Friday, August 30, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் - 3*

யுனேஸ்கோவின் அறிக்கை, நாகரிக வளர்ச்சி பெற்ற மனித குலம் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து செல்கையில் இன்றைய ஐரோப்பிய பகுதிகளுக்கு ஏறக்குறைய 43,000 ஆண்டு வாக்கில் நகர்ந்து குடியேறியதாகக் குறிப்பிடுகின்றது. இப்படி வந்தவர்கள் குடியேறிய இடங்களுள் ஒரு பகுதியாக இந்த சுவேபியன் யூரா (Swabian Jura) பகுதி குறிப்பிடப்படுகிறது.

ஹோலெ ஃபெல்ஸ் (HohleFels) குகையின் நுழைவாயிலைக் கடந்து அருங்காட்சியகப் பகுதியையும் பார்த்த பின்னர் இரும்புப் பாலம் போல அமைக்கப்பட்ட பாலத்தில் நடந்து குகைப்பகுதிக்குள் செல்லலாம். உள்ளே நடக்கும் போது குகைச்சுவர்களிலிருந்து சொட்டு சொட்டாக நீர் துளிகள் நம்மீது விழுவதும் மழைத்தூரல் போல நல்லதோர் அனுபவம் தான்.

ஹோலெ ஃபெல்ஸ் குகையில் அகழ்வாய்வுகளின் போது கண்டெடுக்கபப்ட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கரிம சோதனை செய்யப்பட்டன. அதில் ஹோலெ ஃபெல்ஸ்10 (HohleFels10), ஹோலெ ஃபெல்ஸ்49 (HohleFels49), ஹோலெ ஃபெல்ஸ்79 (HohleFels79) என மூன்று படிமங்கள் சேகரிக்கப்பட்டு அவை சோதனைக்குட்படுத்தபப்ட்டபோது முதல் இரண்டும் ஒரே மனிதரின் உடல் என்பதும் அதன் வயது 16,000லிருந்து 14,500 வரையில் எனவும் அறியப்பட்டது. ஹோலெ ஃபெல்ஸ்79 மற்றொரு தொல் மனிதரது எலும்புகள் என்ற தகவலும் அது 15,070லிருந்து 14,270 ஆண்டுகள் பழமையானவை என்பதும் டிஎன்ஏ சோதனையின் வெளிப்பாடாக அமைந்தன.

ஹோலெ ஃபெல்ஸ் வீனஸ் போல இக்குகையில் செய்யப்பட்ட அகழாய்வில் மேலும் ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பு கிடைத்தது. மூன்று துளைகளைக் கொண்ட மிகப் பெரிய காட்டுயானையின் (Mammoth) தந்தத்தால் செய்யப்பட்ட புல்லாங்குழல் இது. கரிம ஆய்வு, ஏறக்குறைய 42,500 ஆண்டுகள் பழமையானது இந்தப் புல்லாங்குழல் எனக்கூறுகிறது. ஆச்சரியமல்லவா?

பண்டைய தொல் மனிதர்கள் குகைகளில் வாழத்தொடங்கிய பின்னர் அவர்கள் குழுக்களாக வாழப் பழகிக்கொண்டனர். காட்டு விலங்குகளைத் தாக்கிக் கொன்று தமது உணவாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். உண்ணமுடியாத பாகங்களை பல்வேறு கருவிகளாக உருவாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டனர். மாம்முத் வகை காட்டு யானையின் தந்தத்தைச் சிறிதாக்கி அதில் துளைகளையிட்டு இசைக்கருவியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படித்தான் மனித குலம் தனது வாழ்க்கை நிலையில் படிப்படியான வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டது.

மனித குலத்தின் படிப்படியான பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் தான் இன்று நாம் பயன்படுத்தும் அத்தனை கருவிகளும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. அது இன்றும் தொடர்கின்றது!











தொடரும்...

-சுபா

No comments:

Post a Comment