Saturday, October 25, 2003

தீபாவளி 2003

தீபாவளியை மலேசியாவில் கொண்டாடும் விதமே வேறு; இங்கு ஜெர்மனியில் கொண்டாடும் விதமும் வேறு. மலேசியாவில் தீபாவளி என்பது இந்தியர்களின் மிக முக்கிய பண்டிகை என்பதால் அதற்கு அரசாங்க விடுமுறை உண்டு. 1 மாதத்திற்கு முன்னரே ஆயத்த வேலைகளில் எல்லாரும் ஈடுபட்டு விடுவோம். புதிய உடை வாங்குவது, விதம் விதமான பலகாரங்கள் செய்வது, வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய வேலைகள். தீபாவளியன்று சீனர்கள் மலாய்க்காரர்கள் என, இன மத வேறு பாடின்றி அனைவரும் சந்தோஷமாக உண்டு களிக்கும் நாள் அது. ஆனால் இங்கு வேறுவிதம்.

அலுவல் நிமித்தமாக Basel(Swiss) செல்ல வேண்டிய கட்டாயம். தீபாவளி நாளான வெள்ளிக் கிழமை மதியம் தான் வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நான் இருக்கும் போப்லிங்கன் நகரில் கடுமையான பணி பெய்திருக்கின்றது. என் வீட்டின் கூறைகள் மற்றும் கார் மேலெல்லாம் பணி கொடிக் கிடந்தது. இந்த 5 வருடங்களில் இதுதான் எனக்கு முதல் "பணி தீபாவளி".

மாலையில் Stuttgart விநாயகர் ஆலயத்தில் கலாச்சார நிகழ்ச்சிக்கான ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். ஆக எனது அலுவலகத்தில் புதிதாக ஓராண்டு பயிற்சிக்காக சேர்ந்திருக்கும் ஜமால் என்ற நண்பரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் புறப்பட்டேன். (குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. அவர்களுக்குப் பொங்கல் தான் மிகச் சிறப்பான பண்டிகை) கலை நிகழ்ச்சியில் ஒரு கர்நாடக சங்கீத கச்சேரியும் பரத நாட்டிய நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கணினி துறையைச் சேர்ந்த பல தமிழ் நாட்டு இளைஞர்கள் இப்போது 1 அல்லது 2 வருட சிறப்பு அழைப்பின் பேரில் Bosch, Daimler போன்ற நிறுவனங்களுக்கு வருகின்றனர். இவர்களில் கர்நாடக இசையைப் பயின்றவர்களும் இருக்கின்றனர் என்பதால் இவர்களில் ஒருவரான திரு ரவி என்பவரை இந்த நிகழ்வைச் செய்து
தருமாறு கேட்டிருந்தோம். ரவி, 18 வருட சங்கீத அனுபவம் கொண்ட ஒரு இளைஞர். மிக அழகாக தமிழ் கீர்த்தனைகளைப் பாடினார். விநாயகனே வினை தீர்ப்பவனே என ஆரம்பித்து வைத்தார். இடையில் கல்யாண வசந்தாவில் ஒரு கன்னட விருத்தத்தையும் சேர்த்துக் கொண்டார். On demand, மேலும் குறையொன்றுமில்லை, சாந்தி நிலவ வேண்டும், சம்போ ஷிவ சம்போ போன்ற தமிழ் கீர்த்தனைகளையும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.ஜெர்மனியில் கர்நாடக சங்கீத நிகழ்வுகள் நடப்பது மிக மிக அரிது. வருடத்திற்கு 3 அல்லது நான்கு கச்சேரிகள் இந்த நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். ஆக இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம் தானே.
அதற்குப் பிறகு நடராஜ பதத்திற்கு சிறுவன் பிரசவன் அபிநயம் பிடித்து ஆடினான். சிறப்பாக இருந்தது அவனது நாட்டியம்.

மற்றொரு விஷேஷம் என்னவென்றால் இந்த தீபாவளி பூஜைக்கு ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமன்றி ஜெர்மானியர்களும், சிங்களத்தவர்களும், முஸ்லிம் தமிழ் நண்பர்களும் வந்திருந்ததுதான். பல்லின ஒற்றுமையைக் காட்டும் பண்டிகையாகவே இது மாறி இருந்தது. பல நாட்கள் சந்திக்காத நண்பர்களையெல்லாம் சந்தித்ததில் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க இல்லம் திரும்பும் போது மணி 12:30 ஆகிவிட்டிருந்தது.!

1 comment:

  1. அருமையான நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete