Tuesday, December 18, 2018

BREXIT .. தொடர்ச்சி






BREXIT .. தொடர்ச்சி
இன்னும் ஏறக்குறைய 100 நாட்களே உள்ளன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா? எத்தகைய உடன்பாடுகளை இரண்டும் ஏற்றுக் கொள்ளும்? எத்தகைய பின் விளைவுகள் உடன் ஏற்படப் போகின்றன? ஐரோப்பாவின் மிக முக்கிய கேள்விகளாக இன்று இவை இருக்கின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகள் உலகை ஆண்டோம் என பெருமை பேசிக்கொண்டு அந்த பெருமையை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதன் வழி இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பெருமை பேசி தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள பிரிட்டன் செய்யும் இந்தக் காரியத்தை தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஒப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது.

இன்றைய நாள் வரை பிரிட்டனில் வேலை பார்க்கும் ஐரோப்பியர்களின் நிலையைப் பற்றியும் ஐரோப்பாவில் வேலை பார்க்கும் பிரிட்டன் பிரஜைகளைப் பற்றியும் சரியான வழிகாட்டுதல் இல்லை. ஸ்பெயின், பிரான்சு கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கனக்கான பிரித்தானிய பென்ஷன் எடுத்துக் கொண்டு தங்கள் முதுமையைக் கழிக்கும் மக்களைப் பற்றி தெளிவான வழிமுறைகள் வெளியிடப்படவில்லை. அயர்லாந்து வட அயர்லாந்து எல்லை, வர்த்தகம், பொருளாதார விசயங்கள் தெளிவாக்கப்படவில்லை.

இப்போதைய நிலையைப் பார்க்கும் போது No deal நிலையில்தான் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து பிரியுமோ .. அல்லது மக்கள் எழுச்சி ஏற்பட்டு #BREXIT வேண்டாம் என்று இறுதி நேரத்தில் முடிவெடுப்பார்களோ என குழப்பமே அதிகரிக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், பிரிட்டன் இன்றும் கூட நிலைமையை சரி செய்யாமல் பிரிந்து செல்வதினால் தாங்கள் பெருமை அடைவதாக நினைத்துக் கொண்டே செயல்படுவதாக குற்றம் சாற்றுகின்றார்.

ஆண்ட பரம்பரை பெருமை பேசியே பிரிட்டன் தம் மக்களை பிரச்சனைக்குள் தள்ளாமல் இருந்தால் சரி!

-சுபா

Saturday, December 15, 2018

BREXIT...தொடர்ச்சி..




கடந்தசில நாட்கள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நிறைந்த நாட்களாக முடிந்திருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்தைச் சரியாக விளக்கவில்லை என்பதே இப்போதிருக்கும் பெரிய பிரச்சனையாக அமைகின்றது.

பிரிட்டனின் BREXIT வெளியேற்றம் என்பது பிரிட்டனோடு சட்டப்பூர்வமாக இணைந்திருக்கும் அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளையும் பாதிப்பதைத் தவிர்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அயர்லாந்திடமிருந்து வட அயர்லாந்து எல்லை தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் இதன் வழி தெளிவு படுத்தப்படாமல் இருப்பது காரசாரமாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கின்றது.



பெல்ஜியம் பிரதமர் சார்ல்ஸ் மிஷேல் மிகுந்த காலதாமதமாக்கிக் கொண்டிருக்கும் பிரிட்டனிடம் இனி கலந்துரையாடலுக்கும் அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கும் இடமில்லை என நேற்று தெரிவித்திருக்கின்றார்.



ஜெர்மனி சான்சலர் அங்கேலா மெர்க்கல், இனி அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றியம் உதவவே விரும்புகின்றது என நேற்று குறிப்பிட்டிருக்கின்றார்.



இத்தனை களேபரமான சூழலில் பிரிட்டன் சரியான முடிவினை எடுக்க வேண்டும். எப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எத்தகைய சட்டங்களின் வரையறைகளின் அடிப்படையில் வெளியேறுகின்றோம் என்று தெளிவாகக் கூற வேண்டும். ஆனால் இது வரை அது நடைபெறவில்லை.



இந்த சூழலில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளேர் மற்றொரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். BREXIT பற்றிய மாற்று கருத்தை முன் வைப்பது என்பதே அது. மக்களிடம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவோம். பிரிட்டன் மீண்டும் யோசித்து இந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய முடிவு எடுக்க வாய்ப்பு தருவோம் என்பதே அது.



மக்களும் இந்த அடிப்படையில் மாற்று யோசனையை விரும்புவதாகவே தெரிகிறது.


https://www.dw.com/en/former-british-pm-blair-calls-for-second-brexit-referendum/a-46741013


-சுபா

Friday, December 14, 2018

BREXIT!


நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டனின் பிரதமர் தோல்வியடையவில்லை. ஆயினும் இன்று மேலும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு எதிரான அதிருப்தியை மேலோங்கச் செய்திருக்கின்றன.

டோய்ச்சவெல்ல பத்திரிக்கை பிரிட்டனில் #BREXITதொடர்பாக நிகழ்கின்றவற்றை வேதனையோடு காண்கின்றது. BREXIT அமலாக்கத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு தற்சமயம் ஈடுபடுவது சரியன்று... என இப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, இனி, அதாவது 2020ம் ஆண்டு தேர்வில் தலைமை பொறுப்பிற்கு தாம் போட்டியிட மாட்டேன் என உறுதி வழங்கியதால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரேசா மேக்கு கிட்டியது என அனைத்து செய்தி ஊடகங்களும் தெரிவித்தன.

BREXIT அறிக்கை எண்-50 முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என ஆளும் அரசின் அனைத்து எம்பிக்களும் சம்மதித்தால் அது நிலமையைச் சரிகட்ட ஓரளவு உதவலாம். ஆனால் நீங்களோ தலைமையை மாற்றுவதில் இந்த சமயத்தில் கவனத்தை செலுத்துகின்றீர்களே.. என இப்பத்திரிக்கை கேள்வி எழுப்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு (பிரஸ்ஸல்ஸ்-பெல்ஜியம்) இப்போது பிரதமர் தெரேசா மே சென்றிருக்கின்றார்.

BREXIT அறிவிப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பிரிட்டன் பொருளாதார பாதிப்பை நிச்சயம் சந்திக்கும் என்பதற்கு அறிகுறியாக Rolls Royce நேற்று தனது large aircraft engines தயாரிப்பு பணியை பிரிட்டனிலிருந்து ஜெர்மனிக்கு மாற்றுவதாக அறிவித்தது. இதுபோல இன்னும் சில வர்த்தக நிறுவனங்கள் தங்கள் அனுகூலம் கருதி பிரிட்டனிலிருந்து வர்த்தக உற்பத்தி நிலையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றலாம். எதுவாகினும் பாதிப்பு பிரிட்டனுக்கே!
-சுபா