Thursday, April 11, 2013

பயணங்கள் தரும் அனுபவங்கள் - இன்று


விமானத்தில் பயணிக்கும் போது எப்போதுமே நான் மிஞ்சியிருக்கும் அலுவலக வேலைகளைக் கணினியில் தொடர்வதே வேலையாகிப் போகும் போது அருகில் நடக்கும் விஷயங்களை அவ்வளவாக கவனிப்பதில்லை; என்னை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் கவன ஈர்ப்பு செய்தால் தவிர. இன்று தற்செயலாக எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்த  ஒரு பயணியிடம் என் பார்வை சென்றது. அழகிய நீல நிறத்தில் கையில் ஒரு நூல்..புத்தகத்தின் பெயர் re-think - how to think differently.

எனது பயண அனுபவத்தில் பொதுவாகவே வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை  மதியம்/மாலை மட்ரிட்டிலிருந்து மூனிக் அல்லது சூரிச் வரும் பயணிகள் ஏறக்குறைய 80-90 விழுக்காட்டினர் அலுவலக் காரியமாகப் பயணிப்பவர்களாகத்தான் இருக்கும். ஆக கையில் அலுவலகக் கணினிகளோடு வேலையைத் தொடர்பவர்கள்.. என்னைப் போல.. பலர். இந்த மனிதரும்  அலுவலகப் பயணம் செய்வது போலத்தான் உடையில் காட்சியளித்தார். re-think -  how to think differently என்று நினைத்து தனது சிந்தனையில் மாற்றம் செய்ய நினைத்திருப்பார் போலிருக்கின்றது :-)

கொஞ்ச நேரம் வாசித்துக் கொண்டிருந்தவர் பின்னர் தூங்க ஆரம்பித்து விட்டார். பயணம் முழுதும் ஏறக்குறைய தூக்கம் தான். நூலில் சில பக்கங்கள் கூட வாசித்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன். பாவம் மாற்றி வித்தியாசமாக சிந்திப்பது அவ்வளவு அலுப்பைக் கொடுத்திருக்கும் போல.:-)

விமானப் பயணங்களில் பெரும்பாலும் iPad, kindle,  வைத்து நூல்கள் வாசிப்போரே அதிகம். இது பயணத்தை ஒரு வகையில் எளிதாக்குகின்றது.

இன்னொருவரையும் தற்செயலாகப் பார்த்தபோது சூடோக்கு புதிரை செய்து கொண்டிருந்தார்.

பயணம் எடுக்கும் நேரத்தை ஏதோ ஒரு வகையில் செலவழிக்க ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கின்றோம்; அவரவருக்கு ஏற்ற, விரும்பும் வகையில். நமக்கு நமது தேர்வு சரியாக அமைந்து நமது செயல்பாடுகள் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்றதா என்பது தானே முக்கியமாகின்றது!.

சுபா

No comments:

Post a Comment