Saturday, October 8, 2011

ஷோன்புஹ் காட்டுக்குள் ..Schönbuch Wald

காடுகளில் நடந்து காட்டு மரங்களையும் செடிகளையும் வன விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பது என்பது நான் சில ஆண்டுகளாக வளர்த்துக் கொண்ட ஒரு பொழுது போக்கு. ஓய்வு நாள் அமைந்து விட்டால் இவ்வகையில் ஏற்பாடு செய்து நண்பர்களுடன் செல்வது வழக்கமாகி விட்டது. கடந்த 3ம் தேதி இங்கே நாடு முழுவதும் விடுமுறை நாள். எந்த வருடமும் இல்லாத வித்தியாசமாக இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே 26 டிகிரி வெயில். ஆக அருமையான நடைப்பயணத்திற்கு தகுந்த நாள் இது என்று முடிவு செய்து நான் என் நண்பர்கள் நிக்கோலா, பீட்டர், வெர்னரும்  ஒரு நாள் நடைப்பயணத்தை ஏற்பாடு செய்து சென்று வந்தோம். வெர்னரும் நிக்கோலாவும் தம்பதியர்.  வெர்னர் போலீஸ் அதிகாரி. நிக்கோலா பள்ளி ஆசிரியையாக உள்ளார். இந்த முறை நாங்கள் செல்ல தேர்ந்தெடுத்த இடம் ஷோன்புஹ் காட்டுப் பகுதி (Schönbuch Wald). இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தால் பாடுகாக்கப்படும் ஒரு பகுதி.







வாகனங்கள் செல்ல இங்கே அனுமதி இல்லை. சைக்கிள் அனுமதிக்கப்படுகின்றது. இங்கே ஆங்காங்கே சிறு குடிசைகள் அமைத்திருப்பதால் சிலர் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வந்து பிக்னிக் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எங்கள் பயணம் ஷோன்புஹ் காட்டுப் பகுதியின் தெற்கில் Schloß Roseck ( ரோஸேக் கோட்டை) யில் ஆரம்பித்து வடக்குப் பகுதி எல்லை வரைசென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது என்று ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் இடையில் நல்ல பசி ஏற்பட்டதாலும் பாதையில் எந்த உணவுக்கடைகளும் இல்லாத நிலை என்பதாலும் பாதியிலேயே முடித்துக் கொண்டு கீழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து மாலை உணவு சாப்பிட்டு திரும்பினோம்.

Schloß Roseck அரச குடும்பத்தினரின் கோட்டையாக தற்சமயம அரசாங்கத்தால் பராமரிக்கபப்டும் ஒரு முதியோர் இல்லமாக இருக்கின்றது. இந்த கோட்டைப் பகுதியைக் கடந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் பாதுகாக்கப்பட்டுள்ள வனப்பகுதியை வந்தடையலாம். மிகப் பெரிய நிலப்பரப்பு. இதனை முழுதும் சுற்றிப் பார்க்க 3 நாட்கள் தேவைப்படலாம். இந்த பகுதிக்குச் செல்ல மைத்துள்ல பாடை களில் ஆப்பிள் மரங்கள். இப்போது பழங்கள் தயாராகியிருக்கும் சமையம் என்பதால் வழில் ஆப்பிள் மரங்களையும் கனிகளையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.






காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரையில் ஏறக்குறை 25 - 28 கிலோமீட்டர் தூரம் அமைந்த நடைப்பயணம். இதமான வெயில், நல்ல காற்று, கண்களையும் உள்ளத்தையும் கொள்ளைக் கொள்ளும் இயற்கை அழகு, ஆங்காங்கே தென்படும் சிறு குடில்கள், வனத்தில் கிரீச் க்ரீச் என ஒலிக்கும் பறவைகளின் ஒலி, ஆங்காங்கே தலையை எட்டிப் பார்க்கும் சின்ன சின்ன பூக்கள், காளான்கள், காற்றில் அசைந்து ஆடும் புற்கள்.. இவை மனதை லேசாக்கும் மருந்தாக அமைந்தன.




அதிலும் நண்பர்களுடன் இணைந்து செல்வது என்பதும் சுவாரசியம் தானே. பல கதைகளைப் பேசிக் கொண்டே செல்வது தூரத்தை அறியாத வண்ணம் பயணத்தை இலகுவாக்கி விடுகின்றது.

இந்த ஷோன்புஹ் காட்டுப் பகுதியைப் பற்றிய தகவல்களை http://www.naturpark-schoenbuch.de/naturpark/index.shtml வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். அனைத்தும் டோய்ச் மொழியில் இருந்தாலும் இங்குள்ள இரண்டு விழியங்கள் மிக நன்றாக இந்தப் பாதுகாக்கப்படும் வனப்பகுதியை விளக்குவனவாக அமைந்துள்ளன. அதிலும் ஒன்று இங்குள்ள விலங்குகள், பறவைகள் பற்றிய நல்ல விளக்கமாக அமைந்துள்ளன.

அக்டோபர் 7ம் தேதிவரை இங்கு இலை உதிர்காலம் வரவில்லை. இந்த ஆண்டு நீண்ட கோடைக்காலத்தை அளித்த இயற்கைக்கு நன்றி.

மேலும் சில படங்கள்:















































அன்புடன்
சுபா

Sunday, September 25, 2011

ஜெர்மானிய சமையல்... எப்படியிருக்கும்..? - 1


பொதுவாகவே ஐரோப்பிய உணவு என நினைத்தால் முதலில் நமது மனதில் தோன்றுவது பீஸாவாகத்தான் இருக்கும். அதனை அடுத்து யோசித்தால் நமக்கு பாஸ்டா வகைகள் ஞாபகத்திற்கு வரும்.  இவை இரண்டுமே மிகப் பரவலாக உலகம் முழுதும் பிரபல்யமான உணவு வகைகளாக மாறி விட்டன. ஆனால் இவை மட்டுமே ஐரோப்பிய உணவுகளை பிரதிநிதிப்பதாக் நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஐரோப்பா என்பது எப்படி பல நாடுகள் பல மொழிகள் என அமைந்திருக்கின்றதோ அதே போல உணவு வகைகளிலும் தயாரிப்பு முறைகளிலும் வேறுபாடுகளைக் கொண்டே அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால் கோதுமை, திணை போன்ற பயிர்களைக் கொண்டு உருவாக்கப்படும் ரொட்டி மிக முக்கிய உணவாக அமைந்துள்ளது. ரொட்டி எனும் போது ஆசிய நாடுகளில் நாம் பழகிப் போன வெள்ளை கோதுமை ரொட்டி என்றில்லாமல் பல விதமான wholemeal ரொட்டிகளை இங்கு அன்றாட உணவில் முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம்.  காலை, மதியம் மாலை எல்லா உணவு வேளைகளிலும் ரொட்டி ஐரோப்பிய மக்கள் மத்தியில் முக்கிய உணவாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை உணவுக்கேற்றவாறு வெவ்வேறு விதமான ரொட்டிகளை காய்கறிகள், இறைச்சித் துண்டுகள், சீஸ் துண்டுகளோடு இணைத்து உணவு தயாரிப்பது இங்கு வழக்கம்.

இதற்கடுத்தாற்போல வருவது உருளைக் கிழங்கு. உருளைக் கிழங்கு 16ம் நூற்றாண்டு வாக்கில் தான் ஐரோப்பியர்களுக்கு அறிமுகமாகின்றது. உருளைக் கிழங்கை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். பெரு நாட்டில் தான் தோன்றியிருக்கவேண்டும் என்று கணிக்கப்படும் உருளைக்கிழங்குகள் இப்போது ஐரோப்பா முழுமைக்கும் மிக முக்கிய உணவாக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. விருந்தில் உருளைக் கிழந்தை ஏதாவது ஒரு வகையில் சமைத்து வைத்து விட்டால் வேறு ஏதும் பிடிக்காதவரக்ள் கூட உருளைக் கிழங்கை மாத்திரம் சாப்பிட்டு திருப்தி அடைந்து விடுவார்கள். சரி.. இந்த உருளைக் கிழங்கைப் பற்றியே மேலும் ஒரு நாள் நன்றாக அலசுவோம். இப்போது ஜெர்மானிய சமையலுக்குச் செல்வோம்.

ஜெர்மானிய உணவு வகைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இறைச்சி உணவுகள் - பெரும்பாலும் பன்றி இறைச்சு, மாட்டிறைச்சி, வாத்து, கோழி, கடல் உணவுகள் - இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு
2. சைவ உணவு - உருளைக் கிழங்கு, காய்கறிகள், ரொட்டி, பால், சீஸ், முட்டை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகள்
3. வேகான் உணவு வகைகள்.

பொதுவாக மிகவும் பாரம்பரிய உணவு என்று எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சமையல் தான் இங்கு முக்கிய உணவாக அமைந்துள்ளது எனலாம். குறிப்பாக வயதானவர்கள் பெரிதும் விரும்பி உண்பது பன்றி இறைச்சி சமையல் வகைகளைத்தான்.

கடந்த நூற்றாண்டில் சைவ உணவு பிரபலமடைந்திருக்க வேண்டும். இதனால் ஜெர்மனி முழுதுமே பலர் சைவ உணவு விரும்பிகளாக உள்ளனர். குறிப்பாக பெண்கள். தங்கும் விடுதிகளிலும், உணவு அங்காடிகளிலும் நிச்சயமாக ஒரு சில சைவ உணவாவது பட்டியலில் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இங்கு சைவ உணவு பிரபலம் என்று சொல்லலாம்.

வேகான் உணவை இதற்கென விற்கப்படும் தனிப்பட்ட சில கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். பெரிய நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேகான் உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன. இதனால் மிகவும் தேடி யெடுத்து ராஜம் அம்மா போல சாப்பிடும் வேகான் பிரியர்களுக்கும் ஜெர்மனியில் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை.

ஆக, இந்த சிறிய அறிமுகத்தோடு அவ்வப்போது சில சமையல் குறிப்புக்களையும் சேர்க்கலாம் என நினைக்கின்றேன். ஏதாவது ஒரு வகையில் இந்தத் தகவல்கள் உதவும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த இழையைத் தொடர்கிறேன்.

அன்புடன்
சுபா

Saturday, April 16, 2011

ஈஸ்டர் பண்டிகை ஏற்பாடுகள்

வருகின்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவ சமயத்தைப் பேணும் நண்பர்கள் புனித வெள்ளி கொண்டாட உள்ளனர். இங்கு ஜெர்மனியில் இதனை ஒட்டி எப்போதும் வெள்ளிக்கிழமையும் அதனை அடுத்து அவரும் திங்கள் கிழமையும் நாடு முழுவதும் பொது விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றது.



புனித வெள்ளிக்குத் தேவாலயத்திற்குச் சென்று மக்கள் வழிபடுவது ஒரு புறமிருக்க அந்த நான்கு நாட்கள் குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு விழாவாக கொண்டாடப்படுவதையே இங்கு நான் பார்க்கின்றேன். பொதுவாகவே கிற்ஸ்மஸ் போல இங்கே ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னரே சிறிய அங்காடிக் கடைகள் போடப்பட்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை நாம் காண முடியும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசுப் பொருட்களைச் சேகரிப்பது இக்கால கட்டத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம்.



குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த நான்கு நாட்களுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். பல வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை கடைகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருப்பதைக் காணலாம். உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு புறப்படும் போது தட்டில் ஒரு வர்ணம் பூசிய அவித்த முட்டையை வைத்துத் தருவார்கள். இதுவும் ஒரு வழக்கம். அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மற்றும் கிரேக்க பழமையான உணவகங்களில் இந்த நடைமுறை வழக்கில் இருப்பதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கின்றேன்.



ஞாயிற்றுக் கிழமை தான் கொண்டாட்டம் மிகுந்த நாள். அன்று வர்ணம் பூசிய முட்டைகளைச் செடிகளுக்கும் புதர்களுக்குள்ளும் மறைத்து வைத்து விடுவார்கள் பெற்றோர்கள். இந்த முட்டைகளை ஈஸ்டர் முயல்கள் ஒளித்து வைத்துள்ளன என்று சொல்லி அவற்றை கண்டுபிடிக்கச் சொல்வர் பெற்றோர். குழந்தைகள் இந்த முட்டைகளை தேடி கண்டு பிடித்துக் கொண்டு வர வேண்டும். முட்டை வேட்டை என்பது இந்த பண்டிகையின் போது மிக முக்கியமாக அதிலும் குழந்தைகள் இருக்கின்ற குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். புனித வெள்ளி அன்று பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அதிலும் பழமையான கலாச்சாரத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மதிய உணவில் மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விதம் விதமான மீன் சமையல் உணவு அன்று உணவங்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்.



Frohe Ostern (ஃப்ரோ ஓஸ்டர்ன்) Happy Ester என்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நாளில் மக்கள் வாழ்த்துப் பரிமாறிக் கொள்வர். வெள்ளியிலிருந்து திங்கள் மாலை வரை இந்த வாழ்த்துப் பரிமாற்றம் இருக்கும். தேவாலயங்களில் சனிக்கிழமை மாலை பெரிய அளவில் அதிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பூஜைகள் (mass prayer) ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெறும். Ostersonntag - ஈஸ்டர் ஞாயிறு அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மதிய உணவு சேர்ந்து உண்பது சிறப்பான ஒரு வழக்கம். Osterhase (ஈஸ்டர் முயல்) இந்த பண்டிகையில் சிறப்பு அங்கமாக இருக்கின்றது. அதே போல ஈஸ்டர் மரமும் ஒரு சிறப்பு அங்கமே. ஈஸ்டர் மரம் என்பது ஏதாவது ஒரு மரத்திலோ அல்லது செடியிலோ வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைக் கட்டி தொங்கவிட்டு வைப்பது. ஆக இந்த இரண்டு அங்கங்களும் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக செய்யப்படுபவையாகக் கருதப்பட்டாலும் ஏறக்குறைய எல்லா இல்லங்களிலும் இந்த நாளின் போது செயற்கை (ப்ளாஸ்டிக்) முட்டைகள் கட்டி அலங்கரிக்கப்பட மரங்களைக் காண்பது சகஜம்.



இன்று மதியம் எங்கள் தெருவில் உள்ள அங்காடிக்கடைக்குச் சென்றபோது அங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு செய்யபப்ட்டிருந்த அலங்காரக் காட்சிகள் சிலவற்றை புகைப்படங்கள் எடுத்தேன். அவை இங்கே.



முயல் ஈஸ்டர் முட்டைக்கு வர்ணம் பூசும் இரு ஈஸ்டர் முயல்கள்


ஈஸ்டர் வாழ்த்து சொல்லும் முட்டையை தயாரித்து விட்டன இந்த ஈஸ்டர் முயல்கள்

முட்டைகளை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்


ஈஸ்டர் முயல் (முழுதும் சாப்பிடக்கூடியது)



ஈஸ்டர் முயல்கள் பலகாரங்கள் தயாரிக்கின்றன..



ஈஸ்டர் மரங்களை அலங்கரிக்கும் ஈஸ்டர் முயல்கள்


ஈஸ்டர் பண்டிகைக்காகப் பிரத்தியேகமாக இனிப்பு பண்டங்கள், சாக்லேட்டுகள்

குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை விளையாட்டு கதை சொல்லும் பொம்மை...!

Friday, March 18, 2011

ஜெர்மனியில் மூடப்படும் அணு மின்சக்தி உற்பத்தி ஆலைகள்

இன்றைய காலை நிலவரப்படி 2 அணு மின்சக்தி உற்பத்தி ஆலைகள் ஜெர்மனியில் இன்று மூடப்படுகின்றன. அவை பிலிப்ஸ்பெர்ர்க்கில் உள்ள அணு மின்சக்தி ஆலை ஒன்றும் நெக்கார்வெஸ்ட்ஹைம் நகரில் உள்ள ஆலை ஒன்றுமாகும். ஜப்பானில் நிகழ்ந்த பேரிடரின் அடிப்படையில் இந்த முடிவு கடந்த சில தினங்களில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முறை அமைதி போராட்டங்கள் அணு சக்தி கழிவு அகற்றும் முறை, மற்றும் இவ்வாலைகள் தொடர்பில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



பிலிப்ஸ்பெர்ர்க்கில் உள்ள அணு மின்சக்தி ஆலை



குறிப்பு: பிலிப்ஸ்பெர்ர்க் நகரில் தான் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி க்ராவ் வசிக்கின்றார்

நெக்கார்வெஸ்ட்ஹைம் நகரில் உள்ள அணு மின்சக்தி ஆலை

ஜெர்ம்னியில் உள்ள மொத்தம் 17 அணு மின்சக்தி உற்பத்தி ஆலைகளில் 7 மிகப் பழையவை. மேலே குறிப்பிடப்பட்ட இரண்டுமே இந்த ஏழில் அடங்கும். 2017ம் ஆண்டிற்குப் பின் ஜெர்மனிக்கு அணு மின்சக்தி உற்பத்தி ஆலைகள் தேவையிருக்காது என்று குறிப்பிடப்படுகின்றது.

Saturday, November 27, 2010

குளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..!

நேற்று அதிகாலையே பனி மழை பெய்யத்தொடங்கியதால் எங்கும் பாற்கடல் போன்ற பனி. நேற்று நாள் முழுக்க கொட்டியதில் இன்றும் பனி கரையாமல் இருக்கின்றது. சில படங்கள் இங்கே இணைத்திருக்கின்றேன் .. இன்று காலை என் சிறு தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.


செடிகள் பச்சை நிறத்தை மறைத்து வெள்ளை ஆடை உடுத்தியிருக்கின்றன..



புத்தருக்கும் பனியின் புண்ணியத்தில் புதிய சிகை அலங்காரம்..:-)


குருவிகளின் வீட்டையும் பனி அலங்கரித்திருக்கும் காட்சி..!

அன்புடன்
சுபா

Tuesday, November 9, 2010

இன்றைய தேதியில் ஜெர்மனியில் நிகழ்ந்த 2 முக்கிய சரித்திர நிகழ்வுகள்

யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டமான 2ம் உலக யுத்த நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Crystal Night நிகழ்வு 9,10, தேதி நவம்பர் மாதம் 1938ல் நிகழ்ந்தது. இந்த Crystal Night ஜெர்மனி முழுமைக்குமாக ஏறக்குரை 7500 யூதர்களின் வனிகத் தலங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஏறக்குறைய 400 சினாகோக் (யூத தேவாலயங்கள்) எரித்து அழிக்கப்பட்டன. இதே நாளில் 20,000க்கும் மேற்பட்ட யூதர்கள் concentration camps களில் அடைக்கப்பட்டனர்.

1989ம் வருடம் இந்த 9ம் திகதியில் கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் மேற்கு பெர்லினுக்கும் பொதுவாக மேற்கு ஜெர்மனிக்கும் செல்ல அனுமது அளித்து இரும்புக் கதவுகளை திறந்த நாள். இன்றைய ஜெர்மன் தலைமுறை மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு நாள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைவு கூறும் பல நிகழ்வுகள் ஜெர்மனி முழுதும் இன்றைக்கு ஏற்பாடாகியிருக்கின்றன. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.

அன்புடன்
சுபா

Monday, November 8, 2010

தீப ஒளித் திருநாள் 2010

தீபாவளி நவம் 5ம் தேதி. இதற்கு அடுத்த நாளான 6ம் தேதி இங்கு ஸ்டுட்கார்ட் நகரில் தீப ஒளித் திரு நாள். என்ன ..ஸ்டுட்கார்ட்டில் தீபாவளியா என அதிசயிக்க வேண்டாம். இது Lichterfest என்றழைக்கப்படும் ஒரு விழா. அதிர்ஷ்டவசமாக நம் தீபாவளியும் ஸ்டுட்கார்ட் தீபத் திரு விழாவும் ஒன்றை அடுத்து ஒன்றாக இங்கு நிகழ்ந்தன.




ஸ்டுட்கார்ட்டில் பொதுவாகவே எப்போதும் மாலை 8 மணிக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு விடும். ஆனானல் இந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு வரை கடைகள் திறந்திருந்தன. மக்கள் கூட்டம் அதிகரித்து மாபெரும் திரு விழா போல காட்சியளித்தது ஸ்டுட்கார் நகரின் மையச் சாலையான கூனிக் ஸ்ட்ராஸா. (அரச சாலை)

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தவை இரண்டு விஷயங்கள்.
1.பல இசைக் குழுக்கள் இந்த நிகழ்வில் ஆங்காங்கே பங்கெடுத்துக் கொண்டன.
2.சாலை எங்கும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் அலங்காரம்

சாலையின் பல இடங்களில் தீபம் போன்ற வடிவத்தில் மின்சார விளக்குகள் வைக்கப்படிருந்தன. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் கவரும் ஒரு விழாவாக இந்த நிகழ்வு ஏற்பாடாயிருந்தது தான் சிறப்பு.




ஆங்காங்கே கேளிக்கை நிகழ்ச்சிகள். கடைகள் குறிப்பாக மிகப் பெரிய துணிக்கடைகள், புத்தகக் கடைகள், எல்லாம் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.



அன்று மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடாகியிருந்தன என்று குறிப்பிட்டேன் அல்லவா.



அதில்   நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் பொழுது போக்கு இசைக் குழுவின் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் ஒரே நாளில் ஏற்பாடாகியிருந்தன.


கார்ஸ்டாட் எனப்படும் வர்த்தக நிறுவனத்திலும் அதற்குப் பின்னர் காவ் ஓஃவ் என்ற வர்த்தக நிலையத்திலும் இரண்டு 30 நிமிட கலை நிகழ்ச்சியை இவர்கள் குழுபவினர் படைத்தனர்.


இவர்கள் குழுக்கள் மட்டுமல்லாது பல குழுக்கள் அன்று ஆங்காங்கே வாசித்துக் கொண்டிருந்தன. பினாங்கில் தைப்பூசத்தின் போது பக்கத்துக்கு பக்கம் பந்தல்களில் பாடல்கள் ஓட்டிக் கொண்டிருக்குமே.. அந்த ஞாபகம் தான் எனக்கு வந்தது இந்த மூலைக்கு மூலை கச்சேரியை பார்ப்பதற்கு.

பனிக் காலத்தின் குளிர் தொடங்கி விட்டாலும் கேளிக்கைகளின் எண்ணிக்கை குறைவதில்லை இங்கு. விரைவில் ஜெர்மனியில் பிரபலமான weihnachtsmarkt தொடங்கி விடும். கிருஸ்மஸ் திருநாளை முன்னிட்டு டிசம்பர் முதல் வாரமே இந்தச் சந்தை தொடங்கி விடும்.. அந்த செய்திகளுடன் மீண்டும் வருகின்றேன்.

அன்புடன்
சுபா