்ச்சி பற்றி அறிந்திருப்பது குறைவே. இந்தப் பதிவின் தொடரில் ஓரளவு இந்த மலைப்பகுதி , இங்குள்ள குகைகள், ஆறுகள், வரலாற்று தொல்லியல் சிறப்புக்கள் ஆகியவற்றை விவரிக்க முயற்சிக்கின்றேன். இது நான் வாழும் மாநிலம் என்பதால் இதனை ஆராய்ந்து இதன் இயற்கை சிறப்புகளை அறிவதில் இயற்கையாகவே எனக்கு ஆர்வம் எழுகின்றது.
சுவேபியன் யூரா என அழைக்கப்படும் இந்தப் பகுதி சுவேபியன் ஆல்ப்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மலைத்தொடர்ச்சி 220கிமீ தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கியும் ஏறக்குறைய 70 கிமீ அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. கருங்காட்டில் ஊற்றாகி ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து கருங்கடலில் கடக்கும் டனுப் நதி, மற்றும் ஜெர்மனியின் பெரிய நதிகளில் ஒன்றான நெக்கார் ஆகிய நதிகள் பாயும் நிலப்பகுதியும் இந்த மலைப்பகுதியில் அடங்கும். ஏராளமான ஊற்றுகளும், ஆறுகளும் பாய்கின்றன.
அடர்ந்த காடுகள். மலையின் பெரும்பகுதி சுண்ணாம்பு மலைகள். இவை ஜூராசிக் காலகட்டத்தில் உருவானவை. இந்த மலைத்தொடர் பொதுவாகவே அதிக உயரமில்லாத குன்றுப்பகுதியாகவே உள்ளது. இங்குள்ள ஏராளமான குகைகளில் தொல் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வுப் பணிகளை நிகழ்த்திய பெருமை டூபிங்கன் பல்கலைக்கழகத்து தொல்லியல் துறை மற்றும் உல்ம் பல்கலைக்கழத்தின் தொல்லியல் துறை ஆகியவற்றைச் சாரும். பெரும்பாலான அரும்பொருட்கள் இப்பல்கலைக்கழகங்களின் அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெறுகின்றன என்ற போதிலும் இப்பகுதியின் மிக முக்கிய கண்டுபிடிப்புக்கள் அங்கேயே குகைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது சிறப்பாகும்.
சுவேபியன் யூரா மலைத்தொடரின் 6 குகைப்பகுதிகள் - அதாவது மூன்று குகைகள் ஒரு பகுதியிலும் அடுத்து மூன்று குகைகள் அடுத்த ஒரு பகுதியிலும் என அமைந்துள்ளன. இந்த 6 குகைகளும் அடங்கிய முழு பகுதியும் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்று தொல்சிறப்பு பெற்ற இடமாக பாதுகாக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதில் மூன்று குகைகளுக்குச் சென்றிருந்தேன். நான் வசிக்கும் லியோன்பெர்க் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 98 கிமீ தூரத்தில் இந்த முதல் மூன்று குகைகளும் உள்ளன. ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலையில் வாகனங்கள் ஓரளவு குறைவாகவே இருந்தது. வெயில் ஏறக்குறைய 29 டிகிரி செல்சியஸ் . இடைக்கால இளையாராஜா, தேவா பாடல்களை ரசித்தபடி நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வது சுகமான அனுபவம்.
முதலில் வந்தடைந்த தொல்லியல் பகுதி ஹோலன் ஃபெல்ஸ். இது இங்கிருக்கும் மூன்று குகைகளிலும் அதிக சிறப்பும் முக்கியத்துவமும் பெறும் குகைப்பகுதியாகும்.
தொடரும்...
சுபா
சுபா
No comments:
Post a Comment