Wednesday, December 31, 2003

EU Presidency


இந்த 2003ல் இத்தாலி ஜெர்மனி இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகளிடையே கவலையளிக்கும் ஒரு விஷயமாகி இருக்கின்றது.

இத்தாலியின் சில்வியோ பெர்லுச்கோனி, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்திலிருந்து விலகுகின்றார். மற்ற முந்தைய தலைவர்களோடு ஒப்பிடுகையில் இவரை பலரால் வெகு நாட்களுக்கு நிச்சயமாக மறக்க முடியாது; இந்த புகழ் அவரது திறமையான (??) வழி நடத்தலுக்காக
அல்ல; மாறாக அவரது தலைமைத்துவத்தின் போது அவரது பேச்சு ஜெர்மானியர்களைப் பாதித்த அளவிற்கு இதுவரை வேறு எப்போதும் நடந்ததில்லை.

தனிப்பட்ட முறையில், செல்வந்தரான பெர்லுச்கோனி, இத்தாலியின் பல முக்கிய தொலகாட்சி நிறுவனங்களை தனது கையில் வைத்திருப்பவர். power of media எந்த அளவிற்கு ஒருவரது செல்வாக்கை உயர்த்தி வைக்கும் என்பதில் இவரும் ஒரு நல்ல உதாரணம் என்று தாராளமாகச்
சொல்லலாம். தமிழகத்திலும் இந்த நிலைதானே இருக்கின்றது. அரசியல்வாதிகள் கைகளில் வானொலி தொலைகாட்சி நிலையங்கள் மாட்டிக் கொள்ளும் போது சுய விளம்பரம் செய்வதற்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லையே!EU Parliment நடந்து கொண்டிருக்கும் போது பெர்லுச்கோனி ஜெர்மனியின் மார்ட்டின் சூல்ஸ் என்ற அரசியல்வாதியை நாஸி அங்கத்துவராக வைத்து பேசிய வார்த்தைகளை ஜெர்மானியப் பத்திரிக்கைகள் இன்றைக்கும் விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

"Mr. Schulz, I know there is in Italy a man producing a film on the Nazi concentration camps, I'd like to suggest you for the role of guard. You'd be perfect." மார்ட்டின் பெர்லுச்கோனியைக் கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக இந்த தனிப்பட்ட தாக்குதலை பொது மேடையில் முன்வைத்தார் பெர்லுச்கோனி. இவர்கள் இருவருமே பின்னர் தங்கள் அத்துமீறிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் பத்திரிக்கைகள் இதனை சும்மா விட்டு விடவில்லை. மனித உறிமை மீறல், தனிப்பட்ட தாக்குதல், அடிமை மனப்பான்மை என வர்ணித்து பெர்லுச்கோனியை இன்றளவும் புகழ்பாடிக் கொண்டே தான் இருக்கின்றன.

அதற்குப் பிறகு, இத்தாலிக்குச் செல்லும் ஜெர்மானிய சுற்றுப் பயணிகளை விமர்சித்தும் ஒரு பேச்சு வளர அதைக் கண்டு ஜெர்மானிய அதிபர் தனது இத்தாலிய உல்லாசப்பயணத்தை ரத்து செய்ததும் மற்றொரு கதை. (எனது முந்தை செப்டம்பர் மாத பதிவுகளில் இதனைக் காணலாம்.)

பெர்லுச்கோனி, அவரது தலைமைத்துவத்துவத்தின் போது எந்த புதிய முயற்சியையும் செய்யவில்லை என்பது மற்ற அங்கத்துவ நாடுகளின் தலைவர்களின் பேச்சாகி போயிருக்கின்ற இந்த காலகட்டத்திலும், தான் மிக அதிகமாகவே சாதித்து விட்டதாக பெருமை பேசிக்
கொண்டிருக்கின்றார் பெர்லுச்கோனி. அடுத்த தலைவர் எந்த அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமையை வளர்க்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

Tuesday, December 30, 2003

Children under poverty

ஜெர்மனியின் வறுமை நிலை நிர்மாணிப்பு சங்கம் வெளியிட்டிருக்கும் இவ்வாண்டிற்கான அறிக்கையின் படி இந்த நாட்டில் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை வருகின்ற இரண்டு ஆண்டுகளில் 1.5 மில்லியனாக உயரும் எனத்தெரிகின்றது. தலைநகரமான பெர்லினில் மட்டும் 100,000 குழந்தைகள் வறுமை நிலையிலேயே வாழ்கின்றனர் என்கின்றது இந்த அறிக்கை.ஜெர்மனியைப் பொறுத்தவரை வறுமை நிலை எனப்படுவது யார் ஒருவர் சராசரி வறுமானத்திற்கு 50 விழுக்காடு குறைவாக வாழ்கின்றார்களோ அவர்களையே குறிக்கும். இந்த கணக்கெடுப்பின் படி, single parent என்று சொல்லப்படும் தாய் அல்லது தந்தை ஒருவரோடு வாழும் குழந்தைகள் தான் இந்த எண்ணிக்கையில் ஒரு பாதியினர். மற்ற ஒரு பாதி 4 குழந்தைகளுக்கும் மேம்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள்.

ஜெர்மனியில் இப்போது நிலவி வரும் வேலையில்லா பிரச்சனை இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருந்தாலும், பெருகி வரும் இளம் வயது தாய்மார்களின் எண்ணிக்கையும், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே குழந்தை பெற்று வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியுமே இந்த நிலைக்கு காரணம் என்று தாராளமாகச் சொல்ல முடியும். கல்லூரிப் படிப்பை எட்டுவதற்கு முன்னரே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் இங்கு இருக்கவே செய்கின்றனர்.

குழந்தைகள் பராமரிப்பு என்பது ஜெர்மனியைப் பொறுத்தவரை மிகவும் பொருளாதார ரீதியாக சிரமமான ஒன்றே. இங்கு பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் மாதச் செலவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவுத் தொகையாக ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்குகின்றது.

அப்பா அம்மா இருவருமே இருந்தாலும் சரி, அப்பா இல்லாமல் அம்மா மட்டுமே பராமரிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி இந்தத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனாலும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது, குழந்தைக்களுக்கான உணவுப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகிய அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு இந்தத் தொகை நிச்சயமாகப் போதாது. அதோடு குழந்தைக்கான மருத்துவ இன்சூரன்ஸ் வேறு இருக்கின்றது.
குழந்தை பெற்ற பெண்கள் உடனே வேலைக்குச் செல்ல முடிவதுமில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு இங்கு பாட்டி தாத்தா என்று பெரிய குடும்பங்களும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதையே விரும்புவதால் குழந்தை பெற்ற
பெண்கள் வீட்டில் இருந்து தங்கள் குழந்தை வளரும் வரை பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது. அல்லது முழு நேர வேலையை அரை நாள் வேலையாக மாற்றிக் கொண்டு வேலையைத் தொடர வேண்டியிருக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் தனியாக குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு சலுகைகள் கிடைத்து வந்தன. சென்ற ஆண்டு முதல் இந்த சலுகைகளும் நிறுத்தப்பட்டன. இப்போது வருகின்ற ஆண்டுகளில் மேலும் பல சலுகைகள் குறைக்கப்படவிருப்பதால் தனியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கப் போவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றுதான்.

Monday, December 22, 2003

Dowry - a growing social phenomenon

சில நாட்களுக்கு முன்னர் போப்லிங்கன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். பல பொது விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களிடையே இருந்து வரும் திருமண வரதட்சணைப் பற்றியும் ஆரம்பித்தது.நான் 1996-ல் 2 வார காலம் இலங்கைப் பயணம் சென்றிருந்த போது, அங்கு உள்நாட்டிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிக்கையைப் படிக்கும்போது வரன் தேடுவோரின் பட்டியல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றி வெளிவந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன். ஒரு மருத்துவராக வேலை செய்யும் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடும் பெற்றோர் பெண்ணோடு சேர்த்து லட்சக் கணக்கில் வரதட்சணை மற்றும் ஒரு முழு வீடு போன்றவற்றையும் சேர்த்துத் தருவதாக குறிப்பிட்டிருந்தது என் ஞாபகத்தில் இன்றும் மறையாமல் இருந்தது. அதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் வரடதட்சணை என்பது எந்த அளவிற்கு மேலும் வளர்ந்திருக்கின்றது என்று நண்பர்கள் சொன்னதைக் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு லண்டனில் இருக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடத்தியிருக்கின்றார்கள். அதற்கு பெண் வீட்டர் சார்பாக 100 பவுன் நகை மற்றும் ஏறக்குறைய 1 லட்சம் இங்கிலாந்து பவுனும் (ரொக்கம்) கொடுத்திருக்கின்றார்கள். பெண் ஒரு புத்தகக் கடையில் விற்பனையாளராக வேலை செய்கின்றாள். மாப்பிள்ளை லண்டனில் ஒரு கடையில் வேலை செய்கின்றார். என்ன நடந்ததோ தெரியவில்லை. திருமணம் நடந்து ஒரு மாதம் முடிவதற்குள் அந்தப் பெண் சேர்ந்திருக்கப் பிடிக்காமல் ஜெர்மனிக்குப் பிடிவாதமாகத் திரும்பிவிட்டாள். முதலில் பெற்றோர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லையாம். பின்னர் வேறு வழிய்ல்லாமல் பெண்ணை திரும்ப அழைத்துக் கொண்டார்களாம்.

இவ்வளவு வரதட்சனை கொடுத்தும் கூட நிம்மதியற்ற திருமணமாகவே இது முடிந்திருக்கின்றது. இதைபோல பல கதைகள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்வியும் வாழ்க்கை தரமும் உயர்ந்து வரும் போது மனித நேயமும் பண்பும் வளர வேண்டும் என நாம் எதிர்ப்பார்ப்பது இயற்கை. ஆனால் இங்கு நிலைமை சற்று வித்தியாசமாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. அதிகமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமைகின்ற போது 'அதிகமாக எங்களால் வரதட்சனை கொடுக்க முடியும்' என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைப்பதும், 'ஐரோப்பாவில் தானே பெண் இருக்கின்றாள். அதிகமாகவே வரதட்சணை கொடுக்கட்டுமே' என்று மாப்பிள்ளை வீட்டாரும் நினைக்கும் மனப்போக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது. இங்கேயே வளர்ந்து படித்து வரும் தமிழ் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் நான் பேசிக்கொண்டிந்த 16 வயது தமிழ் பெண் ஒருத்தி இந்த மனப்போக்கை பற்றி தனது பெற்றோர் முன்னிலையிலேயே குறை கூறி பேசிய போது அவளுடைய சிந்தனை வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். இளம் தலைமுறையினர் தாம் நமது சமுதாயத்தில் மேலும் படர்ந்துள்ள விலங்குகளைப் போக்க முடியும் என்பதை இந்தப் பெண் போன்றவர்களைப் பார்க்கும் போது உணர்ந்து சந்தோஷப்பட முடிகின்றது.

Tuesday, December 9, 2003

Cologneகெல்ன் ஜெர்மனியின் பழம் பெரும் நகரங்களில் ஒன்று. ஜெர்மனியின் மத்திய பகுதியில் இருக்கும் இந்த நகரம் ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களில் ஒன்று என்றும் தாராளமாகச் சொல்லலாம். Cologne என்னும் இந்தப் பெயர் ரோமானியப் பேரரசர் Claudius -ஸின் மனைவியின் ஞாபகமாக வைக்கப்பட்டது. இவரது காலம் 50 A.D. கெல்ன் நகரின் எல்லா இடங்களிலும் ரோமானியர்களின் ஆட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பல நினைவுச் சின்னங்களைப் பார்க்க முடியும்.

கெல்ன் நகருக்குச் சிறப்பினைத் தருவது கெல்ன் டோம் தான். மிகப் பிரமாண்டமான இந்த தேவாலயத்தின் கலை அழகை சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. கடந்த முறை நான் அங்கு சென்றிருந்த போது தேவாலயத்தின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததது. தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சில நிமிடங்கள் தியானம் செய்து விட்டு வெளியே நடந்தது மறக்கமுடியாத இனிமையான நினைவுகள். சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, சர்வ சாதாரணமாக ஒரு இளைஞன் ஓடி வந்து 1 EUR தரமுடியுமா என் என்னைத் தடுத்து நிறுத்திக் கேட்டான். நான்றாக உடை அணிந்திருந்த அவனுக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கும். "பியர் வாங்க வேண்டும்; பணம் தருகிறாயா" என கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அவன் என்னைக் கேட்டது உண்மையிலேயே திகைக்க வைத்தது.

இந்த நகருக்கு ரோமானியர்கள் தான் கிருஸ்துவ மதத்தை கொண்டுவந்தனர். அவர்களது தாக்கத்தால் தான் இங்கு பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. 12ம் நூற்றாண்டிலிருந்து கெல்ன் நகரத்திற்கு Sancta (புனித நகரம்) எனும் தகுதி வழங்கப்பட்டது. உலகிலேயே 4 நகரங்களுக்குத்தான் இந்த சிறப்புண்டு; அவை ரோம், ஜெருஸலம், பைஸண்டியம் மற்றும் கெல்ன் ஆகியவையே.

கெல்ன் நகரத்தின் மற்றொரு சிறப்பு ரைன் நதி. ரைன் நதியை இரண்டு கரைகளிலும் இணைக்கும் பல பாலங்களை இங்கு காண முடியும். ரைன் நதியில் படகு சவாரி செய்வதும் இனிமையான ஒரு அனுபவம் தான். ஜெர்மனிக்கு வருபவர்கள் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய ஒரு நகரம் கெல்ன் என்றால் அது மிகையாகாது.

இதற்கெல்லாம் மேலாக தமிழர்களாகிய நமக்கு சந்தோஷத்தைத் தரும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இங்கு இருக்கும் கெல்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் துறை. உலகின் இரண்டாவது பெரிய தமிழ் நூல்களின் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ் துறையாக இது இருந்து வருகின்றது என்றால் ஆச்சரியம் தானே!

Sunday, December 7, 2003

பெர்லின்

ஜெர்மனியின் மிக முக்கிய நகரங்களில் பெர்லினும் ஒன்று. இந்நாட்டின் தலைநகரமாக இருப்பது மட்டுமன்றி கலாச்சார மையமாகவும் திகழ்வதுதான் பெர்லின் நகரின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டும்.

முன்னர் கிழக்கு-மேற்கு பெர்லின் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த பெர்லின் இப்போது ஒரு தனி நகரமாக இருந்து வருகின்றது. பெர்லின் சாலைகளில் நடக்கும் போது மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு பல இன மக்களை சர்வ சாதாரணமாக இங்கு காணமுடியும் என்பது முற்றிலும் உண்மை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனியின் வாசலாக இருப்பது பெர்லின் தான். பல நாடுகளிலிருந்து அகதிகளாக ஜெர்மனிக்குள் நுழைபவர்கள் பெர்லினைத்தான் மையமாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பது அதிகாரப்பூர்வமாகக் காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி.

ஸ்டுட்கார்ட் நகரில் எனது அலுவலகத்தில் என்னோடு வேலை செய்து கொண்டிருந்த எனது இனிய நண்பன் ஸ்வென், ஸ்டுட்கார்ட் நகரின் அவசர வாழ்க்கை பிடிக்காமல் வேலையை உதறி விட்டு வாழ்க்கையை இனிமையாக கழிக்க வேண்டும் என முடிவெடுத்து பெர்லினுக்குச் சென்று விட்டான். பெர்லின் சாலைகளில் இருக்கும் தெருவோரக் கடைகளில் இயற்கையயும் வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டு பியர் சாப்பிட்டு வாழ்க்கையை சுகமாகக் கழிப்பதாக (நிரந்தர வேலையில்லாவிட்டாலும்) அவ்வப்போது அவன் எனக்கு தகவல் அனுப்புவதுண்டு.

ஜெர்மனி முழுக்க இருக்கும் மக்கள் தொகையில் பெர்லினில் தான் மிக அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. அதில் இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் ஜெர்மனியின் இந்த புகழ் பெற்ற நகரம் இப்போது மாநிலத்தின் (பெர்லின்) செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றது என்ற செய்திதான். பெர்லினிலுள்ள ஒரு புகழ் பெற்ற தொல்பொருட்காட்சி நிலையம் அதற்கான பாதுகாப்புச் செலவுகளைப் பெற முடியாததால் இப்போது மூடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் முதல்வர் மத்திய அரசாங்கம் தங்கள் மாநிலத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று அறை கூவல் விடுத்திருந்தார். இதுதான் இன்றைய பெர்லினின் நிலமை.

ஜெர்மனி பொருளாதார மறு சீரமைப்பு செய்வதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் பலனாக இப்போது பல புதிய தொழில் வாய்ப்புக்கள் மலர ஆரம்பித்து சில நடுத்தர வகை நிறுவனங்கள் இலாபம் ஈட்ட ஆரம்பித்திருப்பதாக நேற்றைய வர்த்தக செய்தியில் கேள்விப்பட்டேன். பல மாதங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஒரு நல்ல செய்தி. இந்த நிலை தொடரவேண்டும்!

Tuesday, December 2, 2003

Job Bank!

நேற்று, டிசம்பர் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியின் வேலையில்லாதவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், தங்கள் இல்லத்திலிருந்தவாறே உள்நாட்டில் வேலை தேடுவதற்குமாக பிரத்தியேகமாக வலைப்பக்கம் ஒன்றினை ஜெர்மனி அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. உள்நாட்டில் உள்ள 3 மில்லியன் வேலை தேடும் மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகள்; பிரச்சனைகள்; ஏற்பாட்டு நடவடிக்கைகள்; இதனை நேரடியாக கண்டும் உணர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் எனக்கும் எந்த வகையில் தொடர்ந்து இந்த வலைப்பக்கம் செயல்படப்போகின்றது என்பதில் ஒரு ஆர்வம் இருக்கின்றது. சில தனியார்
நிறுவனங்களோடு சேர்ந்து எங்கள் நிறுவனமும் இதில் கணிசமான சேவையை நேரடியாக வழங்குவதால் தான் எனக்கும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்.

பலமுறை பல்வேறு வகையான சோதனைகளைக் கணினிகளுக்கு வழங்கி சோதித்துப் பார்த்து விட்ட பிறகும் முதல் நாளன்றே ஏகப்பட்ட பிரச்சனைகள் பிறக்கத் தொடங்கி விட்டன. வேலையில்லாதவர்களுக்குப் பல நாள் காத்திருந்த ஆர்வம். வலைப்பக்கம் வந்து விட்டது என்று உள்நாட்டு செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் அனைத்தும் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது பொது மக்கள் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லாமல் இருப்பார்களா? எத்தனை நாட்கள் இந்த வசதிக்காக காத்திருந்திருப்பார்கள்?

முன்பெல்லாம் வேலை தேடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்குச் சென்று அங்கு தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டு அதன் பின்னர் அங்கேயே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சில கணினிகளைக் கொண்டு தகவல் வங்கியில் வேலைகளைத் தேடுவர். இதற்கென்று தனியாக நேரமும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜெர்மனியில் வேலை தேடுபவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லையே இல்லை. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் ஜெர்மனியில் வேலை தேடுவதற்கான வசதி இப்போது உருவாக்கப்பட்டு விட்டது.

மாலையாவதற்குள் வலைப்பக்கத்திற்கு சேவை வழங்கும் web server அதிகமான பயனீட்டைத் தாங்க முடியாமல் திக்கித் திணர ஆரம்பித்து விட்டது. மில்லியன் கணக்கில் மக்கள் வலைப்பக்கத்திற்குள் சென்று தங்கள் பெயரை பதிய முயலும் போது பாவம் அந்தக் கணினி; அதனால் என்ன செய்ய முடியும். இதைப் பலரும் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை. ஆனாலும் அதிவேக கணினி; பல புதிய தொழில் நுட்பங்களை தன்னுள்ளே கொண்ட கணினி. ஓரளவு சமாளிக்கவே செய்தது. அலுவலகத்தில் இன்று இது தான் எங்களுக்குப் பேச்சாகிப் போனது. எதிர்பார்த்ததை விட ஒரே நாளில் தகவல் வங்கி மிக மிக மிக பெரிதாக வளர்ந்து விட்டது ஒரே நாளில்.

ஜெர்மனியில் வேலையில்லா நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் வருகின்றது. இந்த இணையத் தொடர்பினை வழங்கும் கணினி சேவை எந்த அளவிற்கு இந்த நிலையை எதிர்கொள்ள முடியும் என்பதை காலம் தான் சொல்ல முடியும்.!