Monday, April 16, 2012

ஈஸ்டர் பண்டிகை ஏற்பாடுகள்


நண்பர்களே,

வருகின்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவ சமயத்தைப் பேணும் நண்பர்கள் புனித வெள்ளி கொண்டாட உள்ளனர். இங்கு ஜெர்மனியில் இதனை ஒட்டி எப்போதும் வெள்ளிக்கிழமையும் அதனை அடுத்து அவரும் திங்கள் கிழமையும் நாடு முழுவதும் பொது விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றது.

புனித வெள்ளிக்குத் தேவாலயத்திற்குச் சென்று மக்கள் வழிபடுவது ஒரு புறமிருக்க அந்த நான்கு நாட்கள் குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு விழாவாக கொண்டாடப்படுவதையே இங்கு நான் பார்க்கின்றேன். பொதுவாகவே கிற்ஸ்மஸ் போல இங்கே ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னரே சிறிய அங்காடிக் கடைகள் போடப்பட்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரிப்பது இக்கால கட்டத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம்.

குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த நான்கு நாட்களுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். பல வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை கடைகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருப்பதைக் காணலாம். உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு புறப்படும் போது தட்டில் ஒரு வர்ணம் பூசிய அவித்த முட்டையை வைத்துத் தருவார்கள். இதுவும் ஒரு வழக்கம். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மற்றும் கிரேக்க பழமையான உணவகங்களில் இந்த நடைமுறை வழக்கில் இருப்பதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கின்றேன்.

ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாட்டம் மிகுந்த நாள். அன்று வர்ணம் பூசிய முட்டைகளைச் செடிகளுக்கும் புதர்களுக்குள்ளும் மறைத்து வைத்து விடுவார்கள் பெற்றோர்கள். இந்த முட்டைகளை ஈஸ்டர் முயல்கள் ஒளித்து வைத்துள்ளன என்று சொல்லி அவற்றை கண்டுபிடிக்கச் சொல்வர் பெற்றோர். குழந்தைகள் இந்த முட்டைகளை தேடி கண்டு பிடித்துக் கொண்டு வர வேண்டும். முட்டை வேட்டை என்பது இந்த பண்டிகையின் போது மிக முக்கியமாக அதிலும் குழந்தைகள் இருக்கின்ற குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.

புனித வெள்ளி அன்று பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அதிலும் பழமையான கலாச்சாரத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மதிய உணவில் மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விதம் விதமான மீன் சமையல் உணவு அன்று உணவங்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்.

Frohe Ostern (ஃப்ரோ ஓஸ்டர்ன்) Happy Ester என்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நாளில் மக்கள் வாழ்த்துப் பரிமாறிக் கொள்வர். வெள்ளியிலிருந்து திங்கள் மாலை வரை இந்த வாழ்த்துப் பரிமாற்றம் இருக்கும். தேவாலயங்களில் சனிக்கிழமை மாலை பெரிய அளவில் அதிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பூஜைகள் (mass prayer) ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெறும். Ostersonntag - ஈஸ்டர் ஞாயிறு அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மதிய உணவு சேர்ந்து உண்பது சிறப்பான ஒரு வழக்கம்.

Osterhase  (ஈஸ்டர் முயல்) இந்த பண்டிகையில் சிறப்பு அங்கமாக இருக்கின்றது. அதே போல ஈஸ்டர் மரமும் ஒரு சிறப்பு அங்கமே. ஈஸ்டர் மரம் என்பது ஏதாவது ஒரு மரத்திலோ அல்லது செடியிலோ வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்ட  முட்டைகளைக் கட்டி தொங்கவிட்டு வைப்பது. ஆக இந்த இரண்டு அங்கங்களும் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக செய்யப்படுபவையாகக் கருதப்பட்டாலும் ஏறக்குரைய எல்லா இல்லங்களிலும் இந்த நாளின் போது செயற்கை (ப்ளாஸ்டிக்) முட்டைகள் கட்டி அலங்கரிக்கப்பட மரங்களைக் காண்பது சகஜம்.

இன்று மதியம் எங்கள் தெருவில் உள்ள அங்காடிக்கடைக்குச் சென்றபோது அங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு செய்யபப்ட்டிருந்த அலங்காரக் காட்சிகள் சிலவற்றை புகைபப்டம் எடுத்தேன்.  அவை இங்கே..



ஈஸ்டர் முயல்கள் பலகாரங்கள் தயாரிக்கின்றன..





ஈஸ்டர் முயல் (முழுதும் சாப்பிடக்கூடியது)



முட்டைகளை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்



ஈஸ்டர் முட்டைக்கு வர்ணம் பூசும் இரு ஈஸ்டர் முயல்கள்



ஈஸ்டர் மரங்களை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்கள்




ஈஸ்டர் வாழ்த்து சொல்லும் முட்டையை தயாரித்து விட்டன இந்த ஈஸ்டர் முயல்கள்



குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை விளையாட்டு

கதை சொல்லும் பொம்மை...!


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment