Friday, September 6, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா (Swabian Jura)- தொல்லியல் தடையங்களும் பயணமும் - 6

கீழடி தொல்லியல் களத்தை ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் தான் அடையாளம் காட்டினார். அதுபோல ஜெர்மனியின் சுவேபியன் யூரா பகுதியில் உள்ள பேரன்ஹூல (Bärenhöhle) என்ற இக்குகைப் பகுதியை முதலில் கண்டு அடையாளப்படுத்தியவர் ஒரு ஆசிரியர் தான். திரு.ஃபௌத் (Fauth) என்ற ஆசிரியர் மூலிகைகள் தேடி காடுகளுக்குள் சென்ற போது இதனைக் கண்டிருக்கின்றார். இவரின் நினைவாக ஃபௌத் குழி (Fauthsloch) என இவரது பெயருடன் குகையின் ஒரு பக்க வாயில் பகுதி அழைக்கப்படுகின்றது.
அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்தப் பகுதி அமைந்துள்ளது. ரோய்ட்லிங்கன் நகரின் மையப் பகுதியைக் கடந்து மேலும் பயணித்தால் சாலையின் இருபக்கமும் அடர்ந்த காடுகளைக் காணலாம். படிப்படியாக பயணம் மலையை நோக்கியதாக அமைகிறது. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை. கோடைகாலம் என்பதால் பசுமை கண்களுக்கு விருந்து. குகைக்கு ஏறக்குறைய 1 கிமீ தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திச் செல்ல இடம் வைத்திருக்கின்றார்கள்.

முந்தைய காலத்தில் இக்குகைக்குள் ப்ளேக் நோய் வந்தோரைத் தூக்கிப் போட்டு விடுவார்களாம். ஒருவருக்கு பிடித்த நோய் மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்பதற்காக இபப்டி நடந்ததாக ஒரு செய்தியும் உள்ளது.
பேரன்ஹூல என்பதை தமிழ்ப்படுத்தினால் கரடி குகை எனப் பொருள் கொள்ளலாம். இங்கு கரடிகள் நடமாட்டம் நிறைந்திருப்பதாலும் இக்குகைப்பகுதியில் கரடிகள் வந்து செல்வது முன்னர் இயல்பான ஒன்று என்பதாலும் இந்தக் குகைக்கு இப்பெயர் நிலைத்து விட்டது. குகைக்குள் இறந்து போன ஒரு கரடியின் முழு எலும்புக் கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பதிவுகளில் நான் விளக்கமளித்த மூன்று குகைகளைப் போலல்லாது இந்தக் குகையில் முழுமையாக ஸ்டெலெக்டைட் வடிவங்கள் நிறைந்துள்ளன. ஸ்டெலெக்டைட் என்பது ஒரு இயற்கை செயல்பாடு. சுண்ணாம்புக்கல் குகையில் நீர் கோர்த்து அது சொட்டு சொட்டாக வடியும் போது அது பல்வேறு வடிவங்களாக வடிவெடுத்து இருகிக்காட்சியளிக்கும். இந்தக் குகை முழுமைக்கும் இப்படி இயற்கையாக உருவான ஸ்டெலெக்டைட் வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.

பூமியில் தான் இருக்கின்றோமா அல்லது வேறு கோளத்தில் நடந்து கொண்டிருக்கின்றோமா என நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளே ஸ்டெலெக்டைட் வடிவங்கள் பிரமிக்க வைக்கின்றன. இதற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் ஆங்காங்கே வண்ண விளக்குகளை வைத்திருக்கின்றார்கள். அது பிரம்மாண்டமான உணர்வையும் அனுபவத்தையும் நமக்கு வழங்கத் தவறுவதில்லை.






















இந்த பேரன்ஹூல குகையைப் போல 5 மடங்கு பெரிய குகைக்கு அடுத்து சென்றேன். அதை பற்றிய விபரம் அடுத்த பதிவில் காண்போமா..?
குகைகளைத் தேடிச் செல்லும் பயணம் தொடரும். .-சுபா

No comments:

Post a Comment