Tuesday, December 30, 2003

Children under poverty

ஜெர்மனியின் வறுமை நிலை நிர்மாணிப்பு சங்கம் வெளியிட்டிருக்கும் இவ்வாண்டிற்கான அறிக்கையின் படி இந்த நாட்டில் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை வருகின்ற இரண்டு ஆண்டுகளில் 1.5 மில்லியனாக உயரும் எனத்தெரிகின்றது. தலைநகரமான பெர்லினில் மட்டும் 100,000 குழந்தைகள் வறுமை நிலையிலேயே வாழ்கின்றனர் என்கின்றது இந்த அறிக்கை.



ஜெர்மனியைப் பொறுத்தவரை வறுமை நிலை எனப்படுவது யார் ஒருவர் சராசரி வறுமானத்திற்கு 50 விழுக்காடு குறைவாக வாழ்கின்றார்களோ அவர்களையே குறிக்கும். இந்த கணக்கெடுப்பின் படி, single parent என்று சொல்லப்படும் தாய் அல்லது தந்தை ஒருவரோடு வாழும் குழந்தைகள் தான் இந்த எண்ணிக்கையில் ஒரு பாதியினர். மற்ற ஒரு பாதி 4 குழந்தைகளுக்கும் மேம்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள்.

ஜெர்மனியில் இப்போது நிலவி வரும் வேலையில்லா பிரச்சனை இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருந்தாலும், பெருகி வரும் இளம் வயது தாய்மார்களின் எண்ணிக்கையும், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே குழந்தை பெற்று வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியுமே இந்த நிலைக்கு காரணம் என்று தாராளமாகச் சொல்ல முடியும். கல்லூரிப் படிப்பை எட்டுவதற்கு முன்னரே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் இங்கு இருக்கவே செய்கின்றனர்.

குழந்தைகள் பராமரிப்பு என்பது ஜெர்மனியைப் பொறுத்தவரை மிகவும் பொருளாதார ரீதியாக சிரமமான ஒன்றே. இங்கு பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் மாதச் செலவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவுத் தொகையாக ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்குகின்றது.

அப்பா அம்மா இருவருமே இருந்தாலும் சரி, அப்பா இல்லாமல் அம்மா மட்டுமே பராமரிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி இந்தத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனாலும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது, குழந்தைக்களுக்கான உணவுப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகிய அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு இந்தத் தொகை நிச்சயமாகப் போதாது. அதோடு குழந்தைக்கான மருத்துவ இன்சூரன்ஸ் வேறு இருக்கின்றது.




குழந்தை பெற்ற பெண்கள் உடனே வேலைக்குச் செல்ல முடிவதுமில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு இங்கு பாட்டி தாத்தா என்று பெரிய குடும்பங்களும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதையே விரும்புவதால் குழந்தை பெற்ற
பெண்கள் வீட்டில் இருந்து தங்கள் குழந்தை வளரும் வரை பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது. அல்லது முழு நேர வேலையை அரை நாள் வேலையாக மாற்றிக் கொண்டு வேலையைத் தொடர வேண்டியிருக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் தனியாக குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு சலுகைகள் கிடைத்து வந்தன. சென்ற ஆண்டு முதல் இந்த சலுகைகளும் நிறுத்தப்பட்டன. இப்போது வருகின்ற ஆண்டுகளில் மேலும் பல சலுகைகள் குறைக்கப்படவிருப்பதால் தனியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கப் போவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றுதான்.

No comments:

Post a Comment