Tuesday, July 22, 2003

வருமானம் (வரி)

உலக பொருளாதார நிலையில் மந்தம் என்பது தொடர்ந்தவாறே இருக்கின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய ஜெர்மனியின் பொருளாதாரம் மிக மிக மோசமாகிக் கொண்டிருப்பது தற்போதைய உண்மை. ஐரோப்பிய உறுப்பிய நாடுகளிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கடந்த ஆண்டின் மிகக் குறைந்த பொருளதார வளர்ச்சியை கண்டிருப்பது இங்குள்ள அரசியல் நிலையை அதிகமாகவே பாதிக்கத் தான் செய்துள்ளது..!

பல திட்டங்கள் பல மாற்றங்கள் என்று அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மிக மிக சந்தோஷமான ஒரு அறிவிப்பு என்று இப்பொழுது இந்த நாட்டில் பல மூலைகளிலும் மக்கள் பேச ஆரம்பித்திருக்கும் விஷயம் வருமான வரியைப் பற்றியதைத்தான். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் வருமான வரி என்பது எறக்குறை 50% என்பது அனைவரும் அறிந்தது. ஐரோப்பாவில் சம்பளம் அதிகம் என்றாலும் இந்த மிகக் கூடிய வருமான வரியைக் கட்டி கையில் மிஞ்சுவது வருமானத்தில் பாதியே. DM-லிருந்து EURO மாற்றம் வந்ததிலிருந்து (2001) விலை வாசி உயர்ந்து வருவதையும் மக்கள் உணர்த்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு தனி நபர் வரிமான வரியை 46% லிருந்து 10% அதாவது 36%க்கு குறைக்கும் முடிவைப்பற்றியும் அதனை 2004 ஆரம்பத்திலிருந்து அமுலுக்குக் கொண்டுவருவதைப்பற்றியும் அரசாங்கமும் அதிபர் ஷ்ரூடரும் பேச ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயமாகத் தான் இருக்கின்றது.

இது உண்மையிலேயே சாத்தியப்படுமா; சொல்வதைப்போல அடுத்த வருட ஆரம்பத்தில் அமுலுக்கு வருமா? என்ற சந்தேத்தை விட மற்றோரு சந்தேகம் மக்கள் மனதில். ஜெர்மானிய நண்பர்கள் பலரும், அதுவும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளவர்கள் இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு அவ்வளவாக திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள் தற்போது ஏறக்குறைய 18% - 27% வரையிலான வருமான வரியைத்தான் செலுத்துகின்றனர். ஆகவே இந்த மாற்றம் ஓரளவே இவர்களுக்கு உதவ முடியும். ஆனால் வருமான வரி குறைகின்ற அதே வேளையில் பொருட்களின் விலையோடு கூடுகின்ற VAT (Value added Tax) நிச்சயம் உயரும் என்பது இவர்களின் கணிப்பு. அதிலும் முக்கியமாக எண்ணெய் விலை அதிகரிப்பதை யாரும் தடுக்க முடியாது எனபதையும் மறுப்பதற்கில்லை. ஆக மக்களின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகள் மற்ற பின் விளைவுகளையும் சேர்த்துக் கொண்டே வருவதைத் தான் பார்க்க முடிகின்றது.

No comments:

Post a Comment