கார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.
அரண்மனைக்கு பக்கத்தில் "பழங்கால மக்கள் திருவிழா" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.
அதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.
இந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்கு இருந்தன.
முக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.
(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)
மேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள். குழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment