Saturday, April 20, 2013

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 4 (Kartoffelsalat)


இந்த இழையை நான் மறந்து போயிருந்தேன். இன்று ஒரு ஜெர்மானிய உணவு செய்ய நினைத்ததால் மீண்டும் இந்தப் பதிவு ஞாபகம் வரவே இங்கே ஒரு ஜெர்மானியஉணவு செய்முறையைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்தச் சமையலின் சிறப்புக்களையும் கொஞ்சம் சொல்லி வைப்பது தகுமல்லவா..

ஆசிய உணவு வகைகளில் எப்படி அரிசி மிக முக்கியப் பங்கு வகிக்கின்றதோ அதே போல ஐரோப்பிய உணவு வகைகளில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் கோதுமையும் உருளைக்கிழங்கும் மிக முக்கிய உணவுகளாக அமைந்திருக்கின்றன.

16ம் நூற்றாண்டில் ஸ்பேஷினிஷ்காரார்கள் தெற்கு அமெரிக்காவை அதிலும் பெரு நாட்டிற்குச் சென்று அங்கே தமது ஆளுமையை ஆரம்பித்த போது கண்டெடுத்த   விஷயங்களில் உருளைக்கிழங்கு முக்கிய ஒன்றாக அமைகின்றது. உருளைக் கிழங்கின் சுவையில் மயங்கிப் போன ஸ்பேனிஷ் மக்கள் பெருவை விட்டு க்கிளம்பு போது கொண்டு வந்த  உருளைக் கிழங்கை ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் நட்டு வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். முதலில் ஸ்பெயினில் பரவலாக உணவில் இடம்பெற்ற உருளைக் கிழங்கு மிக விரைவில் ஐரோப்பா முழுமைக்கும் முக்கிய உணவாக மாறி உணவில் ஆளுமையைப் பிடித்துக் கொண்டது.

அதற்கு முன்னால் ஜெர்மனியைப் பொறுத்த வரை இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்த இம்மக்கள் தங்கள் உணவில் உருளைக்கிழங்கையும் படிப்படியாக இணைத்துக் கொண்டு வெவ்வேறு வகையில் இதனை சமைக்க ஆரம்பித்தனர்.

உருளைக் கிழங்கை அவித்தும், பொறித்தும், மாவாக ஆக்கியும், சூப்பாக செய்தும், பல்வேறு வடிவங்கள் கொடுத்து தங்கள் உணவுகளில் ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த  வகையில் இங்கே மிக முக்கியமாக வருடத்தின் எல்லா காலங்களிலும் ஜெர்மானிய உணவில் இடம் பெறும் ஒன்று கார்ட்டோபல் சாலாட். (Kartoffelsalat)

இதனை வெவ்வேறு வகைகளில் தயாரிக்கலாம். ஜெர்மனியின் மானிலங்களைப்  பொறுத்த வாரியாக என்ற வகையில் இந்தச் சமையல் முறை மாறுகின்றது. நான் இருக்கும் ஷ்வாபன்லாண்டில் தயாரிக்கும் முறை என் மாமனார் இருக்கும் ரைன்லான் பால்ஸ் இடத்திலிருந்து வேறு பட்டது. பாயார்னின் வேறு விதமாகவும் எசனில் வேறு மாதிரியாகவும் என இது வடிவம் எடுக்கின்றது.

உதாரணத்திற்கு இங்குள்ள படத்தைப் பாருங்கள். எத்தனை வடிவங்களில் இவை வேறு படுகின்றன என்று இப்படங்கள் காட்டும்.

சரி நான் இன்று தயாரித்த கர்ட்டோபல் சாலாட் செய்முறையைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதற்குப் பெயர் மெடிட்டரானன் கார்ட்டோபல் சாலாட்.



செய்முறை


  • உருளைக்கிழங்கு - 8
  • கருப்பு ஆலீவ் - 10 (சிறிதாக நறுக்கியவை)
  • மஸ்டட்ர்ட் க்ரீம் - 2 கரண்டி
  • பெரிய காப்ஸிகன் சிவப்பு மிளகாய் - பாதி (பொடியாக நறுக்கியது)
  • ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி
  • வெள்ளரிக்காய் - சிறியது (சிறிதாக நறுக்கியது)
  • உலர்ந்த  தக்காளி - சிறிதாக நறுக்கியது
  • வெங்காயத் தாள்
  • உப்பு - தேவையான அளவு
  • வினிகர் - 3 கரண்டி


உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி அதனை அவித்து எடுத்துக் க் கொள்ளவும். நீரில்லாத வகையில் ஸ்டீம் செய்து அவிப்பது நன்று.



கருப்பு ஆலீவ் கொட்டைகளை நறுக்கிக் கொள்ளவும். மிளாகாய், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உலர்ந்த தக்காளி இவை அனைத்தையும் விரும்பும் வடிவில் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



வேகவைத்த உருளைக் கிழங்கை சூடாக இருக்கும் போதே ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.



ஒரு சிறிய பாத்திரத்தில் மஸ்டர் க்ரீம், உப்பு, வினிகர் ஆலீவ் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருளைக் கிழங்கு உடைந்து விடா வகையில்  கிளறவும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை இந்தக் கலவையில் சேர்க்கவும். இப்போது இந்தக் கலவையை மூடி 30 நிமிடங்கள் வைத்து உப்பு சரி பார்க்கவும். உப்பு குறைந்திருந்தால் அதனைச் சேர்க்கவும்.



இதனை தனியாக சாப்பிடுவது என்பது பொதுவாக இல்லை. ரொட்டியுடனோ, வருத்த காய்கறிகளுடனோ, இறைச்சி, மீன் வகைகளுடனோ சேர்த்து சாப்பிடுவதே வழக்கம்.

கோடை காலங்களில் க்ரில் பார்ட்டிகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெறும் ஒரு உணவு இது. செய்து பாருங்களேன்.


சுபா


No comments:

Post a Comment