Saturday, November 27, 2010

குளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..!

நேற்று அதிகாலையே பனி மழை பெய்யத்தொடங்கியதால் எங்கும் பாற்கடல் போன்ற பனி. நேற்று நாள் முழுக்க கொட்டியதில் இன்றும் பனி கரையாமல் இருக்கின்றது. சில படங்கள் இங்கே இணைத்திருக்கின்றேன் .. இன்று காலை என் சிறு தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.


செடிகள் பச்சை நிறத்தை மறைத்து வெள்ளை ஆடை உடுத்தியிருக்கின்றன..புத்தருக்கும் பனியின் புண்ணியத்தில் புதிய சிகை அலங்காரம்..:-)


குருவிகளின் வீட்டையும் பனி அலங்கரித்திருக்கும் காட்சி..!

அன்புடன்
சுபா

Tuesday, November 9, 2010

இன்றைய தேதியில் ஜெர்மனியில் நிகழ்ந்த 2 முக்கிய சரித்திர நிகழ்வுகள்

யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டமான 2ம் உலக யுத்த நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Crystal Night நிகழ்வு 9,10, தேதி நவம்பர் மாதம் 1938ல் நிகழ்ந்தது. இந்த Crystal Night ஜெர்மனி முழுமைக்குமாக ஏறக்குரை 7500 யூதர்களின் வனிகத் தலங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஏறக்குறைய 400 சினாகோக் (யூத தேவாலயங்கள்) எரித்து அழிக்கப்பட்டன. இதே நாளில் 20,000க்கும் மேற்பட்ட யூதர்கள் concentration camps களில் அடைக்கப்பட்டனர்.

1989ம் வருடம் இந்த 9ம் திகதியில் கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் மேற்கு பெர்லினுக்கும் பொதுவாக மேற்கு ஜெர்மனிக்கும் செல்ல அனுமது அளித்து இரும்புக் கதவுகளை திறந்த நாள். இன்றைய ஜெர்மன் தலைமுறை மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு நாள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைவு கூறும் பல நிகழ்வுகள் ஜெர்மனி முழுதும் இன்றைக்கு ஏற்பாடாகியிருக்கின்றன. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.

அன்புடன்
சுபா

Monday, November 8, 2010

தீப ஒளித் திருநாள் 2010

தீபாவளி நவம் 5ம் தேதி. இதற்கு அடுத்த நாளான 6ம் தேதி இங்கு ஸ்டுட்கார்ட் நகரில் தீப ஒளித் திரு நாள். என்ன ..ஸ்டுட்கார்ட்டில் தீபாவளியா என அதிசயிக்க வேண்டாம். இது Lichterfest என்றழைக்கப்படும் ஒரு விழா. அதிர்ஷ்டவசமாக நம் தீபாவளியும் ஸ்டுட்கார்ட் தீபத் திரு விழாவும் ஒன்றை அடுத்து ஒன்றாக இங்கு நிகழ்ந்தன.
ஸ்டுட்கார்ட்டில் பொதுவாகவே எப்போதும் மாலை 8 மணிக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு விடும். ஆனானல் இந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு வரை கடைகள் திறந்திருந்தன. மக்கள் கூட்டம் அதிகரித்து மாபெரும் திரு விழா போல காட்சியளித்தது ஸ்டுட்கார் நகரின் மையச் சாலையான கூனிக் ஸ்ட்ராஸா. (அரச சாலை)

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தவை இரண்டு விஷயங்கள்.
1.பல இசைக் குழுக்கள் இந்த நிகழ்வில் ஆங்காங்கே பங்கெடுத்துக் கொண்டன.
2.சாலை எங்கும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் அலங்காரம்

சாலையின் பல இடங்களில் தீபம் போன்ற வடிவத்தில் மின்சார விளக்குகள் வைக்கப்படிருந்தன. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் கவரும் ஒரு விழாவாக இந்த நிகழ்வு ஏற்பாடாயிருந்தது தான் சிறப்பு.
ஆங்காங்கே கேளிக்கை நிகழ்ச்சிகள். கடைகள் குறிப்பாக மிகப் பெரிய துணிக்கடைகள், புத்தகக் கடைகள், எல்லாம் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.அன்று மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடாகியிருந்தன என்று குறிப்பிட்டேன் அல்லவா.அதில்   நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் பொழுது போக்கு இசைக் குழுவின் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் ஒரே நாளில் ஏற்பாடாகியிருந்தன.


கார்ஸ்டாட் எனப்படும் வர்த்தக நிறுவனத்திலும் அதற்குப் பின்னர் காவ் ஓஃவ் என்ற வர்த்தக நிலையத்திலும் இரண்டு 30 நிமிட கலை நிகழ்ச்சியை இவர்கள் குழுபவினர் படைத்தனர்.


இவர்கள் குழுக்கள் மட்டுமல்லாது பல குழுக்கள் அன்று ஆங்காங்கே வாசித்துக் கொண்டிருந்தன. பினாங்கில் தைப்பூசத்தின் போது பக்கத்துக்கு பக்கம் பந்தல்களில் பாடல்கள் ஓட்டிக் கொண்டிருக்குமே.. அந்த ஞாபகம் தான் எனக்கு வந்தது இந்த மூலைக்கு மூலை கச்சேரியை பார்ப்பதற்கு.

பனிக் காலத்தின் குளிர் தொடங்கி விட்டாலும் கேளிக்கைகளின் எண்ணிக்கை குறைவதில்லை இங்கு. விரைவில் ஜெர்மனியில் பிரபலமான weihnachtsmarkt தொடங்கி விடும். கிருஸ்மஸ் திருநாளை முன்னிட்டு டிசம்பர் முதல் வாரமே இந்தச் சந்தை தொடங்கி விடும்.. அந்த செய்திகளுடன் மீண்டும் வருகின்றேன்.

அன்புடன்
சுபா

Saturday, September 18, 2010

டிட்ஸிங்கன் சோள லேபிரிந்த் (Ditzingen Mais Labyrinth)

கோடை காலம் முடிந்து இப்போது ஜெர்மனியில் இலையுதிர் காலம் தொடங்கி விட்டது. தற்சமயம் வாரத்தில் மூன்று நாட்களாவது மழை. சீதோஷ்ணம் 15 டிகிரி என்ற வகையில் குறைந்து விட்டது. குளிர் காலத்தை நோக்கிச் செல்லும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. மதியம் அதிக பட்சம் சில நாட்கள் 19 டிகிரி ஆனால் மாலையில் 5 டிகிரி வரை செல்லும் நிலைமைதான் தற்சமயம். இலையுதிர் காலத்தில் கோடை திருவிழா பற்றி சொல்வது பொருந்தது. இருப்பினும் கோடையில் நான் சென்று வந்த மேலும் 2 திருவிழாக்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.


ஆகஸ்டு முதல் வாரத்தில் சில நாட்கள் விடுமுறையிலிருந்த சமையம் நான் சில நாட்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். பக்கத்திலேயே உள்ள கிராமங்களை அறிந்து கொள்ளவும் இயற்கை அழகை ரசிக்கவும் சைக்கிள் பயணம் நல்ல வழி. அந்த வகையில் நான் இருக்கும் நகரமான லியோன்பெர்க் நகரில் புராதனமான Mühlen Weg என்று சொல்லப்படக்கூடிய தானியங்கள் அரைக்கும் ஆலைகளைச் சுற்றி பயணம் சென்று வர திட்டமிட்டேன். இந்த தானியங்கள் அரைக்கும் ஆலை சுற்றி சைக்கிள் பயணம் என்பது Glems ஆறு செல்லும் பாதையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு சைக்கிள் பயணம். இது லியோன்பெர்க் நகரத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் ஒன்றும் கூட. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை 12ம் 13ம் நூற்றாண்டிலிருந்து சேவையில் இருப்பவை.

இந்தப் பயணத்தை முழுமையாக முடிக்க அதன் பாதையில் உள்ள 19 ஆலைகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து செல்ல வேண்டும். 47 கிமீ தூரம் சைக்கிள் பயணம் இது. முதல் ஆலை இருப்பது எனது இல்லத்திற்கு மிக அருகில். க்லெம்ஸ் நதி ஓடும் பகுதியில் தான் எனது இல்லமும் இருப்பதால் முதல் தானியம் அரைக்கும் ஆலையிலிருந்தே பயணத்தைத் துவக்கினோம். இணையத்தில் கிடைக்கும் வரைபடத்தைத் தயார் செய்து கொண்டு புறப்பட்டோம். ஆறு ஆலைகளைக் கடந்த பின்னர் ஏழாவது ஆலையை விட்டு செல்லும் போது வேறு பாதையை நாங்கள் எடுத்து விட்டதால் டிட்ஸிங்கன் கிராமத்தின் மையப்பகுதிக்கு வந்து விட்டோம். வரும் வழியில் டிட்ஸிங்கன் சோளக்காட்டில் திருவிழா என்ற செய்தியைப் பார்த்து சைக்கிளை அங்கே செலுத்தினேன்.


சோளக்காட்டிற்கு முன்னர் கூடாரங்கள் அமைத்து உணவு விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் சிறிய கூடாரம். மாலையில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகியிருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக சருகுக் கட்டுக்களைப் போட்டு வைத்திருந்தார்கள். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். டிட்ஸிங்கன் மக்களுக்கு அன்றைய மதிய/மாலை பொழுதுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.
ஒரு காபியும் கேக்கும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு 3 யூரோ கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு சோளக்காட்டின் லேபிரிந்திற்குள் சென்றோம். லேபிரிந்தைத் திட்டமிட்டு அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது லேபிரிந்தில் தேடி விடை கண்டுபிடிக்க வேண்டியதற்காக 4 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாளை தந்திருந்தனர்.
இந்த ஆண்டின் லேபிரிந்தின் வடிவமைப்பு மீன், கடல் வாழ் உயிரினங்கள் என்ற வகையில் அமைக்கப்ட்டிருந்தது. அதை இப்படத்தில் காணலாம்.


சோளக்காட்டின் இடையே நல்ல வழி அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. ஆனால் சற்று நேரத்தில் எங்கே இருக்கின்றோம் எனத் தெரியாமல் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்து விட்டேன். எப்படியோ சுற்றித் திரிந்து ஒரு வழியாக 3 கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டேன். அங்கேயும் சிலர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அடுத்து செல்வதற்கான வழியைப் பற்றிய செய்தியையும் பரிமாறிக்கொண்டனர். ஒரு அப்பா தனது மகளைக் காணாது தேடிக் கொண்டிருந்தார். சிலர் அங்குமிங்கும் நடந்து விடுபட்டுப்போன குடும்ப உறுப்பினர்களைத் தேடித்திரிந்து கொண்டிருந்தனர்.சுற்றி சுற்றி வந்து நான்காவது கேள்விக்கான விடையையும் கண்டு பிடித்து விட்டோம். அதற்குப் பின்னர் வெளியே வந்தால் போதும் என்ற நிலையில் பாதையைத் தேடி கண்டுபிடித்து வெளியே வந்தேன். ஆகஸ்டு மாதமாதலால் சோளம் காய்த்து அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சமையம் அது. ஆக சோளத்தைத் தாங்கி நிற்கும் செடிகளுக்கிடையே நடந்து செல்வது மிக மிக ரம்மியமாக இருந்தது. சோளச் செடியின் பூ சாமரம் வடிவில் பஞ்சு போன்ற மெல்லிய சிறு பூக்களாகக் காட்சியளித்தது.

இயற்கையின் அழகுக்கு ஈடு ஏது?

நீண்ட தூர சைக்கிள் பயணத்தை திட்டமிட்டு சென்றதால் கேமராவை கையோடு எடுத்துச் செல்லவில்லை. அதனால் இணையத்தில் கிடைத்த படங்களையே இணைத்திருக்கின்றேன். வருடா வருடம் நடக்கும் ஒரு திருவிழா இது என்பதால் இணையத்தில் பல செய்திகளும் படங்களும் பலர் சேர்த்திருக்கின்றனர். அவர்கள் புண்ணியத்தில் சில படங்களை இங்கு இணைத்திருக்கின்றேன்.:-)இது கடந்த ஆண்டு லேபிரிந்தின் வடிவம்.


டிட்ஸிங்கனில் சோளக்காட்டில் மாட்டிக்கொண்டதில் சைக்கிள் பயணம் தடைபட்டு விட்ட வருத்தம் இருந்ததால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த பயணத்தை  மேற்கொண்டேன். இம்முறை முழுமையாக 19 புராதன தானிய ஆலைகளையும் பார்த்து க்லெம்ஸ் நதிக்கரையின் குளிர்ச்சியை ரசித்து ஏறக்குறைய 60 கிமீ சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வந்தோம். அதனைப் புகைப்படங்களோடு வெளியிட்டு எழுத விருப்பம் உள்ளது. நேரம் கிடைக்கும் போது அந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
சுபா

Monday, August 30, 2010

கோடையில் ஸ்டுட்கார்ட் - 4: எஸ்லிங்கன் வெங்காயத் திருவிழாஇது என்ன வெங்காயத் திருவிழா என நிச்சயம் உங்களுக்கு கேட்கத் தோன்றும். இதற்கு இங்கு ஒரு கதை இருக்கின்றது. ஒரு பூதம் ஒன்று கிராமத்து மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததாம். சந்தையில் வெங்காயம் விற்கும் பெண் ஒருத்தி அந்த பூதத்தைப் பிடித்து வெங்காயத்திற்குள் வைத்து விட்டாளாம். பூதம் தொலைந்த அந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா? அதற்குத் தான் வெங்காயத் திருவிழா.

இந்த வெங்காயத் திருவிழா ஜெர்மனியில் வேறு எங்கும் நடை பெறுவதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் இது நடைபெறுவது எஸ்லிங்கன் நகரத்தில் மட்டும் தான்.எஸ்லிங்கன் நகரம் ஸ்டுட்கார்ட் நகர மையத்திலிருந்து ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் உள்ளது. எனது முதுகலை பட்ட ஆய்வை நான் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தான் மேற்கொண்டேன். பல்கலைக்கழக நகரம் என்றும் இதனைக் கூறலாம். இந்த சிறிய நகரின் சற்றே மலைப்பாங்கான சூழல் இங்கு மிகச் சிறப்பான வகையில் திராட்சை பயிர் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றது. 'பாடன் உர்டென்பெர்க்' மானிலத்தின் பிரசித்தி பெற்ற Trollinger வகை வைன் இங்கு விளைவது தான்.


நெக்கார் நதி கடந்து செல்லும் நகரம் இது. எழில் மிகுந்த இந்த சிற்றூரின் மையப்பகுதியில் நடந்து செல்லும் போது இங்குள்ள Fachwerkhaus (half-timbered house) வகை வீடுகளை பார்த்து ரசிக்கலாம். Fachwerkhaus வீடுகள் என்றால் என்ன என்பதை பார்க்க கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

பல வர்ணங்களில் குறிப்பிடத்தக்க வடிவங்களில் இவ்வகை கட்டிடங்கள் அமைந்திருக்கும்.
இந்த வகை வீடுகளைப் பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். அவ்வளவு வேறுபாடுகளும் வகைகளும் இவ்வகை கட்டிடக்கலையில் உண்டு!

திருவிழா நகரின் மையத்தில் fussgängerzone (pedestrian zone) உள்ள இடைத்தில் ஏறபாடாகியிருந்தது. உள்ளே நுழைந்ததுமே பல கூடாரங்களைக் காண முடிந்தது. அதாவது ஒவ்வொரு விற்பனையாளரும் தாங்கள் விற்பனை செய்யும் உணவு வகைகளுக்குக் கூடாரம் அமைத்து பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகளையும் இருக்கைகளையும் அமைத்திருந்தார்கள்.

இங்கு முக்கிய உணவாக அமைந்திருந்தது Zwiebelkuchen என அழைக்கப்படும் வெங்காய கேக். இது எப்படி இருக்கும் என பார்க்க வேண்டுமா? இதோ.
சுவை கேட்கவே வேண்டாம். மிக ருசியாக இருக்கும். இதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள். செய்முறை நன்றாக வழங்கப்பட்டுள்ளது.


Zwiebelkuchen -உடன் மேலும் இந்த (schwabenland) ஷ்வாபன் நகரத்திற்கே உரிய சீஸில் வருத்த காளான், மவுல்டாஷன், ஷ்னுப் நூடல், டம்ப் நூடல் என பல. அதோடு விதம் விதமான வைன் வகைகளும் விற்பனைக்கு இருந்தன.
குறிப்பு: மவுல் டாஷன் என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் வாய்+பொட்டலம் எனக் கூறலாம். வித்தியாசமான பெயராக இருக்கின்றது அல்லவா? இந்த மவுல் டாஷனில் சைவ மவுல்டாஷனும் உண்டு. கீரை சேர்த்து சமோசா போல தயாரிக்கபப்ட்டிருக்கும். அனேகமாக எல்லா மளிகைக் கடைகளிலும் இது கிடைக்கும்.ஆகஸ்டு முடிந்து செப்டம்பர், அக்டோபர் மாதம் என்றாலே திராட்சைகள் பெரும்பாலும் தயாராகிவிடும் காலம். இதனை வரவேற்க இவ்வகை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. Zwiebelkuchen னை வைன் உடன் சேர்த்து சாப்பிடுவது இங்கு ஒரு கலாச்சாரம். இதனை நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலே அறிந்து கொண்டேன். பல்கலைக்கழக் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு விரிவுரையாளர்கள் அளித்த விருந்துகளில் Zwiebelkuchen உடன் சிவப்பு வைனும் வைப்பது மிக முக்கியமான வழக்கம்.


எஸ்லிங்கன் நகரில் ஒரு வித்தியாசமான அழகான கோட்டை ஒன்றும் உள்ளது. அதனை பற்றி இன்னொருமுறை வாய்ப்பு அமையும் போது எழுதுகிறேன்.

இவ்வகை திருவிழாக்களில் குழந்தைகளுக்கும் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். இங்கே பாருங்கள். இந்தப் படத்தில் பெட்டியின் கைப்பிடியை இந்த மனிதர் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இப்படி சுற்றும் போது குருவிகளின் ஓசை போன்ற ஒலி கேட்கும். குழந்தைகளைக் கவர இவ்வகை முயற்சி.


இவ்வகை விழாக்களில் இசைக்கும் குறைவிருக்காது. Volksmusik எனப்படும் கிராமிய இசை ஆங்காங்கே!சுவையான உணவு; இனிய சூழல், சூடான 36 டிகிரி வெயில்; இது போதாதா இந்த விழா ஒரு சிறந்த விழா என்று சொல்வதற்கு. :-)


அடுத்து வேறொரு வித்தியாசமான விழாவுடன் வருகிறேன்!

Saturday, August 14, 2010

கோடையில் ஸ்டுட்கார்ட் - 3: ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா
ஸ்டுட்கார்ட் கோடை கொண்டாட்டங்களிலேயே மிக முக்கியத்துவம் பெற்றது Sommer Fest என்றழைக்கப்படும் ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா தான். இதனை கடந்த 4 ஆண்டுகளாகத் தவறாமல் சென்று பார்த்து வருகின்றேன். நான்கு நாட்களுக்கு நடக்கும் திருவிழா இது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.எனது கணிப்பில் பாடன் உர்ட்டென்பெர்க் மானிலத்திலேயே மிக அழகான ஒரு திருவிழா இது என்று நான் சொல்வேன். கூனிக் ஸ்ட்ராஸ மற்றும் ஸ்டுட்கார்ட் அரண்மனை, மியூஸியம் சுற்றுப்புரம் அனைத்தையும் உளளடக்கி இந்த விழா நடைபெறும்.கூம்பு போன்ற வெள்ளை நிறத்து குடில்கள் அமைத்திருப்பார்கள். அதில் உணவு விற்பனை, குளிர்பானங்கள் விறபனை போன்றவற்றோடு சிறிய அளவிலான இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏறக்குறைய ஏழெட்டு பெரிய மேடைகளில் ஸ்டுட்கார்ட் நகர பிரசித்தி பெற்ற இசைக்குழுக்களின் வாத்திய இசை மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும் இந்த நான்கு நாட்களும்.பல்வேறு வகை உனவுகள்: குறிப்பாக வறுத்த காளான், ப்லாம் கூகன், இத்தாலிய நூடல் வகை உணவுகள், வகை வகையான உருளைக்கிழங்கு உணவு வகைகள் (ஜெர்மனியில் உருளைக்கிழங்கு தானே முக்கிய உணவு) , ஆப்பிரிகக் உணவுகள், ஜெர்மன் உணவு வகைகள், சீன, தாய்லாந்து உணவுகள் என பல்வேறு வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் வாங்கிச் சாப்பிடுவது crepes. இது பான் கேக் போன்று தோசைக்கல்லில் சுடவைத்து அதில் க்ரீம் சாக்கலேட் தடவி கொஞ்சம் வருத்த பாதம் போட்டு சூடாகத் தருவது. இதனை ஒரு முறை சாப்பிட்டு பழகி விட்டால் விட மனம் வராது. அவ்வளவு சுவையான இனிப்பு பதார்த்தம்.இந்த முறை 5-8 ஆகஸ்டு, வியாழன் தொடங்கி ஞாயிறு வரை நிகழ்ச்சிகள் நடந்தன. மழை தூரல் இருந்தாலும் கூட்டம் குறையவில்லை.
அரண்மனையின் ஓப்பரா கட்டிடத்திற்கு முன்னர் அமைந்துள்ள செயற்கை குளம் இந்த நாளில் மிக அழகாக காட்சியளிக்கும். குளத்தில் இடைக்கிடையே நட்டு வைத்த சோலார் விளக்குகள் இரவில் பல வர்ணங்களில் ஜொலித்து வந்திருப்போர் மனதை கொள்ளைக் கொள்ளச் செய்தன. குளக்கரையில் அமர்ந்து வாத்துக்கள் அங்கும் இங்குமாக நீந்திச் செல்வதைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

கேளிக்கை, இசை, உணவு, நண்பர்கள் சந்திப்பு என பல வகையில் மகிழ்ச்சி தரும் இந்தத் திருவிழா ஸ்டுட்கார்ட் நகருக்கும் சிறப்பு சேர்க்கும் ஒன்றே!

அன்புடன்
சுபா

Thursday, August 12, 2010

கோடையில் ஸ்டுட்கார்ட் - 2: கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்

கார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.அரண்மனைக்கு பக்கத்தில் "பழங்கால மக்கள் திருவிழா" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.

அதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.

இந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்கு இருந்தன.

முக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.


(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)


மேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள். குழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.

அன்புடன்
சுபா

Wednesday, August 11, 2010

கோடையில் ஸ்டுட்கார்ட் - 1

நண்பர்களே,

கோடை கால கொண்டாட்டம், விழாக்கள் என்பது ஆண்டுக்கு ஆண்டு ஸ்டுட்கார்ட் நகரைச் சுற்றிலும் பெருகிக் கொண்டே வருகின்றன. மே தொடங்கி செப்டம்பர் வரை பல்வேறு விழாக்கள் ஜெர்மனி முழுமைக்கும் நடை பெறுவது வழக்கம். இங்கு நடை பெறும் விழாக்கள் பெரும்பாலும் கேளிக்கை விழாக்களாக அமைந்து பல்வேறு உள் நாட்டு மக்களோடு அயல் நாட்டினரும் கலந்து கொள்ள சிறப்பாக இங்கு வந்து செல்லும் நிலையும் இப்போது உள்ளது.

2006ம் ஆண்டு உலகக் காற்பந்து போட்டி உள் நாட்டு மக்களிடையே பெறும் மாற்றததை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு இடங்களில் காற்பந்து போட்டியைக் காண என்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஜெர்மனி முழுதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்மை. பெறும்பாலும் பரவலாக விழா கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஜெர்மானிய மக்கள் மத்தியில் இப்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண முடிகின்றது. அதிலும் இளம் தலைமுறையினரிடையே கேளிக்கை விழாக்கள் Straßen Fest என சொல்லப்படும் சாலை திருவிழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு சிறு கிராமும் தங்கள் கிராமத்தின் சாலை திருவிழாக்களை ஏற்பாடு செய்து மக்கள் வார இறுதி நாட்களை இக்கோடையில் மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த வாரம் எங்கு செல்வது, எந்த விழாவைப் பார்ப்பது என்பதே பட்டியலிட்டு பார்க்க வேண்டிய அளவுக்கு ஏராளமான திருவிழாக்கள்.

சாலை திரு விழாக்கள், கோடை கால திருவிழாக்கள் என்னும் போது அவற்றில் சில குறிப்பிடத்தக்க நோக்கத்தோடு இவ்வகை விழாக்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக
-பழங்கால மக்கள் திருவிழா (Mittelalterfest)
-சாலை திருவிழா (Straßen Fest)
-மூலிகை செடிகள் சந்தை (kräuter ausstellung)
-மீன் சந்தை - (Fischmarkt)
-வைன் திருவிழா (Weinfest)

என வகை வகையான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவ்வகை திருவிழாக்களைப் பற்றி நினைவு கூறும் போது October Fest பற்றியும் சொல்லியாக வேண்டும். சில லட்சம் மக்கள் கூடும் ஒரு உலகளாவிய திருவிழாவாக, பியர் விரும்பிகளின் கொண்டாட்ட விழாவாக இது அமைந்திருக்கின்றது. இதனைப் பற்றி பின்னர் விவரிக்கின்றேன்.

கடந்த சில வார இறுதி நாட்களில் சில சாலை திருவிழாக்களில் கலந்து கொண்டேன். ஒரு சில விழாக்களுக்கு புகைப் பட கருவியுடன் சென்றதால் புகைப்படங்களை எடுத்துள்ளேன். அவற்றோடு இணையத்தில் உள்ள தகவல்களையும் படங்களையும் இணைத்து இங்கு நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். ஜெர்மனியில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையில் திருவிழாக்களின் பங்கினை அறிய ஆர்வம் உள்ள மின்தமிழ் வாசகர்களுக்கு இத்தகவல்கள் உதவலாம்.

அன்புடன்
சுபா