நண்பர்களே,
கோடை கால கொண்டாட்டம், விழாக்கள் என்பது ஆண்டுக்கு ஆண்டு ஸ்டுட்கார்ட் நகரைச் சுற்றிலும் பெருகிக் கொண்டே வருகின்றன. மே தொடங்கி செப்டம்பர் வரை பல்வேறு விழாக்கள் ஜெர்மனி முழுமைக்கும் நடை பெறுவது வழக்கம். இங்கு நடை பெறும் விழாக்கள் பெரும்பாலும் கேளிக்கை விழாக்களாக அமைந்து பல்வேறு உள் நாட்டு மக்களோடு அயல் நாட்டினரும் கலந்து கொள்ள சிறப்பாக இங்கு வந்து செல்லும் நிலையும் இப்போது உள்ளது.
2006ம் ஆண்டு உலகக் காற்பந்து போட்டி உள் நாட்டு மக்களிடையே பெறும் மாற்றததை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு இடங்களில் காற்பந்து போட்டியைக் காண என்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஜெர்மனி முழுதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்மை. பெறும்பாலும் பரவலாக விழா கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஜெர்மானிய மக்கள் மத்தியில் இப்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண முடிகின்றது. அதிலும் இளம் தலைமுறையினரிடையே கேளிக்கை விழாக்கள் Straßen Fest என சொல்லப்படும் சாலை திருவிழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு சிறு கிராமும் தங்கள் கிராமத்தின் சாலை திருவிழாக்களை ஏற்பாடு செய்து மக்கள் வார இறுதி நாட்களை இக்கோடையில் மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த வாரம் எங்கு செல்வது, எந்த விழாவைப் பார்ப்பது என்பதே பட்டியலிட்டு பார்க்க வேண்டிய அளவுக்கு ஏராளமான திருவிழாக்கள்.
சாலை திரு விழாக்கள், கோடை கால திருவிழாக்கள் என்னும் போது அவற்றில் சில குறிப்பிடத்தக்க நோக்கத்தோடு இவ்வகை விழாக்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக
-பழங்கால மக்கள் திருவிழா (Mittelalterfest)
-சாலை திருவிழா (Straßen Fest)
-மூலிகை செடிகள் சந்தை (kräuter ausstellung)
-மீன் சந்தை - (Fischmarkt)
-வைன் திருவிழா (Weinfest)
என வகை வகையான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவ்வகை திருவிழாக்களைப் பற்றி நினைவு கூறும் போது October Fest பற்றியும் சொல்லியாக வேண்டும். சில லட்சம் மக்கள் கூடும் ஒரு உலகளாவிய திருவிழாவாக, பியர் விரும்பிகளின் கொண்டாட்ட விழாவாக இது அமைந்திருக்கின்றது. இதனைப் பற்றி பின்னர் விவரிக்கின்றேன்.
கடந்த சில வார இறுதி நாட்களில் சில சாலை திருவிழாக்களில் கலந்து கொண்டேன். ஒரு சில விழாக்களுக்கு புகைப் பட கருவியுடன் சென்றதால் புகைப்படங்களை எடுத்துள்ளேன். அவற்றோடு இணையத்தில் உள்ள தகவல்களையும் படங்களையும் இணைத்து இங்கு நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். ஜெர்மனியில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையில் திருவிழாக்களின் பங்கினை அறிய ஆர்வம் உள்ள மின்தமிழ் வாசகர்களுக்கு இத்தகவல்கள் உதவலாம்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment