Thursday, November 27, 2003

Job discrimination!

மக்களை தொழில் அடிப்படையில் வேறுபடுத்தி சிலரை தாழ்வாக மதிப்பிடுவதும் சிலரை உயர்ந்து மதிப்பிடுவதும் நமது ஆசிய நடைமுறையில் வழக்கமாகிப் போய்விட்ட ஒன்று. வீட்டில் வேலை செய்யும் பெண்ணையோ, கார் ஓட்டும் டிரைவரையோ சமமாக நாற்காலியில் உட்கார வைத்து பேசக்கூடத் தெரியாத மனிதாபிமானமற்ற சமுதாயமாக நமது சமுதாயம் இருக்கின்றது. யாராவது ஒருவரை தாழ்மைப் படுத்தியும், வேலை வாங்கியும் மகிழ்ச்சி அடையும் பழக்கம் நம் ஆசிய பண்பாட்டில் ஊறிப் போய்விட்டது.



ஜெர்மனியில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பமாக இருந்தாலும் சரி, வசதியான பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் சரி, வீட்டின் அனைத்து காரியத்தையுமே வீட்டில் உள்ளவர்கள் தான் செய்ய வேண்டும். வீட்டிற்குப் புதிதாகக் குடிபோகும் போது நாமே சுயமாக வீட்டிற்கு வர்ணம் பூச வேண்டும். தரைக்கு நாமே சுயமாக கம்பளம் ஒட்ட வேண்டும். அது தவிர மின்சாரக் கோளாறாக இருந்தாலும் தொலைபேசி கோளாறாக இருந்தாலும் சரி, அனைத்தையுமே நாமே சுயமாகச் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கே ஆள் இல்லையா எனக்கேட்கலாம். ஆட்கள் இருக்கின்றார்கள். ஆனால் இம்மாதிரியான உடல் உழைப்பு வேலைகளுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் என்பது மிக மிக அதிகம். உதாரணத்திற்கு, வீட்டிற்கு வர்ணம் பூசும் ஒருவருக்கு ஒரு பொறியியளாளருக்குக் கிடைக்கும் சம்பளத்தை விடவும் அதிகமான சம்பளம் கிடைக்கும். ஒரு டெக்னீஷியன் மெர்ஸ்டிஸ் பென்ஸ் கார் வாங்கும் அளவிற்கு சம்பாதிக்கும் நிலை இங்கு உள்ளது. இது நம்பமுடியாத கதையல்ல; உண்மை.

எல்லாவிதமான தொழிலுமே, மதிக்கத்தக்க ஒன்றுதான் என்ற நிலை இங்கு அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கப்படுகின்ற ஒன்று என்பது முற்றிலும் உண்மை. சமையலறையில் வேலை செய்யும் ஒரு பெண் அனைத்து சுதந்திரங்களோடும் பாகுபாடின்றியும் ஒரு பொறியியளாளரோடு ஒரு விருந்தில் கலந்து கொள்ள முடியும். தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து கௌரவக் குரைச்சலாக எடைபோடுவது இல்லை. மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் எண்ணம் என்பது மிக முக்கியமான அம்சம். நமது ஆசிய வாழ்க்கை முறையில் இது இன்றளவும் ஏட்டிலே தான் இருக்கின்றதே தவிர நடைமுறைப்படுத்தப்படவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

Sunday, November 23, 2003

Privacy

கூட்டுக் குடும்பம் தேவையா; தனிக்குடித்தனம் தேவையா என்ற பட்டி மன்ற ஆராய்ச்சிகள் இன்னமும் நமது சமுதாயத்தில் ஒரு கேள்வியாகவே இருந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான கேள்விக்கு இடமே இல்லாத ஜெர்மானியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கின்றேன்.

ஏறக்குறைய 19 அல்லது 20 வயது அடையும் ஜெர்மானிய இளைஞர்கள் திருமணம் என்ற ஒரு நிலை வருவதற்கு முன்னரே தனிக்குடித்தனம் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஜெர்மனியில் பல இடங்களில் 1 அறை கொண்ட அடுக்கு மாடி வீடுகள் அதிகமாகவே இருக்கின்றன. இங்கு வந்த புதிதில் இது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. (மலேசியாவில் 2 அறைக்கும் மேம்பட்ட வீடுகள் தான் கட்டப்படும்) பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த கேள்விக்கான பதிலை!

பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் போதே குழந்தைகள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து தனியாக வீடு தேடிக்கொண்டு சென்று விடுகின்றனர். தனிப்பட்ட சுதந்திரம் என்பது மிக அவசியம் என்பதை அவர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்கின்றனர். குழந்தைகள் தங்களை விட்டுப்பிரிந்து தனியாக வீடுபார்த்துக் கொண்டு செல்வதைப் பற்றி பெற்றோர்கள் எந்தக் கவலையும் கொள்வதில்லை. மாறாக அதனை விரும்பி வரவேற்கின்றனர். இது சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. படிக்கின்ற காலம் தொட்டே ஒருவர் தனது சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பக்குவப்படுவது தேவை என இவர்கள் நினைக்கின்றனர். இதை நினைத்து எந்த பெற்றோரும் பச்சாதாபப்படுவதில்லை; வருத்தப்படுவதுமில்லை. குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்டு சந்தோஷப்படுபவர்களாகவே பெற்றோர்கள் இருக்கின்றனர்.

ஜெர்மானியர்களைப் பொறுத்த வரையில் ஒரு 25 வயது இளைஞனோ அல்லது யுவதியோ இன்னமும் பெற்றோர்களோடு ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றார்கள் என்றால் அது ஒரு வகையில் அவமானமாகவே கருதப்படுகின்றது. அப்படிக் கேள்விப்பட நேர்ந்தால் அதனை ஒரு ஹாஸ்யமாக்கி சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

தனியாக இருக்கும் போதே இவர்கள் தனிக்குடித்தனம் போய்விடுகின்ற நிலையில் எங்கே மனைவி வந்துதான் தனிக்குடித்தனம் அமைக்க வேண்டும் என்ற நிலை வரப்போகின்றது???

Friday, November 21, 2003

பார்வை

ஆசியர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. பொதுவாக வெள்ளையர்களைப் பற்றிய தவறான பல கருத்துக்கள் நமது மனங்களில் ஊறிப் போய் இருக்கின்றது. இவர்களோடு பழகும் போதுதான் அவர்களும் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் நம்மைப் போல பல வகையில் உயர்ந்தவர்களே என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அபிப்ராயங்கள் என்பது யாராவது ஒருவர் சொல்லக் கேட்டோ அல்லது ஏற்கனவே இருக்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டோ வருவது எனும் போது அதில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நான் ஜெர்மனி வருவதற்கு முன்னர், லண்டனில் சில ஆண்டுகள் தங்கியிருந்து திரும்பிய நண்பர் ஒருவர், "வெள்ளையர்களுக்குத் தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதில் ஆர்வம் இல்லை. இப்போதெல்லாம் தேவாலயங்கள் மற்ற மதத்தினரால் வாங்கப்பட்டு அவை வேறு சமயத்தினரின் வழிபடு இடமாக மாறி இருக்கின்றது" என்று கூறினார். அந்தக் கருத்து மனதில் பல நாட்கள் எனக்கு இருந்தது. ஜெர்மனி வந்து இங்குள்ள மக்கள் எந்த அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை நேராகப் பார்க்கும் போதுதான் அந்தக் கூற்றில் இருக்கும் பிழை தெரிய வந்தது. லண்டனுக்கு அந்தக் செய்தி உண்மையானதாக இருக்கலாம்; ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரையில் இதில் உண்மை இல்லை.

ஆக ஒரு செய்தியைக் கேட்கும் போது அதனை எல்லோருக்கும் பொதுவாக பயன்படுத்தி விட முடியாது. ஜெர்மனி முழுதுமே ஜெர்மன் மொழியைத் தான் பேசுகின்றனர். ஆனாலும் பகுதிக்குப் பகுதி மொழியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் 'ஹோஹ் டோ ய்ச்' பேசுகின்றனர். பவேரியா பகுதிக்கு வந்தால் பவேரிய கலவையாக ஜெர்மன் மொழி வருகின்றது. ஷ்வாபியன் பகுதி, அதாவது நான் இருக்கும் பகுதியில் ஷ்வேபியன் ஜெர்மன் பேசுகின்றனர்; தமிழகத்தில், கொங்கு தமிழ், ஐயங்கார் தமிழ், செட்டி நாட்டுத் தமிழ் என்று இருப்பது போல. ஆக நாட்டிற்குள்ளேயே பேசப்படும் ஒரு மொழியிலேயே இம்மாதிரியான வேறுபாடுகள் இருக்கும் போது ஒரு கருத்தை பொதுக் கருத்தாக வைக்க முடியுமா?

ஜெர்மானியர்களோடு பழகும் நல்ல வாய்ப்பு எனக்கு அமைந்திருப்பதால் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வேறுபாடுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என நினைக்கின்றேன். அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த குறிப்புக்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

Thursday, November 20, 2003

Potato

போப்லிங்கன் நகரத்தின் அழகை மேம்படுத்துவதில் காய்கறித் தோட்டங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குளிர் காலத்திலும் உருளைக் கிழங்குகள் பயிரடிப்பட்டு வருகின்றன. குளிர்காலத்திலும் உருளைக் கிழங்குச் செடிகள் அழகழகாய் வளர்ந்திருப்பது கண்ணுக்கு அதிக குளிர்ச்சி.



ஜெர்மானியர்களின் உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது உருளைகிழங்கு. உருளைக் கிழங்குகளை அடிப்படையாக வைத்தே முக்கியமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. முழு உருளைக் கிழங்குகளை அவித்து அதனைக் கொஞ்சம் நெய்விட்டு வருத்து சாப்பிடுவது இவர்களுக்கு மிக மிகப் பிடித்தமான ஒன்று. அவித்த உருளைக்கிழங்கைப் பிசைந்து மாவாக்கி அதில் நெய்யும் பாலும் விட்டு கலந்து அதனை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவது இன்னொரு வகை. இப்படி பலவகைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.




சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் விளைச்சலுக்கு உகந்த வருடமாகவே படுகின்றது. சென்ற வருடம் பெருத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் அதனால் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவை நாட்டின் மொத்த காய்கறி விளைச்சளையும் பேரளவுக்குப் பாதித்திருந்தன. ஆனால் இந்த வருடம் இந்த சிரமம் இல்லை. பார்க்கின்ற இடமெல்லாம் இந்த ~5 டிகிரி (பகலில்) குளிரிலும் உருளைக் கிழங்கு போன்ற காய்வகைகள் பயிடப்படுகின்றன என்பது ஒரு செய்திதானே.



நானும் உருளைக்கிழங்கு செடியை வளர்த்துப் பார்ப்போமே என குளிர்சாதனப்பெட்டியில் இருந்த முளைத்த இரண்டு உருளைக் கிழங்குகளைஒரு தொட்டியில் நட்டு வைத்துப் பார்த்தேன். செடி உயரமாக வளர்ந்து இலை நிறம் மாறும் போதுதான் உருளைக்கிழங்குகள் வளர்ந்திருக்கும் என நண்பர்கள் சொல்லியிருந்ததால், எப்போது இலையின் நிறம் மாறும் எனக் காத்திருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓரளவு இலைகள் பெரிதாகி மஞ்சள் நிறம் தென்படவும் ஆர்வம் பொறுக்காமல் செடியைப் பிடிங்கிப் பார்த்தேன். குட்டி குட்டியாக வட்ட வடிவத்தில் ஐந்தாறு உருளைக் கிழங்குகள். நட்டு வைத்து வளர்த்ததில் பலன் கிடைக்காமல் இல்லை!

Thursday, November 6, 2003

Tamil vs. English

அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்த ஒரு சம்பவம். புதிதாக எங்கள் குழுவில் இளம் ஜெர்மானியப் பெண் ஒருத்தி வேலையில் சேர்ந்திருக்கின்றாள். காலையில் வந்ததும் அவளுடைய உதவியாளர் இல்லாததைக் கண்டதும் என்னிடம் சில தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாமே என்று என்னிடம் வந்து பேச்சுக் கொடுத்தாள்.

ஜெர்மானியர்களே 99.9% விழுக்காடு வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் நான் ஒரு ஆசியன் இருந்த போதும் எந்த தயக்கமுமுன்றி எனக்குப் புரியுமா புரியாதா என்ற சிறு கவலையுமின்றி மிகச் சகஜமாக ஜெர்மானிய மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தாள். இவள் மட்டும் இப்படியில்லை. நான் பார்க்கும் ஏறக்குறைய அனைத்து ஜெர்மானியர்களுமே வேறு இனத்தைவர்களைப் பார்த்தால் கூட தங்கள் மொழியில் தான் பேசுகின்றனர். ஜெர்மனிக்கு வந்து விட்டால் ஜெர்மானியர் அல்லாத பிறரும் ஜெர்மன் மொழியில் தான் பேசவேண்டும்; பேசுவார்கள் என அவர்கள் எதிர்பார்க்கின்ரனர். தங்களுக்கும் தங்கள் மொழியின் மேல் பற்று; அதே பற்றை மற்றவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர்; அதுவும் எந்த தயக்கமுமின்றி நினைக்கின்றனர்.

நம்மை நாமே குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதே நிலையில் ஒரு தமிழரை வைத்துக் கொள்வோம். தமிழ் மொழிக்கு தமிழர்கள் கொடுக்கும் மரியாதையை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிற மொழியில் அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதுதான் நாகரிகம் என்ற மாயையில் தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பரை சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு வந்து குடியேறிவிட்ட ஒரு குடும்பம். பேச்சு வாக்கில் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழ் குழந்தையாக இருப்பதால் பள்ளியில் குழந்தையின் தாய்மொழியைப் பற்றிய விபரத்தைக் கேட்டிருக்கின்றனர். ஜெர்மானிய மொழி தாய்மொழியில்லை அல்லவா? குறிப்பேட்டில் தமிழ் என்றுதானே எழுதப்படவேண்டும். ஆனால் அந்த தாயார் குழந்தையிடம் உனது தாய்மொழி ஆங்கிலம்; அதனால் ஆங்கிலம் என்றே எழுது என்றார்.

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி. தனது தாய்மொழியைப் பற்றி எழுதக் கூட கூச்சப்படும் சமுதாயத்தினர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. தமிழ் எனது மொழி என்று சொல்லிக் கொள்வதில் மன வருத்தம் அடையும் கூட்டத்தினர் இவர்கள். ஆங்கிலம் தான் எங்கள் மொழி என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைப் போன்றவர்கள் தங்கள் முகத்தையும் நிறத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாய்மொழி பற்று வளரவில்லை என்றால் இம்மாதிரியானவர்கள் ஐரோப்பாவில் இருந்தும் நமது இனத்திற்கு மொழிக்கும் சற்றும் பயனில்லை.

Tuesday, November 4, 2003

Autumn



நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதன் அறிகுறிகளைக் காணமுடிகின்றது.

இயற்கையின் சீரான ஓட்டத்தை இந்த நான்கு காலங்களான குளிர்காலம், வசந்த காலம், இலையுதிர்காலம், கோடைகாலம் இவை நான்கும் எந்த மாறுதலும் இன்றி ஒழுங்காக வந்து கொண்டிருப்பதைக் கொண்டே உணர முடிகின்றது.

இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று தானே. மரங்களெல்லாம் தீப்பிடித்து எறிவது போன்ற தோரணையில் வர்ணங்களெல்லாம் மாறி மஞ்சளாகவும், இளஞ்சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் மரங்களில் காட்சியளிக்கின்றன. இந்த இலைகளெல்லாம் மரங்களிலிருந்தும் கிளைகளிலிருந்தும் விழுவதற்கு ஏதுவாக ஏறக்குறைய தினமும் மழையும் பெய்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இலைகளில்லா மரங்களின் கிளைகள் மட்டும் தான் கண்களுக்குத் தென்படும்.

அடுத்த ஏப்ரல் வரை மரங்களின் பச்சை இலைக்காகக் காத்திருக்க வேண்டும். பகல் நேரமும் குறைந்து கொண்டே வருகின்றது. இப்போதெல்லாம் காலை 8 மணிக்குத்தான் பகலின் வெளிச்சத்தைப் பார்க்க முடிகின்றது மாலை 6 மணிக்கெல்லாம் மாலை இருள் சூழ்ந்து விடுகின்றது.

இன்னும் கொஞ்ச நாளில் 5 மணிக்கெல்லாம் இருள் வந்துவிடும். வெளிச்சத்தையே பார்க்க முடியாமல் அலுவலகத்திலேயே பொழுதைக் கழிக்கும் நாட்களில் ஒரு நாள் முடிந்தது என்ற பிரக்ஞையே இல்லாமல் போய்விடுகின்ற நிலையும் எனக்குச் சென்ற வருடங்களில் ஏற்பட்டதுண்டு. காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இயற்கையும் யாருக்காகவும் தனது நியதியிலிருந்து மாறாமல் தனது கடமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது!

Sunday, November 2, 2003

Vegetarian food

விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போதெல்லாம் நண்பர்கள் சிலர் கேலியாக என்னிடம் கேட்பதுண்டு. அசைவமாக மாறிவிட்டாயா என்று. "ஜெர்மனியில் என்ன சைவ உணவு உனக்குக் கிடைக்கப்போகின்றது? உணவு ஒரு பெரிய பிரச்சனை தானே," என்று நினைத்து என்னை கேள்வி மேல் கேள்வியாக கேட்பர். நான் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்னரும் இதைப் பற்றி யோசித்திருக்கின்றேன். முழுதாக ஐரோப்பிய உணவு என்பது எப்படியிருக்கும் என்ற ஒரு சிந்தனை இல்லாமலேயே வந்து இறங்கி விட்டாலும், இங்கு வந்த நாளிலிருந்து எனக்கு உணவைப் பொருத்தவரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.






நாள் செல்லச் செல்லத்தான் ஜெர்மனியில் பலர் சைவமாக இருக்கின்றனர் என்ற விஷயத்தையே தெரிந்து கொண்டேன். சைவமாக இருப்பவர்கள் எல்லாம் இலங்கையிலிருந்து இங்கு வந்திருக்கும் சைவர்கள் அல்ல. மாறாக, இங்கேயே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் தான் என்பது தான் நான் தெரிந்து கொண்ட உண்மை. நான் பழகும் பல இலங்கைத் தமிழர்களில் பரம்பரை பரம்பரையாக இலங்கையில் சைவ சமயத்தையும் சைவ உணவு பழக்கத்தையும் கடைபிடித்து வந்தவர்கள் கூட இங்கு வந்த பின்னர் அசைவ உணவுக்காரர்களாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. (எந்த உணவு வகை விருப்பமோ அதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஒரு குறிப்புக்காகத் தான் இதனை எழுதுகிறேன்)

சைவ உணவு சாப்பிடும் ஜெர்மானியர்களில் சிலர் மிகக் கடுமையான சைவத்தைக் கடைபிடிக்கின்றனர். அவர்களில் vegan என்ற சைவ உணவு பழக்கம் உடையவர்கள் இறைச்சி மீன் இவற்றோடு பால் வகைகளையும் கூட தவிர்த்து விடுகின்றனர். இதனால், சீஸ், சாக்லெட் போன்றவற்றையும் கூட தவிர்க்கின்றனர். வெறும் காய்கறி, கிழங்கு தானிய வகைகளை பால் சேர்க்காமலேயே இவர்கள் சாப்பிடுகின்றனர்.




என்னைப் பொறுத்தவரை ஜெர்மனியில் சைவ உணவுக்காக நான் சிரமப்பட்டதே கிடையாது. எனது அலுவலகத்திலே இருக்கின்ற 3 உணவு விடுதிகளிலும் கட்டாயமாக ஒரு சைவ உணவு மெனு இருக்கும். வெறும் சாலட் மட்டுமல்ல; விதம் விதமான பாஸ்டா, ஆசிய உணவு வகை, பீஸா, விதம் விதமான உருளைக்கிழங்கு மெனு வகைகள் என சைவ உணவு மெனு தினமும் அசத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. (அதற்காக இட்லி, தோசை, வடை எல்லாம் கிடைக்குமா எனக் கேட்காதீர்கள் ) அதோடு எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களில் பலர் சைவ உணவுகளை விரும்பியே வாங்கிச் சாப்பிடுகின்றனர்.

சைவ உணவுப் பழக்கம் என்பது ஒரு மதமோ அல்லது ஜாதியோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது ஒரு வகை உணவுப் பழக்கம். சைவ உணவினால் உடலுக்கு நண்மையே என்னும் கருத்து அறிவியல் பூர்வமாக நாளுக்கு நாள் உலக மக்களிடையே பரவி வருகின்றது. நல்லது என்று தெரியும் போது அதனை அனைவரும் முடிந்த
அளவு கடைபிடிப்பதில் தவறில்லையே