ஜெர்மனியில் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த திருமதி கோசல்யா அவர்கள் 23.5.2022 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். ஜெர்மனியில் அவரது இலக்கியப் பங்களிப்பும் செயல்பாடுகளும் என்றும் அனைவராலும் போற்றப்படும்.
அவருக்கு எனது அஞ்சலிகள்.
அவர் கணவர் இறந்த சில நாட்களில் அலுவலகப் பணிக்காக நான் டூசல்டோர்ஃப் சென்றிருந்த போது அருகாமை ஊரில் இருந்த அவரது இல்லம் சென்றிருந்தேன். அடையாளம் தெரியாத வகையில் உடல் இளைத்து சோர்ந்திருந்தார்.
அப்போது தனியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கி அவரை தொடர்ந்து எழுதச் சொன்னேன். முன்பு போல இயல்பாக நிகழ்வுகளுக்குச் சென்று வாருங்கள் எனக் கூறினேன்.
கணவரை இழந்த வலி ஒருபுறம் - சுற்றத்தாரின் செயல்கள் ஏற்படுத்தும் வலி ஒரு புறம் என வருந்தியவருக்கு ஒரு கடிதம் ஃபேஸ்புக் வழியாக எழுதினேன் - அவரைச் சுற்றி உள்ளவர்களும் வாசிக்கவேண்டும் என்பதற்காக.
அதனை கீழே மீள்பதிவாகப் பதிகிறேன்
---
17.6.2016
கோசல்யாவிற்கு ஒரு கடிதம்!!
அன்பு கோசல்யா,
துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையில் அமைகின்றன . துன்பத்திலேயே மிக கொடுமையானது இறப்பினால் ஒருவரை இழப்பது. இறந்தவர் உணர ஏதுமில்லை; ஆனால் அவரோடு அன்போடு பழகியோருக்கு அது தொடரும் வேதனையே.
இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது, வாழ்க்கையில் ஒவ்வொரு நாள் செல்லும் போதும் பலவற்றை இழக்கின்றோம். பலரது மரணங்கள், முற்றுப்புள்ளியை விரும்பாது ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை இழுத்துப் பிடித்து, நின்று நம்மை இறப்பை பற்றி யோசிக்க வைக்கின்றது.
பிரிவோ அல்லது மரணமோ நடந்து விட்டால் - அது மீட்க முடியாதது. வாழ்க்கை அத்துடன் நின்று விடவில்லை. வாழ்க்கையில் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் செய்வதற்கு பல கடமைகள் இருக்கின்றன. அவை தொடரப்பட வேண்டும். பிரிந்தோரை நினைத்து ஒடிந்து உட்கார்ந்து வேதனைப்படுவதால் இறந்தோர் மீண்டு வரப்போவதில்லை.
நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு இந்தப்பாடத்தை உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. புதிய உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன. இருக்கும் உயிர்கள் மறைகின்றன. அதே போல சில உறவுகள் முறிகின்றன. புதிதாய் உறவுகள் முளைக்கின்றன.
மாற்றத்தை யோசித்து சரியாக வடிவமைத்து ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
உங்கள் நிலையில் இழப்பை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிக அவசியம். இணையராக இணைந்தே பல காலங்கள் பல நடவடிக்கைகள் செய்து விட்டு இன்று தனியாகச் செய்ய வேண்டுமே என யோசிக்கும் போது மனம் பதைக்கலாம். நம்மைச் சூழ்ந்திருக்கும் தமிழ் மக்கள் எப்படி வரவேற்பார்கள் என யோசிக்கலாம்.
ஏன் பொட்டு வைக்கின்றாய்?
தாலிபோடுகின்றாளே .. எனக் கேட்போரை ஒதுக்கி விட்டு மனதிற்குத் தோன்றுவதை விரும்புவதைச் செய்க!
மகிழ்ச்சியான காலத்தில் ஓடி வந்து உறவை நாடும் நண்பர்கள் இக்கட்டான இச்சூழலில் ஒரு முறையும் வந்து பார்த்து ஆறுதல் வார்த்தைச் சொல்ல முடியாதவர்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டால், அந்த நட்பின் நம்பகத்தன்மையை உணர்ந்து கொள்க!
நட்பு என்பது துன்ப காலத்தில் துணை இருக்கும் போது தான் வெளிப்பட வேண்டும். இன்ப நேரத்தில் சேர்ந்து மகிழ்ந்திருக்க மட்டுமல்ல! ஆக ,சரியான நட்பை விழிப்புடன் தேர்ந்தெடுத்து உங்கள் தமிழ்க்கல்விப்பணிகள் அனைத்தும் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர வேண்டும். இதுவே உங்கள் துணைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
நீங்கள் கொடுத்த கற்பூரவல்லிச் செடியை நட்டுள்ளேன். அது உயிர்பெர்று வளரும். கிளைவிடும் பெரிதாகும். நம்பிக்கை இருக்கின்றது!
நான் நினைக்கின்றேன்.. இங்கே ஜெர்மனியில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணி நிறையவே உள்ளது. நல்ல ஆசிரியருக்கு ஓய்வு என்பது கிடையாது அல்லவா!
நீங்கள் நல்ல தமிழ் ஆசிரியர். தமிழ்ப்பணியை மகிழ்ச்சியுடனும் நிறைந்த உற்சாகத்துடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் தொடர்க. நல்ல நட்புக்களின் ஆதரவுடன்!
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment