Saturday, November 19, 2011

ஆமைகள் வீட்டில் வளர்ப்புப் பிராணியாக...!

பூனைகள், நாய்கள், முயல்கள், பறவைகள், மீன்கள் .. இவை பலருக்கு வளர்ப்புப் பிராணிகளாக அமைந்து விடுகின்றன. ஜெர்மனியில் குதிரைகள், கழுதைகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் சேவல், வாத்துக்கள், போன்றவை பெருமளவில் தொழில் நிமித்தம் வளர்க்கப்பட்டாலும் இவைகளையும் செல்லப்பிராணிகளாகக் கருதி அன்பு காட்டும் பலர் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்களின் செல்லப்பிராணியான ஆமைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டிலேயே இரண்டு பெரிய ஆமைகள் இருக்கின்றன. அந்த ஆமைகள் ஏப்ரல் மாத வாக்கில் இட்ட முட்டைகளில் பல பொரிக்காமல் போனதில் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம். தப்பிப் பிழைத்து 5 ஆமைக் குஞ்சுகள் உயிரோடு இருக்கின்றன. இவற்றில் மூன்றை வேறொரு நண்பருக்குக் கொடுத்து விட்டு 2 குட்டி ஆமைகளையும் பெரிய ஆமைகளையும் மட்டும் வைத்திருக்கின்றார்கள்.


நான் சென்ற சமயம் குளிர் காலத்தின் ஆரம்பம் என்பதால் ஆமைகளை ஒரு பெட்டியில் தங்க/தூங்க வைத்திருக்கின்றார்கள். அப்பெட்டியில் முதலில் நல்ல கடற்கரை மணலை போட்டு அதன் மேல் காய்ந்த சருகுகளைப் பரப்பி விடுகின்றார்கள். அதன் மேல் பெரிய ஆமையை வைத்து அதற்கு மேலே காய்ந்த சருகுகளைப் போட்டு மூடி விடுகின்றார்கள். ஒரு பெரிய ஆமைக்கு ஒரு பெரிய பெட்டி தேவைப்படுகின்றது. பெரிய ஆமையின் ஓட்டின் அளவு ஏறக்குறைய 30 செ.மீ. நீளமாக 25 செ.மீ. அகலமாக இருக்கலாம் .

ஆமைக்குஞ்சுகள் இரண்டுக்கும் ஒரு பெட்டி அமைத்திருக்கின்றார்கள்.

பெட்டிக்குள் இருக்கும் பெரிய ஆமை நீண்ட உறக்கத்தில் இருப்பதால் அதனை நான் புகைப்படம் எடுக்கவில்லை. குட்டி ஆமைகள் பெட்டிக்குள்ளே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அவற்றை வெளியே தூக்கி வந்து சற்று வெயிலில் வைத்து நகர வைத்து பார்த்தோம்.

மிக அழகான விலங்குகள் தாம் ஆமைகள்.

இங்கே ஆமைகளை வீட்டில் வளர்ப்பதற்கு உள்ளூர் நகராட்சி மையத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆமைக்கும் அதனை வளர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. புதிதாகப் பிறந்த இந்த இரண்டுக்கும் சான்றிதழ்கள் தயாரித்து விட்டனர். பதியும் போது கட்டணமும் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.


கோடைக் காலத்தில் இந்த ஆமைகளைச் சாதாரணமாகச் செடிகள் இருக்கும் இடத்தில் வைத்து வேலி போட்டு விடுகின்றனர். இதனால் ஆமைகள் வெளியே போகாமல் இருக்க உதவுகின்றது. கேரட் தக்காளி போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டுக் கொண்டு இந்தப் பகுதியிலேயே இவை சுற்றிக் கொண்டிருக்குமாம். குளிர்காலம் முழுவதும் பெட்டிக்குள்ளேயே உறங்குவதுதான் இவற்றின் வேலை. 6 மாதம் வெளி உலகம் ஆறுமாதம் நீண்ட உறக்கம் என இந்த ஆமைகள் இங்கே வாழ்கின்றன.



அன்புடன்
சுபா

No comments:

Post a Comment