பொதுவாகவே ஐரோப்பிய உணவு என நினைத்தால் முதலில் நமது மனதில் தோன்றுவது பீஸாவாகத்தான் இருக்கும். அதனை அடுத்து யோசித்தால் நமக்கு பாஸ்டா வகைகள் ஞாபகத்திற்கு வரும். இவை இரண்டுமே மிகப் பரவலாக உலகம் முழுதும் பிரபல்யமான உணவு வகைகளாக மாறி விட்டன. ஆனால் இவை மட்டுமே ஐரோப்பிய உணவுகளை பிரதிநிதிப்பதாக் நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஐரோப்பா என்பது எப்படி பல நாடுகள் பல மொழிகள் என அமைந்திருக்கின்றதோ அதே போல உணவு வகைகளிலும் தயாரிப்பு முறைகளிலும் வேறுபாடுகளைக் கொண்டே அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால் கோதுமை, திணை போன்ற பயிர்களைக் கொண்டு உருவாக்கப்படும் ரொட்டி மிக முக்கிய உணவாக அமைந்துள்ளது. ரொட்டி எனும் போது ஆசிய நாடுகளில் நாம் பழகிப் போன வெள்ளை கோதுமை ரொட்டி என்றில்லாமல் பல விதமான wholemeal ரொட்டிகளை இங்கு அன்றாட உணவில் முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம். காலை, மதியம் மாலை எல்லா உணவு வேளைகளிலும் ரொட்டி ஐரோப்பிய மக்கள் மத்தியில் முக்கிய உணவாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை உணவுக்கேற்றவாறு வெவ்வேறு விதமான ரொட்டிகளை காய்கறிகள், இறைச்சித் துண்டுகள், சீஸ் துண்டுகளோடு இணைத்து உணவு தயாரிப்பது இங்கு வழக்கம்.
இதற்கடுத்தாற்போல வருவது உருளைக் கிழங்கு. உருளைக் கிழங்கு 16ம் நூற்றாண்டு வாக்கில் தான் ஐரோப்பியர்களுக்கு அறிமுகமாகின்றது. உருளைக் கிழங்கை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். பெரு நாட்டில் தான் தோன்றியிருக்கவேண்டும் என்று கணிக்கப்படும் உருளைக்கிழங்குகள் இப்போது ஐரோப்பா முழுமைக்கும் மிக முக்கிய உணவாக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. விருந்தில் உருளைக் கிழந்தை ஏதாவது ஒரு வகையில் சமைத்து வைத்து விட்டால் வேறு ஏதும் பிடிக்காதவரக்ள் கூட உருளைக் கிழங்கை மாத்திரம் சாப்பிட்டு திருப்தி அடைந்து விடுவார்கள். சரி.. இந்த உருளைக் கிழங்கைப் பற்றியே மேலும் ஒரு நாள் நன்றாக அலசுவோம். இப்போது ஜெர்மானிய சமையலுக்குச் செல்வோம்.
ஜெர்மானிய உணவு வகைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. இறைச்சி உணவுகள் - பெரும்பாலும் பன்றி இறைச்சு, மாட்டிறைச்சி, வாத்து, கோழி, கடல் உணவுகள் - இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு
2. சைவ உணவு - உருளைக் கிழங்கு, காய்கறிகள், ரொட்டி, பால், சீஸ், முட்டை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகள்
3. வேகான் உணவு வகைகள்.
பொதுவாக மிகவும் பாரம்பரிய உணவு என்று எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சமையல் தான் இங்கு முக்கிய உணவாக அமைந்துள்ளது எனலாம். குறிப்பாக வயதானவர்கள் பெரிதும் விரும்பி உண்பது பன்றி இறைச்சி சமையல் வகைகளைத்தான்.
கடந்த நூற்றாண்டில் சைவ உணவு பிரபலமடைந்திருக்க வேண்டும். இதனால் ஜெர்மனி முழுதுமே பலர் சைவ உணவு விரும்பிகளாக உள்ளனர். குறிப்பாக பெண்கள். தங்கும் விடுதிகளிலும், உணவு அங்காடிகளிலும் நிச்சயமாக ஒரு சில சைவ உணவாவது பட்டியலில் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இங்கு சைவ உணவு பிரபலம் என்று சொல்லலாம்.
வேகான் உணவை இதற்கென விற்கப்படும் தனிப்பட்ட சில கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். பெரிய நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேகான் உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன. இதனால் மிகவும் தேடி யெடுத்து ராஜம் அம்மா போல சாப்பிடும் வேகான் பிரியர்களுக்கும் ஜெர்மனியில் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை.
ஆக, இந்த சிறிய அறிமுகத்தோடு அவ்வப்போது சில சமையல் குறிப்புக்களையும் சேர்க்கலாம் என நினைக்கின்றேன். ஏதாவது ஒரு வகையில் இந்தத் தகவல்கள் உதவும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த இழையைத் தொடர்கிறேன்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment