Sunday, November 27, 2011

அட்வெண்ட் முதல் ஞாயிறு

கிறிஸ்மஸ் பண்டிகை இங்கு களை கட்டத் தொடங்கி விட்டது. கடந்த வியாழன் ஜெர்மனியின் நாடெங்கிலும் பல நகர்களிலும் சிறு கிராமங்களிலும் Weinachtsmarkt எனச் சொல்லப்படும் கிறிஸ்மஸ் சந்தை தொடங்கி விட்டது. சிறு கூடாரங்கள் அமைத்து அதில் கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பல வடிவங்களில் செய்து விற்பனைக்குப் பொருட்களை வைத்து விற்பது வழக்கம்.

குறிப்பாக இவ்வித சந்தைகளில் விதம் விதமான மெழுகு வர்த்திகள், தேனீர் கலவைகள், வாசனை சோப்பு, வீட்டு அலங்காரப் பொருட்கள், கிறிஸ்மஸ் சிறப்பு இனிப்புப் பண்டங்கள் ஆகியவை கிடைக்கும். சூடான க்ளூ வைன் அருந்துவது இந்த கிறிஸ்மஸ் சந்தைக்கு வந்து செல்வோர் அனைவரின் விருப்பமும் கூட.

இங்கு கிடைக்கும் மெழுகுவர்த்திகள் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக தேனில் கலந்து செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் , பழங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், பூக்கள் கலந்து தயாரிக்கப்பட்டவை, மூலிகை இலைகள் கலந்து தயாரிக்கப்பட்டவை என விதம் விதமாக் கண்களைக் கவரும் வகையில் இவை கிடைக்கும்.

தேனீர் கலவைகளில் பலவகைகளைக் வைத்திருப்பார்கள். ஆரஞ்சுடன் கலந்த தேனீர், பல்வேறு மூலிகைகள் கலந்தவை, உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்டவை, என இவற்றிலும் வித்தியாசங்களைக் காணலாம். நான் இம்முறை கிற்ஸ்மஸ் தேனீர் எனப்படும் மூலிகைகள் கலந்த தேனீர் கலவை வாங்கியிருக்கிறேன்..

அதோடு பிரத்தியேகமாக இந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் வகை வகையான தேன்களையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள், காட்டு மரங்களின் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன், லவென்டர் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் என இவற்றிலும் பலவற்றை சாப்பிட்டுப் பார்த்து நமக்குப் பிடிக்கும் தேனை வாங்கிக் கொள்ளலாம். இம்முறை கிற்ஸ்மஸ் மரத்தின் ஒருவித பூவிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒன்றினை வாங்கியிருக்கின்றேன். மென்மையான, அதே சமயம் வித்தியாசமான இனிப்புச் சுவை கொண்ட தேன் இது.

அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கூடாரங்களையும் பார்ப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். மிக அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இவற்றின் கூறை பகுதி தான் கண்கவர் காட்சியாக அமைந்து விடும்.

இந்தக் கூடாரங்கள் கிறிஸ்மஸ் நாளிற்கு இரண்டு நாள் வரை வைத்திருப்பார்கள். ஏறக்குறைய 27 அல்லது 28 நாட்கள் இக்கூடரங்களின் சொந்தக்காரர்கள் அதே இடத்தில் தங்கள் விற்பனையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

கிற்ஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் முதல் அட்வெண்ட் ஞாயிறு வாழ்த்துக்கள்.




















































அன்புடன்
சுபா

No comments:

Post a Comment