Friday, May 17, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று


இந்த வாரம் திங்கட்கிழமை ஒரு அனுபவம் அமைந்தது.

மூன்ஷனிலிருந்து மட்ரிட்-ஸ்பெயின் செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்து விட இறுதியில் ஒரு கருப்பின தம்பதியர் அப்பெண்ணின் கையில் ஒரு குழந்தை சகிதம் மூவர் வந்து நுழைந்தனர். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு ஆண் போலீஸ் அதிகாரியும் பெண் போலீஸ் அதிகாரியும் கூடவே வந்தனர். அத்தம்பதியர் கையில் துணிப்பைகள் அதில் பல பொருட்கள் வெளியே தெரியும் வகையில்.

விமானத்தில் அமர்ந்திருந்த ஏனைய பயணிகளின் பார்வை என்னையும் உட்பட இவர்கள்  மேல் சில நிமிடங்கள் இருந்தது. பல கேள்விகள் மனதில்.

நிச்சயமாக இவர்கள் தண்டனை பெறச் செல்பவர்கள் இல்லை என்பதை போலீஸார் இவர்களை நடத்திய வகையிலேயே அறிந்து கொள்ள முடிந்தது. கையில் விலங்கில்லை. மரியாதைக் குறையாமல் இருக்கையைக் காட்டி (இறுதி இருக்கை) அதில் அமரச் செய்து ஒவ்வொருவர் பக்கத்திலும் ஒரு போலீஸ் அதிகாரி என அமர்ந்து கொள்ள விமானம் புறப்பட்டது. எனக்கு உறுதியாக  மனதில் பட்டது.. இவர்கள் அகதிகள் தான் என்று. அருகாமையில் சிலர் மெதுவாக ஜெர்மானிய மொழியில் பேசிக் கொண்டிருந்ததில் அவர்களும் என் எண்ணம் போலவே அகதிகளாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொள்வதும் கேட்டது.

ஐரோப்பாவில் மிக அதிகமாக அகதிகள் தஞ்சம் புகுவது வழக்கத்தில் நடந்து வருவது. பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், ரஷ்யா, பாக்கிஸ்தான், ஈராக், செர்பியா, சோமாலியா, ஈரான், நைஜீரியா, கொசொவோ, வங்காளதேசம்,  சிரியா, இலங்கை, அர்மேனியா, ஜோர்ஜியா, துருக்கி, துனிசியா, சீனா, என பட்டியலிடலாம்.

பெரும்பாலும் ஜெர்மனிக்கும் ப்ரான்ஸிற்கும் அகதிகளாக வர விரும்புபவர்கள் என்ணிக்கை அதிகம்.  2011ம் ஆண்டில் மட்டும் ஜெர்மனிக்கு 50,000 பேருக்கு மேல் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதனை இந்த வலைப்பக்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  http://epp.eurostat.ec.europa.eu/statistics_explained/index.php/Asylum_statistics மேலும் பல இணைய பக்கங்களும் இது தொடர்பான பல தகவல்களை வழங்கலாம்.

அகதி அந்தஸ்து கோரி வருபவர்களின் நிலை அரசியல் காரணங்களுக்காக என அமைவது சகஜம். பொறுத்தமான காரணம் இருப்பின் அகதி அந்தஸ்து பெற்று இவர்கள் இங்கேயே வாழ்க்கையைத் தொடர்கின்றனர். அப்படி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைத்தமிழர்கள் உட்பட ஏராளம்.

அரசியல் காரணங்களின் காரணமாக வந்து  போர் இல்லாத நிலையில் சிலர் திருப்பி அவர்கள் சொந்த நாட்டிற்கே அனுப்பபடும் சூழ்நிலையை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிண்டல்பிங்கன் நகரில் 2010ம் ஆண்டில் 2 இலங்கைத்தமிழர் குடும்பங்கள் அப்படி குடும்பத்தோடு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள்  ஏதாவது ஒரு வகையில் இல்லீகலாக ஜெர்மனிக்கு வந்து பின்னர் அகதி அந்தஸ்து கோரி பின்னர் போர் இல்லாத  நிலை என அறிய வரும் போது திருப்பி அனுப்பபப்டுகின்றனர்.  என்னைவிட இலங்கைத்தமிழர் நிலையை நன்கு அறிந்தவர்கள் இது தொடர்பாக தெளிவான தகவல்களைத் தரமுடியும்.

நான் குறிப்பிட்ட இந்த  கறுப்பின தம்பதியர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினிற்குள் `திருட்டுத்தனமாக` வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்கின்றனர். அந்த வழியில் ஸ்பெயின் வந்து பின்னர் ஜெர்மனிக்கு வந்தவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

பல நாடுகளிலிருந்து அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த பல்லாயிரம் மக்களுக்கு ஐரொப்பிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்கி அவர்கள் வாழ்க்கை இப்புதிய நிலத்தில் தொடர  உதவுகின்றன. ஆனால் பல வேளைகளில் பல்வேறு சட்டப்பூர்வ காரணங்களுக்காக சட்ட நடவடிககை எடுக்கப்பட்டு சிலர் திருப்பி அனுப்பவும் படுகின்றனர்.

அகதி அந்தஸ்து கோரி வருகின்ற மக்களின் நிலை .. அவர்களின் வாழ்க்கையின் போராட்டம் என்பவை ஒரு வரியில் சொல்லி விளக்க முடியாதவை. சோதனைகளும் வேதனைகளும் என்னெவென்று தெரியவேண்டுமென்றால் இவர்கள் கதையை அறிந்து கொள்வது உலகை அறிந்து கொள்வதற்கு உதவும். சில உண்மைக் கதைகள் என் நண்பர்கள் வழியாகவே கேள்விப்பட்டிருக்கின்றேன். வாய்ப்பமையும் போது எழுதுகின்றேன்.

சுபா

Thursday, May 2, 2013

சாம்பியன் லீக் 2013 (2)


என் கணிப்பை பொய்யாக்காமல் எஃப்சி பாயார்ன் குழு பார்சலோனாவை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் நேற்று தோற்கடித்து வெம்ப்ளியில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தயாராகி விட்டது.

இறுதிப் போட்டியில் பொருஸியா டோர்ட்முண்டும்  எஃப்சி பாயார்ன் குழுவும் மோத உள்ளன. இரண்டுமே ஜெர்மானியக் குழுக்கள். இறுதிப் போட்டியில் இரண்டு ஜெர்மன் குழுக்கள் கலந்து கொள்வது இங்கே பெறும் மகிழ்ச்சியைஏற்படுத்தியிருக்கின்றது. 2வது தொலைகாட்சி நிறுவனமான ZDF நேற்று இரவு விளையாட்டு முடிந்து பின்னர் தொடர்ந்து நடக்கவிருக்கும் போட்டி பற்றிய விவரணைகளிலேயே  இரவை கழித்தது. 

நேற்றைய விளையாட்டின் சில சிறப்பு செய்திகள் படங்களுடன்.

Inline image 1
எஃப்சி பாயார்ன் குழு முதல் கோல் போட்ட ரோபன். அவரை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் மகிழும் குழுவினர்.


Inline image 2
எஃப்சி பாயார்ன் குழுவுக்கான இரண்டாவது கோலை தவறுதலாக  உதைத்தவர் பார்சலோனாவின் பீக். இதை யாரால் நம்ப முடியும்? ஆனாலும் நடந்து விட்டது. தலையைக் கவிழ்ந்து கொண்டே பீக் நடந்து சென்றதும் ஏனைய குழுவினர் தலையில் கையை வைத்துக் கொண்டு பார்தத்தும் பார்சலோனா குழுவினருக்கு ஒரு சோகம் தான்.

Inline image 3
பார்சலோனாவின் புகழ் மிக்க விளையாட்டாளரான மெஸ்ஸி போட்டியில் முதல் 11 விளையாட்டளர்களில் நேற்று இடம் பெறவில்லை. பின்னால் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவர் போட்டியில் நுழைந்திருந்தால் குழுவினருக்கு பாதி பலம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம் என காற்பந்து வர்ணனை செய்தவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார். மெஸ்ஸி நுழைந்திருந்தால் கூடுதல் 1 கோல் போட்டிருக்கலாம். அவ்வளவுதான்....!

Inline image 4
மூன்றாவது கோலைப் போட்ட முல்லர். அவரைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளும் குழுவினர்.



Inline image 5
நேற்றைய நிகழ்வின் கதா நாயகன் மனுவெல் நோயர். ஜெர்மனியின் எஃப்சி பாயார்ன் குழு மட்டுமல்லாது ஜெர்மனியின் நேஷனல் டீமின் கோல்கீப்பர். பார்சலோனா குழு வின்எந்த பந்தையும் விடாமல் பிடித்து சாகம் செய்து அசத்திவிட்டார்.

சுபா

Wednesday, May 1, 2013

சாம்பியன்ஸ் லீக் 2013 (1)

சாம்பியன்ஸ் லீக்  ஐரோப்பாவின் மிகப் பிரசித்தி பெற்ற காற்பந்து போட்டி. ஒவ்வொருஆண்டும் நடைபெறும் இது  தற்சமயம் ஐரோப்பாவின் விளையாட்டுப் பிரியர்கள் தினம் தினம் பேசிக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று.

சென்ற ஆண்டு ஜெர்மனியின் எப்ஃசி பாயார்ன்  காற்பந்து கிளப்பும் இங்கிலாந்தின் செல்ஸி கிளப்பும் இறுதிப் போட்டியில் மோதி செல்ஸி வெற்றி வாகை சூடிச் சென்றது. பாயார்ன் குழு சோக முகத்துடன் திரும்பியது.

இந்த ஆண்டு போட்டிகள் சென்ற நாட்களில் முடிந்து இன்று மேலும் ஒரு அறை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

ஜெர்மனியின் மிகப் புகழ்பெற்ற எப்ஃசி பாயார்ன்  க்ளப்பும் பொரூசியா டோர்ட்முன்ட் கிளப்பும் ஸ்பெயினின் மிகப் புகழ்பெற்ற பார்ஸலோனா கிளப்புடனும் ரியால் மட்ரிட் கிளப்புடனும் மோதியதில் ஜெர்ம்னியின் பொரூசியா டோர்ட்முன்ட் க்ளப் இறுதிப் போட்டிக்குத் தயார்படுத்திக் கொண்டு விட்டது. ரியால் மட்ரிட் புள்ளிகள் போதாதனால் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இன்று எப்ஃசி பாயார்ன் க்ளப்பும் பார்ஸலோனா  குழுவும் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று செல்பவர் வரும் மே மாதம் 25ம் நாள்  சனிக்கிழமை இங்கிலாந்தின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் போட்டி இடுவர்.

இந்தப் போட்டிகளில் குழுக்களாக பலர் சேர்ந்து தங்கள் குழுவின் வெற்றிக்குப் போராடினாலும் ஒரு சிலர் தனித்துவத்தோடு போராடி பெயர் பெறுவதும் மிகப் பெரிய புகழை அடைத்து விசிறிகள் சூழ்ந்து வருவதும் இங்கே மிகப் பிரபலம்.

அந்த வகையில் தங்க காலணியை பரிசாக வாங்கிய ரியால் மட்ரிட்டின் விளையாட்டளர் ரோனால்டோ விளையாடும் போதெல்லாம் கேமரா அவர் பக்கமே செல்வதும் விசிறிகள் ரொனால்டோ பெயரைக் கூறிக் கத்தி மகிழ்வதும் நேரில் பார்க்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும். 

Inline image 1

சென்ற வாரம் ஏப்ரல் 24 பொருசியா டோர்ட்முண்டிற்கும் ரியால் மட்ரிட்டிற்கும் நடந்த  போட்டியின் போது நான் மட்ரிட்டில் இருந்ததால் தொலைக்காட்சியில் மாலை நண்பர்களுடன் இருந்து ஒரு உணவகத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. ஸ்பேனிஷ் மக்கள் சூழ்ந்திருக்கும் போது நானும் எனது இன்னொரு அலுவலக நண்பர் இருவர் மட்டுமே ஜெர்மானிய பொருசியா டோர்ட்முண்ட் குழுவிற்காக கைதட்டிக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்களோடு சேர்ந்து இப்படி விளையாட்டினை ரசிப்பதே ஒரு தனி அனுபவம் தான்.

பொருசியா டோர்ட்முண்ட் கடந்த 4 ஆண்டுகளில் மிகத் துரிதமாக முன்னேறி ஜெர்மனியின் புண்டஸ்லீகா விளையாட்டுக் கோப்பையை கடந்த 2 ஆண்டுகள் வரிசையாக தக்க வைத்துக் கொண்ட ஒரு க்ளப். இதில் மிக இளமையான விளையாட்டளர்களான மரியோ கோட்ஸ, மார்க்கோ ரோய்ஸ். மார்க் ஹும்மல் போன்றவர்கள் இருந்தாலும் இந்த க்ளப்பின் பெயரைச் சொன்னாலே நினைவில் வருபவர் இக்குழுவின் பயிற்சியாளர்தான்.

Inline image 2

பயிற்சியாளர் யூர்கன் க்ளோப். இன்றைய நிலையில் அடிக்கடி உள்ளூரில் பேசப்படும் விளையாட்டாளர் பெயர் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.


எப்ஃசி பாயார்ன் - என்னுடைய பேவரட் குழு.  இதில் ஜெர்மனியின் முக்கிய விளையாட்டாளர்களான ஷ்வையிண்டைகர், மூல்லர், மரியோ கோமேஸ், லாம் என சிறந்த விளையாட்டளர்களின் பட்டாளம் அமைந்த அணி.

Inline image 3

இன்று சற்று நேரத்தில் இக்குழுவுடன் பார்ஸலோனா குழு செமி பைனலில் மோத உள்ளது. இதில் வெற்றி எப்ஃசி பாயார்ன் குழுவுக்குத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

அப்படி நடந்தால் இரண்டு ஜெர்மன் குழுக்கள் இவ்வாண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும். வெம்ப்ளியில் இந்த விளையாட்டை நேரில் பார்க்க ஒரு டிக்கெட்டும் பாக்கி இருக்காது என்பது நிச்சயம்.

சுபா