Monday, April 2, 2012

2012ம் ஆண்டு.. மீண்டும் தக்காளி சோதனை




சீதோஷ்ணம் தற்சமயம் ஏறக்குரை 15 டிகிரியிலிருந்து -1 வரை சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் சில நாட்கள் அவ்வப்போது 18 டிகிரி வரை எட்டிப் பார்த்துச் செல்கின்றது. செடிகள் விற்கும் நர்செரிகளில் இப்போதே காய்கறிச் செடிகளும் வந்து விட்டன. தக்காளி, நீளமான வெள்ளரிக்காய் செடி குள்ளமான வெள்ளரிக்காய் செடி, மூலிகைச் செடிகள் போன்றவை சென்ற வாரமே சந்தைக்கு வந்து விட்டன.

நான் பொதுவாக மே மாத நடுவில் தான் காய்கறிச் செடிகள் வாங்குவது வழக்கம். பூச்செடிகள் வாங்கச் சென்ற நான் 4 தக்காளிகளும் இன்னும் சில காய்கறிச் செடிகளும் வாங்கி வந்து நட்டுவைத்திருக்கின்றேன்.

தக்காளியில் இம்முறை 2 செடிகள் சாதாரண தக்காளி வகையைச் சார்ந்தவை தேர்ந்தெடுத்தேன். அடுத்து Pflaumen Cherrytomate (Plum cherry Tomato)  San Marzano Tomate   என இரண்டு புதிய வகை தக்காளிச் செடிகளையும் வாங்கி நட்டு வைத்திருக்கின்றேன். இவை பிழைத்து காய் காய்க்கும் போது தான் எப்படி காட்சி அளிக்கப்போகின்றன என்று தெரியும்.




மலேசியாவில் வருஷம் முழுதும்தக்காளிச் செடிகளை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். வருடம் முழுதும் கிடைக்கும் நல்ல வெயில் இருப்பதால் எல்லா மாதங்களும் தக்களிச் செடி நட்டு வைக்க முடிகின்றது. இங்கே குளிர் காலத்தை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டிய நிலை உள்ளது.

மேலும் 2 வகை செடிகளை வாங்கி வந்து நட்டுள்ளேன். அவற்றைப் பற்றி அடுத்த பதிவில்...!

சுபா... என் தோட்டத்திலிருந்து!.


Sunday, April 1, 2012

மாண்டல் (பாதாம்) பூக்கள் திருவிழா

திருவிழாக்களில் தான் எத்தனை வகை?

சென்ற வாரம் என் மாமனார் இல்லத்திற்குச் சென்றிருந்த போது அருகாமையில் உள்ள சிற்றூரானா கிம்மல்டிங்கன் நகரில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவிற்குச் செல்வோம் என புறப்பட்டோம். பொதுவாக ஒரு ஸ்ட்ரீட் பார்ட்டி என்றால் அந்த ஊரின் பெயரோடு இணைந்து திருவிழாவின் பெயர் அழைக்கப்படும் இந்த சாலைத் திருவிழாவைச் சற்று வித்தியாசமாக டோய்ச் மொழியில் Gimmeldingen Mandelblütenfest என்று அழைக்கின்றனர். மாண்டல் என்று டோய்ச் மொழியில் குறிப்பிடப்படுவது பாதாம் பருப்பு.

மாண்டல் மலர்கள்

பாதாம் மரங்கள் ரைன் நதிக் கரையை ஒட்டிய அழகிய நகரமான நோய்ஸ்டாட் வைன் ஸ்ட்ராஸ பகுதியின் அருகில் இருக்கும் ஒரு சிற்றூர் தான் கிம்மல்டிங்கன். சற்று மலைப்பாங்கான நகரம். ஜெர்மனியின் மிக முக்கிய வைன் தயாரிப்பு நகரங்களில் ஒன்று நோய்ஸ்டாட். ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் இந்தத் திராட்சை தோட்டங்களைப் பார்த்து மனதைப் பறிகொடுப்பர் என்பது உண்மை. கொள்ளை அழகைத் தாங்கி நிற்கும் இந்தச் சற்று மலைப்பாங்கான பகுதியின் அருகில் தான் கிம்மல்டிங்கன் நகரம் உள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா இது. பாதாம் மரங்கள் இளம் சிவப்பு மலர்களைத் தாங்கி நிற்கும் அழகே அழகு. இவற்றைப் பார்த்துக் கொண்டே மலைகளில் ஏறிச் சென்று திருவிழாவில் விற்கப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதும் மனதைக் கவரும் அம்சங்கள். இவ்வகை சாலை திருவிழாக்களை ரசிக்கக் காத்திருக்கும் ஜெர்மானியர்களுக்கு ஜெர்மன் பியர்களை ருசிப்பதற்கும் கரி உர்ஸ்ட், சாப்பிடுவதற்கும் நண்பர்களோடு பேசி மகிழ்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.



விக்கிபீடியாவில் உள்ள செய்தியின்படி இந்த கிம்மல்டிங்கன் பாதாம் திருவிழா 1934ல் தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டதாம். இடையில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சில ஆண்டுகள் இத்திருவிழா தடைபட்டாலும் மீண்டும் இவ்விழா தொடர்ந்து நடைபெற ஆரம்பித்து இப்போது ஆண்டுத் திருவிழாவாக அமைந்துள்ளது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழா சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இங்குள்ள ப்ரோட்டஸ்டெண்ட் தேவாலாயத்தில் தொடங்கப்படும். சனிக்கிழமை முடிந்து பின்னர் ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கடைகள் போடப்பட்டு விற்பனைகள நடைபெறுவதோடு இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.

வலது புறத்தில் தேவாலயம்

மரங்களையும் பூக்களையும் ரசித்ததோடு நான் spinatknoedel என்ற ஒரு வகை உணவை வாங்கி ருசிபார்த்தேன். இது கீரையை உடைந்த ரொட்டியுடன் சேர்த்து உருண்டையாக்கி தயாரிக்கபப்ட ஒரு வகை உணவு. அத்துடன் காரட் இஞ்சி கலந்த ஒரு சூப்பும் சாப்பிட்டேன். வித்தியாசமான சுவையில் அமைந்த உணவு வகை. அதற்குப் பின்னர் டம்ப்நூடல் எனப்படும் ஒரு வகை இனிப்புப் பலகாரத்தையும் வாங்கி அனைவரும் சுவைத்தோம். இது பார்ப்பதற்கு இட்லி போல இருக்கும். இதனை வனிலா சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது வைன் சாஸுடன் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

டம்ப்நூடல்


நாட்டியமாடும் தோரணையில் ஒரு மாண்டல் மரம்


அழகான மதியம், அருமையான உணவு, உள்ளதைக் கொள்ளைக் கொழில் இயற்கைச் சூழல் - இவற்றை ரசித்து மாலையில் வீடு திரும்பினோம்.

சுபா


மாண்டல் பூக்களைப் போன்ற இனிப்புக்கள்






சுபா

Saturday, February 25, 2012

ஜெர்மனியின் புதிய அதிபர்

புதிய அதிபர் தேர்வாகிவிட்டார் சென்ற ஞாயிற்றுக் கிழமையே. செய்தி பகிர்ந்து கொள்ள எனக்குத் தான் அவகாசம் இல்லாமல் போய்விட்டது. 2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் தேர்தலில் எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஏகபோக ஆதரவுடன் இருந்த யோஆகிம் காவுக் இப்போது எல்லா கட்சிகளின் பேராதரவையும் பெற்று எந்தப் போட்டியுமின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டாக்ஸியில் இவர் ஒரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தாராம். சான்ஸலர் அங்கேலா மேர்க்கல் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்ததாம். ஆளும் சிடியுவும், எப்டிபியும் உங்களை முன் மொழிகின்றோம். அதோடு எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஆதரவும் உள்ளது. ஒரு மனதான ஒரு முடிவு. என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்டாராம். திகைத்துப் போனவர் உடனே சரி என்று சொல்லி விட்டாராம்.

தொலைபேசியில் பேசி முடித்ததும் டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னாரம் தொலைபேசி யாரிடமிருந்து வந்தது என்ன விஷயம் என்று. அதோடு நேராக போக வேண்டிய இடத்தை மாற்றி நாடாளுமன்றக் கட்டடம் போகச் சொன்னாராம்.

டாக்ஸி காரருக்கு ஒரே சந்தோஷம். சாதாரணக் குடிமகனை ஏற்றிக் கொண்டு போன நாம் நாட்டின் அதிபரை இறக்கி விடப் போகின்றோம் நாடாளுமன்ற வாசலில் என்று. தொலைகாட்சி செய்தியில் பேசிய டாக்ஸி ஓட்டுனர் மலைத்துப் போன அதே தோரணையில் பேசினார்.

ஜெர்மனியின் புதிய அதிபரைப் பற்றி தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Joachim_Gauck

@திரு. நரசய்யா - உங்களுக்காக ஒரு செய்தி.. .Joachim Gauck was born into a family of sailors in Rostock, the son of Joachim Gauck, Sr. (born 1907), and Olga Gauck (née Warremann, born 1910). His father was an experienced ship's captain and distinguished naval officer (Captain at Sea), who after World War II worked as an inspector at the Neptun Werft shipbuilding company

இவரைப் பற்றி பிறகு ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

சுபா

Saturday, February 18, 2012

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்

இந்த வாரம் இங்கே மக்கள் பேசிக் கொள்ள சில முக்கிய விஷயங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. நமக்கும் பேச விஷயம் தேவைப்படுகிறது.. .அவ்வப்போது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சில விஷயங்கள் நடந்தால் தேனே பொழுதும் சுவாரஸ்யமாகக் கழிகின்றது.. இல்லையா..


ஜெர்மன் அதிபரின் பதவி விலகல்

நேற்று காலை திடீரென்று ஜெர்மனியின் அதிபர் தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். கிறிஸ்டியான் உல்வ்.. ஆளும் ஆங்கேலா மேர்க்கலின் சிடியு கட்சியின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சாமர்த்தியமான, இளமையான, நல்ல பேச்சுத் திறமை உள்ள, அரசியல் அனுபவமும் உள்ளவர், ஒன்றரை வருட காலம் அதிபராகப் பதவி வகித்தவர். ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்பதும் இவருக்குள்ள தனிச்சிறப்பு. சட்டம் படித்த பட்டதாரி. 1975 முதல் அரசியலில் இருந்து வருபவர்.

இவ்வளவு அனுபவம் உள்ள ஒரு அதிபர் எதனால் பதவி விலக வேண்டும்.. அவரது தனிப்பட்ட சில நடவடிக்கைகள் தான் காரணமாக இருக்கின்றன.. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஒரு வீட்டிற்கு ஏதோ ஒரு வகையில் வந்த பணம் தான் முதல் பிரச்சனைக்குக் காரணமாக ஆனது. தொடர்ந்து இவரது விடுமுறை பயணங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் விலையுயர்ந்த உல்லாசச் செலவுகள்.. இப்படி கடந்த 2 மாதமாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தியாளர்கள் இவரது புனிதத்தை கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு இவரை தூங்க விடாமல் செய்து நேற்று காலை அவரே பதவி விலகுவதாகச் சொல்லி விலகிவிட்டார். இப்போது சேன்ஸலர் மேலும் ஒரு தகுதி வாய்ந்த அதிபரை முன் மொழிய வேண்டிய நிலை உள்ளது. இப்போது இது இங்கே ஒடு ஹாட் நியூஸ்.



யூரோ விஷன் பாடல் போட்டி

யூரோ விஷன் ஐரோப்பா முழுமைக்கும் இசைக் கலைனர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி. 1956லிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப்போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் ஒவ்வொரு வருடமும் போட்டியில் கலந்து கொள்ளும். 2010ல் ஜெர்மனியின் லேனா செட்டலைட் என்னும் மனம் மயங்க வைக்கும் பாடலை வழங்கி ஜெர்மனிக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்ததால் சென்ற ஆண்டு போட்டி இங்கே நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்ற அஸீர்பைஜான் இந்த ஆண்டு போட்டியை நடத்தும் நாடு. அதற்கு ஹெர்மனியிலிருந்து செல்லவிருக்கும் பாடகரையும் பாடலையும் தேர்ந்தெடுக்கும் போட்டி நிகழ்வுகள் கடந்த ஐந்தாறு வாரங்களாக நடந்து கடந்த வியாழனன்று போட்டியாளர் ரோமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். Standing Still என்ற தலைப்பிலான் பாடல்.. மிக நனறாக வந்திருக்கின்றது. போட்டியில் வெற்றி பெறத் தகுதியான பாடலா என்பது தெரியவில்லை. ஆனாலும் ரோமானின் பாடும் அழகும் குரலும் பாடல் வரிகளும் பார்ப்பவர்கள் மனதை இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது.இந்த 21 வயது இளைஞர்.. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவர்.. இங்கே பல இளம் பெண்களின் ஆண்களின் கனவு ராஜாவாக நிச்சயம் அடுத்த சில மாதங்களுக்கு ரோமான் உலா வருவார் என்பது நிச்சயம். http://www.thelocal.de/society/20120217-40805.html

2010ம் ஆண்டு லேனாவின் வெற்றி பெற்ற பாடல் யூடியூபில் இங்கே http://www.youtube.com/watch?v=UmOeISUYXuI

கார்னிவல்



கொல்ன்.. கலாச்சார மையம் என அழைக்கப்படும் இந்த நகரில் இந்த ஆண்டும் கோலாகலமாக கார்னிவல் ஆரம்பித்து விட்டது. வியாழக்கிழமை மாலையே பலர் அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு சென்று விட்டார்கள். பலர் செவ்வாய் கிழமை வரை கார்னிவல் மகிழ்ச்சியிலேயே திளைத்திருப்பர்.

நாளை மாலை அருகில் இருக்கும் ஒரு நகரத்தில் நீண்ட அணிவகுப்பு நடைபெற இருக்கின்றது. நானும் சென்று வர எண்ணியிருக்கின்றேன். மிகப் பிரமாதமான ஒரு அணிவகுப்பு அது . நிச்சயமாகப் படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

கார்னிவல் இங்கே எப்படி கொண்டாடப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்கே http://www.journeymart.com/holidays-ideas/festivals/cologne-carnival-germany.aspx சில செய்திகள் உள்ளன.

சுபா

Friday, December 16, 2011

நுர்ன்பெர்க் கிறிஸ்மஸ் மார்க்கெட்


Schutzangel (uardian angel) - பாதுகாக்கும் தேவதை


வரிசை வரிசையாக கடைகள். அவற்றில் ஒவ்வொரு வரிசையிலும் ஒரு லேப்கூகன் இனிப்பு வகைகள் விற்கும் கடை ஒன்று என்ற வகையில்.. வருகை தரும் எல்லோருக்கும் நிச்சயம் லேப் கூகன் கிடைக்கும்.



Die Weihnachtskripe - கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு முன்னராகவே இவ்வகையான ஒரு காட்சியை நகரமையத்தில் அமைத்திருப்பார்கள். பெரும்பாலான கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்மஸ் நாளில் இதனைக் காணலாம். (கிறிஸ்மஸ் சமையத்தில் ப்ரோட்டெஸ்டன் தேவாலயங்களில் சென்று இதுவரை பார்த்ததில்லை. அங்கும் இருக்கலாம்)
பைபிளில் உள்ள ஏசு நாதர் பிறக்கும் கதையை விளக்கும் காட்சியாக இது அமைந்திருக்கும்.



Die Weihnachtskripe


Kinderweihnachtsmarkt - குழந்தைகளைக் கவர்வதற்காகவே இப்பகுதி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான விளையாட்டு சாதனங்கள்.. இனிப்பு வகைகள்.. குழந்தைகள் குதூகலத்துடன் சந்தையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு.




பாருங்கள். சாண்டா போன்று உடை அணிந்து கொண்டு சாலையில் இசை விருந்தளிக்கும் ஒரு கலைஞர். அவருடைய நாய்குட்டியும் கிறிஸ்மஸ் கொண்டாடுகினறதோ..!



க்ளூ வைன் வேண்டுமா.. இங்கே செல்க!



சாண்டாக்கள் பரிசு மூட்டைகளோடு அலங்கார விளக்குகளின் வழியாக ஏறிச் செல்கிறார்களா.. என்னை மிகவும் கவரும் வடிவங்கள் இவை..



நுர்ன்பெர்க் சாஸெஜ் .. இங்கே சூடாகக் கிடைக்கும்.. சாசேஜ் பிரியர்களுக்கு.



நகர மையத்தில் விளக்குகளின் அழகில்..நுர்ன்பெர்க் நகரம்!



இங்கேயும் லேப்கூகன் கிடைக்கும்.. வாங்கிக்கலாம் வாருங்கள்.




எவ்வளவு அழகாக இந்தக் கூடாரம் அலங்கரிக்கபப்ட்டிருக்கிறது பாருங்களேன். இந்தக் கூடாரத்தில் எல்லோரும் குளிரை மறக்க சூடான க்ளூ வைன் வாங்கி அருந்தலாம்.



குதிரை சவாரி கூட இங்கே உண்டு. என்னுடைய கேமராவின் வெளிச்சம்.. குதிரைகளின் கண்களைக் கூசச் செய்து விட்டதோ.. :-)



இரண்டு கோபுரங்களுடன் தெரிவது லோரென்ஸ் கிர்ஷ (Nürnberg Lorenzkirche) தேவாலயம்



கிறிஸ்மஸ் சந்தை.. விளக்கு அலங்காரத்துடன்..



மெழுகுவர்த்திகள்.. எலி, நத்தை வடிவங்களில்..!


மெழுகுவர்த்திகள்.. யானை பூனை வடிவங்களில்..!



அலங்கார பொம்மைகள்..பல விதம்!



அலங்கார பொம்மைகள்..பல விதம்!



அலங்கார பொம்மைகள்..பல விதம்!



நிலவொளியில் நுர்ன்பெர்க்..!



கலைநயம் மிக்க Frauenkirche (பெண்கள் தேவாலயம்)
இதன் முன்னே அழகிய நீர்தொட்டி ஒன்றும் அமைந்திருக்கின்றது. இது நுர்ன்பெர்க் நகரி்ல் சுற்றுப் பயணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் முதன்மையானது.




நிலவொளியில் நுர்ன்பெர்க்..!




Frauenkirche முன்புறம் அமைந்துள்ள Schöner Brunnen.

Thursday, December 15, 2011

நுர்ன்பெர்க் லேப்கூகன் (Lebkuchen)

ஜெர்மனியில் பாயான் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம் நுர்ன்பெர்க். கடந்த சில மாதங்கள் அங்கே பணி நிமித்தமாக வாசம் செய்யும் நிலை எனக்கு. நுர்ன்பெர்க் கிறிஸ்மஸ் மார்க்கெட் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று. உலகின் பல மூலைகளிலிருந்து இங்கே இந்தச் சந்தையைப் பாக்க வருபவர்கள் பலர். நகரில் ஏறக்குறைய எல்லா தங்கும் விடுதிகளும் முழுதும் புக் செய்யபப்ட்டு விட்டன சுற்றுலா பயணிகளால். நான் தொடர்ந்து புக் செய்து வைத்திருந்ததால் எனக்கு பிரச்சனை இல்லாமல் போனது தங்கிக் கொள்ள.
சரி ..கிறிஸ்மஸ் சந்தைக்கு வருவோமே..

ஐரோப்பாவின் 10 சிறந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் இதுவும் ஒன்று. http://www.travelintelligence.com/travel-writing/europe-s-top-10-christmas-markets பார்க்க!

இந்த கிறிஸ்மஸ் சந்தையின் அழகிய காட்சிகளின் புகைப்படங்களை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த சந்தைக்கு சிறப்பு சேர்க்கும் மிக முக்கிய அம்சமான லேப்கூகன் (Lebkuchen) படங்கள் மட்டும் இன்று பதிகின்றேன்.


வாங்கி வைத்து தட்டில் வைக்கப்பட்ட லேப் கூகன்.



லேப் கூகன் ... சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



லேப் கூகன் விற்பனை செய்யும் கூடாரம்.. அலங்கரிக்கபப்ட்டிருக்கும் விதம் கண்களைக் கவர்ந்தது.


சரி லேப்கூகன் எப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு :http://germanfood.about.com/od/baking/r/nuernberger_lebkuchen.htm

நாளை முடிந்தால் சந்தையின் படங்களுடன் வருகிறேன்.

சுபா

Friday, December 9, 2011

எஸ்லிங்கனில் கிறிஸ்மஸ் மார்க்கெட்


கிறிஸ்மஸ் மார்க்கெட் ஸ்டுட்கார்ட் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள பல சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்தச் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு கிற்ஸ்மஸ் மார்க்கெட் என்று சொன்னால் அது எஸ்லிங்கன் நகரத்தின் Mittelaltermarkt (Medieval Market) ஐ த்தான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் பழக்கமான தற்கால கிறிஸ்மஸ் மார்க்கெட் முன் புறம் அமைந்திருக்க அதனைச் தாண்டி சற்று உள்ளே நுழைந்தால் வருபவர்களை வரவேற்கும் இந்தப் பழங்கால மக்களின் சந்தை. இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பகுதியில் கடைகள் அமைத்திருப்போர் அனைவருமே பழங்கால மக்களின் ஆடைகளில் வீரகள் போலவும், படை வீரர்கள் போலவும் கிராமத்து பெண்கள் போலவும் உடை அணிந்து கடைகளில் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் சுற்றிலும் உலாவருவதும் தான். இடைக்கிடையே பழங்கால மக்களின் உடைகளில் ஊர்வலமும் நடைபெறும்.

இந்த ஆண்டும் இங்கே சென்று வர மறக்கவில்லை. கிறிஸ்மஸ் மார்க்கெட் என்றலே என்னைக் கவர்வது எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட் தான்.

இங்கே கண்களுக்கும் விருந்து கிடைக்கும்; வயிற்றுக்கும் விருந்து கிடைக்கும். சூடான ரொட்டி, சீஸ் வெங்காயம் கலந்த Flamkuchen, இனிப்பு வகைகள், க்ளூ வைன் ஆகியவை எண்ணைக் கவர்ந்த உணவு வகைகள். உணவை ருசித்துக் கொண்டே சந்தையைச் சுற்றிப் பார்ப்பதும் ஒரு சுவையான அனுபவம் தானே.

சரி .. இந்த எஸ்லிங்கன் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள்.. பார்த்து ரசிப்போம்!



உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் எஸ்லிங்கன் நகரத்தின் எழில்!

கிறிஸ்மஸ் சந்தைக்குள் செல்வோமா ?

ஆ.. என்ன இது காட்டுப் பன்றிகள் கூறையின் மேலே.. ??

ஆஹா.. இவை இறைச்சி வகை உணவுகள் விற்கப்படும் கடையல்லவா.? வாருங்கள் வாருங்கள் என இறைச்சிப் பொருட்களை விரும்பும் வாடிக்கையாளர்களை அழைக்கும் காட்டுப் பன்றிகள்.

Mittelaltermarkt (பழங்கால மக்களின் சந்தை)க்குள் சென்று இங்கு என்ன இருக்கின்றது என பார்ப்போமா ?


ஆஹா.. நீண்ட குச்சியில் சுற்றப்பட்ட கோதுமை மாவு ரொட்டிகள். விட்டு வைப்பேனா.. நானும் என் கணவரும் நண்பர்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி சுவைததோம். மெண்மையான ரொட்டி.. தக்காளி கலந்து தயாரிக்கிறார்கள். சுவை.. அபாரம்.

ரொட்டி தயாரிப்பு முறை.. சமையல் கலையில் ஆர்வமுள்ளோர் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்ன அது.. தலைகளாகத் தொங்குகின்றனவே.. தவறு செய்பவர்களின் தலைகளை இப்படித்தான் வெட்டி காயவைத்து தொங்க வைப்பார்களா.. கொடுமையாக இருக்கின்றதே..!

மிருகங்களின் தோல் ஏனைய பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள். முன்னர் ஆதிவாசிகளுக்கு மிருகங்களின் தோல், மயிர், கொம்புகள் பற்கள் ஆகியவை எவ்வளவு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன..!

ஆஹா.. இங்கே Flammkuchen கிடைக்கும். வாருங்களேன் வாங்கிச் சாப்பிடலாம்.

என்ன கணமான இரும்புச் சங்கிலி கவசம்.. இதை போட்டுக் கொண்டு ஆதிவாசி மக்களின் உடையில் க்ளூ வைன் அருந்துகிறார் இந்த இளைஞர்.

இங்கே க்ளூ வைன் கிடைக்கும். பட்டை தூள், சீனி கலந்த வைன் கொதித்துக் கொண்டிருக்கின்றது.

இதோ ஆரம்பித்து விட்டது அணிவகுப்பு..இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டு வருகின்றனர் இந்த வீரர்கள்.

இவரைப் பார்த்தாலே குழந்தைகள் பயந்து விடுவார்களே..!

இவள் யார் ..மோகினியா..அல்லது பயங்கரப் பேயா..??

ஜெர்மானியர்களைக் கவர்ந்த ப்ராட் வுர்ஸ்ட். மிகுந்த ஈடுபாட்டுடன் சமையல்காரர்கள் இவற்றைத் தயாரிக்கிறார்கள்.

முன்னரெல்லாம் எங்கே கேக் பிஸ்கட் வகைகள் கிடைக்கும்? பழங்களிலும் காய்கள் விதைகளில் தானே இனிப்பு வகைகளையும் தயாரித்து வைப்பார்கள். அந்த அனுபவத்தை இங்கே பெறலாம்.



இங்கே லெபனான் வகை ஃபலாஃபல் இந்திய பெயருடனும் ஒரு புதிய வகையில் கலக்கலாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தார்கள். இதனை விட்டு வைப்போமா..? மாங்காய் சட்னி சாஸ், தயிர் கலந்து ஒன்றினை வாங்கிச் சாப்பிட்டோம். சுவை கொஞ்சம் பரவாயில்லை. கூடாரம் இருக்கும் அழகு போல உணவு அவ்வளவு சுவை இல்லை.

இரவின் இருட்டில் மங்கலான வெளிச்சத்தில் கூடாரங்களின் அழகு!

மெழுகுவர்த்தியில் எத்தனையோ வகை உண்டு. சிவபெருமான் உருவத்திலும் ஒரு மெழுகு வர்ததி நடுவே!




இங்கே பழங்கால வகை குளியல் எடுக்கலாம். காவலுக்கு ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கின்றார். வாசமான மூலிகைகள் கலந்து சூடான வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் குளிருக்கு சூடான குளியல் இதம் தானே!



காட்டுக்குள் வாழ்வதென்றால் வில் ஏந்தி அம்பு விடவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரே இந்த மனிதர்?

இங்கே கவசங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சண்டையிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமா.. வாங்கிக் கொள்ளுங்கள்.

இரவின் ஒளியில் கூடாரங்கள்..!




மேஜிக் ப்ரூம் இங்கே வாங்கிக் கொள்ளலாம்.

கோஸ்பல் குழுவினர்.. சந்தையில் இசை விருந்து வைக்கின்றனர்.