Tuesday, August 27, 2019

சுவேபியன் யூரா - தொல்லியல் தடையங்களும் பயணமும் -1


ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலம் மலைகள் நிறைந்த ஒரு பகுதி. சுவேபியன் யூரா எனப்படும் மலைத்தொடர்ச்சி அமைந்திருப்பதால் அடர்ந்த காடுகள் நிறைந்த வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இதற்கு இடைவெளி விட்டு எதிர்புறத்தில் ப்ளேக்ஃபோரெஸ்ட் என அழைக்கப்படும் கருங்காடு பகுதி அமைந்திருக்கின்றது. ஜெர்மனிக்கு வெளியே உள்ள பலரும் இந்தக் கருங்காடு பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் சுவேபியன் யூரா மலைத்தொடர்ச்சி பற்றி அறிந்திருப்பது குறைவே. இந்தப் பதிவின் தொடரில் ஓரளவு இந்த மலைப்பகுதி , இங்குள்ள குகைகள், ஆறுகள், வரலாற்று தொல்லியல் சிறப்புக்கள் ஆகியவற்றை விவரிக்க முயற்சிக்கின்றேன். இது நான் வாழும் மாநிலம் என்பதால் இதனை ஆராய்ந்து இதன் இயற்கை சிறப்புகளை அறிவதில் இயற்கையாகவே எனக்கு ஆர்வம் எழுகின்றது.

சுவேபியன் யூரா என அழைக்கப்படும் இந்தப் பகுதி சுவேபியன் ஆல்ப்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மலைத்தொடர்ச்சி 220கிமீ தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கியும் ஏறக்குறைய 70 கிமீ அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. கருங்காட்டில் ஊற்றாகி ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து கருங்கடலில் கடக்கும் டனுப் நதி, மற்றும் ஜெர்மனியின் பெரிய நதிகளில் ஒன்றான நெக்கார் ஆகிய நதிகள் பாயும் நிலப்பகுதியும் இந்த மலைப்பகுதியில் அடங்கும். ஏராளமான ஊற்றுகளும், ஆறுகளும் பாய்கின்றன.
அடர்ந்த காடுகள். மலையின் பெரும்பகுதி சுண்ணாம்பு மலைகள். இவை ஜூராசிக் காலகட்டத்தில் உருவானவை. இந்த மலைத்தொடர் பொதுவாகவே அதிக உயரமில்லாத குன்றுப்பகுதியாகவே உள்ளது. இங்குள்ள ஏராளமான குகைகளில் தொல் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வுப் பணிகளை நிகழ்த்திய பெருமை டூபிங்கன் பல்கலைக்கழகத்து தொல்லியல் துறை மற்றும் உல்ம் பல்கலைக்கழத்தின் தொல்லியல் துறை ஆகியவற்றைச் சாரும். பெரும்பாலான அரும்பொருட்கள் இப்பல்கலைக்கழகங்களின் அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெறுகின்றன என்ற போதிலும் இப்பகுதியின் மிக முக்கிய கண்டுபிடிப்புக்கள் அங்கேயே குகைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது சிறப்பாகும்.
சுவேபியன் யூரா மலைத்தொடரின் 6 குகைப்பகுதிகள் - அதாவது மூன்று குகைகள் ஒரு பகுதியிலும் அடுத்து மூன்று குகைகள் அடுத்த ஒரு பகுதியிலும் என அமைந்துள்ளன. இந்த 6 குகைகளும் அடங்கிய முழு பகுதியும் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்று தொல்சிறப்பு பெற்ற இடமாக பாதுகாக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதில் மூன்று குகைகளுக்குச் சென்றிருந்தேன். நான் வசிக்கும் லியோன்பெர்க் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 98 கிமீ தூரத்தில் இந்த முதல் மூன்று குகைகளும் உள்ளன. ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாலையில் வாகனங்கள் ஓரளவு குறைவாகவே இருந்தது. வெயில் ஏறக்குறைய 29 டிகிரி செல்சியஸ் . இடைக்கால இளையாராஜா, தேவா பாடல்களை ரசித்தபடி நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வது சுகமான அனுபவம். 
முதலில் வந்தடைந்த தொல்லியல் பகுதி ஹோலன் ஃபெல்ஸ். இது இங்கிருக்கும் மூன்று குகைகளிலும் அதிக சிறப்பும் முக்கியத்துவமும் பெறும் குகைப்பகுதியாகும்.














தொடரும்...
சுபா

Thursday, August 8, 2019

லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை










அரண்மனைகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றாலே நாமும் அரசிதான் என்ற எண்ணம் வந்து விடுகின்றது 
நான் வசிக்கும் ஜெர்மனியின் பாடர்ன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் ஆங்காங்கே பல அரண்மனைகளும் கோட்டைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. பழமையான இந்தக் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் எனக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிகழ்ந்த பெரும் போர்களும் அவை ஏற்படுத்திய உயிர் இழப்புக்களும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.
அத்தகைய ஒரு அரண்மனைதான் லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை. கிபி.12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த அரண்மனை. இதனை உருவாக்கிய சிற்பி Carl Alexander Heideloff . அவ்வப்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டாலும் இதன் பழைய வடிவம் இன்றும் அழகுடன் காணப்படுவது சிறப்பு. இந்த அரண்மனையில் இன்னமும் மன்னர் பரம்பரையினரின் வாரிசுகள் ஒரு பகுதியில் வாழ்கின்றார்கள்.
சுவேபிய பள்ளத்தாக்கைச் சார்ந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகையும் இதனைச்சுற்றியுள்ள கட்டிடங்களும் கண்களைக் கவரும் கட்டுமான அமைப்புடன் அமைந்துள்ளன.
கடந்த வார இறுதியில் நண்பர்கள் ஸ்ரீகந்தா மற்றும் டாக்டர்.அருணி குடும்பத்தினருடன் இங்கு சென்று வந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் இவை. ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியின் தொடக்கும் இங்கிருந்து உருவாகின்றது என்பது தனிச்சிறப்பு.
-சுபா

Wednesday, July 17, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக ஜெர்மனியின் உர்சுலா ஃபொன் டெர் லேயன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக ஜெர்மனியின் உர்சுலா ஃபொன் டெர் லேயன் (60 வயது) நேற்று மாலை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை இவரைச் சேர்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக உயரிய பொறுப்பான மேலாண்மைப் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
150 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் ஒரு பெண்ணின் தலைமைத்துவத்தின் கீழ் அரசு அமையுமா என்றால் அது மாபெரும் கேலியாக, கேள்வியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் கடந்த நூற்றாண்டின் ஐரோப்பியப் பெண்களின் மாபெரும் எழுச்சியும் வளர்ச்சியும் அந்தக் கட்டுப்பாட்டை தகர்த்துள்ளது. இது ஆரோக்கியமான முன்னெடுப்பு. வாழ்த்துகள்.


Tuesday, July 16, 2019

உர்சுலா வோன் டெர்லேயன்



ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் பெண் தலைவராக உர்சுலா வோன் டெர்லேயன் வெற்றி பெற்று வரலாறு படைப்பாரா? இன்று ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.
ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சராகவும் 2013 முதல் இருந்தவர் இவர். ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இவர் ஜெர்மனியைப் பிரதிநிதிப்பவர் என்பது கூடுதல் செய்தி.


Tuesday, December 18, 2018

BREXIT .. தொடர்ச்சி






BREXIT .. தொடர்ச்சி
இன்னும் ஏறக்குறைய 100 நாட்களே உள்ளன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா? எத்தகைய உடன்பாடுகளை இரண்டும் ஏற்றுக் கொள்ளும்? எத்தகைய பின் விளைவுகள் உடன் ஏற்படப் போகின்றன? ஐரோப்பாவின் மிக முக்கிய கேள்விகளாக இன்று இவை இருக்கின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகள் உலகை ஆண்டோம் என பெருமை பேசிக்கொண்டு அந்த பெருமையை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதன் வழி இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பெருமை பேசி தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள பிரிட்டன் செய்யும் இந்தக் காரியத்தை தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஒப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது.

இன்றைய நாள் வரை பிரிட்டனில் வேலை பார்க்கும் ஐரோப்பியர்களின் நிலையைப் பற்றியும் ஐரோப்பாவில் வேலை பார்க்கும் பிரிட்டன் பிரஜைகளைப் பற்றியும் சரியான வழிகாட்டுதல் இல்லை. ஸ்பெயின், பிரான்சு கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கனக்கான பிரித்தானிய பென்ஷன் எடுத்துக் கொண்டு தங்கள் முதுமையைக் கழிக்கும் மக்களைப் பற்றி தெளிவான வழிமுறைகள் வெளியிடப்படவில்லை. அயர்லாந்து வட அயர்லாந்து எல்லை, வர்த்தகம், பொருளாதார விசயங்கள் தெளிவாக்கப்படவில்லை.

இப்போதைய நிலையைப் பார்க்கும் போது No deal நிலையில்தான் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து பிரியுமோ .. அல்லது மக்கள் எழுச்சி ஏற்பட்டு #BREXIT வேண்டாம் என்று இறுதி நேரத்தில் முடிவெடுப்பார்களோ என குழப்பமே அதிகரிக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், பிரிட்டன் இன்றும் கூட நிலைமையை சரி செய்யாமல் பிரிந்து செல்வதினால் தாங்கள் பெருமை அடைவதாக நினைத்துக் கொண்டே செயல்படுவதாக குற்றம் சாற்றுகின்றார்.

ஆண்ட பரம்பரை பெருமை பேசியே பிரிட்டன் தம் மக்களை பிரச்சனைக்குள் தள்ளாமல் இருந்தால் சரி!

-சுபா

Saturday, December 15, 2018

BREXIT...தொடர்ச்சி..




கடந்தசில நாட்கள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நிறைந்த நாட்களாக முடிந்திருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்தைச் சரியாக விளக்கவில்லை என்பதே இப்போதிருக்கும் பெரிய பிரச்சனையாக அமைகின்றது.

பிரிட்டனின் BREXIT வெளியேற்றம் என்பது பிரிட்டனோடு சட்டப்பூர்வமாக இணைந்திருக்கும் அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளையும் பாதிப்பதைத் தவிர்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அயர்லாந்திடமிருந்து வட அயர்லாந்து எல்லை தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் இதன் வழி தெளிவு படுத்தப்படாமல் இருப்பது காரசாரமாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கின்றது.



பெல்ஜியம் பிரதமர் சார்ல்ஸ் மிஷேல் மிகுந்த காலதாமதமாக்கிக் கொண்டிருக்கும் பிரிட்டனிடம் இனி கலந்துரையாடலுக்கும் அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கும் இடமில்லை என நேற்று தெரிவித்திருக்கின்றார்.



ஜெர்மனி சான்சலர் அங்கேலா மெர்க்கல், இனி அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றியம் உதவவே விரும்புகின்றது என நேற்று குறிப்பிட்டிருக்கின்றார்.



இத்தனை களேபரமான சூழலில் பிரிட்டன் சரியான முடிவினை எடுக்க வேண்டும். எப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எத்தகைய சட்டங்களின் வரையறைகளின் அடிப்படையில் வெளியேறுகின்றோம் என்று தெளிவாகக் கூற வேண்டும். ஆனால் இது வரை அது நடைபெறவில்லை.



இந்த சூழலில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளேர் மற்றொரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். BREXIT பற்றிய மாற்று கருத்தை முன் வைப்பது என்பதே அது. மக்களிடம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவோம். பிரிட்டன் மீண்டும் யோசித்து இந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய முடிவு எடுக்க வாய்ப்பு தருவோம் என்பதே அது.



மக்களும் இந்த அடிப்படையில் மாற்று யோசனையை விரும்புவதாகவே தெரிகிறது.


https://www.dw.com/en/former-british-pm-blair-calls-for-second-brexit-referendum/a-46741013


-சுபா

Friday, December 14, 2018

BREXIT!


நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டனின் பிரதமர் தோல்வியடையவில்லை. ஆயினும் இன்று மேலும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு எதிரான அதிருப்தியை மேலோங்கச் செய்திருக்கின்றன.

டோய்ச்சவெல்ல பத்திரிக்கை பிரிட்டனில் #BREXITதொடர்பாக நிகழ்கின்றவற்றை வேதனையோடு காண்கின்றது. BREXIT அமலாக்கத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு தற்சமயம் ஈடுபடுவது சரியன்று... என இப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, இனி, அதாவது 2020ம் ஆண்டு தேர்வில் தலைமை பொறுப்பிற்கு தாம் போட்டியிட மாட்டேன் என உறுதி வழங்கியதால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரேசா மேக்கு கிட்டியது என அனைத்து செய்தி ஊடகங்களும் தெரிவித்தன.

BREXIT அறிக்கை எண்-50 முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என ஆளும் அரசின் அனைத்து எம்பிக்களும் சம்மதித்தால் அது நிலமையைச் சரிகட்ட ஓரளவு உதவலாம். ஆனால் நீங்களோ தலைமையை மாற்றுவதில் இந்த சமயத்தில் கவனத்தை செலுத்துகின்றீர்களே.. என இப்பத்திரிக்கை கேள்வி எழுப்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு (பிரஸ்ஸல்ஸ்-பெல்ஜியம்) இப்போது பிரதமர் தெரேசா மே சென்றிருக்கின்றார்.

BREXIT அறிவிப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பிரிட்டன் பொருளாதார பாதிப்பை நிச்சயம் சந்திக்கும் என்பதற்கு அறிகுறியாக Rolls Royce நேற்று தனது large aircraft engines தயாரிப்பு பணியை பிரிட்டனிலிருந்து ஜெர்மனிக்கு மாற்றுவதாக அறிவித்தது. இதுபோல இன்னும் சில வர்த்தக நிறுவனங்கள் தங்கள் அனுகூலம் கருதி பிரிட்டனிலிருந்து வர்த்தக உற்பத்தி நிலையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றலாம். எதுவாகினும் பாதிப்பு பிரிட்டனுக்கே!
-சுபா