Saturday, April 23, 2005

பால் மரக் காட்டினிலே!நீண்ட இடைவெளிக்குப் பிற்கு இடையில் சில நாள் ஓய்வு கிடைத்தது. கடந்த முறை இண்டியாவர்த்தா இணையத்தளத்தின் வழி வாங்கியிருந்த புத்தகங்களில் சிலவற்றை படிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. பால்மரக்காட்டினிலே - அகிலன் எழுதிய ஒரு நாவல். மலேசிய தோட்டப்புர வாழ்க்கை பின்னனியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு நாவல் இது.

கதை முழுவதையும் படித்து முடித்த போது மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்க்கையைக் கண்களால் பார்ப்பது போலவே இருந்தது. பல இடங்களில் தென்படும் மலாய் மொழி கலந்த மலேசியத்தமிழின் பிரயோகம், இந்த தோட்டத்திலேயே இருந்து கதை கேட்பது போன்ற எண்ணத்தை வரவழைக்கின்றது. கதைக்குக் கருவாக அவர் எடுத்திருக்கும் தோட்டத் துண்டாடல் பிரச்சனை என்பது மலேசிய தோட்டத்தொழிலாளர்களை மிக மோசமாக பாதித்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதனை கதையாகக் கொண்டு இவர் வடித்திருக்கும் பாங்கு நெஞ்சைத் தொடுகின்றது என்றே சொல்லலாம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பினாங்குத்தீவிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தோட்டப்புற வாழ்க்கை பரிட்சயமற்ற ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளம் வயதில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பிலும், பினாங்கு பயனீட்டாளர் சங்க சார்பிலும் வார இறுதி நாட்களில் தோட்டப்புறங்களில் சமூக சேவைக்காக சென்ற நாட்களில் பினாங்குக்கு அருகாமையில் உள்ள சில தோட்டங்களுக்கு அவ்வப்போது சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இதுவரை நான் ஆழமாக கண்கானித்ததில்லை. இந்த நாவல் அந்த அனுபவத்தை அழகாக வழங்கியிருக்கின்றது.

நாவலில் வருகின்ற கதாபாத்திரங்களில் பாலன், கணேசன், கண்ணம்மா, தலைமை ஆசிரியர் சண்முகம், முருகன், வேலம்மாள், ராதா, முத்து, செல்லம்மா ஆகிய அனைத்து காதாபாத்திரங்களும் நாவலை படித்து முடித்த பின்னரும் யோசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கிராம இளைஞன் பாலன் மனதில் தோன்றும் சமூக பிரக்ஞை மனதைத் தொடுகின்றது. வாழ்க்கையையே தோட்டப்புற மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் அவனது கதாபாத்திரம் எனது மலேசிய நாட்டில் நான் சந்தித்த சிலரை எனக்கு மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வராமலில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மலேசியாவிற்குத் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்களின் வாழ்க்கை பல வகையில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது என்பதே உண்மை. 80களின் ஆரம்பத்தில் மலேசிய தேசிய பலகலைக்கழக பேராசிரியர் (தமிழர்) ஒருவரின் முயற்சியில் வெளிக்கொணரப்பட்ட செலாயாங் தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. படிப்படியாக நாடு முன்னேறிய போதிலும் இன்றளவும் கூட தமிழ் மக்கள் செம்பனை மற்றும் ரப்பர் மரத்தோட்டங்களில் (காடுகளில்) வாழும் வாழ்க்கை மனதை கசிய வைக்கும் ஒன்று. மக்களின் அறியாமை போக்கப்படும் போது தான் மாற்றம் ஏற்படும் என்பதை இந்த நாவல் நன்றாகக் காட்டுகின்றது.


ஒருவர் பிறர் நலனுக்காக யோசித்து பாடு படும் போது அவர்களை தாழ்வாக விமர்சனம் செய்து மனதை நோகடிப்பது மற்றும் தனது சுய நலனுக்காக தனது இனத்திற்கு மாறாக செயல்படுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த நாவலில் காட்டபப்டுகின்றன. இது இன்றளவும் மாறாமலிருக்கும் ஒன்று. மலேசிய தமிழ் சமூக அமைப்புக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பர்களோடு பேசும் போதெல்லாம் இப்படிப்பட்ட சில நபர்களின் செயல்களைப் பற்றியும் நாங்கள் பேசி அலசுவதுண்டு. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு என்று அடிக்கடி பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு நண்பர் குறிப்பிடுவார்.


இந்த நாவலின் முதல் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. தாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை பலர் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மலேசிய தோட்டப்புற தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.


குறிப்பு: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அலசும் ஒரு வலைப்பக்கத்திற்குச் செல்ல http://www.geocities.com/sounvx/plantation_workers.htm

Saturday, April 16, 2005

கர்நாடக இசைக்கச்சேரி

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து இங்கு ஜெர்மனியில் கர்நாடக இசை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் இரண்டாம் திகதி ப்ராங்பர்ட் நகரத்தில் ஒரு நாள் முழுவதும் இடைவிடாது தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டு மிகச்சிறப்பாக தியாகராத ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வந்திருந்த இசை வித்துவான்களிள் திரு.அசோக் ரமணியும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தவர் ஐரோப்பாவில் முக்கிய சில நகரங்களில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் புது வருடத்தை இசையோடு வரவேற்பதற்காக அவரது கச்சேரியை இங்கு ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலத்தில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திரு.அசோக் ரமணி கர்நாடக இசை உலகிற்கு தமிழ் கீர்த்தனைகளை வழங்கிய முக்கியமான ஒருவராகிய பாபநாசம் சிவன் அவர்களின் பேரன். இவர் கர்நாடக இசையோடு மிருதங்க இசைக்கருவியை வாசிக்கவும் கற்றவர். வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தமது 15வது வயதிலேயே அரங்கேற்றம் செய்து புகழ் பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 அளவில் தொடங்கி இடைவிடாது 10:30 மணி வரையில் நிகழ்ந்தது.

ஸ்டுட்கார்ட் நகரைப் பொருத்தவரை இம்மாதிரியான இசை நிகழ்வுகள் நடைபெருவது அபூர்வம் என்றே சொல்லலாம். வருடத்திற்கு அதிகபட்ஷம் 2 முறை தமிழகத்திலிருந்து யாராவது இங்கு வந்து தலையைக் காட்டினால் உண்டு. இல்லையென்றால் தமிழ் தொலைக்காட்சி வழியாகத்தான் கர்நாடக இசையை ரசிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் குறையையும் போக்குவதாக அமைந்தது இந்த நிகழ்வு.


பிரபாவதி குமரன், திரு.தமிழ்குமரன், திரு.அசோக் ரமணி, சுபா, திரு.யோக புத்ரா, அபிராமி

கச்சேரியின் முக்கியமான அம்சம், எல்லா பாடல்களுமே தமிழ் கீர்த்தனைகள். மனதை கொள்ளை கொண்டன இந்த தமிழ் கீதங்கள். பலருக்கும் தெரிந்த என்ன தவம் செய்தனை யசோதா, கந்தா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, அலைபாயுதே கண்ணா, அகிலாண்டேஸ்வரியே என்ற பாடல்களோடு மேலும் பல தமிழ் கீர்த்தனைகளும் அடங்கியிருந்தன. இவருக்குப் பக்க வாத்தியமாக ஜெர்மனி டோ ர்ட்முண்ட் நகரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பிரணவநாதன், வயலின் பிரணவன் மற்றும் கஞ்சிராவிற்கு ஒரு ஜெர்மானியரான ப்ராங்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்பெர்ட் லாங் ஆகியோர் அமைந்திருந்தனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒன்றினை கவனிக்க முடிந்தது. முன்பெல்லாம் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது பல சிறுவர்கள் சத்தம் போடாமல், அங்கும் இங்கும் ஓடாமல் பாட்டுக்குத் தாளம் போட்டு தலை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தில் தொடர்ந்து இசை பயின்று வரும் இந்தச் சிறுவர்கள் இப்போது இசையை ரசிக்கத் தாமாகவே பழகி விட்டனர். இதைப் பார்க்கும் போது மனதிற்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இம்மாதிரியான கச்சேரிகள் இங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும். இதனால் இங்கு வாழும் தமிழர்களும் இசையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு நிச்சயம் வளரும்.