Tuesday, December 9, 2003

Cologne



கெல்ன் ஜெர்மனியின் பழம் பெரும் நகரங்களில் ஒன்று. ஜெர்மனியின் மத்திய பகுதியில் இருக்கும் இந்த நகரம் ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களில் ஒன்று என்றும் தாராளமாகச் சொல்லலாம். Cologne என்னும் இந்தப் பெயர் ரோமானியப் பேரரசர் Claudius -ஸின் மனைவியின் ஞாபகமாக வைக்கப்பட்டது. இவரது காலம் 50 A.D. கெல்ன் நகரின் எல்லா இடங்களிலும் ரோமானியர்களின் ஆட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பல நினைவுச் சின்னங்களைப் பார்க்க முடியும்.

கெல்ன் நகருக்குச் சிறப்பினைத் தருவது கெல்ன் டோம் தான். மிகப் பிரமாண்டமான இந்த தேவாலயத்தின் கலை அழகை சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. கடந்த முறை நான் அங்கு சென்றிருந்த போது தேவாலயத்தின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததது. தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சில நிமிடங்கள் தியானம் செய்து விட்டு வெளியே நடந்தது மறக்கமுடியாத இனிமையான நினைவுகள். சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, சர்வ சாதாரணமாக ஒரு இளைஞன் ஓடி வந்து 1 EUR தரமுடியுமா என் என்னைத் தடுத்து நிறுத்திக் கேட்டான். நான்றாக உடை அணிந்திருந்த அவனுக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கும். "பியர் வாங்க வேண்டும்; பணம் தருகிறாயா" என கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அவன் என்னைக் கேட்டது உண்மையிலேயே திகைக்க வைத்தது.

இந்த நகருக்கு ரோமானியர்கள் தான் கிருஸ்துவ மதத்தை கொண்டுவந்தனர். அவர்களது தாக்கத்தால் தான் இங்கு பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. 12ம் நூற்றாண்டிலிருந்து கெல்ன் நகரத்திற்கு Sancta (புனித நகரம்) எனும் தகுதி வழங்கப்பட்டது. உலகிலேயே 4 நகரங்களுக்குத்தான் இந்த சிறப்புண்டு; அவை ரோம், ஜெருஸலம், பைஸண்டியம் மற்றும் கெல்ன் ஆகியவையே.

கெல்ன் நகரத்தின் மற்றொரு சிறப்பு ரைன் நதி. ரைன் நதியை இரண்டு கரைகளிலும் இணைக்கும் பல பாலங்களை இங்கு காண முடியும். ரைன் நதியில் படகு சவாரி செய்வதும் இனிமையான ஒரு அனுபவம் தான். ஜெர்மனிக்கு வருபவர்கள் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய ஒரு நகரம் கெல்ன் என்றால் அது மிகையாகாது.

இதற்கெல்லாம் மேலாக தமிழர்களாகிய நமக்கு சந்தோஷத்தைத் தரும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இங்கு இருக்கும் கெல்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் துறை. உலகின் இரண்டாவது பெரிய தமிழ் நூல்களின் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ் துறையாக இது இருந்து வருகின்றது என்றால் ஆச்சரியம் தானே!

No comments:

Post a Comment