Saturday, April 23, 2005

பால் மரக் காட்டினிலே!



நீண்ட இடைவெளிக்குப் பிற்கு இடையில் சில நாள் ஓய்வு கிடைத்தது. கடந்த முறை இண்டியாவர்த்தா இணையத்தளத்தின் வழி வாங்கியிருந்த புத்தகங்களில் சிலவற்றை படிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. பால்மரக்காட்டினிலே - அகிலன் எழுதிய ஒரு நாவல். மலேசிய தோட்டப்புர வாழ்க்கை பின்னனியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு நாவல் இது.

கதை முழுவதையும் படித்து முடித்த போது மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்க்கையைக் கண்களால் பார்ப்பது போலவே இருந்தது. பல இடங்களில் தென்படும் மலாய் மொழி கலந்த மலேசியத்தமிழின் பிரயோகம், இந்த தோட்டத்திலேயே இருந்து கதை கேட்பது போன்ற எண்ணத்தை வரவழைக்கின்றது. கதைக்குக் கருவாக அவர் எடுத்திருக்கும் தோட்டத் துண்டாடல் பிரச்சனை என்பது மலேசிய தோட்டத்தொழிலாளர்களை மிக மோசமாக பாதித்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதனை கதையாகக் கொண்டு இவர் வடித்திருக்கும் பாங்கு நெஞ்சைத் தொடுகின்றது என்றே சொல்லலாம்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பினாங்குத்தீவிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தோட்டப்புற வாழ்க்கை பரிட்சயமற்ற ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளம் வயதில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பிலும், பினாங்கு பயனீட்டாளர் சங்க சார்பிலும் வார இறுதி நாட்களில் தோட்டப்புறங்களில் சமூக சேவைக்காக சென்ற நாட்களில் பினாங்குக்கு அருகாமையில் உள்ள சில தோட்டங்களுக்கு அவ்வப்போது சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இதுவரை நான் ஆழமாக கண்கானித்ததில்லை. இந்த நாவல் அந்த அனுபவத்தை அழகாக வழங்கியிருக்கின்றது.

நாவலில் வருகின்ற கதாபாத்திரங்களில் பாலன், கணேசன், கண்ணம்மா, தலைமை ஆசிரியர் சண்முகம், முருகன், வேலம்மாள், ராதா, முத்து, செல்லம்மா ஆகிய அனைத்து காதாபாத்திரங்களும் நாவலை படித்து முடித்த பின்னரும் யோசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கிராம இளைஞன் பாலன் மனதில் தோன்றும் சமூக பிரக்ஞை மனதைத் தொடுகின்றது. வாழ்க்கையையே தோட்டப்புற மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் அவனது கதாபாத்திரம் எனது மலேசிய நாட்டில் நான் சந்தித்த சிலரை எனக்கு மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வராமலில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மலேசியாவிற்குத் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்களின் வாழ்க்கை பல வகையில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது என்பதே உண்மை. 80களின் ஆரம்பத்தில் மலேசிய தேசிய பலகலைக்கழக பேராசிரியர் (தமிழர்) ஒருவரின் முயற்சியில் வெளிக்கொணரப்பட்ட செலாயாங் தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. படிப்படியாக நாடு முன்னேறிய போதிலும் இன்றளவும் கூட தமிழ் மக்கள் செம்பனை மற்றும் ரப்பர் மரத்தோட்டங்களில் (காடுகளில்) வாழும் வாழ்க்கை மனதை கசிய வைக்கும் ஒன்று. மக்களின் அறியாமை போக்கப்படும் போது தான் மாற்றம் ஏற்படும் என்பதை இந்த நாவல் நன்றாகக் காட்டுகின்றது.


ஒருவர் பிறர் நலனுக்காக யோசித்து பாடு படும் போது அவர்களை தாழ்வாக விமர்சனம் செய்து மனதை நோகடிப்பது மற்றும் தனது சுய நலனுக்காக தனது இனத்திற்கு மாறாக செயல்படுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த நாவலில் காட்டபப்டுகின்றன. இது இன்றளவும் மாறாமலிருக்கும் ஒன்று. மலேசிய தமிழ் சமூக அமைப்புக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பர்களோடு பேசும் போதெல்லாம் இப்படிப்பட்ட சில நபர்களின் செயல்களைப் பற்றியும் நாங்கள் பேசி அலசுவதுண்டு. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு என்று அடிக்கடி பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு நண்பர் குறிப்பிடுவார்.


இந்த நாவலின் முதல் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. தாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை பலர் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மலேசிய தோட்டப்புற தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.


குறிப்பு: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அலசும் ஒரு வலைப்பக்கத்திற்குச் செல்ல http://www.geocities.com/sounvx/plantation_workers.htm

1 comment:

  1. சுபா,

    சர்வதேச தமிழ் இலக்கிய இதழாக செப்டம்பரில் வெளிவரவிருக்கும் மாயினிக்காக உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரியை nila at nilacharal dot com என்ற முகவரிக்கு அனுப்புவீர்களா ப்ளீஸ்?

    ReplyDelete