Monday, February 4, 2013

இப்படி ஒரு சோதனையா ..?


இன்று மீண்டும் மட்ரிட்டுக்குப் பயணம். பொதுவாக எனது திங்கட்கிழமை பயணம் என்பது ஸ்டுட்கார்ட்டிலிருந்து சூரிச் அல்லது மூன்ஷன் பின்னர் அங்கிருந்து மட்ரிட் என்பதாக அமையும். ஆனால் இன்றைய பயணம் ஸ்டிட்கார்ட்டிலிருந்து ஜெர்மனியின் வடக்கு மானிலமான ஹம்பெர்க் சென்று பின்னர் அங்கிருந்து மட்ரிட் வருவதாக அமைந்திருந்தது. எதிர்பாராத ஒரு சம்பவம் இன்று வித்தியாசமான மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைந்து போனது.

ஸ்டுட்கார்ட்டில் பனி தூறிக் கொண்டிருந்தாலும் பயணம் பிரச்சனையில்லாமலேயே அமைந்தது. ஹாம்பெர்க்கிலிருந்து மட்ரிட் புறப்பட ஆயத்தமாகி  விமானத்தில் ஏறி இருக்கையிலும் வந்து அமர்ந்தாகி விட்டது. என் அருகில் ஒரு ஜெர்மனியில் வசிக்கும் ஷ்பானிஷ் பெண்மணியும் இருக்க இருவரும் கொஞ்சம் பேசிக் கொண்டோம்.

விமானம் புறப்பட்டு ஏறக்குறை 15 நிமிடத்தில் விமானத்தின் நிலை சரியாக இல்லாதமையைப் பயணிகள் உணர்ந்தோம்.இங்கேயும் அங்கேயும் கப்பல் கடல் அலையில் அசைவது போல என வேகமாக அசைய ஆரம்பித்து விட்டது விமானம். ஏறக்குறைய 25வது நிமிடத்தில் கேப்டன் அறிவிப்பு தருகின்றார். அதாவது விமானத்தின் கீழ்பகுதியில் பயணிகள் பைகள் வைக்கும் கார்கோ செக்‌ஷன் கதவு திறந்து கொண்டு விட்டதாகவும் அதனை இயக்கி மூட முடியாத நிலையில் இருப்பதால் விமானத்தில் காற்றின் அழுத்தம் ஏறி விட்டதாகவும் அதனால் உடனே ஹாம்பெர்க் விமான நிலையத்திற்கே திரும்பியாக வேண்டிய சூழல் இருப்பதாகவும் அறிவிப்பு வந்தது.

பயணிகளுக்கு ஆறுதல் சொல்ல வந்த வெண்மை நிறத்து விமானப் பணிப்பெண்னின் முகம் மேலும்  வெளுத்துப் போய் காட்சியளித்தது.. இது என்ன சோதனை என எனக்கு மனம் வருந்தத் தொடங்கி விட்டது, வருந்தி என்ன செய்வது? பிரச்சனையிருக்காது. கீழே சரியாக தரையிறக்கி விடுவார் விமானி என்ற நம்பிக்கை மனதில் இருந்ததால் என் கணினியில் தொடர்ந்து அலுவலக வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். வேலையில் அழுந்திப் போனால் இந்தக் கவலை மறந்து விடும் என்ற நினைப்பில்.

ஆனால் என் அருகில் இருந்த பெண்மணிக்கு மிகுந்த கோபம். வருத்தம். ஏன் முதலிலேயே சோதித்திருக்கலாமே. இப்படி செய்கின்றார்களே என வருந்தி திட்டிக் கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்தில் என் கைகளைப்ப் பிடித்துக் கொண்டு எனக்கு மிக பயமாக இருக்கின்றது. வயிறைப் பிசைகின்றது. என்று சோகமாக பேச ஆரம்பிக்க எனக்கும் அவரது பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

சரி ஹாம்பெர்க் செல்ல நிச்சயம் குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும் என்பதால் பேசிக் கொண்டே வருவோமே என கணினியை மூடிவிட்டு பேச ஆரம்பித்தோம். அவர் பணி அவர் கணவன் என எங்கள் பேச்சு ஆரம்பித்தது. ஜெர்மானிய கணவர் அவருக்கு. ஜெர்மானிய ஆண்களைப் பற்றிய பொதுக் குணங்கள் பற்றி பேச்சு என திசை திரும்பியது எங்கள் உரையாடல். தனது கணவரின்  ”குண நலன்களை”  விரிவாக உதாரணங்களுடன் விவரித்து சுவாரசியமாக  சொல்லிக் கொண்டே வந்தார். சுவாரசியமாகப் பேசிக் கொண்டே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஒரு வழியாக ஹாம்பெர்க் விமான நிலையத்தில் ஒரு no man's land பகுதியில் வந்து விமானத்தை மிக மிக மிக பத்திரமாக இறக்கினார் விமானி.


சோதனை தந்த விமானம்

அடுத்து ஒரு அறிவிப்பு விமான கேப்டனிடமிருந்து வந்தது.. டெக்னீஷியன்கள் வந்து பார்த்து செல்லும் வரை பொறுமையாக இருக்கும் உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி என்று.

என் பக்கத்து சீட் பெண்மனிக்கு கடும் போகம். “நாம் எங்கேயாவது சொன்னோமா.. புரிந்துணர்வோடு அமைதியாக இருப்போம் என்று. என்ன அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றார்களே? “ என்று சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க வில்லை. ஒரு வழியாக டெக்னீஷியன்கள் பார்த்து இதனை சரி செய்ய முடியாது என்று சொல்லி எங்களை விமான நிலைய பஸ்ஸில் ஏற்றி திரும்ப விமான நிலயத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

1  மணி நேரத்திற்குப் பின்னர் செய்தி வந்தது. Lufthansa  நிறுவனத்தின் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்து முதல் விமானத்தில் ஏற்றிய பைகளையெல்லாம் இறக்கி இந்தப் புதிய விமானத்தில் ஏற்றி எங்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது இந்தப் புதிய விமானம்.

மீண்டும் அதில் பயனித்து ஒரு வழியாக மட்ரிட் வந்து சேர்ந்தேன். அந்தப் பெண்மணியும் அன்பொழுக விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

எப்படியெல்லாம் அனுபவம் நமக்குக் கிடைக்கின்றது என நினைத்துக் கொண்டே டெக்ஸியில் வந்து அமர்ந்தேன்.

சுபா

No comments:

Post a Comment