Saturday, April 16, 2005

கர்நாடக இசைக்கச்சேரி





ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து இங்கு ஜெர்மனியில் கர்நாடக இசை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் இரண்டாம் திகதி ப்ராங்பர்ட் நகரத்தில் ஒரு நாள் முழுவதும் இடைவிடாது தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டு மிகச்சிறப்பாக தியாகராத ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வந்திருந்த இசை வித்துவான்களிள் திரு.அசோக் ரமணியும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தவர் ஐரோப்பாவில் முக்கிய சில நகரங்களில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் புது வருடத்தை இசையோடு வரவேற்பதற்காக அவரது கச்சேரியை இங்கு ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலத்தில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.




திரு.அசோக் ரமணி கர்நாடக இசை உலகிற்கு தமிழ் கீர்த்தனைகளை வழங்கிய முக்கியமான ஒருவராகிய பாபநாசம் சிவன் அவர்களின் பேரன். இவர் கர்நாடக இசையோடு மிருதங்க இசைக்கருவியை வாசிக்கவும் கற்றவர். வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தமது 15வது வயதிலேயே அரங்கேற்றம் செய்து புகழ் பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 அளவில் தொடங்கி இடைவிடாது 10:30 மணி வரையில் நிகழ்ந்தது.

ஸ்டுட்கார்ட் நகரைப் பொருத்தவரை இம்மாதிரியான இசை நிகழ்வுகள் நடைபெருவது அபூர்வம் என்றே சொல்லலாம். வருடத்திற்கு அதிகபட்ஷம் 2 முறை தமிழகத்திலிருந்து யாராவது இங்கு வந்து தலையைக் காட்டினால் உண்டு. இல்லையென்றால் தமிழ் தொலைக்காட்சி வழியாகத்தான் கர்நாடக இசையை ரசிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் குறையையும் போக்குவதாக அமைந்தது இந்த நிகழ்வு.


பிரபாவதி குமரன், திரு.தமிழ்குமரன், திரு.அசோக் ரமணி, சுபா, திரு.யோக புத்ரா, அபிராமி

கச்சேரியின் முக்கியமான அம்சம், எல்லா பாடல்களுமே தமிழ் கீர்த்தனைகள். மனதை கொள்ளை கொண்டன இந்த தமிழ் கீதங்கள். பலருக்கும் தெரிந்த என்ன தவம் செய்தனை யசோதா, கந்தா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, அலைபாயுதே கண்ணா, அகிலாண்டேஸ்வரியே என்ற பாடல்களோடு மேலும் பல தமிழ் கீர்த்தனைகளும் அடங்கியிருந்தன. இவருக்குப் பக்க வாத்தியமாக ஜெர்மனி டோ ர்ட்முண்ட் நகரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பிரணவநாதன், வயலின் பிரணவன் மற்றும் கஞ்சிராவிற்கு ஒரு ஜெர்மானியரான ப்ராங்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்பெர்ட் லாங் ஆகியோர் அமைந்திருந்தனர்.



கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒன்றினை கவனிக்க முடிந்தது. முன்பெல்லாம் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது பல சிறுவர்கள் சத்தம் போடாமல், அங்கும் இங்கும் ஓடாமல் பாட்டுக்குத் தாளம் போட்டு தலை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தில் தொடர்ந்து இசை பயின்று வரும் இந்தச் சிறுவர்கள் இப்போது இசையை ரசிக்கத் தாமாகவே பழகி விட்டனர். இதைப் பார்க்கும் போது மனதிற்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இம்மாதிரியான கச்சேரிகள் இங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும். இதனால் இங்கு வாழும் தமிழர்களும் இசையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு நிச்சயம் வளரும்.

2 comments:

  1. புதுவருடம் மிகச்சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறது. வாழ்த்துக்கள். பாபநாசம் சிவன் ஒரு legend. பாரதி இருந்திருந்தால் இவரைப் போல் அவனும் சினிமாவிற்குள் குதித்திருப்பான். போட்டோக்கள் நனவிடை தோய வைக்கின்றன. திரு.குமரன் தம்பதிகளுக்கும், திரு.யோகபுத்ரா குடும்பத்திற்கும் என் அன்பைச் சொல்லவும்.

    ReplyDelete
  2. நல்ல விஷயம் தான், ஆனால் அசோக் ரமணி எப்படி பாடி இருப்பார் என நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவரது குரல் அப்படி. சென்ற முறை (இரண்டு வருடங்களுக்கு முன்) எங்களூரில் அவர் பாடியபோது, அவரது குரலில் சுத்தமாய் ஜீவனே இல்லை. மற்றபடி தமிழ் கீர்த்தனைகளை பாடியது நல்லது.

    ReplyDelete