உங்கள் ஊக்கம் தரும் நம்பிக்கையில் முதல் உணவு வகையைப் பற்றி சில தகவல்கள் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.
நான் வாழ்வது ஷ்வாபன் நகரத்திலே.. அதாவது பாடன் உர்ட்டெம்பெர்க் மானிலத்தின் மக்களை "ஷ்வாப", "ஷ்வேபிஷ்" என அழைப்பது வழக்கம். இந்த மானிலத்து மக்களின் உணவு எனக்கு மிகப் பரிச்சயமாகி இருப்பதால் இதன் உதாரணங்களிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
பொதுவாகவே ஷ்வாப என்றாலே அதற்கு மறைமுகமாக ஒரு கருத்தும் உண்டு.. அதாவது இந்த மக்கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள்.. பணத்தை வீணாக்க மாட்டார்கள்.. பணத்தைச் சேகரித்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் என்பது இவர்களைப் பற்றி மற்ற பகுதி ஜெர்மானியர்கள் கேலி செய்து பேசுவது வழக்கம்.
இங்கு நண்பர்கள் எனக்கு ஷ்வாபன் மக்களைப் பற்றி விளக்கிய போது ஒரு பாடலின் இரண்டு வரிகளை அறிமுகப்படுத்தினர்
Schaffe, schaffe, Häusle baue,
Und net nach de Mädle schaue.
ஒரு ஆட்டிடம் பேசுவது போல.. ஆடே.. ஆடே வீடு கட்டு.. அதோடு சும்மா அந்த இளம் பெண்ணை பார்த்துக் கொண்டிருக்காதே.. என்று கேலி செய்வது போல அமைந்த நீளமான ஒரு பாட்டு.
இந்தப் பாடலை முழுதுமாக பாருங்களேன்.. 60களில் பதிவு செய்யப்பட்ட பதிவாக இருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் இன்னமும் ஒரு சில முதியோர்களிடையே பிரபலம் தான்..!
http://www.youtube.com/watch?v=wayYus43QPw&feature=related
இதில் குறிப்பாக உணர்த்தப்படுவது ஒரு ஷ்வாப மனிதனுக்கு முக்கியமாக அமைவது ஒரு வீடு. .அவன் அருந்த பியரும் வைனும்.. மற்றவர்கள் சொகுசாக இருந்தாலும் எனக்கு எப்போதும் பணம் குறைவாகவே உள்ளது என்பதாகும்..
இவர்கள் எப்போதும் எவ்வளவு பணம் இருந்தாலும் குறைவாக இருக்கின்றது என்றே சொல்லிக் கொள்பவர்கள்..
சரி.. இன்று நாள் உங்களுக்கு எப்படி இருக்கின்றது என்று கேட்டால்.. ஹ்ம்ம்ம்.. இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.. என்று தான் பதில் வரும்.
எப்படி இருக்கின்றீர்கள்..? இன்று என்று கேட்டால்.. இருக்...கேன்.. (Ja .. es geht..) என்று தான் பதிலிருக்கும். ஆனால் மிக நன்றாக இருக்கின்றார்கள் என்று அதற்கு பொருள். :-)
சரி.. இன்றைய சமையலுக்கு வருவோமே..!
முதலில் இப்பகுதியை அலங்கரிப்பது "கெரொஸ்டெடெ மவுல்டாஷன்" (Gerostete Maultaschen) அதாவது வறுத்த மவுல்டாஷன் என்று மொழி பெயர்க்கலாம்.
மவுல்டாஷன் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டு வாக்கிலேயே புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
மவுல்டாஷ்ன் என்றாலே பொதுவாக ரொட்டி தயாரிப்பது போன்று தயாரிக்கப்பட்ட ஒரு கலவைக்குள் அறைத்துக் கலந்த பொருட்களை திணித்து ஒரு சிறு பெட்டி போன்ற அமைப்பில் சுற்றி வைத்திருப்பதாகும்.
மவுல் என்றால் விலங்கின் வாய், டாஷன் என்றால் பெட்டி என்று மொழிபெயர்க்கலாம்.
எனக்குப் பிடித்த, மிக எளிய, விரைவில் அதாவது 20 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய உணவு இது. மவுல்டாஷனின் இரண்டு வகை உண்டு.
1. பன்றி இறைச்சியுடன் மசித்து சேர்த்த காய்கறிகளைக் கொண்டது. இது தான் பாரம்பரியமானது.
2.கீரையுடன், உருளைக் கிழங்கு காரட் பீன்ஸ் மசித்து கலந்து அடைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கின்றது.
நாம் இன்று காணப்போவது சைவ மவுல்டாஷ்ன் (காய்கறிகள், மாவு மட்டுமே சேர்க்கப்பட்டது)
தேவையான பொருட்கள்:
- வெஜிடேரியன் மவுல்டாஷன் - ஒரு பாக்கெட். இதில் ஆறு துண்டுகள் இருக்கும்
- வெங்காயம் - 1 பெரியது
- காரட் - 1 பெரியது விரும்பும் வகையில் வெட்டிக் கொள்ளவும்
- சிவப்பு குடை மிளகாய் - விரும்பும் வகையில் நறுக்கிக் கொள்ளவும்.
- ப்ரோக்கோலி - விரும்பும் அளவு சேர்க்கவும் - முழுதும் அல்லது பாதி
- தக்காளி - 2 பெரியது. ஒவ்வொன்றையும் 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- கோட்டேஜ் சீஸ் - 6 கரண்டி
- ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- ஒரிகானோ - பொடி
- மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
- உப்பு - சுவைக்கேற்ப
முதலில் மவுல்டாஷனை அதன் பாக்கெட்டிலிருந்து பிரித்து ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
அதே வேளை வெங்காயம், குடை மிளகாய் காரட் ப்ரோகோலி ஆகியவற்றை விரும்பும் அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு ஃப்ரயிங் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாக வந்ததும் காரட் ப்ரோக்கோலி சேர்த்து மூடி மிதமான தணலில் வேகவைக்கவும். 3 நிமிடங்கள் வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
இப்போது இதன் கலவையை மவுல் டாஷன் தயாராகிக் கொண்டிருக்கும் பேனில் சேர்க்கவும்.
மெதுவாக மவுல்டாஷன் உடையாதவாறு கிளறி, தக்காளி சேர்த்து, உப்பும் மிளகும் ஒரிகானோ பொடியையும் தூவி மெதுவாகக் கிண்டி விடவும்.
ஐந்து நிமிடங்கள் இப்படி கலந்து தயாரானதும் கோட்டேஜ் சீஸை நீங்கள் விரும்பும் அளவிற்குச் சேர்த்து மெதுவாக இரண்டு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
கெரொஸ்டெடெ மவுல்டாஷன் இப்போது தயார். விரும்பும் வகையில் அலங்கரித்து சாப்பிட்டு மகிழவும்.
மவுல்டாஷனை முதலில் கண்டு பிடித்தவர்கள் மாவுல்ப்ரோன் (Maulbronn) மடத்தின் சாதுக்கள் என்றும் தாங்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் சைவமாக இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டிய அந்த ஒரு மாத கால கட்டத்தில் குறிப்பாக பன்றி இறைச்சியை இப்படி சுற்றி வைத்து சாப்பிடுவது இறைவனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்டு ப்டித்ததாக விக்கிபீட்டியாவில் குறிப்பு உள்ளது. இது உண்ண்மையான காரணாமா என்பது தெரியவில்லை.
ஆனால் இங்கு மடங்களின் சாதுக்கள் தாம் பெரும்பாலும் வெவ்வேறு விதமான பியர்களை உருவாக்கியவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல் உங்களுக்காக!
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment