Tuesday, September 3, 2019

ஜெர்மனி சுவேபியன் யூரா (Swabian Jura)- தொல்லியல் தடையங்களும் பயணமும் - 4

  ஹோலெ ஃபெல்ஸ் குகை பற்றியும் அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் மனிதர்களின் கலைப்படைப்பான இன்றைக்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட குழல் இசைக்கருவியைப் பற்றியும் 42,000 ஆண்டுகள் பழமையானது என கரிம ஆய்வுகளின் வழி அறிவிக்கப்பட்ட ஹோலெஃபெல்ஸ் வீனஸ் பற்றியும் முதல் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். எனது ஜெர்மனியின் சுவேபிய மலைத்தொடர் காடுகளில் உள்ள குகைகளைத் தேடும் பயணத்தில் அடுத்து நான் சென்ற குகைப்பகுதி கைசன்க்லோஸ்டெர்ல (Geissenklösterle) குகையாகும். அதனைப் பற்றி இப்படிவில் காணலாம்.

ஹோலெஃபெல்ஸ் (Hohle Fels) குகைக்கு ஏறக்குறை ஏழு கிமீ தூரத்தில் தான் இந்தக்குகை அமைந்திருக்கும் குன்றுப் பகுதி உள்ளது. பவ்பேரன் சிற்றூரில் இந்தக் குன்றுப் பகுதி அமைகிறது. மத்திய ஐரோப்பாவின் பழைய பாலியோலித்திக் கால பண்பாட்டுக்கு ஒரு சான்றாக அமையும் பகுதி என தொல்லியலாளர்களால் இப்பகுதி குறிப்பிடப்படுகிறது.

இப்பகுதியில் முதல் அகழாய்வு 1963ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. அதன் போது இப்பகுதி மனித குலம் 43,000 ஆண்டுகள் கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு பகுதி என்பது ஆய்வுகளின் வழி அறியப்பட்டது. 2017ம் ஆண்டு இப்பகுதி யுனேஸ்கோவினால் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது. 1963ம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் தொடர்ச்சியாக பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில அரசின் பொருளாதார ஆதரவுடன் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன. இவ்வாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களுள் பறவைவின் எலும்பால் மற்றும் மாம்முத் வகை காட்டு யானையின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட குழல்களும் (இசைக்கருவி) இடம்பெருகின்றன. இவை 42,000 மற்றும் 43,000 ஆண்டுகள் பழமையானவை.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குகைப்பகுதி அமைந்துள்ள ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம் (Baden-Württemberg) இப்பகுதியை யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதியாக (UNESCO World Heritage Site Caves and Ice Age Art in the Swabian Jura) சேர்க்க விண்ணப்பித்ததன் அடிப்படையில் இப்பகுதி இப்போது சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரைப்பகுதியிலிருந்து காணும் போது சுண்ணாம்புக்குகை நெடிய பெரும் குன்றாகக் காட்சியளிக்கின்றது. அதன் முகப்புப் பகுதி விசாலமாக அமைந்திருக்கின்றது. உள்ளே சிறு அறைகள் போல சிறு குகைகள் உள்ளன. இரவு நேரங்களில் உறங்கவும் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து மறைந்து வாழவும் கற்கால மனிதர்கள் தங்கள் உறைவிடமாக இக்குகைகளைத்தான் பயன்படுத்தினர்.

இன்றைக்கு நாம் வீடுகள் கட்டி தனித்தனி அறைகளை அமைத்து தங்கும் வசதியைப் பெருக்கிக் கொண்டோம். குகைகளைப் பார்த்த மனிதர்கள் படிப்படியாக மரங்களையும், கற்களையும் மணலையும், இரும்பையும் இணைத்துச் சேர்த்து வீடுகள் கட்டும் தொழில்நுட்பத்திற்குப் பழகிக் கொண்டனர். பண்டைய மனிதர்களுக்கு இயற்கையாக அமைந்த குகைகளே இன்றைய பல்வேறு கட்டிட கட்டுமானங்களுக்கு முன்னோடி அல்லவா... !


















தொடரும்...

-சுபா

No comments:

Post a Comment