Saturday, May 28, 2022

135 மில்லியன் யூரோவிற்கு ஒரு கார்

 



ஏலத்தில் வருகின்ற பொருட்களைப் பற்றி கேள்விபட்டிருப்போம். அண்மையில் ஜெர்மனியில் ஏலம் விடப்பட்ட ஒரு 1955 Mercedes Coupe 300 SLR மாடல் இதுவரை ஒரு கார் ஏலத்தில் விடப்பட்ட அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துள்ளது.

135 மில்லியன் யூரோவிற்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்கின்றார். இந்தத் தொகையை நினைத்தாலே தலை சுற்றுகிறது. 🙂
இந்த வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சேகரிப்பில் இருந்தது. இதில் இரண்டு வாகனங்கள் மட்டுமே இருந்த நிலையில் அதில் ஒன்றை ஏலத்திற்கு விடுவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஏலத் தொகையில் வருகின்ற பணத்தை கொண்டு இளம் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் ஆய்வுப் பணிகள் ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக என mercedes-benz நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனை ஏலத்தில் எடுத்தவரது பெயர் பற்றி அந்த அமைப்பு எந்தத் தகவலும் வெளியிடவில்லை. அதனை ஏலத்தில் எடுத்த நபர் இந்தக் காரை சிறப்பு நிகழ்ச்சிகளில் இப்போது இருக்கும் அதே mercedes-benz அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜெர்மனியில் பணியில் நான் வசிக்கும் பாடன் ஊர்டெம்பெர்க் மாநிலத்தில்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அருங்காட்சியகம் இருக்கிறது. புகைப் படத்தில் காட்டப்படும் காரைப் போல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடக்கம் முதல் வெளியிட்ட அத்தனை வகை கார்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
-சுபா

Friday, May 27, 2022

சார்லமெக்னே விருது - 2022

பெலாரஸ் நாட்டின் எதிர்கட்சி தலைவர் சுவெட்லேனா திக்கானோஸ்கயா, ஜனநாயகச் சார்பு மனித உரிமை செயற்பாட்டாளர் வெரோனிக்கா ஸெப்காலோ, மரியா காலெனிகாவா ஆகிய மூவருக்கும் ஜெர்மனியின் மிக உயரிய விருதான சார்லமெக்னே விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுவெட்லேனா திக்கானோஸ்கயா, வெரோனிக்கா ஸெப்காலோ, இருவரும் பெலாரசில் அவர்கள் மனித உரிமை போராட்டத்திற்காக நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும், மரியா காலெனிகாவா தற்சமயம் சிறையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மரியாவிற்காக அவரது சார்பில் அவரது சகோதரி இந்தப் பரிசை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் - `நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்` என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் அறிய..
Belarusian opposition leader Svetlana Tikhanovskaya and pro-democracy activists Veronica Tsepkalo and Maria Kalesnikava have been honoured in Germany with the Charlemagne Prize.
The award, the oldest and best-known of its kind with a history going back to 1950, is awarded each year in the city of Aachen and recognises work to foster and further European unity.
Both Tikhanovskaya and Tsepkalo are living in exile, while the third laureate Maria Kalesnikava, is imprisoned in Belarus and was represented by her sister.
In an address at the ceremony on Thursday, German Foreign Minister Annalena Baerbock told the recipients: "We stand by your side... we hear you, and we have not forgotten you."

https://www.euronews.com/2022/05/26/tikhanovskaya-and-belarusian-activists-receive-europe-s-top-honour-for-services-to-unity?fbclid=IwAR3evEVtns79sr30Sd08e6qeavqldpGIgoNhiXd37rcZWc1_DCjfKb1qyPo

Wednesday, May 25, 2022

திருமதி கோசல்யா

 ஜெர்மனியில் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த திருமதி கோசல்யா அவர்கள் 23.5.2022 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். ஜெர்மனியில் அவரது இலக்கியப் பங்களிப்பும் செயல்பாடுகளும் என்றும் அனைவராலும் போற்றப்படும்.

அவருக்கு எனது அஞ்சலிகள்.
அவர் கணவர் இறந்த சில நாட்களில் அலுவலகப் பணிக்காக நான் டூசல்டோர்ஃப் சென்றிருந்த போது அருகாமை ஊரில் இருந்த அவரது இல்லம் சென்றிருந்தேன். அடையாளம் தெரியாத வகையில் உடல் இளைத்து சோர்ந்திருந்தார்.
அப்போது தனியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கி அவரை தொடர்ந்து எழுதச் சொன்னேன். முன்பு போல இயல்பாக நிகழ்வுகளுக்குச் சென்று வாருங்கள் எனக் கூறினேன்.
கணவரை இழந்த வலி ஒருபுறம் - சுற்றத்தாரின் செயல்கள் ஏற்படுத்தும் வலி ஒரு புறம் என வருந்தியவருக்கு ஒரு கடிதம் ஃபேஸ்புக் வழியாக எழுதினேன் - அவரைச் சுற்றி உள்ளவர்களும் வாசிக்கவேண்டும் என்பதற்காக.
அதனை கீழே மீள்பதிவாகப் பதிகிறேன்
---
17.6.2016
கோசல்யாவிற்கு ஒரு கடிதம்!!
அன்பு கோசல்யா,
துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையில் அமைகின்றன . துன்பத்திலேயே மிக கொடுமையானது இறப்பினால் ஒருவரை இழப்பது. இறந்தவர் உணர ஏதுமில்லை; ஆனால் அவரோடு அன்போடு பழகியோருக்கு அது தொடரும் வேதனையே.

இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது, வாழ்க்கையில் ஒவ்வொரு நாள் செல்லும் போதும் பலவற்றை இழக்கின்றோம். பலரது மரணங்கள், முற்றுப்புள்ளியை விரும்பாது ஓடிக்கொண்டிருக்கும் மனத்தை இழுத்துப் பிடித்து, நின்று நம்மை இறப்பை பற்றி யோசிக்க வைக்கின்றது.

பிரிவோ அல்லது மரணமோ நடந்து விட்டால் - அது மீட்க முடியாதது. வாழ்க்கை அத்துடன் நின்று விடவில்லை. வாழ்க்கையில் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் செய்வதற்கு பல கடமைகள் இருக்கின்றன. அவை தொடரப்பட வேண்டும். பிரிந்தோரை நினைத்து ஒடிந்து உட்கார்ந்து வேதனைப்படுவதால் இறந்தோர் மீண்டு வரப்போவதில்லை.

நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு இந்தப்பாடத்தை உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. புதிய உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன. இருக்கும் உயிர்கள் மறைகின்றன. அதே போல சில உறவுகள் முறிகின்றன. புதிதாய் உறவுகள் முளைக்கின்றன.

மாற்றத்தை யோசித்து சரியாக வடிவமைத்து ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

உங்கள் நிலையில் இழப்பை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிக அவசியம். இணையராக இணைந்தே பல காலங்கள் பல நடவடிக்கைகள் செய்து விட்டு இன்று தனியாகச் செய்ய வேண்டுமே என யோசிக்கும் போது மனம் பதைக்கலாம். நம்மைச் சூழ்ந்திருக்கும் தமிழ் மக்கள் எப்படி வரவேற்பார்கள் என யோசிக்கலாம்.

ஏன் பொட்டு வைக்கின்றாய்?
தாலிபோடுகின்றாளே .. எனக் கேட்போரை ஒதுக்கி விட்டு மனதிற்குத் தோன்றுவதை விரும்புவதைச் செய்க!

மகிழ்ச்சியான காலத்தில் ஓடி வந்து உறவை நாடும் நண்பர்கள் இக்கட்டான இச்சூழலில் ஒரு முறையும் வந்து பார்த்து ஆறுதல் வார்த்தைச் சொல்ல முடியாதவர்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டால், அந்த நட்பின் நம்பகத்தன்மையை உணர்ந்து கொள்க!
நட்பு என்பது துன்ப காலத்தில் துணை இருக்கும் போது தான் வெளிப்பட வேண்டும். இன்ப நேரத்தில் சேர்ந்து மகிழ்ந்திருக்க மட்டுமல்ல! ஆக ,சரியான நட்பை விழிப்புடன் தேர்ந்தெடுத்து உங்கள் தமிழ்க்கல்விப்பணிகள் அனைத்தும் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர வேண்டும். இதுவே உங்கள் துணைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
நீங்கள் கொடுத்த கற்பூரவல்லிச் செடியை நட்டுள்ளேன். அது உயிர்பெர்று வளரும். கிளைவிடும் பெரிதாகும். நம்பிக்கை இருக்கின்றது!
நான் நினைக்கின்றேன்.. இங்கே ஜெர்மனியில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணி நிறையவே உள்ளது. நல்ல ஆசிரியருக்கு ஓய்வு என்பது கிடையாது அல்லவா!
நீங்கள் நல்ல தமிழ் ஆசிரியர். தமிழ்ப்பணியை மகிழ்ச்சியுடனும் நிறைந்த உற்சாகத்துடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் தொடர்க. நல்ல நட்புக்களின் ஆதரவுடன்!



அன்புடன்
சுபா

Tuesday, May 24, 2022

ஜெர்மனியில் அணு ஆலைகள் மூடப்படும் நிலை


தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷிய-உக்ரேன் போரினால் ஐரோப்பாவில் எரிவாயு சக்தி பற்றாக்குறை நிலவுகின்றது என்பதை அறிந்திருப்போம். ஜெர்மனியின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்காகப் பொதுமக்கள் நலன் சார்ந்த சில திட்டங்களை ஜெர்மனி அரசு திட்டமிட்டு வருகின்றது. அந்த வகையில் 3 மாதங்களுக்கு வரி குறைக்கப்பட்ட பெட்ரோல்-டீசல், 3 மாதங்களுக்குக் குறைக்கப்பட்ட பொதுப்பயணக் கட்டணம் என்பவை அவற்றுள் சில.
எரிவாயு சக்தி பற்றாக்குறை எழுந்த போதும் கூட அணு ஆலைகளை முடக்கும் ஜெர்மனியின் திட்டம் தொடர்கின்றது. மாற்று சக்தியாக காற்று, நீர் வழி மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் செயல்பாடுகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேலும் 3 அணு ஆலைகள் ஜெர்மனியில் திட்டமிட்டபடியே மூடப்பட்டன. அவை Brokdorf, Schleswig-Holstein மாநிலத்தில், Grohnde, Lower Saxony மாநிலத்தில், மற்றும் Unit C, Gundremmingen, Bavaria மாநிலத்தில்.
மேலும் 3 அணு ஆலைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளன. அதில் ஒன்று நான் வாழும் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் இருக்கின்றது. இவை மூன்றுமே இவ்வாண்டு இறுதியில் மூடப்படும்.
ஃபுக்குஷிமா அணு ஆலை வெடிப்பு ஏற்படுத்திய பேரிடருக்கு அடுத்து அன்றைய ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி ஜெர்மனியில் உள்ள அணு ஆலைகள் 2022 வாக்கில் முழுவதும் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
2022 இறுதி அணு ஆலைகள் அற்ற ஐரோப்பிய நாடாக ஜெர்மனி புதிய பரிணாமம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
-சுபா
24.5.2022
https://www.iamexpat.de/expat-info/german-expat-news/germany-closes-three-its-last-six-remaining-nuclear-power-plants?fbclid=IwAR0EdzWZWLPk_qJdWuUFCJlaeSpWFePsBC3G9TIdN9vTyJ2l1h2x4jk5Vkk

Wednesday, July 28, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 2


வீடுகளைக் கட்டி குடியிருப்புகளை உருவாக்க எப்போது மனித குலம் தனது முயற்சியைத் தொடங்கியது என நம் எல்லோருக்குமே எப்போதாவது மனதில் கேள்விகள் எழுந்திருக்கும், அல்லவா?
கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் வெளிப்படுத்திய, நாம் அறிந்த தமிழ்நாட்டு அகழாய்வுகள் போல உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளையும் தெரிந்து கொள்வோமே. இது ஒப்பாய்வுகளுக்கு உதவும் என்பதோடு பொதுவாகவே ஹோமோ சேப்பியன்களான இந்த மனித குலத்தின் வாழ்விடங்கள் உருவாக்கல் என்ற பொது குணத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் அல்லவா?
ஜெர்மனியின் உண்டெரூல்டிங்கன் பகுதியில் ஏறக்குறைய பொ.ஆ.மு 3917 ஆண்டு காலகட்டம் வாக்கில் உருவாக்கப்பட்ட வீடுகளின் மாதிரிகள் இங்கு உள்ள மிக முக்கிய காட்சிப் பொருள்களாக அமைகின்றன. காலவரிசைப்படி ஒவ்வொரு வீடுகளும் முன்னர் இப்பகுதியில் மக்கள் அமைத்த வீடுகளின் தொல் படிமங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் மாதிரிகளாக இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் முதலில் வருவது ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus).
இந்த வகை வீடுகள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியின்போது ஏரிக்கு மிக ஆழமான பகுதிகளில் கிடைத்துள்ளன. அடிப்படையில் ஒரு அறை மட்டும் கொண்ட மரத்தாலும் குச்சிகளும் கட்டப்பட்ட வீடுகள். இவ்வகை வீடுகள் கட்டப்பட்ட காலமாக பொ.ஆ.மு. 3917 ஆம் ஆண்டு என ஆய்வாளர்கள் நிகழ்த்திய கரிம ஆய்வுகளின் வழி உறுதி செய்கின்றார்கள். இந்த வகை வீடுகளின் தொல் படிமங்கள் 1980ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த அகழ்வாய்வை பாடன் ஊர்ட்டன்பெர்க் மாநிலத்து வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு (State office of Historic Monuments) நிகழ்த்தியது.
இந்த வீடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மரத் தூண்கள் 4 - 9 மீட்டர் உயரம் கொண்டவை. சுவர்கள் களிமண்ணால் பூசப்பட்டு மேற்கூரைகள் ரீட் கானரி வகைப் புற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள இந்த வீடு 1996 ஆம் ஆண்டு முதலில் உருவாக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
.
பொ.ஆ.மு. 3900 எனும்போது இன்றைக்கு ஏறக்குறைய 6000 ஆண்டுகால பழமையான தொல் எச்சங்கள் என்பதை அறிய முடிகின்றது. ஐரோப்பாவில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பல இடங்கள் பற்றிய செய்திகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தப் பகுதியில் கிடைத்திருக்கின்ற இந்த குடியிருப்புகளின் எச்சங்கள் நமக்கு இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் நீண்ட கழிகளையும், களிமண், மற்றும் புல் சருகுகளையும் கொண்டு வீடுகளைக் கட்டும் திறன்களையும் கொண்டிருந்தனர் என்பதையும், ஓரிடத்தில் தங்கி வாழ்வது, உணவுகளைச் சேகரிப்பது என்ற பழக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதையும் இந்த அகழாய்வுச் செய்தி உலகுக்கு வெளிப்படுத்தியது.
அடுத்த பதிவில் இங்கு கிடைத்த மேலும் சில தொல்பொருட்கள் பற்றிய செய்திகளைப் பகிர்கிறேன்.


ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)


ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)

ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus)

தொடரும்..
சுபா

Sunday, July 25, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு - 1

உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகை செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவு,ம் பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப் ட்விட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன.

தமிழ்நாட்டு தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற, அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத்தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளை பற்றி அறிந்துகொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.
தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்டகலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சி பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும், சிறு நகரமாகட்டும், கிராமம் ஆகட்டும்... எல்லா பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு ஒன்றினை பற்றியது.

Pfahlbaumuseum Unteruhldingen - உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகே உள்ளது.

இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.
ஜெர்மனிக்கு தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி. 1853-1854 ஆகிய காலகட்டத்தில் இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களது வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டி கிழிந்து போனதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க அவர்கள் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பி சோதனை செய்த போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும் அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்கு கிடைத்ததும் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் ஃபெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' என பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த கி.மு 3000 கால அளவிலான வீடுகள், இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன்.

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021 சென்றிருந்த போது பதிந்த காட்சி.


ஏரிக்கு அடிப்பகுதியில் கடலில் புதையுண்ட மக்கள் வாழ்விடப் பகுதி.

ஃபெர்டினன் கெல்லர்

முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்.


தொடரும்..
-சுபா

Monday, June 28, 2021

மூன்சன் தமிழ்ப்பள்ளி - நூல் அறிமுகம்

 ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவின் தலைநகரான மூன்சன் நகரம் ஜெர்மனியின் பொருள்வளமிக்க ஒரு நகரம். இங்கு ஏராளமான உலகளாவிய தொழிற்கூடங்களும் ஆயுவு நிலையங்களும் இருக்கின்றன. இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வந்த தமிழ் மக்கள் இங்கு கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்கு சில வார இறுதி தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் இயங்கி வருகின்றன.


மூன்சென் தமிழ்ப்பள்ளி (ஜெர்மனி) மாணவர்களைக் கடந்த சனிக்கிழமை சந்தித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கின்றது. 31 மாணவர்கள் இந்தத் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். எனது கீழடி-வைகை நாகரிகம் நூலை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை இந்தப் பள்ளியின் அமைப்பாளர் தம்பி சத்தியமூர்த்தியும் ஏனைய ஆசிரியர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தைகள் பாவாடை சட்டை, வேட்டி எனத் தமிழ் பண்பாட்டு உடைகளுடன் வந்திருந்தனர். அழகான காட்சியாக இது இருந்தது.

நூல் அறிமுகத்துக்குப் பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து நூலை எனது கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர்களாகவே சுயமாகச் சிந்தித்து என்னிடம் சில கேள்விகளையும் எழுப்பினர். பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து கேட்காமல் அவர்களே சுயமாக எழுப்பியக் கேள்விகள். தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உரையாடினர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
குறிப்பு : குழந்தைகளின் முகத்துடனான புகைப்படங்களைப் பொது வெளியில் பகிரக்கூடாது என்ற சட்டம் இருப்பதால் முழுமையான புகைப்படங்களை இங்கு நான் பகிரவில்லை.








நூலைப் பெற விரும்புவோர் பயில் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழ்க்காணும் பக்கத்திலும் ஆர்டர் செய்து பெறலாம். https://www.commonfolks.in/.../d/keezhadi-vaigai-naagarigam

-சுபா

Thursday, June 25, 2020

ஆண்ட்ரூ ஜாக்சன் - இனவாதத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் ..!

இனவாதத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் இனவாதத்திற்கு எதிராக அரசு கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் முன்பகுதியில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையைத் தகர்க்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டார்கள் என்பதை பலரும் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்.
ஆண்ட்ரூ ஜாக்சன் ராணுவ உடை அணிந்து குதிரையில் செல்வது போல அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிற்பம் இது. வெள்ளை மாளிகையின் முன்புறத்தில் இருக்கின்ற இந்த சிற்பம் அமெரிக்காவின் புகழை வெளிப்படுத்தும் ஒரு சிற்பமாக இதுவரை காணப்பட்டது.

ஆனால் மக்கள் இன்று இந்த சிற்பத்தை நீக்க வேண்டிய சிற்பமாகக் கருதத் தொடங்கியிருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடுதான் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் பகுதியில் நடந்த இந்தப் போராட்டம்.
இந்த ஆண்ட்ரூ ஜாக்சன் கிபி 19ஆம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான அமெரிக்க இந்திய மக்களை கருணையின்றி அடிமைப்படுத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவின் ஏழாவது அதிபராக இருந்தவர். இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அமெரிக்க இந்தியர்களை ஒதுக்கியவர் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையின் முன் புறத்தில் உள்ள ஆண்ட்ரூ ஜாக்சனின் பிரம்மாண்டமான சிலையின் மேல் கயிற்றை கட்டி அதனை எல்லா திசைகளிலும் போராட்டக்காரர்கள் நின்றுகொண்டு அதனை இழுத்து சிதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் செயல்பட்டு போராட்டக்காரர்களை விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் அன்று பலரும் பார்த்திருப்போம்.


அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரை தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதில் ஒருவர் கூறிய வாசகம் நம்மை யோசிக்க வைக்கின்றது.
'Why you want to celebrate history of hatred instead of building a future of love? Our plan is to put a round table for the discussion for the community.'

மக்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து வெளிப்படையாக இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்களை நிகழ்த்துவதற்கு தயாராகிறார்கள் என்பதே இத்தகைய மக்களின் குரல் எதிரொலிக்கிறது.

நமது தமிழ்ச்சூழலிலோ இன்னமும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதிப் பிரிவினை என்ற ஒன்றுக்கும் உதவாக, மனித நேயத்திற்கு எதிரான ஒரு கருதுகோளை முன் வைத்து.
மனித பண்பாட்டின் நாகரிக வளர்ச்சியில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளம் என்பதையே இது காட்டுகிறது !

அமெரிக்காவில் கொரோனா கொள்ளை நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வேளையிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரலை வெளிப்படுத்துவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பது அவர்களது உறுதியை வெளிப்படுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்!






-சுபா

Wednesday, June 10, 2020

Racial profiling

Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை அடையாளப்படுத்தி `இந்த இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியச்சிந்தனையில் சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் சூழலிம் கூட இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண்டு வருவதை நான் என் நேரடி அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில் சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரனியை நிகழ்த்தினர்.

நேற்றைய நிலவரப்படி 65,000 பொதுமக்கள் பெல்ஜியம் முழுதும் உள்ள மாமன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் சிலை மட்டுமன்றி அவரது பெயரில் அமைந்திருக்கின்ற சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
காலனித்துவ பழமையில் (Colonial Legacy) அடிமைத்தனத்தைக் கொடூரமாக நிலைநாட்டிய வரலாற்றுச்சின்னங்களைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பார்க்கக் கூடாது என்றும், இனவாதத்தை ஆதரிக்கின்ற இவ்வகையான சின்னங்கள் நீக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

பெல்ஜியத்தில் எழுந்துள்ள எழுச்சி போலவே இங்கிலாந்திலும் வெவ்வேறு பகுதிகளில் இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்து நினைவுச் சின்னங்கள் சில இத்தகைய வகையில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கலாம். லண்டனில் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான `அடிமைகள் அருங்காட்சியகம்` (Slavery Museum) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி லண்டன் நகரில் இனவாதத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குச் சிலைகளும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமைகளாக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இனி வருங்காலங்களில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய மனமாற்றமும் எதிர்ப்புக் குரல்களும் காலத்தின் தேவையே!

புகைப்படத்தில் மன்னர் இரண்டாம் லியோபர்ட்டின் ஆட்சிகாலத்தில் கைகள் சிதைக்கப்பட்ட, உடல் நலிவடைந்த கோங்கோ மக்களைக் காணலாம்.




-சுபா

Tuesday, June 9, 2020

Georg Floyd - லியோபர்ட்டின் சிலை

Georg Floyd - ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக பெல்ஜியம் நாட்டின் கிபி 19ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் 2ம் லியோபர்ட்டின் ( King Leopold II) சிலையைப் பொது மக்கள் அவமானப் படுத்தி நீக்கியுள்ளனர். பெல்ஜியம் வரலாற்றில் நீண்ட காலம் 1865 லிருந்து 1909 வரை ஆட்சி செயத மாமன்னர் இவர். அண்ட்வெர்ப் நகரிலும் கெண்ட் நகரிலும் உள்ள இவரது பிரமாண்டமான சிலைகளைப் பொது மக்கள் அவமானப்படுத்தி தகர்த்தி நீக்கியுள்ளனர்.

ஏன்..?

தனது ஆட்சி காலத்தில் ஆப்பிரிக்காவின் கோங்கோ நாட்டைக் கைப்பற்றி அதன்முழு வளத்தையும் சுரண்டியதோடு கோங்கோ மக்களை அடிமைகளாக்கி கசக்கிப்பிழிந்து துன்புறுத்திய ஒருவன் என்று `புகழ்பெற்றவர்` இந்த மாமன்னர். இத்தனைக்கும் இந்த மன்னன் கோங்கோ நாட்டிற்கு ஒருமுறையும் நேரில் சென்றதில்லை. பெல்ஜியம் அரண்மனையில் அமர்ந்து சொகுசு வாழ்க்கையை ரசித்துக் கொண்டே ஆப்பிரிக்க நாட்டின் மக்களை வாட்டி வேலை வாங்கி அதில் பெற்ற செல்வத்தை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்து நாட்டை வளமாக்கிய மன்னர் இவர்.

பெல்ஜியம் நாட்டு மக்கள் இனவாதத்துக்கு எதிராக கோங்கோவில் அடக்குமுறையை வெற்றிகரபப்படுத்திய நிகழ்வுகளின் குறியீடான மன்னர் 2ம் லியோபர்ட்டின் சிலையைத் தகர்த்ததன் வழி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கின்ற அதே வேளை உலகிற்கு தங்கள் இனவாத சிந்தனைக்கு எதிரான கருத்தியலைப் பதிய வைத்துள்ளனர். இதனைச் செய்தவர்கள் கோங்கோ நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாகா பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் தான்.

கொரோனா கொள்ளை நோய் பரவலின் தாக்கம் ஐரோப்பாவில் குறைந்து வரும் வேளையில் தங்கள் நலனையும் மறந்து ஒட்டுமொத்த உலக மக்களின் நீதிக்காக, இனவாதம் ஒழியவேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையுடன் ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக எழுந்துள்ள இந்த எழுச்சி வியக்க வைக்கின்றது!






-சுபா

Georg Floyd & Edward Colston

Georg Floyd - ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான எழுச்சியும் அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் உலக மக்கள் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியச் செய்தி என்று நான் நினைக்கின்றேன்.

நேற்று முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட Edward Colston சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.

யார் இவர்?

1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாது.


இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும் சரியா தவறா என்பது இன்று ஒரு கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம் பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையிலிருந்து சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்களும் இதனை யோசிப்பார்களாக!

https://www.euronews.com/2020/06/08/bristol-statue-toppling-who-was-edward-colston-and-why-did-anti-racism-protesters-target-h?fbclid=IwAR2yEWUq22-HEhEPKFTt_wl60Z8ZB_6sW0GG_mcC4S8r4S0CfN_sbqon8YQ



-சுபா

Monday, June 8, 2020

ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் எதிரொலிக்கின்றது

உலகின் வேறொரு பகுதியில் அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்குக் குரல் கொடுப்போம் என்று ஜெர்மனியிலும் மக்கள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் குரல்களைக் கடந்த மூன்று நாட்களாக மிகப்பெரும் அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனியின் பெரு நகரங்களான பெர்லின், ஸ்டுட்கார்ட், மியூனிக், ஹாம்பர்க், லைப்சிக் போன்ற பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை எனக் கடந்த மூன்று நாட்களும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அளவில் இனவாதத்திற்கு எதிரான பொதுமக்கள் பேரணி நடைபெற்றது.
கொரோனா பேரிடர் கால முடக்கம் இருக்கின்ற சூழலிலும் இந்தப் பேரணி மக்களின் சிந்தனையில் எழுந்துள்ள இனவாதத்திற்கு எதிரான கடும் கோபத்தை வெளிப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்ட் கருப்பர் என்ற இனவாதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐரோப்பாவின் பல நாடுகளிலும் கடந்த மூன்று நாட்களாக பேரளவிலான இனவாதத்தைக் கண்டிக்கும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பாவில் குறிப்பாக, ஜெர்மனியிலும் இனவாத சிந்தனை தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையில் ஊடுருவி இருப்பதை மக்கள் வெளிப்படையாக இப்போது பேசுகின்றார்கள். இந்தப் பேரணிகள் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலும் வெள்ளையர் சிந்தனைப் போக்கு மீளாய்வு செய்ய ஒரு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது!




-சுபா

Sunday, May 17, 2020

ஐரோப்பா - கொரொனா தொடர்பான தகவல்கள்


ஜெர்மனியின் எல்லை நாடான லுக்சும்போர்க் நாட்டிற்கான எல்லை போக்குவரத்துத் தடையை நீக்கி 15.5.2020 இரு நாடுகளுக்குமான போக்குவரத்தை அனுமதித்தது ஜெர்மனி.
நெதர்லாந்துக்கான எல்லையும் திறக்கப்பட்டது.

ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உறவினர்களைச் சந்திக்கச் செல்பவர்களுக்கும் அலுவலக ரீதியாக பயணிப்பவர்களுக்கும் எல்லைகள் திறக்கப்பட்டன. முழுமையான எல்லைத் திறப்பு அல்ல இது என்றாலும் முதல் கட்ட நடவடிக்கை எனலாம்.
டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்குமான எல்லை போக்குவரத்து வருகின்ற நாட்களில் இதேபோல சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்பதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜூன் மாத மத்தியில் ஜெர்மனியின் எல்லா எல்லை நாடுகளுக்குமான எல்லை கட்டுப்பாட்டை நீக்கும் முயற்சியை ஜெர்மனி தொடங்கியுள்ளது.
ஜூன் 3 முதல் இத்தாலி தனது எல்லையை திறக்கின்றது. சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக ஜூன் மாதம் தொடக்கம் ஐரோப்பா இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிகிறது.





-சுபா

Saturday, April 25, 2020

கொரோணா தொற்று - ஐரோப்பிய நிலவரம்


25.4.2020

ஒட்டு மொத்தமாக விமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு விமானச் சேவை நிறுவனமும் மீண்டு எழ அதனதன் நாடுகளின் நிதி உதவி கட்டாயம் தேவை. KLM, Air France இரண்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கும் நிதி உதவியை அதன் நாடுகள் வழங்க உள்ளன. ஜெர்மனி Lufthansa விமானச் சேவை நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்குவது பற்றி பரிசீலனையைத் தொடங்க உள்ளது.

பிரான்சில் மே 11ம் தேதி ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய திட்டங்களை அதன் முதலமைச்சர் Edouard Philippe வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வாசிக்க உள்ளார்.
ஸ்பெயினில் தற்சமயம் நிலமை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதால் மே 2ம் தேதி முதல் பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.


இன்று ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரிலும் தலைநகர் பெர்லினிலும் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களுக்குச் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதி தேவை எனப் போராட்டம் நடத்தினர். பெர்லினில் மட்டுமே 1000 பேர் கூடியிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் எங்களுக்கு எங்கள் வாழ்க்கை மீண்டும் வேண்டும் என முழக்கமிட்டனர். ஜெர்மனியின் சுகாதாரத்துறை இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என்ற போதிலும் இந்தப் போராட்டம் இன்று நடந்திருக்கின்றது. ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுக்கலாமே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


ஜெர்மனியில் அங்காடிகள் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இயல்பாக இயங்குகின்றன. பள்ளிக்கூடங்கள் சிலமாநிலங்களில் கடந்த வாரம் தொடங்கப்பட்டு விட்டன. படிப்படியான ஊரடங்கு தளர்த்தும் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது மாஸ்க் அணிந்து செல்வதை கட்டாயமாக்கியிருக்கின்றன எல்லா மாநிலங்களும்.
 
-சுபா

Wednesday, April 22, 2020

கொரோனா வைரஸ் antibody பரிசோதனை

நோய்த்தொற்று வீதங்களை மதிப்பிடுவதற்கும் வைரஸின் பரவலைக் கண்காணிப்பதற்கும் ஜெர்மனி பெரிய அளவிலான கொரோனா வைரஸ் antibody பரிசோதனையைத் தொடங்குகிறது.

இரத்தத்தில் உள்ள antibody ஒருவருக்கு வைரஸ் வந்து எதிர்ப்புசக்தி தோன்றி மறைந்ததற்கு அறிகுறியாகும். முழு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதனால் உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்களுக்குக் குறைந்தபட்சம் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதை இதன் வழி அறியலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் இவ்வகை ஆய்வினை தொடங்கியிருக்கும் முதல் நாடாக ஜெர்மனி அமைகின்றது.

https://www.euronews.com/2020/04/19/germany-starts-mass-testing-for-coronavirus-antibodies-in-bid-to-learn-more-about-covid-19?fbclid=IwAR34ySA3LJgcG6U73VMzInkoHFN3CIrWncFSCt4PKKQV2zmJHTUaGVIXH9w

Tuesday, April 21, 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி

பிரிட்டனில் வருகின்ற வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியின் சோதனைக்காக மனித மருத்துவ பரிசோதனை தொடங்க உள்ளது. பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த வியாழக்கிழமை மக்கள் மீது தடுப்பூசி ஒன்றை பரிசோதிக்கத் தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்-

மே மாத நடுப்பகுதியில் சுமார் 500 தன்னார்வலர்களிடம் இதைச் சோதிக்க திட்டம் உள்ளதாகவும் இச்சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், இன்னும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.

Monday, March 16, 2020

கொரோனா - இன்றைய நிலை

ஜெர்மனி நேற்று இரவு 8 மணிக்கு அதன் எல்லையை மூடும் அறிவிப்பை வெளியிட்டது. இதன் அடிப்படையில் எல்லை நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய ஐந்து நாடுகளுக்கான எல்லைகள் நேற்று இரவிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்பட்டுள்ளன. ஆயினும், வர்த்தகம் தொடர்பில் இந்த நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வாகனங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட நாட்டில் இருந்துகொண்டு ஜெர்மனியில் பணியாற்றும் நபர்கள் ஆகியோருக்குத் தனி சலுகையாக வழிகள் திறக்கப்படும் என்றும் ஜெர்மனி கூறியுள்ளது.

வார இறுதி கடுமையான பீதியுடன் இங்கு தொடங்கினாலும் படிப்படியாக மக்களின் கட்டுப்பாடு நிறைந்த செயல்பாடுகளினால் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. என்னைப் போன்று வீட்டிலிருந்து பணியாற்றும் பலருக்கும் கொரோனா பிரச்சனை தீரும்வரை வீட்டிலிருந்து பணியாற்ற அலுவலகங்கள் வாய்ப்பினை வழங்கி இருக்கின்றன. சாலைகளில் அதிக வாகனங்கள் இல்லை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பேருந்துகள் செல்கின்றன. ஆயினும் மிகக் குறைவான பயணிகளுடன்.

ஐரோப்பாவில் வசந்த காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்தல் என்பது கூடுதலாக நன்மை தரும். அதோடு ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் அவசரநிலை கட்டுப்பாடுகள் மக்களிடையே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் என்பதாலும் ஓரளவு இம்மாத இறுதிக்குள் நிலைமை ஐரோப்பாவை பொறுத்தவரை பாதிப்பிலிருந்து குறைந்துவிடும் என்று கருத தூண்டுகிறது.

இன்றைய நிலையில் ஐரோப்பாவில் இத்தாலி, இங்கிலாந்து பிரான்சு ஆகிய மூன்று நாடுகள் பாதிப்பினை அதிகம் சந்தித்த நாடுகளாக உள்ளன.

வாட்டிக்கன் வழிபாட்டிற்கு மக்கள் வருவதை தடுத்துள்ளது. புனித வெள்ளி தொடர்பான வழிபாடுகள் அனைத்தையும் போப் அவர்களே தனியாக நிறைவேற்றுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுகள் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் ஒருவகையில் மனிதர்களாகிய நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் கூட, இத்தகைய காலகட்டங்களில் நம் ஒவ்வொருவரது உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

நமது தமிழ் உணவில் பயன்பாட்டில் உள்ள எலுமிச்சை பழம், தேன், கொய்யா, பூண்டு, இஞ்சி, வெங்காயம், நிலவேம்பு, மஞ்சள் போன்ற மூலிகைகள் நிச்சயம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எனது ஜெர்மானிய நண்பர்கள் பலருக்கும் பூண்டு இஞ்சி வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றையும் எலுமிச்சம் பழத்தையும் தினமும் சாப்பிட சொல்லி இருக்கின்றேன். இங்கே ஜெர்மானியர் பலருக்கும் பூண்டை கண்டால் ஒரு அலர்ஜி இருக்கும்.. ஆயினும் இத்தகைய வேளையில் கண்டிப்பாக பூண்டு இஞ்சி வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை என் ஜெர்மானிய நண்பர்களுக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றேன். என் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி இருக்கின்றேன்.

மருத்துவ ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் இந்த வார இறுதிக்குள் உலகளாவிய நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. -சுபா

Friday, March 13, 2020

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஐரோப்பாவில் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகவே ஊடகத் தகவல்களும் உலக சுகாதர மையத்தின் அறிவிப்பும் உள்ளன.

டென்மார்க்கும் போலந்தும் எல்லைகளை மூடும் நடவடிக்கையை இன்று அறிவித்து விட்டன. நேற்று தொலைக்காட்சி அறிவிப்பில் இத்தாலியிலிருந்து சுலோவேனியா செல்வதற்கான எல்லைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டினர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சுலோவேனியா எல்லையைத் தடுத்து வைத்துள்ளது. இத்தாலியிலிருந்து சுவிசர்லாந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் எல்லையில் சோதனை செய்த பின்னரே அனுப்புவதையும் தொலைகாட்சி செய்தி காட்டியது.

பெல்ஜியம் நாட்டில் அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். வருகின்ற திங்கட்கிழமை பள்ளிகள், உணவு விடுதிகள், கடைகள் அனைத்தையும் மூடும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் தொலைகாட்சிக்குப் பேட்டியளித்தார்.

இத்தாலியில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் தடைசெய்யபப்ட்டுள்ளன.

அமெரிக்காவில் ட்ரம்ப் அறிவித்துள்ள இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரம் நள்ளிரவு முதல், 26 ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நுழைவதற்கான தடை அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜெர்மனி உட்பட ஐரோப்பாவில் தங்கி பணியாற்றிவரும் அமெரிக்கர்கள் இப்போது விமான நிலையங்களில் அவசர அவசரமாக அமெரிக்காவில் சொந்த ஊர் திரும்ப சென்று கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் விமானம் கிடைக்குமா என்பதும் ஒரு கேள்வி. ஏனெனில் சில விமானங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஜெர்மனியில் பவேரியா, சார்லாண்ட் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்கள் திங்கள் தொடங்கி பள்ளிகள், பொது இடங்கள் மூடப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் வெகு வேகமாகப் பரவுவதால் வெளியில் உலவுவதிலிருந்து தடுத்து வீட்டிலேயே இருப்பதால் வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்க முடியும் என்பது ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தாகவும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக கொரோனா ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும் பொருளாதார பாதிப்பிற்கு ஈடு செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ஆதரவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்து கொடுக்க திட்டமிட்டு வருகின்றது.

இன்றைய நிலையில் பொதுமக்கள் முடிந்த அளவு வீட்டிலேயே இருப்பது பெருமளவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும்.

-சுபா

Monday, March 9, 2020

வெற்றி மணி - புதுமைப் பெண்கள் நிகழ்ச்சி

வெற்றி மணி - புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடக்கி வைக்கின்றேன்.
ஜெர்மனி , ஊப்பர்டால்