Thursday, August 29, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் - 2

ஜெர்மனியின் சுவேபியன் யூரா குகைகளும் பழங்கற்கால தொல் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளும் ஏராளமான தொல்லியல் அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏறக்குறைய 33,000லிருந்து 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால வாக்கில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் அகழ்வாய்வில் கிடைத்தன. முதல் மூன்று குகைகளும் இருக்கும் பகுதி ஆஹ் பள்ளத்தாக்கு என்றும், அடுத்த மூன்று குகைகளும் இருக்கும் பகுதி லோன பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. அதனை முந்தைய பதிவில் இணைக்கப்பட்டிருந்த வரைப்படத்தில் காணலாம். இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் அரும்பொருட்களில் விலங்குகளின் கொம்பினால் மற்றும் மாம்முத் எனப்படும் விலங்கின் தந்தத்தினால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க கலைவடிவங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம், பல்வேறு விலங்குகளின் வடிவம், புலி மனிதனின் உருவம், புல்லாங்குழல் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

முதலில் ஹோலென் ஃபெல்ஸ் குகையைப் பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்வோம். ஆஹ் பள்ளத்தாக்கில் இருக்கும் குகைகளில் முக்கியத்துவம் பெறும் குகை இதுவாகும். 30 மீட்டர் உயரம் உள்ள குகை இது. மிக விரிவான, ஏறக்குறைய 300 பேருக்கு மேல் உள்ளே வசிக்கக்கூடிய அளவில் அமைந்திருக்கும் குகை இது.

குகையின் முன்பகுதியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல கட்டணம் 3 யூரோ வசூலிக்கப்படுகிறது. வெள்ளை நிற சுண்ணாம்பு மலை. உட்பகுதியின் இரண்டு பக்கங்களிலும் இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் கண்ணாடி அலமாரிக்குள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இங்கு முதல் அகழாய்வுப் பணி 1870ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் 1958ம் ஆண்டு தொடங்கி இங்குத் தொடர்ச்சியாகப் பல அகழாய்வுப் பணிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவை டூபிங்கன் பல்கலைக்கழகத்தினால் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணிகளாகும்.

2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணி அரியதொரு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. ஹோலென் ஃபெல்ஸ் வீனஸ் என்ற பெண் தெய்வ வடிவம் இங்கு அப்போது கண்டெடுக்கப்பட்டது. கார்பன் டேட்டிங் சோதனைகள் இது ஏறக்குறைய 35,000லிருந்து 40,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை வெளிப்படுத்தியது. இவ்வகை பெண் உருவ வடிவம் என்பது தொல் மனிதர்கள் குழந்தை பிறப்பை பார்த்து அதிசயித்து பெண் உடலின் குழந்தை பிறப்பிற்கு காரணமாக இருக்கும் உடல் உருப்புக்களைப் பெரிதாக்கி அவற்றை வழிபடும் ஒரு சிந்தனையைக் கொண்டிருந்தமையை வெளிப்படுத்துகின்றன. குழந்தை பிறப்பதும் மனித குலப்பெருக்கம் என்பதும் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே வியப்பு, அச்சம், பக்தி, என்ற உணர்வுகளுடன் கலந்த வகையில் காணப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் ஜெர்மனியின் இம்மலைப்பகுதி மட்டுமல்ல ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் பகுதியிலும் இதே போன்ற வில்லண்டோர்ஃப் வீனஸ் என்ற ஒரு பெண் தெய்வ வடிவம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதே.

மனித இனம் நாடுகளாக, இனங்களாக, சமயங்கங்களாகப் பிரிந்து கிடந்தாலும், அடிப்படையில் ஒரே வகையான குண இயல்புகளைத் தான் கொண்டிருக்கின்றது என்பதை உலகம் முழுவதும் நடைபெறும் அகழாய்வுப் பணிகளும் அங்கு கண்டெடுக்கப்படும் அரும்பொருட்களும் நமக்கு காட்டிக் கொண்டேயிருக்கின்றன.













தொடரும்...
சுபா

No comments:

Post a Comment