Friday, June 21, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு இருக்கிறாயா எனக் கேட்பார்களே.. அந்த நிலைதான் நேற்று எனக்கு அமைந்தது.

மட்ரிட்டிலிருந்து ப்ராங்பெர்ட் பயணம் அது முடிந்து ப்ராங்பர்ட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் என ஏற்பாடாகியிருந்தது நேற்றைய பயணம் . அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீசினால் எல்லாம் சரியாக அமைந்து குறித்த நேரத்தில் வந்து சேரலாம். முதலிடத்தில் ஒரு கோணல் என்றால் முற்றும் கோணல்தான்.

சரி .. புலம்புவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன். :-)

நேற்று மாலை 5:45க்குப் புறப்பட வேண்டிய விமானம் மாலை 6:55க்குத் தான் பயணிகள் உள் செல்லத் தயாரானது. எனக்கு நேரம் செல்வதை நினைத்த போதே கலக்கம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அடுத்த கனெக்டிங் ப்ளைட் புறப்படும் நேரம் இரவு 9:55. இங்கே 7 மணிக்குத் தயாரானால் எப்படி இரண்டாவது  விமானத்தைப் பிடித்து இரவு 11க்கு வீட்டிற்கு வருவது என்ற எண்ணம். உள்ளே பயணிகள் அமர்ந்தும் விமானம் புறப்பட வில்லை. தாமதமாக விமானம் வந்து சேர்ந்து தாமதமாக புறப்பட ஆயத்தமான நிலையில் விமானம் ஓடும் பாதை கிடைக்கத் தாமதம். ஒரு வழியாக பாதை கிடைத்து விமானம் புறப்பட மாலை 7:41. இன்று கனெக்டிங் ப்ளைட் கிடைக்காது போலிருக்கின்றதே ஏதாவது கொஞ்சம் நம் பக்கமும் அதிர்ஷ்டம் இருந்து அந்த விமானமும் தாமதப் பட்டால் நன்றாக இருக்குமே என ஒரு நப்பாசை.

விமானம் ப்ராங்பர்ட் வந்து தரையிறங்கியபோது மணி சரியாக இரவு 9:50. 9:55க்கு அடுத்த விமானம் புறப்பட்டு விடும். சரி.. நமது அதிர்ஷடத்தைத்தான் இன்று பார்ப்போமே என நினைத்துக் கொண்டே விமானத்தை விட்டு வெளியே வந்தால்  வானம் கரும் இருட்டாகி பெரும் மழை தோன்றும் என்பது போல இருந்தது. எனக்கு A03 யை தேடிக்கொண்டு போக வேண்டுமே என்பதிலேயே கவனம்.

பயணிகளை பஸ் கொண்டுவந்து வாசலில் விட்டதுதான் தாமதம். என்னைப் போல பாதி பேர் இருப்பார்கள் போல. அவரவர் விமான கேட்களைத் தேடிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அனைவரும் பல வழிகளில் செல்ல ஆரம்பித்து விட்டோம். நல்ல வேளையாக ஜோகிங் ஓடும் பழக்கம் இருப்பதால் என்னாலும் வேகமாக ஓட்டமும் நடையுமாக செல்ல உடல் ஒத்துழைத்தது. ஒரு வழியாக A03யை வந்தடையும் போது மணி 10:09. வாசலில் கேட் இன்னமும் திறந்திருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. ஓடிவரும் என்னைப் பார்த்து ஸ்டுட்கார்ட்-ஆ எனக் கேட்டு ஆம் என்றவுடன்.. கீழே பஸ் இருக்கின்றது. ஓடிச் சென்று ஏறிக்கொள் என்று சொல்லிவிட்டு விமானம் இன்று பயனிக்குமா எனத் தெரியாது. ஆனால் போய் ஏறிக் கொள் என்று அதிகாரி தெரிவித்தார். இது என்ன குழப்பம். புரியவில்லையே என நினைத்துக் கொண்டு கீழே படியிறங்கி ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறிக் கொண்டேன்.

ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. சற்று நிமிடம் காத்திருந்து விட்டு பஸ் புறப்பட்டது. விமானம் நிற்கும் பகுதிக்கு வந்து எங்களை இறக்கி விட நாங்கள் அவரவர் இருக்கையில் வந்து ஆம்ர்ந்து கொண்டோம். மணி அப்போது 10:27 ஆகியிருந்தது. இன்று என்ன ஒரு அதிர்ஷ்டம் நமக்கு என மனதில் ஒரு அற்ப சந்தோஷம்.

சற்று நேரத்தில் அறிவிப்பு. ஸ்டுட்கார் பகுதியில் கடுமையான மழையும் இடியும் என நிலமை இருப்பதால் விமானங்கள் அனைத்தும் ஸ்டுட்கார் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. என்வே அனைவரும் சில நிமிடங்கள் நிலமை மாறும் வரை விமானத்திலேயே இருக்கவும் என அறிவுப்பு.

என்ன ஒரு சோதனை. சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என நினைத்து பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்க அடுத்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஸ்டுட்கார்ட்டில் நிலமை சற்று மாறியிருப்பதாகவும் விமானங்கள் பயணிக்கலாம் எனவும் தகவல் வந்தது. மீண்டும் விமானம் ஓடு பாதையில் இடம் கிடைக்க தாமதம். வரிசையாக நிற்கும் 6 விமானங்கள் முதலில் செல்ல விட்டு அடுத்து நான் பயணித்த விமானம் புறப்பட மேலும் ஒரு 30 நிமிடம்.

வானிலை நிலமை சரியில்லை என்பதை பயணத்தின் போது நன்கு உணர்ந்தோம். டர்புலன்ஸ் மிக அதிகமாக இருந்தது. ஆனாலும் எந்த  பிரச்சனையுமின்றி எங்களை ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் இறக்கி விட்டு நாங்கள் எங்கள் பைகளுடன் செல்வதை வாசலில்  நின்று சிரித்த முகத்துடன் பார்த்து எங்களுக்கு இரவு வணக்கம் சொல்லி வழி அனுப்பி வைத்த விமானத்தின் கேப்டன் மற்ற ஊழியர்களைப் பார்த்து அவர்களுக்கு நானும் நன்றியும் இரவு  வணக்கமும் சொல்லி விட்டு வெளியேறினேன். நான் அவர்களுக்குச் சொன்ன நன்றி  என் ஆழ் மனதிலிருந்து வந்த  சொல் என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

சுபா 

No comments:

Post a Comment