Saturday, August 14, 2010

கோடையில் ஸ்டுட்கார்ட் - 3: ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா




ஸ்டுட்கார்ட் கோடை கொண்டாட்டங்களிலேயே மிக முக்கியத்துவம் பெற்றது Sommer Fest என்றழைக்கப்படும் ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா தான். இதனை கடந்த 4 ஆண்டுகளாகத் தவறாமல் சென்று பார்த்து வருகின்றேன். நான்கு நாட்களுக்கு நடக்கும் திருவிழா இது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.



எனது கணிப்பில் பாடன் உர்ட்டென்பெர்க் மானிலத்திலேயே மிக அழகான ஒரு திருவிழா இது என்று நான் சொல்வேன். கூனிக் ஸ்ட்ராஸ மற்றும் ஸ்டுட்கார்ட் அரண்மனை, மியூஸியம் சுற்றுப்புரம் அனைத்தையும் உளளடக்கி இந்த விழா நடைபெறும்.



கூம்பு போன்ற வெள்ளை நிறத்து குடில்கள் அமைத்திருப்பார்கள். அதில் உணவு விற்பனை, குளிர்பானங்கள் விறபனை போன்றவற்றோடு சிறிய அளவிலான இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏறக்குறைய ஏழெட்டு பெரிய மேடைகளில் ஸ்டுட்கார்ட் நகர பிரசித்தி பெற்ற இசைக்குழுக்களின் வாத்திய இசை மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும் இந்த நான்கு நாட்களும்.



பல்வேறு வகை உனவுகள்: குறிப்பாக வறுத்த காளான், ப்லாம் கூகன், இத்தாலிய நூடல் வகை உணவுகள், வகை வகையான உருளைக்கிழங்கு உணவு வகைகள் (ஜெர்மனியில் உருளைக்கிழங்கு தானே முக்கிய உணவு) , ஆப்பிரிகக் உணவுகள், ஜெர்மன் உணவு வகைகள், சீன, தாய்லாந்து உணவுகள் என பல்வேறு வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் வாங்கிச் சாப்பிடுவது crepes. இது பான் கேக் போன்று தோசைக்கல்லில் சுடவைத்து அதில் க்ரீம் சாக்கலேட் தடவி கொஞ்சம் வருத்த பாதம் போட்டு சூடாகத் தருவது. இதனை ஒரு முறை சாப்பிட்டு பழகி விட்டால் விட மனம் வராது. அவ்வளவு சுவையான இனிப்பு பதார்த்தம்.



இந்த முறை 5-8 ஆகஸ்டு, வியாழன் தொடங்கி ஞாயிறு வரை நிகழ்ச்சிகள் நடந்தன. மழை தூரல் இருந்தாலும் கூட்டம் குறையவில்லை.




அரண்மனையின் ஓப்பரா கட்டிடத்திற்கு முன்னர் அமைந்துள்ள செயற்கை குளம் இந்த நாளில் மிக அழகாக காட்சியளிக்கும். குளத்தில் இடைக்கிடையே நட்டு வைத்த சோலார் விளக்குகள் இரவில் பல வர்ணங்களில் ஜொலித்து வந்திருப்போர் மனதை கொள்ளைக் கொள்ளச் செய்தன. குளக்கரையில் அமர்ந்து வாத்துக்கள் அங்கும் இங்குமாக நீந்திச் செல்வதைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

கேளிக்கை, இசை, உணவு, நண்பர்கள் சந்திப்பு என பல வகையில் மகிழ்ச்சி தரும் இந்தத் திருவிழா ஸ்டுட்கார்ட் நகருக்கும் சிறப்பு சேர்க்கும் ஒன்றே!

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment