பொதுவாகவே பண்டைய மக்கள் வாழ்விடப்பகுதியாக அடையாளம் காணப்படும் குகைகள் நமது கண்களுக்குச் சுலபமாகத் தென்படும் இடங்களில் இருக்குமென நாம் நினைத்து விடக்கூடாது. பெரும்பாலான குகைகள் காடுகளுக்குள்ளும், புதர் அடர்ந்த பகுதிகளிலும் தான் அமைந்திருக்கும். சில குகைகளை நன்கு அடையாளப் படுத்தி குறியீடுகள் அமைத்து வைத்திருப்பார்கள். ஒரு சில குகைகளோ அவற்றை தேடிச் சென்று அடைவது பெறும் சவாலாகத்தான் இருக்கும். அப்படி ஒரு குகைதான் சிர்கன்ஸ்டைன் குகை (Sirgenstein Cave).
ஆஹ் நதிக்கரையில் அமைந்துள்ள குகை இது. தொல்லியல் அறிஞர் R.R.Schmidt இப்பகுதியை 1906ம் ஆண்டில் முதல் அகழாய்வு செய்தார். நியோலித்திக், பாலியோலித்திக் கால அடையாளங்களை அவரது இப்பகுதிக்கான ஆய்வு புலப்படுத்தியது. 1910ம் ஆண்டில் அவர் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். எனது முந்தைய பதிவுகளில் நான் குறிப்பிட்ட ஏனைய முதல் இரண்டு குகைகளான ஹேலெஃபெல்ஸ் (Hohle Fels) மற்றும் கைசன்க்ளோஸ்டெர்ல (Geissenklösterle) குகைகளுக்கு அருகிலேயே இது உள்ளது.
வாகனத்தில் ஜிபிஎஸ் செட் செய்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் இக்குகை இருப்பதற்க்கான அடையாளம் ஒன்றையும் காணவில்லை. இங்கிருக்காதோ என மீண்டும் காரை எடுத்துக் கொண்டு தேடத் தொடங்கினேன். அருகில் சாலையில் மலையில் நடப்பவர்களைப் பார்த்து நிறுத்தி விசாரித்தேன். ஓரிருவர் கொடுத்ததகவலைக் கொண்டு முதலில் வந்து சேர்ந்த இடத்துக்கே வந்து பார்த்தால் காட்டில் ஒரு ஒற்றை வழிப்பாதை. அதில் நடந்து சென்றால் குகையை அடையலாம் என்று தோன்ற, நடந்து சென்றேன். சற்று தூரத்தில் அடையாளம் தெரிந்தது. குகையையும் பார்க்க முடிந்தது.
ஒரு பெரிய சுண்ணாம்புக் கற்பாறை. அதன் நுழைவாயிலில் இக்குகை அமைந்துள்ளது. முதலில் பார்க்கும் போது நமது கண்களுக்குப் பழகிப் போன குடைவரைக்கோயில்கள் தான் நினைவுக்கு வந்தன. உள்ளே குகை 6 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 40மீட்டர் நீளமும் கொண்டுள்ளது.
இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த இனக்குழுக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கும் சாத்தியங்களை சான்றுகாட்டுகின்றன. பேலியோலித்திக் காலகட்டத்தில் வாழ்ந்த மெக்டலேனியன் இனக்குழு மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதை அறிக்கை கூறுகிறது. மெக்டலேனியன் இனக்குழு மக்கள் என்போர் மேற்கு ஐரோப்பாவின் ஏறக்குறைய 17,000லிருந்து 12,000 ஆண்டுகள் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள். நாடோடிகளாக காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனித இனம் இவர்கள்.
இதற்கு அடுத்து செய்யப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் மனித இனத்தின் செயல்பாடுகள், நடமாட்டம் ஆகியவற்றைக் காட்டும் ஏறக்குறைய 35,000லிருந்து 50,000 ஆண்டுகள் காலத்திலான நியாண்டர்தால் வகை மனித இனத்தின் செயல்பாடுகளைக் காட்டுகின்றன. அவற்றுள் நியாண்டர்தால் நெருப்பு எரியூட்டும் பகுதி, எலும்புகள், கற்கருவிகள், குதிரைகளின் எச்சங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலும் இப்பகுதிக்கு வந்த மனித இனம் குளிர்காலங்களில் மட்டும் இங்கு வந்து தங்கியிருக்கலாம் என்பது R.R.Schmidt அவர்களின் ஆய்வறிக்கை கருத்தாகவும் அமைகிறது.
சுவேபியன் யூராவின் ஆஹ் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மூன்று குகைகளைப் பற்றி இதுவரை விளக்கி விட்டேன். இனி வரும் பதிவில் அடுத்த குகைகளைக் காண அழைத்துச் செல்கிறேன்.
தொடரும்...
சுபா
சுபா
No comments:
Post a Comment