Monday, August 30, 2010
கோடையில் ஸ்டுட்கார்ட் - 4: எஸ்லிங்கன் வெங்காயத் திருவிழா
இது என்ன வெங்காயத் திருவிழா என நிச்சயம் உங்களுக்கு கேட்கத் தோன்றும். இதற்கு இங்கு ஒரு கதை இருக்கின்றது. ஒரு பூதம் ஒன்று கிராமத்து மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததாம். சந்தையில் வெங்காயம் விற்கும் பெண் ஒருத்தி அந்த பூதத்தைப் பிடித்து வெங்காயத்திற்குள் வைத்து விட்டாளாம். பூதம் தொலைந்த அந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா? அதற்குத் தான் வெங்காயத் திருவிழா.
இந்த வெங்காயத் திருவிழா ஜெர்மனியில் வேறு எங்கும் நடை பெறுவதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் இது நடைபெறுவது எஸ்லிங்கன் நகரத்தில் மட்டும் தான்.
எஸ்லிங்கன் நகரம் ஸ்டுட்கார்ட் நகர மையத்திலிருந்து ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் உள்ளது. எனது முதுகலை பட்ட ஆய்வை நான் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தான் மேற்கொண்டேன். பல்கலைக்கழக நகரம் என்றும் இதனைக் கூறலாம். இந்த சிறிய நகரின் சற்றே மலைப்பாங்கான சூழல் இங்கு மிகச் சிறப்பான வகையில் திராட்சை பயிர் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றது. 'பாடன் உர்டென்பெர்க்' மானிலத்தின் பிரசித்தி பெற்ற Trollinger வகை வைன் இங்கு விளைவது தான்.
நெக்கார் நதி கடந்து செல்லும் நகரம் இது. எழில் மிகுந்த இந்த சிற்றூரின் மையப்பகுதியில் நடந்து செல்லும் போது இங்குள்ள Fachwerkhaus (half-timbered house) வகை வீடுகளை பார்த்து ரசிக்கலாம். Fachwerkhaus வீடுகள் என்றால் என்ன என்பதை பார்க்க கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
பல வர்ணங்களில் குறிப்பிடத்தக்க வடிவங்களில் இவ்வகை கட்டிடங்கள் அமைந்திருக்கும்.
இந்த வகை வீடுகளைப் பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். அவ்வளவு வேறுபாடுகளும் வகைகளும் இவ்வகை கட்டிடக்கலையில் உண்டு!
திருவிழா நகரின் மையத்தில் fussgängerzone (pedestrian zone) உள்ள இடைத்தில் ஏறபாடாகியிருந்தது. உள்ளே நுழைந்ததுமே பல கூடாரங்களைக் காண முடிந்தது. அதாவது ஒவ்வொரு விற்பனையாளரும் தாங்கள் விற்பனை செய்யும் உணவு வகைகளுக்குக் கூடாரம் அமைத்து பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகளையும் இருக்கைகளையும் அமைத்திருந்தார்கள்.
இங்கு முக்கிய உணவாக அமைந்திருந்தது Zwiebelkuchen என அழைக்கப்படும் வெங்காய கேக். இது எப்படி இருக்கும் என பார்க்க வேண்டுமா? இதோ.
சுவை கேட்கவே வேண்டாம். மிக ருசியாக இருக்கும். இதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள். செய்முறை நன்றாக வழங்கப்பட்டுள்ளது.
Zwiebelkuchen -உடன் மேலும் இந்த (schwabenland) ஷ்வாபன் நகரத்திற்கே உரிய சீஸில் வருத்த காளான், மவுல்டாஷன், ஷ்னுப் நூடல், டம்ப் நூடல் என பல. அதோடு விதம் விதமான வைன் வகைகளும் விற்பனைக்கு இருந்தன.
குறிப்பு: மவுல் டாஷன் என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் வாய்+பொட்டலம் எனக் கூறலாம். வித்தியாசமான பெயராக இருக்கின்றது அல்லவா? இந்த மவுல் டாஷனில் சைவ மவுல்டாஷனும் உண்டு. கீரை சேர்த்து சமோசா போல தயாரிக்கபப்ட்டிருக்கும். அனேகமாக எல்லா மளிகைக் கடைகளிலும் இது கிடைக்கும்.
ஆகஸ்டு முடிந்து செப்டம்பர், அக்டோபர் மாதம் என்றாலே திராட்சைகள் பெரும்பாலும் தயாராகிவிடும் காலம். இதனை வரவேற்க இவ்வகை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. Zwiebelkuchen னை வைன் உடன் சேர்த்து சாப்பிடுவது இங்கு ஒரு கலாச்சாரம். இதனை நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலே அறிந்து கொண்டேன். பல்கலைக்கழக் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு விரிவுரையாளர்கள் அளித்த விருந்துகளில் Zwiebelkuchen உடன் சிவப்பு வைனும் வைப்பது மிக முக்கியமான வழக்கம்.
எஸ்லிங்கன் நகரில் ஒரு வித்தியாசமான அழகான கோட்டை ஒன்றும் உள்ளது. அதனை பற்றி இன்னொருமுறை வாய்ப்பு அமையும் போது எழுதுகிறேன்.
இவ்வகை திருவிழாக்களில் குழந்தைகளுக்கும் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். இங்கே பாருங்கள். இந்தப் படத்தில் பெட்டியின் கைப்பிடியை இந்த மனிதர் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இப்படி சுற்றும் போது குருவிகளின் ஓசை போன்ற ஒலி கேட்கும். குழந்தைகளைக் கவர இவ்வகை முயற்சி.
இவ்வகை விழாக்களில் இசைக்கும் குறைவிருக்காது. Volksmusik எனப்படும் கிராமிய இசை ஆங்காங்கே!
சுவையான உணவு; இனிய சூழல், சூடான 36 டிகிரி வெயில்; இது போதாதா இந்த விழா ஒரு சிறந்த விழா என்று சொல்வதற்கு. :-)
அடுத்து வேறொரு வித்தியாசமான விழாவுடன் வருகிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
ஜெர்மனி யின் அழகு பற்றிய,கட்டுரை அழகு .நன்றி
ReplyDeleteவித்தியாசமான திருவிழா..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!