Saturday, October 8, 2011

ஷோன்புஹ் காட்டுக்குள் ..Schönbuch Wald

காடுகளில் நடந்து காட்டு மரங்களையும் செடிகளையும் வன விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பது என்பது நான் சில ஆண்டுகளாக வளர்த்துக் கொண்ட ஒரு பொழுது போக்கு. ஓய்வு நாள் அமைந்து விட்டால் இவ்வகையில் ஏற்பாடு செய்து நண்பர்களுடன் செல்வது வழக்கமாகி விட்டது. கடந்த 3ம் தேதி இங்கே நாடு முழுவதும் விடுமுறை நாள். எந்த வருடமும் இல்லாத வித்தியாசமாக இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே 26 டிகிரி வெயில். ஆக அருமையான நடைப்பயணத்திற்கு தகுந்த நாள் இது என்று முடிவு செய்து நான் என் நண்பர்கள் நிக்கோலா, பீட்டர், வெர்னரும்  ஒரு நாள் நடைப்பயணத்தை ஏற்பாடு செய்து சென்று வந்தோம். வெர்னரும் நிக்கோலாவும் தம்பதியர்.  வெர்னர் போலீஸ் அதிகாரி. நிக்கோலா பள்ளி ஆசிரியையாக உள்ளார். இந்த முறை நாங்கள் செல்ல தேர்ந்தெடுத்த இடம் ஷோன்புஹ் காட்டுப் பகுதி (Schönbuch Wald). இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தால் பாடுகாக்கப்படும் ஒரு பகுதி.







வாகனங்கள் செல்ல இங்கே அனுமதி இல்லை. சைக்கிள் அனுமதிக்கப்படுகின்றது. இங்கே ஆங்காங்கே சிறு குடிசைகள் அமைத்திருப்பதால் சிலர் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வந்து பிக்னிக் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எங்கள் பயணம் ஷோன்புஹ் காட்டுப் பகுதியின் தெற்கில் Schloß Roseck ( ரோஸேக் கோட்டை) யில் ஆரம்பித்து வடக்குப் பகுதி எல்லை வரைசென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது என்று ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் இடையில் நல்ல பசி ஏற்பட்டதாலும் பாதையில் எந்த உணவுக்கடைகளும் இல்லாத நிலை என்பதாலும் பாதியிலேயே முடித்துக் கொண்டு கீழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்து மாலை உணவு சாப்பிட்டு திரும்பினோம்.

Schloß Roseck அரச குடும்பத்தினரின் கோட்டையாக தற்சமயம அரசாங்கத்தால் பராமரிக்கபப்டும் ஒரு முதியோர் இல்லமாக இருக்கின்றது. இந்த கோட்டைப் பகுதியைக் கடந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் பாதுகாக்கப்பட்டுள்ள வனப்பகுதியை வந்தடையலாம். மிகப் பெரிய நிலப்பரப்பு. இதனை முழுதும் சுற்றிப் பார்க்க 3 நாட்கள் தேவைப்படலாம். இந்த பகுதிக்குச் செல்ல மைத்துள்ல பாடை களில் ஆப்பிள் மரங்கள். இப்போது பழங்கள் தயாராகியிருக்கும் சமையம் என்பதால் வழில் ஆப்பிள் மரங்களையும் கனிகளையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.






காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரையில் ஏறக்குறை 25 - 28 கிலோமீட்டர் தூரம் அமைந்த நடைப்பயணம். இதமான வெயில், நல்ல காற்று, கண்களையும் உள்ளத்தையும் கொள்ளைக் கொள்ளும் இயற்கை அழகு, ஆங்காங்கே தென்படும் சிறு குடில்கள், வனத்தில் கிரீச் க்ரீச் என ஒலிக்கும் பறவைகளின் ஒலி, ஆங்காங்கே தலையை எட்டிப் பார்க்கும் சின்ன சின்ன பூக்கள், காளான்கள், காற்றில் அசைந்து ஆடும் புற்கள்.. இவை மனதை லேசாக்கும் மருந்தாக அமைந்தன.




அதிலும் நண்பர்களுடன் இணைந்து செல்வது என்பதும் சுவாரசியம் தானே. பல கதைகளைப் பேசிக் கொண்டே செல்வது தூரத்தை அறியாத வண்ணம் பயணத்தை இலகுவாக்கி விடுகின்றது.

இந்த ஷோன்புஹ் காட்டுப் பகுதியைப் பற்றிய தகவல்களை http://www.naturpark-schoenbuch.de/naturpark/index.shtml வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். அனைத்தும் டோய்ச் மொழியில் இருந்தாலும் இங்குள்ள இரண்டு விழியங்கள் மிக நன்றாக இந்தப் பாதுகாக்கப்படும் வனப்பகுதியை விளக்குவனவாக அமைந்துள்ளன. அதிலும் ஒன்று இங்குள்ள விலங்குகள், பறவைகள் பற்றிய நல்ல விளக்கமாக அமைந்துள்ளன.

அக்டோபர் 7ம் தேதிவரை இங்கு இலை உதிர்காலம் வரவில்லை. இந்த ஆண்டு நீண்ட கோடைக்காலத்தை அளித்த இயற்கைக்கு நன்றி.

மேலும் சில படங்கள்:















































அன்புடன்
சுபா

1 comment:

  1. அருமை சுபா. வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாததே, இந்தக் காடுகள் அப்படியே இயற்கை வளத்துடன் காக்கப்படுவதன் இரகசியம் அல்லவா. சுற்றுச்சூழல் அழகாக பாதுகாக்கப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை நடந்தது உடலுக்கு மட்டுமா ஆரோக்கியம்? மனதிற்கும் தானே....... இந்த நகரச் சூழலிலிருந்து விடுபட்டு, இயற்கை அன்னையின் மடியில் தவழுவது பேரானந்தம் அல்லவா? அதுவும் நல்ல நண்பர்களுடன் என்றால் கேட்கவா வேண்டும்..... இந்த உற்சாகம் பல விதத்திலும் வரும் நாட்களின் பணியை செவ்வனே கவனிக்க உதவுமே...

    ReplyDelete