Friday, June 21, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு இருக்கிறாயா எனக் கேட்பார்களே.. அந்த நிலைதான் நேற்று எனக்கு அமைந்தது.

மட்ரிட்டிலிருந்து ப்ராங்பெர்ட் பயணம் அது முடிந்து ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் என ஏற்பாடாகியிருந்தது நேற்றைய பயணம் . அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீசினால் எல்லாம் சரியாக அமைந்து குறித்த நேரத்தில் வந்து சேரலாம். முதலிடத்தில் ஒரு கோணல் என்றால் முற்றும் கோணல்தான்.

சரி .. புலம்புவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன். :-)

நேற்று மாலை 5:45க்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை 6:55க்குத் தான் பயணிகள் உள் செல்லத் தயாரானது. எனக்கு நேரம் செல்வதை நினைத்த போதே கலக்கம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அடுத்த கனெக்டிங் ப்ளைட் புறப்படும் நேரம் இரவு 9:55. இங்கே 7 மணிக்குத் தயாரானால் எப்படி இரண்டாவது  விமானத்தைப் பிடித்து இரவு 11க்கு வீட்டிற்கு வருவது என்ற எண்ணம். உள்ளே பயணிகள் அமர்ந்தும் விமானம் புறப்பட வில்லை. தாமதமாக விமானம் வந்து சேர்ந்து தாமதமாக புறப்பட ஆயத்தமான நிலையில் விமானம் ஓடும் பாதை கிடைக்கத் தாமதம். ஒரு வழியாக பாதை கிடைத்து விமானம் புறப்பட மாலை 7:41. இன்று கனெக்டிங் ப்ளைட் கிடைக்காது போலிருக்கின்றதே ஏதாவது கொஞ்சம் நம் பக்கமும் அதிர்ஷ்டம் இருந்து அந்த விமானமும் தாமதப் பட்டால் நன்றாக இருக்குமே என ஒரு நப்பாசை.

விமானம் ப்ராங்பர்ட் வந்து தரையிறங்கியபோது மணி சரியாக இரவு 9:50. 9:55க்கு அடுத்த விமானம் புறப்பட்டு விடும். சரி.. நமது அதிர்ஷடத்தைத்தான் இன்று பார்ப்போமே என நினைத்துக் கொண்டே விமானத்தை விட்டு வெளியே வந்தால்  வானம் கரும் இருட்டாகி பெரும் மழை தோன்றும் என்பது போல இருந்தது. எனக்கு A03 யை தேடிக்கொண்டு போக வேண்டுமே என்பதிலேயே கவனம்.

பயணிகளை பஸ் கொண்டுவந்து வாசலில் விட்டதுதான் தாமதம். என்னைப் போல பாதி பேர் இருப்பார்கள் போல. அவரவர் விமான கேட்களைத் தேடிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அனைவரும் பல வழிகளில் செல்ல ஆரம்பித்து விட்டோம். நல்ல வேளையாக ஜோகிங் ஓடும் பழக்கம் இருப்பதால் என்னாலும் வேகமாக ஓட்டமும் நடையுமாக செல்ல உடல் ஒத்துழைத்தது. ஒரு வழியாக A03யை வந்தடையும் போது மணி 10:09. வாசலில் கேட் இன்னமும் திறந்திருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. ஓடிவரும் என்னைப் பார்த்து ஸ்டுட்கார்ட்-ஆ எனக் கேட்டு ஆம் என்றவுடன்.. கீழே பஸ் இருக்கின்றது. ஓடிச் சென்று ஏறிக்கொள் என்று சொல்லிவிட்டு விமானம் இன்று பயனிக்குமா எனத் தெரியாது. ஆனால் போய் ஏறிக் கொள் என்று அதிகாரி தெரிவித்தார். இது என்ன குழப்பம். புரியவில்லையே என நினைத்துக் கொண்டு கீழே படியிறங்கி ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறிக் கொண்டேன்.

ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. சற்று நிமிடம் காத்திருந்து விட்டு பஸ் புறப்பட்டது. விமானம் நிற்கும் பகுதிக்கு வந்து எங்களை இறக்கி விட நாங்கள் அவரவர் இருக்கையில் வந்து ஆம்ர்ந்து கொண்டோம். மணி அப்போது 10:27 ஆகியிருந்தது. இன்று என்ன ஒரு அதிர்ஷ்டம் நமக்கு என மனதில் ஒரு அற்ப சந்தோஷம்.

சற்று நேரத்தில் அறிவிப்பு. ஸ்டுட்கார் பகுதியில் கடுமையான மழையும் இடியும் என நிலமை இருப்பதால் விமானங்கள் அனைத்தும் ஸ்டுட்கார் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. என்வே அனைவரும் சில நிமிடங்கள் நிலமை மாறும் வரை விமானத்திலேயே இருக்கவும் என அறிவுப்பு.

என்ன ஒரு சோதனை. சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என நினைத்து பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்க அடுத்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஸ்டுட்கார்ட்டில் நிலமை சற்று மாறியிருப்பதாகவும் விமானங்கள் பயணிக்கலாம் எனவும் தகவல் வந்தது. மீண்டும் விமானம் ஓடு பாதையில் இடம் கிடைக்க தாமதம். வரிசையாக நிற்கும் 6 விமானங்கள் முதலில் செல்ல விட்டு அடுத்து நான் பயணித்த விமானம் புறப்பட மேலும் ஒரு 30 நிமிடம்.

வானிலை நிலமை சரியில்லை என்பதை பயணத்தின் போது நன்கு உணர்ந்தோம். டர்புலன்ஸ் மிக அதிகமாக இருந்தது. ஆனாலும் எந்த  பிரச்சனையுமின்றி எங்களை ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் இறக்கி விட்டு நாங்கள் எங்கள் பைகளுடன் செல்வதை வாசலில்  நின்று சிரித்த முகத்துடன் பார்த்து எங்களுக்கு இரவு வணக்கம் சொல்லி வழி அனுப்பி வைத்த விமானத்தின் கேப்டன் மற்ற ஊழியர்களைப் பார்த்து அவர்களுக்கு நானும் நன்றியும் இரவு  வணக்கமும் சொல்லி விட்டு வெளியேறினேன். நான் அவர்களுக்குச் சொன்ன நன்றி  என் ஆழ் மனதிலிருந்து வந்த  சொல் என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

சுபா 

Monday, June 17, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா

ஜெர்மனி ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பட்டு இரண்டு மணி நேரங்கள் சாலையைச் சுற்றி வரும் வகையில் மிகச் சிறப்பாக ஊர்வலம் நிகழ்ந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். இலங்கைத் தமிழ் மக்களோடு உள்ளூர் ஜெர்மானிய மக்களும் சிலர் இண்டஹ் தேர் திருவிழாவைப் பார்க்க சாலையில் கூடியிருந்தனர்.

அம்பிகை, நல்லூர் முருகன், சித்தி விநாயகர் சிலைகள் மூன்று தேர்களில் வரிசையாக பவனி வந்தன. தேங்காய் உடைத்தும் பூஜைகள் செய்தும் வரும் வழியில் பூஜைகள் நடந்து கொண்டேயிருந்தது.

பல நாட்கள், சில ஆண்டுகள் சந்திக்காத இலங்கைத் தமிழ் நண்பர்கள் பலரை மீண்டும் சந்தித்து அளவலாவும் வாய்ப்பும் அமைந்தது.

ஆலயத்தில் வாசல்பகுதியிலேயே கடைகள் ஏற்படுத்தி நம் மக்கள் பயன்படுத்தும் மொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். புளி சாதம், தேங்காய்சாதம் எல்லாம் இல்லை. மாறாக சைவ கொத்து ரொட்டி, வடை, ஆப்பம் என உணவுப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன.

சில படங்கள்..

சுவாமி ஊர்வலம் மூன்று தேர்களில் 
தீச்சட்டி ஏந்திய பெண்கள்


காவடியுடன் சிறுவர்கள்


தேரினை வரவேற்கும் காவடியாட்டம்தீப்பந்ததுடன்


என் நண்பர்களுடன்என் நண்பர்களின் கடை(சாந்தா,மூர்த்தி)சில கடைகள்

நாதஸ்வர கோஷ்டி


காவடியாட்டம்பால்குடம் ஏந்திய மகளிர்சித்தி விநாயகர் வரும் தேரின் வடத்தை ஒரு புறம் பெண்களும் மறுபுறம் ஆண்களும் இழுத்து வருகின்றனர்

சுபா

Saturday, June 8, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா


ஐரோப்பாவில் இருக்கின்ற ஹிந்து ஆலயங்கள் அனைத்திலும் திருவிழா தொடங்கப்படும் காலம் இது. நான் வாழும் லியோன்பெர்க் நகரின் அருகாமையில் ஸ்டுட்கார்ட் நகர், அதன் சுற்றுப் புறத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. கடந்தஆண்டுகளில் ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் கோயில் திருவிழா பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிட்டிருந்தேன். ஸ்டுட்கார்ட் நகரில் மேலும் ஒரு சித்தி விநாயகர் ஆலயம் இருக்கின்றது. இங்கு இதுவரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அந்த வாய்ப்பு  நேர்று மாலை அமைந்தது. எனது இலங்கைத் தமிழ் தோழிகள் இருவர் இக்கோயிலின் அருகாமையில் இருப்பவர்கள். இன்று ஆலயத்தில் திருவிழா தொடக்கம் உள்ளதுஎன்றும் கொடிமரம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்றும் ஒரு வாரத்திற்கு முன்னரே எனக்குத் தகவல் சொல்லியிருந்தமையால் இன்று மூவருமாக சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.

கோயில் வழிபாடும் இறை தரிசனமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவிலிருந்து வந்து குருக்களாக சேவை செய்பவரோடு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மேலும் இரண்டு குருக்கள்களும் இச்சிறப்பு திருவிழாவிற்காக வந்திருக்கின்றனர். அத்துடன் நாதஸ்வர மேளக் கலைஞர்களும் இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக வந்திருக்கின்றனர்.

கோயிலில் மூலஸ்தானத்தில் பிள்ளையார் சன்னிதி மட்டுமே உள்ளது. தனித்தனியாக அம்மன் சன்னிதி, முருகன் சன்னிதி, ஐயப்பன் சுவாமி சன்னிதி, பைரவர், சண்டீஸ்வரர் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

கோயிலில் பிரமாண்டமான வடிவில் நர்த்தன விநாயகர் சிலையும் உள்ளது. ஒரு பகுதியில் கோபாலன்  சன்னிதியும் உள்ளது. 

வசந்த மண்டபத்தில் மூகாம்பிகை சித்தி விநாயகர், நல்லூர் சுப்ரமண்ய சுவாமி சிலைகள் அமைந்திருக்கின்றன. வசந்த  மண்டப மூர்த்தங்களின் அலங்காரம் சிகரமாக அமைந்து வந்திருந்த அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டது. 

முதலில்  மூலஸ்தான சுவாமிக்கு பூஜைகள் முடிந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் வசந்த மண்டப தீபாராதனை முடிந்து மூர்த்தங்களின் ஊர்வலம் ஆரம்பித்தது. ஆலயத்திற்குள்ளேயே இது நடந்தது. 

தேவாரப் பாடல்கள் அதன்பின்னர் இனிய நாதஸ்வர இசை மேள வாத்திய கச்சேரி என தெய்வீக மணம் மனதை நிறைத்தது. மேண்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என ஒரு அம்மையார் பாடி முடிக்க பூஜை முடிந்து தீபாராதனை நிறைவு பெற்றது. 

வந்திருந்த  அனைவருக்கும் நல்ல இரவு உணவும் ஏற்பாடாகியிருந்தது. சாம்பார் சாதம், மோதகம், வடை, பஞ்சாமிர்தம் என சாப்பிட்டும் மகிழ்ந்தோம். 

ஆலயத் திருவிழா வரும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையன்று தேர் திருவிழா காவடி ஆட்டங்களுடன் நடைபெற உள்ளதாக அறிந்தேன். இது மிகச் சிறப்பான நிகழ்வாக நிச்சயமாகஅமையும்.
1986ல் முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் வைத்து தொடக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலை. இது ஏறக்குறைய15 செ.மீ அளவு உயரம் கொண்டது.

நர்த்தக விநாயகர் சிலை


ஐயப்பன் சுவாமி சன்னிதி


கொடி மரத்திற்கு பன்னீர் அபிஷேகம்

கொடி மரத்திற்கு தீபாராதனை

கொடி மரத்திற்குப் பால் அபிஷேகம்

கொடி மரத்திற்குத் தயிர் அபிஷேகம்

தீபாராதனை

இனிமையான நாதஸ்வர இசை வழங்கிய கலைஞர்கள்

வசந்த மண்டப பூஜை ஆரம்பம்

சுவாமி ஊர்வலம்

சுவாமி ஊர்வலத்தின் போது மக்கள் வழிபடுகின்றனர்

ஊர்வலம்

யாக சாலை


சுபா