Friday, December 14, 2018

BREXIT!


நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டனின் பிரதமர் தோல்வியடையவில்லை. ஆயினும் இன்று மேலும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு எதிரான அதிருப்தியை மேலோங்கச் செய்திருக்கின்றன.

டோய்ச்சவெல்ல பத்திரிக்கை பிரிட்டனில் #BREXITதொடர்பாக நிகழ்கின்றவற்றை வேதனையோடு காண்கின்றது. BREXIT அமலாக்கத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு தற்சமயம் ஈடுபடுவது சரியன்று... என இப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, இனி, அதாவது 2020ம் ஆண்டு தேர்வில் தலைமை பொறுப்பிற்கு தாம் போட்டியிட மாட்டேன் என உறுதி வழங்கியதால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரேசா மேக்கு கிட்டியது என அனைத்து செய்தி ஊடகங்களும் தெரிவித்தன.

BREXIT அறிக்கை எண்-50 முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என ஆளும் அரசின் அனைத்து எம்பிக்களும் சம்மதித்தால் அது நிலமையைச் சரிகட்ட ஓரளவு உதவலாம். ஆனால் நீங்களோ தலைமையை மாற்றுவதில் இந்த சமயத்தில் கவனத்தை செலுத்துகின்றீர்களே.. என இப்பத்திரிக்கை கேள்வி எழுப்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு (பிரஸ்ஸல்ஸ்-பெல்ஜியம்) இப்போது பிரதமர் தெரேசா மே சென்றிருக்கின்றார்.

BREXIT அறிவிப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பிரிட்டன் பொருளாதார பாதிப்பை நிச்சயம் சந்திக்கும் என்பதற்கு அறிகுறியாக Rolls Royce நேற்று தனது large aircraft engines தயாரிப்பு பணியை பிரிட்டனிலிருந்து ஜெர்மனிக்கு மாற்றுவதாக அறிவித்தது. இதுபோல இன்னும் சில வர்த்தக நிறுவனங்கள் தங்கள் அனுகூலம் கருதி பிரிட்டனிலிருந்து வர்த்தக உற்பத்தி நிலையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றலாம். எதுவாகினும் பாதிப்பு பிரிட்டனுக்கே!
-சுபா

Tuesday, October 2, 2018

ஜெர்மனி - கிழக்கும் மேற்கும் இணைந்த போது..


ஜெர்மனி என்ற ஒரு பேரரசு இரண்டாம் உலகப்போருக்குப் பின் அனுபவித்த துன்பங்களைப் பொதுவாக யாரும் பேசுவதில்லை.
உலக அளவில் நாசி சித்தாந்தம் ஹிட்லர் என்ற ஒரு தனிமனித விளக்கங்களுடனேயே அடங்கிவிடுகின்றனவேயன்றி 1949க்குப் பின்னர் கிழக்கு ஜெர்மனி நாட்டோவின் கட்டுப்பாட்டில் இருந்த போது கிழக்கு ஜெர்மனி மக்களும் மேற்கு ஜெர்மனி மக்களும் உறவினர்களையும் நண்பர்களையும் கூட வந்து பார்க்க முடியாத ஒரு கடும் சூழல் நிலவியது.

மக்கள் கிழக்கிலிருந்து மேற்கு வர தங்கள் உயிரைப் பணையம் வைத்து செயல்பட்டனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி வர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் வழியாக வந்து பின் மேற்கு ஜெர்மனிக்கு வந்தனர். வழியில் பிடிபட்டோர் கொடூரமான தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

இன்று ஜெர்மனியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நாட்டோவின் ஏனைய உறுப்பு நாடுகள் வெளியேறிவிட்டாலும் அமெரிக்கா மட்டும் முற்றிலுமாக வெளியேறவில்லை. ஜெர்மனியின் சில நகரங்களில் அமெரிக்க ராணுவத்தின் முகாம்கள் இன்றும் இருக்கின்றன.

ஆனால் ஜெர்மனியின் கடந்த 40 ஆண்டு கால வளர்ச்சி அபரிதமானது. உலக அளவில் வளர்ச்சியில் மிக உயரிய நிலையில் இன்று ஜெர்மனி விளங்குகின்றது என்பதோடு உலக அளவில் இன்று அகதிகளுக்கு புகலிடும் தரும் நாடுகளில் பட்டியலில் முதல் சில நாடுகளில் இடம் பிடித்திருக்கின்றது.

ஐரோப்பாவின் இன்றைய பொருளாதார பலம் பொருந்திய வல்லரசு ஜெர்மனி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1989ம் ஆண்டு .. மக்கள் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை.
பெர்லின் சுவற்றை உடைத்தனர். காவலை மீறி முள் கம்பிகளைப் பிய்தெறிந்து ஏறிக்குதித்து மேற்கு ஜெர்மனி நோக்கி ஓடிவந்தனர். தொடர்ச்சியாக ஜெர்மனி 1989 பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்தது.

1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் - கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் பெர்லின் சுவற்றைத் தாண்டி மேற்கில் கால் வைத்தனர். மேற்கில் இருந்தவர்கள் ஓடிவந்து அணைத்துக் கொண்டனர். உணர்ச்சிகள் மட்டுமே உலவிய ஓர் இரவு அது.

ஒன்றிணைந்த ஜெர்மனி அன்று பிறந்தது.

அந்த மகத்தான நாள் நாளை அக்டோபர் மாதம் 3ம் தேதி.

நாளை மேலும் சிலதகவல்கள் பகிர்கிறேன்.



-சுபா

Thursday, April 26, 2018

சிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு

கடந்த ஈராண்டுகளில் ஜெர்மனிக்கு சிரியாவிலிருந்து அகதிகளாக வந்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிரவாதப் போக்குடன் திகழும் இவர்களில் சிலரால் உள்ளூரில் பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரம் தலைநகர் பெர்லினில் தலையில் கிப்பா (யூதர்கள் அணியும் துணியால் ஆன தொப்பி) அணிந்து சென்ற ஒரு இளைஞனை சிரியர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். யஹூடி என சொல்லிக் கொண்டே அடித்திருக்கின்றனர். யஹூடி என்பது அரேபிய மொழியில் யூதர் எனப் பொருள் படும்.

இதனைக் கண்டித்து பெர்லின் மட்டுமல்லாது ஏனைய இடங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது.

பெர்லின் மேயர், ஒரு ஜெர்மானியர். அவரோடு யூதர்கள் இல்லாத பல ஜெர்மானியர்கள் இணைந்து இதனைக் கண்டித்து பேரணி நடத்தியிருக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் சிரிய நாட்டை அழித்து வருகின்றது. ஜெர்மனிக்கு அகதியாக வந்த நிலையிலும் இங்கும் தங்கள் தீவிரவாதப் போக்கினைத் தொடர்வது உள்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவதாகவே உள்ளது. இது ஆளும் அரசின் மீது, குறிப்பாக சான்சலர் ஆஞ்செலா மெர்க்கல் மீது கடும் கோபத்தை பலருக்கும் ஏற்படுத்தி வருவதை செய்திகளின் வழி அறிய முடிகின்றது.

2ம் உலகப் போரின் விளைவுகளை உணர்ந்த ஜெர்மானியர்கள், யூதர் என மட்டுமல்லாது எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். மிக அதிகமான அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் நாடுகளில் முக்கிய நாடாக ஜெர்மனி இன்று திகழ்கின்றது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் ஜெர்மனி இன்று எதிர்நோக்குகின்றது.

http://www.latimes.com/world/europe/la-fg-germany-berlin-yarmulke-20180425-story.html
-சுபா

Friday, January 5, 2018

மொகாடிஷு - உல்ரிச்ஹ் வாக்னெர்

13 அக்டோபர் 1977 ஜெர்மனியின் லுஃப்தான்சா 181 விமானத்தை சோமாலிய தலைநகர் மொகாடிஷுவிற்குக் கடத்தி 90 பயணிகளை பணையக் கைதிகளாக வைத்தனர் பாலஸ்தீனிய தீவிரவாதிகள். 11 RAF கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே விமானத்தையும் அதில் இருந்த பயணிகளையும் ஒப்படைப்போம் என நிபந்தனை விதித்தனர். ( Mogadischu (2008) என்ற ஜெர்மானிய திரைப்படத்தில் இந்த நிகழ்வை முழுமையாக படமாக்கியிருக்கின்றனர். )
இந்த பயங்கரவாத நடவடிக்கையின் போது விமானத்தையும் பயணிகளையும் மீட்க அமைக்கப்பட்ட GSG-9 mission சிறப்பு மீட்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் உல்ரிச்ஹ் வாக்னெர். இவரது சமயோஜித திட்டத்தைப் பயன்படுத்தி 91 பயணிகளையும் ஜெர்மானிய தீவிரவாத எதிர்ப்புப் படை மீட்டது. உல்ரிச்ஹ் வாக்னெர் அவர்களுக்கு இதனைச் சிறப்பித்து சிறந்த அதிகாரி என்ற பட்டத்தை வழங்கியது.
அந்த சிறப்பு மிக்க அதிகாரி உல்ரிச்ஹ் வாக்னெர் அவர்கள் இன்று தன் 88வது வயதில் காலமானார்.
ஜெர்மனியின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீவிரவாத பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த நிகழ்வும் ஒன்று.






Wednesday, January 3, 2018

குண்ட்ரமிங்கன் அணுஆலை

33 ஆண்டுகள் செயலில் இருந்த ஜெர்மனியின் அணுஆலைகளில் ஒன்று மூடப்படுகின்றது .
2011ல் ஜப்பானின் பூக்குஷிமாவில் நிகழ்ந்த பேரிடரை அடுத்து ஜெர்மனியில் இயங்கும் எல்லா அணு ஆலைகளையும் 2022க்குள் முடக்கும் திட்டம் 2012ல் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தெற்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள குண்ட்ரமிங்கன் அணுஆலை படிப்படியாக மூடப்படும் நடவடிக்கைகள் இன்று தொடங்கின. 2021ல் முழுமையாக இது தன் செயல்பாட்டினை நிறுத்தும்.


Sunday, December 17, 2017

கிறிஸ்மஸ் மரங்கள்

Subashini Thf added 3 new photos.
1 hrLeonberg
இங்கு ஜெர்மனியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் வீட்டில் கொண்டாட கிறிஸ்மஸ் மரங்கள் தேவைப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு எல்லா கிராமங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த மரங்களை வாங்கிச் சென்று வீட்டில் 24ம் தேதி மதியம் தொடங்கி அலங்கரிப்பார்கள். மாலையில் அலங்காரம் முடிந்து விடும். பரிசுப் பொருட்களை மரத்தின் கீழே வைத்து மாலையில் அனைவரும் பரிசுகளைத் திறந்து பார்த்து மகிழ்வார்கள். கிறிஸ்மஸ் பண்டிகைக்கென்றே இவ்வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒரு சாதாரண மரத்தின் விலை 30லிருந்து 80 யூரோ வரை இருக்கும். பெரிய மரங்கள் இன்னும் கூடுதலான விலையில் விற்கப்படுகின்றன.



கிறிஸ்மஸ் பண்டிகை விழா - அலுவலகத்தில்

கிறிஸ்மஸ் பண்டிகை விழா இங்கே களை கட்ட ஆரம்பித்து விட்டது. இன்று அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்
அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்துடன்...